Published:Updated:

`நீங்கள் கொரோனாவின் கூட்டாளி' - மன்மோகன் சிங்குக்கு ஆதரவாக ஹர்ஷ் வர்தனை விமர்சித்த சித்தார்த்!

நீங்கள் கொரோனா போராளி இல்லை ஹர்ஷ் வர்தன். உண்மையில் நீங்கள் கொரோனா வைரசின் கூட்டாளி. தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று விட வேண்டும் என்பதற்காக நீங்கள் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் துணிந்து  நாட்டு மக்களைக் கொலை செய்கிறீர்கள் - சித்தார்த்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அரசுக்கு 5 முக்கிய யோசனைகளை உள்ளடக்கிய கடிதம் ஒன்றினை எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தில் மன்மோகன் சிங், கொரோனா தடுப்பூசி கையிருப்பு மற்றும் விநியோகத்தைச் சீராக வைத்துக்கொள்வது தொடர்பாகவும், கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாகவும் தனது யோசனைகளை மத்திய அரசிடம் முன் வைத்திருந்தார்.

ஹரிஷ் வர்தன் - மன்மோகன் சிங்
ஹரிஷ் வர்தன் - மன்மோகன் சிங்

மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியிருந்த அந்தக் கடிதத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று பதிலளித்திருந்தார். அதில், "கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து நீங்கள் கூறியுள்ள ஆலோசனைகள் அனைத்தும் உங்கள் கட்சியினருக்கும் பொருந்தும் தானே?. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வேண்டும் என்பதற்காக மத்திய அரசு போராடிக் கொண்டிருக்கும் வேளையில், உங்கள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், மாநில முதல்வர்கள் எனப் பலர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதோடு மட்டுமில்லாமல் சந்தேகத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இத்தகைய அசாதாரண சூழலில் நீங்கள் கூறும் ஆரோக்கியமான ஒத்துழைப்பு என்பது உங்கள் கட்சியினருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். இந்தியாவின் தடுப்பூசி விநியோகம், தயாரிப்பு உள்ளிட்டவற்றைப் பற்றி நீங்களும், இந்த கடிதத்தைத் தயாரித்தவரும் முழுமையாக அறிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

நாட்டு மக்களின் நலனில் துளியும் அக்கறை இல்லாமல் மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்த்து உங்கள் கட்சியினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். நீங்கள் முதலில் உங்கள் கட்சியினருக்கு நிலையைத் தெளிவுபடுத்துங்கள். திறந்த கடிதம் கூட எழுத வேண்டாம். தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு நீங்கள் அறிவுரை கூறலாம். நீங்கள் கூறியிருக்கும் ஆலோசனைகள் அனைத்தையும் மத்திய அரசு எப்போதோ செயல்படுத்திவிட்டது என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

உங்கள் கடிதத்தில் பல பொய் தகவல்கள் இருப்பினும், உங்கள் நல்ல நோக்கத்தை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. எங்களிடம் நீங்கள் கூறியுள்ள ஆலோசனைகளும், அறிவுரைகளையும் உங்கள் கட்சியினருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று காங்கிரஸ் கட்சியினரைக் குற்றம்சாட்டி கடிதத்துக்கு பதிலளித்திருந்தார் ஹர்ஷ் வர்தன்.

நடிகர் சித்தார்த்
நடிகர் சித்தார்த்

இந்நிலையில், மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் மீது காட்டமான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ``நீங்கள் கொரோனா போராளி இல்லை ஹர்ஷ் வர்தன். உண்மையில் நீங்கள் கொரோனா வைரசின் கூட்டாளி. தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று விட வேண்டும் என்பதற்காக நீங்கள் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க துணிந்து நாட்டு மக்களைக் கொலை செய்கிறீர்கள். இந்த நேரத்திலும் கூட மத கூட்டங்களிலும், விழாக்களிலும் மக்களைத் திரளச் செய்து அவர்களையும் கொல்கிறீர்கள். வரலாறு இதை ஒருபோதும் மன்னிக்காது " என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

ட்விட்டர் பதிவு
ட்விட்டர் பதிவு

அமைச்சர் ஹர்ஷ் வர்தனை விமர்சித்து நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ள கருத்துக்கு இணையவாசிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு