Published:Updated:

இப்போ என்ன செய்றாங்க?! - ஆடு மேய்க்கிறார்... கருப்பட்டி விற்கிறார்...

நீலமேகவர்ணம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீலமேகவர்ணம்

‘பஜாஜ் எம்-80’யில் வலம்வரும் முன்னாள் எம்.எல்.ஏ

இப்போ என்ன செய்றாங்க?! - ஆடு மேய்க்கிறார்... கருப்பட்டி விற்கிறார்...

வட்டங்களும் பகுதிகளும் சொகுசு கார்களில் வலம்வரும் காலம் இது. கவுன்சிலராக இருந்தவர்களே பல தலைமுறைகளுக்கும் சொத்து சேர்த்துவிடுகிறார்கள். ஆனால், 18 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்தவர், இப்போது ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறார்... பழைய பஜாஜ் எம்-80-யில் சென்று பனங்கற்கண்டு, கருப்பட்டி விற்றுவருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆமாம்... 2003-ம் ஆண்டு சாத்தான்குளம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று 2006 வரை எம்.எல்.ஏ-வாக இருந்த நீலமேகவர்ணம்தான் அவர்.

இப்போ என்ன செய்றாங்க?! - ஆடு மேய்க்கிறார்... கருப்பட்டி விற்கிறார்...

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள படுக்கப்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகவர்ணம். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் இருந்ததால், அக்கட்சியில் உறுப்பினராக இணைந்தார். தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் விலகி அ.தி.மு.க-வைத் தொடங்கியபோது, 1972-ல் அ.தி.மு.க-வில் இணைந்து படுக்கப்பத்து கிராம அமைப்பாளரானார் நீலமேகவர்ணம். தொடர்ந்து படுக்கப்பத்து கிளைச் செயலாளர், சாத்தான்குளம் ஒன்றியப் பிரதிநிதி, தூத்துக்குடி மாவட்டப் பிரதிநிதி, எம்.ஜி.ஆர் இளைஞரணி சாத்தான்குளம் ஒன்றியச் செயலாளர் என்று அடுத்தடுத்த பதவிகளை வகித்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெ. அணி, ஜா. அணி என அ.தி.மு.க பிரிந்தபோது, ஜெ. அணியில் சேர்ந்தார். தொடர்ந்து, சாத்தான்குளம் ஒன்றியச் செயலாளர் ஆனார்.

சாத்தான்குளம் எம்.எல்.ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மணி நாடார் உயிரிழந்ததை அடுத்து, 2003-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்தது. அந்தத் தேர்தலில், ‘மண்ணின் மைந்தருக்கே சீட்’ என்று ஜெயலலிதா சொல்ல, அப்போதைய தூத்துக்குடி அ.தி.மு.க மாவட்டச் செயலாளரான அனிதா ராதாகிருஷ்ணனும், அப்போதைய எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்டச் செயலாளர் சண்முகநாதனும் தலா மூன்று பேரை பரிந்துரைத்து பட்டியல் அனுப்பினார்கள். ஆறு பேரையும் நேர்காணல் செய்த ஜெயலலிதாவுக்கு திருப்தி இல்லாததால், சீட் பெற விருப்ப மனு அளித்திருந்த 110 பேர் பட்டியலைப் பரிசீலனை செய்து, அதில் மூவரை நேர்காணலுக்கு அழைத்தார். அவர்களில் ஒருவர்தான் நீலமேகவர்ணம். சாத்தான்குளத்திலிருந்து சென்னைக்கு பஸ்ஸிலேயே பயணித்து போயஸ் கார்டன் சென்றடைந்தார்.

இப்போ என்ன செய்றாங்க?! - ஆடு மேய்க்கிறார்... கருப்பட்டி விற்கிறார்...

‘‘கட்சியில என்னென்ன பொறுப்புகள்ல இருந்திருக்கீங்க?’’ என்று ஜெயலலிதா கேட்க, ‘‘கிராம அமைப்பாளர்ல இருந்து மாவட்டப் பிரதிநிதி வரைக்கும் இருந்திருக்கேன்மா’’ என்று சொன்னார் நீலமேகவர்ணம். ‘‘நம்ம கட்சியில கிராம அமைப்பாளர்னு ஒரு பதவியே கிடையாதே…’’ என ஜெயலலிதா கேட்க, ‘‘இல்லம்மா... கிராம அமைப்பாளர் பதவி உண்டு’’ என்று இவர் உறுதியாகச் சொல்ல, அந்த நிமிடமே உதவியாளரை அழைத்து, ‘‘நம்ம கட்சியில அமைப்பாளர் பதவி இருந்துச்சான்னு கேளுங்க’’ என்று கட்சியின் சீனியர் நிர்வாகிகள் சிலரிடம் போனில் கேட்கச் சொன்னாராம் ஜெயலலிதா.

‘‘அமைப்பாளர் பதவி இருந்துச்சும்மா. அதுக்குப் பிறகுதான் கிளைச் செயலாளர் பதவியா எம்.ஜி.ஆர் மாத்தினார்’’ என்று ஜெயலலிதாவிடம் உதவியாளர் சொல்ல, ‘‘எனக்கே தெரியாம இருந்துருக்கு’’ என்ற ஜெயலலிதா, ‘‘உங்களுக்குத்தான் எம்.எல்.ஏ சீட்’’ என்று கூறியிருக்கிறார். உடனே நீலமேகவர்ணம், ‘‘நான் அஞ்சாம் கிளாஸ்தான் படிச்சிருக்கேன்மா. எனக்குச் சொந்தமா சின்னதா ஒரு வீடு, 150 பனைமரங்கள், 50 ஆடுகள், ஒரு பஜாஜ் M-80 பைக்... இது மட்டும்தான்மா இருக்கு. நேர்காணல் வரைக்கும் வந்து உங்களை நேர்ல பார்த்துட்டேன். அதுவே போதும்மா’’ என்று சொல்ல, ‘‘எதையும் மறைக்காம நீங்க உண்மையைப் பேசுறதே பெரிய விஷயம். எதைப் பத்தியும் கவலைப்பட வேண்டாம்’’ என்று சொல்லி அனுப்பிவிட்டு, நீலமேகவர்ணத்தையே வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார் நீலமேகவர்ணம்.

இப்போ என்ன செய்றாங்க?! - ஆடு மேய்க்கிறார்... கருப்பட்டி விற்கிறார்...
இப்போ என்ன செய்றாங்க?! - ஆடு மேய்க்கிறார்... கருப்பட்டி விற்கிறார்...

அவர் எம்.எல்.ஏ ஆன பிறகு சென்னையிலுள்ள தன் மகளின் வீட்டிலிருந்து உறவினரின் பைக்கில் வந்து சென்றதையும், தொகுதிக்குள் பைக்கிலேயே சுற்றுவதையும் அறிந்த ஜெயலலிதா, குவாலிஸ் கார் ஒன்றைப் பரிசாக வழங்கியிருக்கிறார். இவர் எம்.எல்.ஏ-வாக இருந்த 39 மாதங்களில், சாத்தான்குளத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரியதாழையில் தூண்டில் பாலம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்தார்.

2006-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சாத்தான்குளம் தொகுதி கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட, நீலமேகவர்ணத்துக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு தொகுதி மறுசீரமைப்பில் சாத்தான்குளம் தொகுதி கலைக்கப்பட்டது. ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்த நீலமேகவர்ணம், வைகுண்டம் தொகுதிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஏழாண்டுகள் அந்தப் பதவியில் நீடித்தவர், தற்போது அரசியல் வெளிச்சம் எதுவும் இல்லாமல் படுக்கப்பத்து கிளைச் செயலாளராகவே கட்சியில் தொடர்கிறார்.

இப்போ என்ன செய்றாங்க?! - ஆடு மேய்க்கிறார்... கருப்பட்டி விற்கிறார்...

ஜெயலலிதா கொடுத்த குவாலிஸ் காரை இன்னமும் பத்திரமாக வைத்திருக்கிறார் நீலமேகவர்ணம். எங்காவது வெளியூர் செல்லும்போது மட்டும் அதைப் பயன்படுத்துகிறார். மற்றபடி தினமும் காலையில் தன் தோட்டத்துக்குப் பழைய பஜாஜ் எம்-80 பைக்கில் சென்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கிறார். சொந்தமாக 150 பனைமரங்கள் இருப்பதால், வருடத்தில் ஆறு மாதங்கள் பனை சீஸனில் பதநீர் இறக்கி, கருப்பட்டி, பனங்கற்கண்டு உற்பத்திசெய்து, அவரே பைக்கில் சென்று வியாபாரம் செய்கிறார். இப்போது நீங்கள் படுக்கப்பத்து கிராமம் பக்கம் சென்றால்கூட பஜாஜ் எம்-80-யில் கருப்பட்டி விற்றுவரும் முன்னாள் எம்.எல்.ஏ-விடம் சிரிக்கச் சிரிக்கப் பேசி மனம் நிறைய கதைகளும், கைநிறைய கருப்பட்டியும் வாங்கிவரலாம்!