Published:Updated:

ஏற்றம் தருமா ஏலச் சீட்டு..? - சாதகங்களும் பாதகங்களும்!

பணம்
பிரீமியம் ஸ்டோரி
News
பணம்

ஏலச் சீட்டுப் பணத்தை எடுத்துவிட்டு, அதை பீரோவிலோ வங்கி சேமிப்புக் கணக்கிலோ வைத்திருந்தால் நஷ்டம்தான்!

சென்னை மாதிரியான மெட்ரோ சிட்டிகளில் வேண்டுமானால், சீட்டுக் கட்டி பணம் சேர்க்கும் பழக்கம் பெரிய அளவில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் சீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பணம் சேர்ப்பது, நடுத்தர வீட்டுக் குடும்பத்தினரின் வாழ்க்கையில் தவறாமல் இடம்பெறும் ஒரு விஷயமாக இருக்கிறது.

சீட்டுக் கட்டுவது உண்மையிலேயே லாபம் தரும் முறைதானா, இந்தத் திட்டத்தில் உள்ள சாதகமான, பாதகமான அம்சங்கள் என்னென்ன, யாரிடம் சீட்டு சேருவது நல்லது, சீட்டுத் திட்டத்தில் சேரும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதையெல்லாம் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏற்றம் தருமா ஏலச் சீட்டு..? - சாதகங்களும் பாதகங்களும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பலவிதமான சீட்டுத் திட்டங்கள்..!

முதலில், பல்வேறு சீட்டுத் திட்டங்களைப் பற்றியும் அதில் சேரும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றியும் மதுரையைச் சேர்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற யானைக்கல் வி.எம் சிட்ஸ் பிரவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஏ.வேல்முருகனிடம் கேட்டோம்.

“நகைச் சீட்டு, தீபாவளிச் சீட்டு, ஏலச் சீட்டு, குலுக்கல் சீட்டு எனப் பல வகையான சீட்டுகள் உண்டு. நகைச் சீட்டில் நாம் கட்டும் பணத்துடன் கூடுதலாக ஒருமாதத் தவணைப் பணத்தை நகைக் கடைகள் கொடுக்கும். இப்படிச் சேர்க்கும் பணத்தை எந்த நகைக் கடையும் பணமாகத் தராது. நகையாகத்தான் வாங்கிக்கொள்ள முடியும். தீபாவளி, பொங்கல் சீட்டு என்பவை பண்டிகையின்போது தொடங்கப்படுகிறவை. இந்தச் சீட்டுத் திட்டத்தில் சேருகிறவர்களுக்கு பட்டாசு, பண்ட பாத்திரங்கள், இனிப்பு வகைகள் பரிசாக அளிக்கப்படுகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

குலுக்கல் சீட்டு

இவையெல்லாம் கடந்த 10, 20 ஆண்டுகளாக மக்களிடம் பெயர் பெற்று விளங்கும் திட்டங்கள். ஆனால், குலுக்கல் மூலம் நடக்கும் ஏலச் சீட்டுதான் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக மக்களின் வாழ்க்கையில் ஒன்றிணைந்த ஒரு சேமிப்பு முறையாக இருக்கிறது. குலுக்கல் சீட்டு என்றால் ஒரு திட்டத்தில் 10 பேர் எனில், பத்து பேரும் சரிசமமானதொரு தொகையைத் தந்துவிட வேண்டும். இந்தப் பத்து பேரின் பெயரையும் தனித்தனி சீட்டுகளில் எழுதி, குலுக்கிப் போடுவார்கள். அதில் ஒரு சீட்டை எடுத்து, அதில் யார் பெயர் வருகிறதோ, அவருக்கு மொத்தப் பணத்தையும் தந்துவிடுவார்கள். அடுத்த மாதம் சீட்டு எடுத்தவர் தவிர, மற்ற ஒன்பது பேர் பெயரும் எழுதிப் போடப்படும். இது சில்லறையாகச் சேர்த்து மொத்தமாகப் பணத்தைத் திரும்பப் பெறும் வழி ஆகும். அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் சீட்டு இது. நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால், முதல் மாதமே பணம் கிடைக்கும். இல்லையென்றால் பத்தாவது மாதம் வரை படுத்தியெடுக்கும். அதனால்தான் குலுக்கல் சீட்டுக்கு இன்றைய நிலையில் மவுசு குறைவாக இருக்கிறது. இந்த வகை சீட்டுகளை நட்பின் அடிப்படையில், அலுவலக நண்பர்களுக்குள் வேண்டுமானால் நடத்திக்கொள்ளலாம். ஆபத்துக் காலத்தில் உதவும் நண்பனைப்போல, இந்த சீட்டுப் பணமும் ஏதேனும் ஒரு தேவைக்கு நிச்சயம் உதவும்” என்றவர், ஏலச்சீட்டு நடக்கும் விதம் பற்றி விளக்கினார்.

ஏற்றம் தருமா ஏலச் சீட்டு..? - சாதகங்களும் பாதகங்களும்!

ஒரு தரம்... ரெண்டு தரம்... மூன்று தரம்!

“பல நேரங்களில் சீட்டு என்பதே தேவைக்குப் பணம் பெறும் வழியாகத்தான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது நமக்குத் தேவை இருக்கும் நேரத்தில் அதிர்ஷ்டம் கைகொடுக்காது போனால் சீட்டு சேர்வதிலேயே அர்த்தமில்லை. ஆகவே, நமக்குத் தேவைப்படும் நேரத்தில் பணத்தை எடுக்க முடிய வேண்டும் என்பதுதான் இன்றைக்குப் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பணம் கொஞ்சம் கூடக்குறைய கிடைத்தாலும் பரவாயில்லை, தேவைப்படும் நேரத்தில் பணம் கிடைக்க வேண்டும் என்ற தேவையைப் பூர்த்தி செய்வதுதான் ஏலச் சீட்டு. எனவேதான், அதிகமானவர்கள் இந்த ஏலச் சீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பணம் சேர்க்கிறார்கள். இந்திய அளவில் பதிவு செய்யப்பட்ட சீட்டுக் கம்பெனிகள் மூலம் வங்கிகளில் இதுவரை டெபாசிட் செய்யப் பட்டிருக்கும் பணத்தின் மதிப்பு மட்டுமே சுமார் ரூ.40,000 கோடி.

சீட்டு என்பதன் அடிப்படையே ஒரு குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் செலுத்தி, அதை மொத்தமாகப் பெறுவதுதான். இதில் லாபம் என்பது, குறைவான தொகையைச் செலுத்தி, அதிகமான பணத்தைப் பெறுவதுதான். 10 பேர் கொண்ட பத்து மாதச் சீட்டுத் திட்டத்தில் ஒவ்வொருவரும் ரூ.2,500 கட்டுகிறார்கள் என்று எடுத்துக் கொள்வோம். நாம் பெறும் தொகை ரூ.25,000. ஆனால், இதை மாதம்தோறும் ரூ.2,500 ஆக செலுத்த வேண்டியதில்லை. என்ன கழிவு போகிறதோ அதற்கேற்ப, நாம் செலுத்த வேண்டிய தொகையும் மாறுபடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் கழிவு என்பது பணத்தைக் குறைத்து எடுப்பதன் மூலம் கிடைப்பது. பேச்சு வழக்கில் இதை ‘தள்ளி எடுப்பது’ அல்லது கசடு என்பார்கள். எது எப்படி எனில், ஒரே மாதத்தில் இரண்டு, மூன்று பேருக்குச் சீட்டுப் பணம் தேவைப்படலாம். அப்போது ரூ.25,000 சீட்டை ஒருவர் ரூ.3,000 குறைத்து, ரூ.22,000-க்கு எடுத்துக் கொள்ள முன்வரலாம். இன்னொருவர் ரூ.4,000 குறைத்து ரூ.21,000-த்துக்கு எடுக்க முன்வரலாம். இறுதியில் யார் அதிக தொகையைக் குறைத்து ஏலத்துக்கு எடுக்கிறார்களோ, அவருக்கே அந்த மாத சீட்டுப் பணம் கொடுக்கப்படும். ஏலச் சீட்டில் ஆரம்பத்தில் குறைவான தொகையும், நடுவில் கொஞ்சம் அதிகமான தொகையும், கடைசி மாதங்களில் கிட்டத்தட்ட முழுத் தொகையும் கட்ட வேண்டியிருக்கும்’’ என்றவர், ஏலச் சீட்டுத் திட்டத்தில் சேர்வதால் நமக்கு லாபமா, நஷ்டமா என்பதையும் சொன்னார்.

ஏற்றம் தருமா ஏலச் சீட்டு..? - சாதகங்களும் பாதகங்களும்!

லாபமா, நஷ்டமா?

‘‘ஏலச் சீட்டைப் பொறுத்தவரை, நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், எந்த வகையான அடமான சொத்தும் இல்லாமல் நமக்கு பணம் கிடைப்பது. வங்கி களில் தனிநபர் கடன் தவிர, மற்ற எல்லா வற்றுக்கும் அடமான சொத்து தர வேண்டும். ஆனால், ஏலச் சீட்டுத் திட்டத்தில், ஒருவர் நன்கு தெரிந்தவர்கள் என்ற அடிப்படையிலேயே பணம் தரப்படுகிறது.

ஏலச் சீட்டில் எடுக்கப்படும் பணம், நாம் எப்போது எடுக்கிறோம், எடுத்த பணத்தை எதற்காகப் பயன்படுத்துகிறோம் என்பதையும் பொறுத்து அது லாபமா, நஷ்டமா என்பதைச் சொல்ல முடியும். உதாரணமாக, ஏலச் சீட்டில் ஒருவர் ரூ.25,000 சீட்டை 20,000 ரூபாய்க்கு எடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதை அவர் பிசினஸில் முதலீடு செய்கிறார். இதற்கு மாதத்துக்கு 10% லாபம் கிடைத்தால்கூட ரூ.2,000 கிடைத்துவிடும். இப்படி 10 மாதம் செய்தால் (Rotation) செய்தால், ரூ.20,000 லாபம் கிடைக்கும். இதுதான் சீட்டுப் பணத்தை லாபமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சூட்சுமம்.

சீட்டுத் திட்டத்திலிருந்து பணம் எடுக்காமல், 20,000 ரூபாயைக் கடனாக 24% வட்டிக்கு வாங்குகிறார் எனில், வட்டி மட்டுமே மாதம் ஒன்றுக்கு ரூ.480 கட்ட வேண்டும். இப்படி பத்து மாதம் கட்டினால், அவர் 4,800 ரூபாயை வட்டியாகத் தர வேண்டியிருக்கும். பிசினஸுக்காக இல்லையென்றாலும், அதிக வட்டியில் கடன் வாங்கி, அதன்மூலம் அத்தியா வசியமான செலவுகளைச் செய்வதைவிட, ஏலச் சீட்டில் கொஞ்சம் பணத்தைக் குறைத்து எடுத்து, அத்தியாவசியமான செலவுகளைச் செய்தால் லாபம்தான். ஆனால், பணம் கிடைக்கிறதே என்று ஏலச் சீட்டுப் பணத்தை எடுத்துவிட்டு, அதை பீரோவிலோ, வங்கி சேமிப்புக் கணக்கிலோ வைத்திருந்தால் நஷ்டம்தான்’’ என்றவர், ஏலச் சீட்டில் சேரும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றியும் எடுத்துச் சொன்னார்.

அரசுப் பதிவு பெற்ற நிறுவனமா?

‘‘ஒருவர் சீட்டு நிறுவனம் நடத்த முடிவு செய்துவிட்டால், அவர் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் 3,000 ரூபாய்க் கான காசோலை கொடுத்து முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். சீட்டு நடத்துபவரின் மீது குற்றங்கள் இல்லாத பட்சத்தில், புலனாய்வுத் துறைக்கு அவருடைய விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். அவர்களுடைய விசாரணை யிலும் குற்ற நடவடிக்கைகளில் சீட்டு நடத்துபவரின் பெயர் இல்லாதபட்சத்தில், அனுமதி வழங்கப்படும். இதன்பிறகே சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.

ஏற்றம் தருமா ஏலச் சீட்டு..? - சாதகங்களும் பாதகங்களும்!

மேலும், ஒரு லட்சம் ரூபாய் சீட்டு நடத்துகிறார் எனில், (உதாரணத்துக்கு 10 பேர், பத்து மாதம்) ரூ.1 லட்சத்தை சீட்டு நடத்துபவர் தனது வங்கியில் டெபாசிட் செய்து (ரூ.10 லட்சம் சீட்டாக இருந்தால், ரூ.10 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும்), அதற்கான ஆவணத்தைச் சீட்டு நடத்தும் பகுதியில் இருக்கும் சார்பதிவாளர் அலுவ லகத்தில் கொடுத்து பதிவு செய்துகொள்ள வேண்டும். இதன்பிறகு, ஒரு எண் கொடுப்பார்கள். அதற்குமுன், ஒப்பளிப்பு ஆணை (prior sanction letter) கொடுப்பார்கள். அதைக் காண்பித்த பின்புதான் சீட்டுத் திட்டத்தில் ஆட்களைச் சேர்க்க முடியும். ஆட்களைச் சேர்த்த பின், அனைவரின் விவரங்களுடன் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு செய்த பின்பு இதற்கு ஒரு ‘குரூப் எண்’ கொடுப்பார்கள். இதன் பிறகு, ஆடிட்டரை அணுகி சீட்டு நிறுவனம் நடத்துவதற்கான லைசன்ஸ் பெறும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். இந்த விவரங்களை சீட்டு நடத்தும் அலுவலகம், சீட்டு போடுபவர்களுக்குக் கொடுக்கும் பில்லில் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் வசூலாகும் தொகையை சீட்டு எடுத்த நபருக்குக் கொடுத்தாக வேண்டும். ஒருவேளை, சீட்டு எடுத்த நபர் உத்தரவாத ஆவணத்தைக் கொடுக்கத் தவறினால், அந்தப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டுமே தவிர, அதைச் சீட்டு நடத்தும் நிறுவனங்கள் எடுத்து பயன்படுத்த முடியாது. மேலும், தற்போதைய விதிமுறைப்படி அதிகபட்சம் 30% மட்டுமே தள்ளுபடி செய்து ஏலம் கேட்க முடியும். சீட்டு சம்பந்தமாக ஒவ்வொரு தகவலையும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளையெல்லாம் ஏற்று நடக்கும் நிறுவனங்களில் போடும் பணம் பாதுகாப்பாக இருக்கும்’’ என்று சொல்லி முடித்தார்.

ஆக, ஏலச் சீட்டுப் பணத்தை நாம் எப்படி எடுத்து பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து அது நமக்கு லாபமா, நஷ்டமா என்பது முடிவாகும்!

எங்கே புகார் செய்வது?

ரசு அங்கீகாரம் பெற்ற ஏலச் சீட்டு நிறுவனம், ஏலச் சீட்டு முடிந்தும் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்தாலோ, ஏமாற்றினாலோ உடனே, அந்தப் பகுதிக்கு உட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். ஏலச் சீட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் நேரடியாக வரவைத்து விசாரித்து, அதை முறையாகச் சரிசெய்வார்கள்.

அதேபோல, ஏலச் சீட்டு போடுபவர், ஏலச் சீட்டை மாதாமாதம் முறையாகச் செலுத்தாதபட்சத்தில், அந்தப் புகாரையும் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லலாம். தனிநபர் நடத்தும் ஏலச் சீட்டில் சேமிப்பவர், ஏமாற்றப்படும்பட்சத்தில் காவல் நிலையத்தில் புகார் செய்ய முடியும். இந்த வகைச் சீட்டு சட்டத்துக்கு உட்பட்டு நடப்பதில்லை என்பதால், சீட்டு நடத்துபவர்களைவிட சீட்டு போடுபவர்களுக்குத்தான் ரிஸ்க் அதிகம்.

‘‘அரசு பதிவு செய்யாத சீட்டு நிறுவனங்கள் மோசடி நிறுவனங்கள் அல்ல..!’’

சாந்தி, சத்தியமங்கலம்.

ஏற்றம் தருமா ஏலச் சீட்டு..? - சாதகங்களும் பாதகங்களும்!

“இன்றைய நிலையில், ஏலச் சீட்டு நடத்தும் நிறுவனங்களில், பெரும்பாலான நிறுவனங்கள் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள்தான். அதற்காக, அவர்கள் அனைவரையும் மோசடிப் பேர்வழிகள் என்று சொல்லிவிட முடியாது. அதேசமயம், சீட்டு கம்பெனி ஆரம்பிப்பது யாராக இருந்தாலும், கண்ணை மூடிக்கொண்டு போய் சீட்டில் சேர்ந்துவிடவும் கூடாது. சீட்டு நடத்தும் நபரை நம்பித்தான் நீங்கள் பணத்தைக் கட்டுகிறீர்கள் என்பதால், அவர்தான் உங்கள் பணத்துக்கு முழுப் பொறுப்பு. அதனால் அவரைப் பற்றி அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் நன்கு விசாரித்துவிட்டு, திட்டத்தில் சேர்வது அவசியம்.

சீட்டு நடத்தும் நபர் உங்களுக்கு அதிகபட்சம் ஐந்து வருடங்களாவது தெரிந்தவராக இருக்க வேண்டும். உங்கள் பகுதியில் அல்லது வீட்டுக்கு அருகில் புதிதாக வரும் நபர்களிடம் சீட்டுப் போடாதீர்கள். சீட்டு நடத்தும் நபர்களுக்கு அசையாச் சொத்துகள் இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். வாடகை வீட்டில் குடியிருக்கும் நபர்கள் நடத்தும் சீட்டில் சேராமல் இருப்பது நல்லது. திடீரென வீட்டைக் காலிசெய்துவிட்டுப் போய்விட்டால் சிக்கலாகிவிடும்.”

சீட்டுக் கட்டி ஏமாந்துவிடாதீர்கள்!

மோகன், கோயம்புத்தூர்.

ஏற்றம் தருமா ஏலச் சீட்டு..? - சாதகங்களும் பாதகங்களும்!

“ஏலச் சீட்டு சேமிப்பில் பலவிதங்கள் உள்ளன. தனிநபரா, இல்லை கம்பெனியா என்பது முக்கியம். இரண்டிலும் பிரச்னை உள்ளது. நல்ல முறையில் நடத்துபவர்களும் உண்டு‌. சீட்டு போட்டு சீட்டிங் செய்பவர்களும் உண்டு. எனவே, என்னைக் கேட்டால் சீட்டுக் கட்டுவது ஏமாற்றத்துக்கே வழிவகுக்கும் என்பேன். ஏனெனில், எனது கடந்த கால அனுபவம் அப்படி. 10 ரூபாய் சேமித்தாலும், இதர முதலீட்டுத் திட்டங்களில் சேமிப்பது நல்லது.”

சொந்தத் தொழிலுக்கு ஏலச்சீட்டு கைகொடுக்கிறது!

சங்கர், கோபிசெட்டிபாளையம்.

ஏற்றம் தருமா ஏலச் சீட்டு..? - சாதகங்களும் பாதகங்களும்!

“நான் சொந்தமாகத் தொழில் செய்துவருகிறேன். கடந்த ஐந்து வருடங்களாக ஏலச் சீட்டில் பணத்தைச் சேமித்து வருகிறேன். தொழில் முதலீட்டுக்காக, வங்கியிலோ, கந்து வட்டிக்கோ பணத்தை வாங்குவதைவிட சீட்டுச் சேமிப்பின்மூலம் பணம் பெறுவது லாபமாகவே இருக்கிறது. தொழில் மூலம் கிடைக்கும் லாபத்திலிருந்து, குறிப்பிட்ட தொகையை எடுத்து இரண்டு ஏலச் சீட்டில் சேமித்து வருகிறேன். பிசினஸுக்குத் தேவைப்படும்போது இந்தப் பணத்தை எடுத்து பயன்படுத்திக்கொள்கிறேன்.”