Published:Updated:

“அடங்கல் புத்தகத்தைக் காணோம்...” - அலையவிடும் அதிகாரிகள்... தவிக்கும் கிராம மக்கள்!

ஒட்டங்காடு
பிரீமியம் ஸ்டோரி
ஒட்டங்காடு

நிறைய பேரு கரன்ட் கனெக்‌ஷனுக்காக மனு கொடுத்தப்போ, சிட்டா அடங்கல் இல்லாம கனெக்‌ஷன் கொடுக்க முடியாதுன்னு மின்சார வாரியத்துல சொல்லிட்டாங்க.

“அடங்கல் புத்தகத்தைக் காணோம்...” - அலையவிடும் அதிகாரிகள்... தவிக்கும் கிராம மக்கள்!

நிறைய பேரு கரன்ட் கனெக்‌ஷனுக்காக மனு கொடுத்தப்போ, சிட்டா அடங்கல் இல்லாம கனெக்‌ஷன் கொடுக்க முடியாதுன்னு மின்சார வாரியத்துல சொல்லிட்டாங்க.

Published:Updated:
ஒட்டங்காடு
பிரீமியம் ஸ்டோரி
ஒட்டங்காடு

கிராம நிர்வாக அலுவலகத்தில் அடங்கல் பதிவேடு ஒன்று காணாமல்போனதால், பல ஆண்டுகளாக அரசு நலத்திட்ட உதவிகள் எதையும் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள், பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஒட்டங்காடு கிராம மக்கள்!

``ஆண்டுக்கணக்கில் அலைந்து திரிகிறோம்; நூற்றுக்கணக்கான மனுக்கள் கொடுத்துப் பார்த்துவிட்டோம். அவ்வப்போது தற்காலிகமாகப் பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றனவேயொழிய, இன்னமும் நிரந்தரத் தீர்வு எங்களுக்குக் கிடைக்கவில்லை’’ என்று புலம்புகிறார்கள் அந்தக் கிராம மக்கள்.

கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரிடம் பேசினோம். “முந்நூத்துக்கும் மேல வீடுகள் இருக்கிற எங்க ஒட்டங்காடு ஊரோட கிராம நிர்வாக எண் 112. போன 1992-ம் வருஷம், ஒட்டங்காட்டில் ஒரு பகுதியான நடுமனைப் பகுதிங்கிற இடத்துல, 58 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கொடுத்தாங்க. அதுல அவங்கவங்க வசதிக்குத் தக்கபடி வீடுகட்டிக் குடியிருந்தோம். கஜா புயல்ல நிறைய வீடுகள் விழுந்துடுச்சு. அப்போ, ‘சேதமான வீடுகளுக்கு பதிலா, புது வீடு கட்டித் தரப்படும்’னு அரசாங்கம் அறிவிச்சுது. இந்தப் பகுதியில வீடுகளை இழந்தவங்க தாலுகா ஆபீஸ்ல மனு கொடுத்தாங்க. அப்போ, பாதிக்கப்பட்டவங்க எல்லார்கிட்டயும் ‘வீட்டுமனைப் பட்டா, சிட்டா, அடங்கல் கொண்டுவாங்க’னு தாலுகா ஆபீஸ்ல சொன்னாங்க.

“அடங்கல் புத்தகத்தைக் காணோம்...” - அலையவிடும் அதிகாரிகள்... தவிக்கும் கிராம மக்கள்!

நாங்க எல்லாரும் வி.ஏ.ஓ ஆபீஸ்ல போய், அப்போ வேலையில இருந்த பரிமளாங்கிற வி.ஏ.ஓ-கிட்ட அடங்கல் கேட்டோம். அவங்க ரொம்ப நாளா கொடுக்கவே இல்லை. ஊர்க்காரங்கல்லாம் சண்டைபோடவும், ‘பட்டா விவரம் இருக்கிற சிட்டா அடங்கல் பதிவேட்டைக் காணோம்’னு சொன்னாங்க. எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாகிடுச்சு. ரொம்ப வருஷமா அந்தப் பதிவேடு அந்த ஆபீஸ்ல இல்லைங்கிறது அப்போதான் எங்களுக்குத் தெரியவந்தது. ‘தேடுறோம், தேடுறோம்’னு சொல்றாங்க... இப்போ வரைக்கும் கண்டுபிடிச்சபாடில்லை. கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். அப்போ இருந்த சப் கலெக்டர் விசாரணை செஞ்சுக்கிட்டிருந்தப்பவே மாற்றலாகிப் போயிட்டார். அதுக்கப்புறம் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கலை. இப்போ வரைக்கும் எங்களுக்குப் பட்டா தொடர்பான எந்த ஆவணமும் கிடைக்கிறதில்லை. ஊர்ல இருக்கிற ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியலை. கரன்ட் கனெக்‌ஷன் வாங்குறதுக்குப் படாதபாடு படவேண்டியிருக்கு” என்றார்.

அதே ஊரைச் சேர்ந்த தர்மராஜன், “எங்க ஊர்ல இருக்கிற நிலத்தை யாருக்கும் விக்கவும் முடியலை, புதுசா வாங்கவும் முடியலை. பெரியவங்க இறந்துட்டா, வாரிசுகளுக்குப் பெயர் மாற்றம் செய்ய முடியலை. பேங்க்ல லோன் வாங்க முடியலை. வீடு கட்டுறதுக்கு அனுமதி பெறவும் முடியலை. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பலருக்கு வீடு ஒதுக்கியும், சிட்டா அடங்கல் கிடைக்காததால, வீடுகட்ட முடியாம இருக்காங்க. கண்ணு முன்னாடி இடம் இருக்கு. ஆனா, அது எங்களுக்குத் தான் சொந்தம்கிறதுக்கு ஆவணம் இல்லை. ஆவணங்களைப் புதுசா உருவாக்க அதிகாரிகள் ஒரு நடவடிக்கையும் எடுக்கலை” என்றார்.

“அடங்கல் புத்தகத்தைக் காணோம்...” - அலையவிடும் அதிகாரிகள்... தவிக்கும் கிராம மக்கள்!

நிகில் நாகராஜன் என்பவர், “நிறைய பேரு கரன்ட் கனெக்‌ஷனுக்காக மனு கொடுத்தப்போ, சிட்டா அடங்கல் இல்லாம கனெக்‌ஷன் கொடுக்க முடியாதுன்னு மின்சார வாரியத்துல சொல்லிட்டாங்க. பலமுறை கேட்டும் தாசில்தார் கண்டுக்கலை. நாங்கள்லாம் போராட்டம் நடத்துவோம்னு சொன்ன பிறகு, தாசில்தார் எழுதிக்கொடுத்தார். அதுக்கப்புறம் கனெக்‌ஷன் வாங்கினோம். வி.ஏ.ஓ அலுவலகத்துல இருக்குற பதிவேட்டோட நகல், கலெக்டர் ஆபீஸ்ல இருக்கும்னு சொன்னாங்க. அங்கே போய்க் கேட்டால், அங்கேயும் ‘உங்க ஊர்ப் பதிவேடு காணாமப்போயிடுச்சு’னு அசால்ட்டா சொல்றாங்க. அதேநேரத்துல, செல்வாக்கு இருக்கிற சிலருக்கு மட்டும் ஆவணங்களை உருவாக்கி புதுசா சிட்டா, அடங்கல் கொடுத்துருக்காங்க, பட்டா மாற்றம் செஞ்சு கொடுத்துருக்காங்க. சாதாரண ஆளுங்களை வருஷக்கணக்கா அலையவிட்டுக்கிட்டிருக்காங்க. சீக்கிரம் எங்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கலைன்னா, பெரிய அளவுல போராட்டத்துல ஈடுபடலாம்னு முடிவு செஞ்சிருக்கோம்” என்றார்.

முன்னாள் வி.ஏ.ஓ பரிமளாவிடம் பேசினோம். “நான் அந்தக் கிராமத்தில் பொறுப்பேற்கும்போதே சிட்டா, அடங்கல் புத்தகத்தை என்னிடம் ஒப்படைக்கவில்லை. நான் அப்போதே, ஆர்.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டேன். அந்தப் புத்தகம் என்ன ஆனது என்பது பற்றி எனக்குத் தெரியாது” என்று முடித்துக்கொண்டார். தற்போது பணியிலிருக்கும் வி.ஏ.ஓ பெர்ஷியாவிடம் கேட்டபோது, “அந்தக் குடியிருப்புகளுக்கான சிட்டா, அடங்கல் பதிவேடு காணாமல்போயிருப்பது உண்மைதான். அது தொடர்பான விசாரணை நடந்துவருகிறது” என்றார்.

பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ பிரபாகரனிடம் பேசினோம். “அடங்கலுக்கான அரசுப் பதிவேடு புத்தகத்தை, பணியில் இருந்த அலுவலர்கள் தொலைத்துவிட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வேறு புத்தகம் இல்லை எனத் தெரிகிறது. கையினால் எழுதப்பட்ட அடங்கல் புத்தகம் என்பதால், கம்ப்யூட்டரிலும் அது தொடர்பான விவரங்கள் இல்லை. தற்போது புதிதாக அடங்கல் புத்தகம் உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன் பிறகு அந்தப் பகுதியினருக்குப் பிரச்னை இருக்காது” என்றார்.

திருநாவுக்கரசு, தர்மராஜன், நிகில் நாகராஜன்
திருநாவுக்கரசு, தர்மராஜன், நிகில் நாகராஜன்

வருவாய்த்துறையின் முக்கிய ஆவணமான ஒரு கிராமத்தின் சிட்டா, அடங்கல் புத்தகம் காணாமல்போயிருக்கிறது என அதிகாரிகளே ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், தொலைத்தவர்மீது என்ன நடவடிக்கை என்பது குறித்துப் பேச மறுக்கின்றனர்.

ஒட்டங்காடு கிராமத்தின் பிரச்னைகள் விரைவில் தீர்த்துவைக்கப்பட வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism