அரசியல்
அலசல்
Published:Updated:

என்னவானார் மீரா மிதுன்? - பதறும் தாய்... தடுமாறும் போலீஸ்!

மீரா மிதுன்
பிரீமியம் ஸ்டோரி
News
மீரா மிதுன்

நடிகை மீரா மிதுன் அடிக்கடி தன்னுடைய இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே யிருக்கிறார். வெவ்வேறு செல்போன்களைப் பயன்படுத்துகிறார்.

‘பேயைக் காணோம்’ படத்தில் நடிப்பதாகக் கடைசி அப்டேட் கொடுத்திருந்தார் சர்ச்சைக்குரிய நடிகை மீரா மிதுன். இப்போது ‘அவரையே காணோம், கண்டுபிடித்துத் தாருங்கள்’ என்று காவல்துறையின் கதவைத் தட்டியிருக்கிறார் மீரா மிதுனின் தாய் சியாமளா!

பட்டியலின மக்கள் குறித்து வீடியோவில் தவறாகப் பேசிய விவகாரத்தில் நடிகை மீரா மிதுன், அவரின் நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, இருவரும் கைதுசெய்யப்பட்டனர். பின்னர், ஜாமீனில் வெளிவந்த மீரா மிதுன் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமலிருந்தார். இதனால், நீதிமன்றம் அவர்மீது பிடி வாரன்ட் பிறப்பித்தது. ‘எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படுவோம்’ என்ற பயத்தில் மீரா மிதுன் தப்பித்தால் போதும் என்று தலைமறைவாகிவிட்டார். இந்தச் சூழலில்தான் தன்னுடைய மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறார் மீரா மிதுனின் தாய் சியாமளா.

என்னவானார் மீரா மிதுன்? - பதறும் தாய்... தடுமாறும் போலீஸ்!

அதில், “எனது மகள் தமிழ்ச்செல்வி என்கிற மீரா மிதுன் கடும் மன அழுத்தத்தோடு இருந்தாள். தன்னை மீண்டும் கைது செய்துவிடுவார்களோ என்று என்னிடம் கண்ணீருடன் அழுது புலம்பினாள். அதன் பிறகு அவள் திடீரென்று காணாமல் போய்விட்டாள். இந்த நிலையில் என் மகள் சார்பாக நானே நீதிமன்றத்தில் ஆஜராகி, மனஅழுத்தம், தொடர் கைது நடவடிக்கைக்கு பயந்து, அவள் தப்பிச் சென்றுவிட்டாள் என்று தெரிவித்தேன். சில நாள்களுக்கு முன்பு, அவள் பெங்களூரில் இருப்பது தெரியவந்தது. அதை போலீஸாரிடம் சொன்னேன். ஆனால், அங்கிருந்தும் அவள் காணாமல்போய்விட்டாள். இப்போது என் மகள் எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை. வன்கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டப்படுதல் போன்ற இன்னல்களைச் சந்தித்தவள் என் மகள் மீரா மிதுன். தயவுசெய்து போலீஸார் அவளைக் கண்டுபிடித்துத் தர வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார் சியாமளா.

இது தொடர்பாக சியாமளாவிடம் பேசினோம். “என் மகள் எங்கு இருக்கிறாள் என்று இதுவரை தெரியவில்லை. கீழ்ப்பாக்கம் போலீஸார் விசாரித்துவருகிறார்கள். எனக்கு உடல்நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, ``நடிகை மீரா மிதுன் அடிக்கடி தன்னுடைய இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே யிருக்கிறார். வெவ்வேறு செல்போன்களைப் பயன்படுத்துகிறார். அதனால் அவர் எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டறிவது கடினமாக இருக்கிறது. அதேநேரத்தில் அவரை, கேரளாவில் வைத்து கைதுசெய்து சென்னைக்கு அழைத்து வந்தபோது நேர்ந்த பிரச்னைகளை இன்னும் யாரும் மறக்கவில்லை. அதுவேகூட போலீஸ் அவரைக் கைதுசெய்யத் தயங்குவதற்குக் காரணமாக இருக்கலாம்” என்றனர்.

பிரபலமாக முயற்சி மேற்கொண்டு, அதனால் ஏற்பட்ட பிரச்னைகளும் மன அழுத்தமும் ஒரு பெண்ணை எங்கே கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது!