Published:Updated:

கலப்பட கருப்பட்டி! - பாரம்பர்யத்தை இழக்கிறதா உடன்குடி?

கருப்பட்டி
பிரீமியம் ஸ்டோரி
கருப்பட்டி

மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான பதநீர் சீஸனில் மட்டும்தான் கருப்பட்டி, கற்கண்டு தயாரிக்க முடியும். அதுவும் 25 லிட்டர் பதநீரைக் காய்ச்சினால் 3 கிலோ கருப்பட்டிதான் கிடைக்கும்.

கலப்பட கருப்பட்டி! - பாரம்பர்யத்தை இழக்கிறதா உடன்குடி?

மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான பதநீர் சீஸனில் மட்டும்தான் கருப்பட்டி, கற்கண்டு தயாரிக்க முடியும். அதுவும் 25 லிட்டர் பதநீரைக் காய்ச்சினால் 3 கிலோ கருப்பட்டிதான் கிடைக்கும்.

Published:Updated:
கருப்பட்டி
பிரீமியம் ஸ்டோரி
கருப்பட்டி

தூத்துக்குடி மாவட்டம் ‘உடன்குடி கருப்பட்டி’க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் தனி மவுசு உண்டு. ‘‘பணத்தாசையால் இதிலும் கலப்படம் செய்து ஊர்ப் பெயரையே கெடுக்கிறார்கள்’’ என ஆதங்கப்படு கிறார்கள் பாரம்பர்ய கருப்பட்டி உற்பத்தியாளர்கள்.

`உடன்குடி கருப்பட்டி’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுக்க சாலையோரங்களில் கலப்பட கருப்பட்டி விற்பனையாவதாகவும், வெளியூர்க்காரர்கள் என்றால், உடன்குடியிலேயே இப்படி ஏமாற்றுவதற்கு ஆள் இருக்கிறார்கள் என்றும் தொடர்ந்து புகார் கள் வந்தன. இதன் அடிப்படையில், சமீபத்தில் உடன்குடியில் கலப்பட கருப்பட்டி தயாரித்த இரண்டு ஆலைகளுக்குச் சீல் வைத்தனர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள். மேலும் கலப்படத்துக்காக வைத்திருந்த இரண்டாம் தர சீனி, கரும்பு வெல்லம், கலப்பட கற்கண்டு மற்றும் கழிவுப் பதநீர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

கலப்பட கருப்பட்டி!  - பாரம்பர்யத்தை இழக்கிறதா உடன்குடி?

இது குறித்து நம்மிடம் பேசிய உடன்குடி பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு உற்பத்தியாளர் நல அமைப்பின் தலைவர் சந்திரசேகரன், “மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான பதநீர் சீஸனில் மட்டும்தான் கருப்பட்டி, கற்கண்டு தயாரிக்க முடியும். அதுவும் 25 லிட்டர் பதநீரைக் காய்ச்சினால் 3 கிலோ கருப்பட்டிதான் கிடைக்கும். ஆனால், கலப்பட கருப்பட்டி தயாரிப்பாளர்கள் ‘மொலாசஸ்’ எனப்படும் சர்க்கரை ஆலைக் கழிவுடன் சீனியைக் கலந்து வருடம் முழுவதும் ‘உடன்குடி கருப்பட்டி(?)’ தயாரிக்கிறார்கள். 200 கிலோ சீனியுடன் தேவையான தண்ணீர் ஊற்றி, பாகுபோலக் காய்ச்சி அதனுடன் 2 லிட்டர் கழிவுப் பதநீரைக் கலந்தால், 170 கிலோ கலப்பட கருப்பட்டி கிடைத்துவிடுமாம். இப்படிக் கொள்ளை லாபம் பார்க்கிறார்கள்.

அரசியல்வாதிகளின் ஆதரவோடு உணவு பாதுகாப்பு அதிகாரிகளையும் கலப்பட கருப்பட்டித் தயாரிப்பாளர்கள் ‘கவனித்து’விடுவதால், அவர்களுடைய இந்தக் கலப்படத் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. எனவே, பதநீரில் சீனி கலந்து காய்ச்சி, ‘பனங்கற்கண்டு’, ‘கருப்பட்டி’ என்ற பெயரில் லேபிள் ஒட்டி விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என, 2020-ம் ஆண்டே சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நாங்கள் வழக்கு தொடர்ந்தோம். ஆனால், வழக்கு இன்னும் நிலுவை யிலேயே இருக்கிறது...” என்றார் வருத்தத்தோடு.

மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மாரியப்பனிடம் பேசியபோது, “தொடர்ச்சியாக நாங்கள் ஆய்வுசெய்துவருவதால்தான், கலப்படக்காரர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கைக்கு உள்ளாகின்றனர். எனவே, அதிகாரிகள் மீதே குற்றம்சாட்டுவது தவறு. கலப்பட கருப்பட்டி உற்பத்தி செய்யும் ஆலை குறித்து பொதுமக்களும் எங்களுக்குத் தகவல் கொடுத்தால், உடனே நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சந்திரசேகரன்,
சந்திரசேகரன்,
செந்தில்ராஜ்
செந்தில்ராஜ்

மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜ், “கலப்பட கருப்பட்டி உற்பத்தியைத் தடுக்கும் நோக்கில், உடன்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி ரெய்டு நடத்தச் சொல்லி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். வாகனச் சோதனையின்போது சீனி மூட்டைகள் அதிக அளவில் எடுத்து வரப்படுவதைக் கண்டறிந்து அதன் விவரங்களைச் சேகரிக்க காவல்துறைக்கும் அறிவுறுத்தியிருக்கிறேன். விரைவில் நானே ‘சர்ப்ரைஸ் விசிட்’ செய்யவும் திட்டமிட்டிருக்கிறேன்” என்றார்.

தங்கள் பணப்பையை நிரப்புவதற்காக, மக்களின் இரைப்பையைப் புண்ணாக்குபவர்களைச் சும்மாவிடக் கூடாது!