Published:Updated:

“கலாமைக் காப்பாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது!”

நம்பி நாராயணன்
பிரீமியம் ஸ்டோரி
நம்பி நாராயணன்

நேர்காணல்

“கலாமைக் காப்பாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது!”

நேர்காணல்

Published:Updated:
நம்பி நாராயணன்
பிரீமியம் ஸ்டோரி
நம்பி நாராயணன்

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல் கல், கிரயோஜனிக் இன்ஜின். இதைத் தயாரிக்கும் பணிக்குத் தலைமை ஏற்றவர், விஞ்ஞானி நம்பி நாராயணன். விண்வெளித் துறையின் முக்கிய ஆளுமைகளான விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், யு.ஆர்.ராவ், அப்துல் கலாம் போன்றவர்களுடன் பணியாற்றிய பெருமை கொண்டவர். நம் நாட்டின் விண்வெளித்துறையில் பின்னடைவை ஏற்படுத்த சில அந்நிய சக்திகள் பின்னிய சதிவலையில் சிக்கி, பல கொடுமைகளை அனுபவித்தவர். அதற்கு எதிராகப் போராடி வெற்றிபெற்ற நம்பி நாராயணனின் வாழ்க்கை, திரைப்படமாகத் தயாராகி, திரைக்கு வரவுள்ளது. விகடன் தீபாவளி மலருக்காக, திருவனந்தபுரத்தில் வசிக்கும் விஞ்ஞானி நம்பி நாராயணனைச் சந்தித்தோம்.

``விண்வெளித்துறையில் சாதிப்போம் எனப் பள்ளிப் பருவத்தில் நினைத்தீர்களா?''

``சிறு வயதில் பறக்கும் பொருள்கள்மீது அனைவருக்கும் இயற்கையாகவே ஓர் ஈர்ப்பு வரும். அந்த ஈர்ப்பும் ஆர்வமும் எனக்கும் இருந்தது. ஆனாலும் ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயராக வேண்டும் என்ற எண்ணம் பள்ளிக் காலத்தில் கிடையாது. அதற்கு என்ன படிக்க வேண்டும் என்பதுகூடத் தெரியாது. ஆனால், இன்ஜினீயரிங் சென்றபிறகுதான் அந்த மாற்றம் ஏற்பட்டது. ஏரோநாட்டிக்கல் ஃபீல்டில் வர முடியும் என்ற நம்பிக்கை வந்தது. அந்தச் சமயத்தில், தமிழகத்தில் ஆறு பொறியியல் கல்லூரிகள்தான் இருந்தன. நான் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் படித்தேன். அப்போது பொறியியல் ஐந்து ஆண்டுகள் படிக்க வேண்டும். நிறைய பேராசிரியர்கள் எனக்கு வழி காட்டினார்கள். அதில் சிலரோடு இப்போதும் தொடர்பில் இருக்கிறேன். கோதண்டராமன் என்கிற பேராசிரியர் மறக்க முடியாதவர். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் இறுதி ஆண்டில் `ஆக்ஸியல் புளோ கம்ப்ரசர்' புராஜெக்ட் செய்யும்போது அவர் ரொம்ப ஊக்கப்படுத்தினார். சாதாரணமாக ஒரு புராஜெக்ட் செய்ய குறைந்தது இரண்டு மாணவர்களாவது இருப்பார்்கள். அப்போது நான் தனியாகத்தான் அந்த புராஜெக்ட் செய்தேன். அதை டிசைன் செய்து, ஒன்றிணைத்து, பிரசென்ட் செய்யும் வாய்ப்பு என் புராஜெக்ட்டில் இருந்தது. எனக்கு பிரின்சிடன் (Princeton University) யுனிவர்சிட்டியில இடம் கிடைக்க அந்த புராஜெக்ட் ஒரு காரணம். பிரின்சிடன் யுனிவர்சிட்டியில் லிக்விட் ராக்கெட் புரபல்சன் (Liquid Rocket Propulsion) பற்றிப் படித்தேன். அதுதான் விகாஸ் இன்ஜின் கண்டுபிடிக்க உதவியது. விகாஸ் இன்ஜின் உதவியால் பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்கள் மேலே போய்க்கொண்டிருப்பதற்கு அடித்தளம். விகாஸ் இன்ஜின் ஒருமுறைகூட ஃபெயில் ஆகவில்லை. 1974 காலகட்டத்தில் தொடங்கிய விகாஸ் இன்ஜின், 1995 வரை முக்கியப் பங்கு வகித்தது. இன்றைக்கும் அது விண்ணுக்குப் போகிறது.''

“கலாமைக் காப்பாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது!”

``விண்வெளித்துறையில் பெருமிதம்கொள்ளும் அளவுக்கு உங்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சம்பவம்?''

``உந்து விசையின் சக்தி அதிகரிக்க அதிகரிக்கத்தான் ராக்கெட் மேலே மேலே போய்க்கொண்டே இருக்க முடியும். இங்கிருந்து நிலவுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் செல்வதெல்லாம் இந்த உந்து விசையால்தான். இந்திய விண்வெளித் துறையில் திட எரிபொருள்தான் இருந்தது. திரவ எரிபொருள், ராக்கெட்டின் வடிவம், அது சார்ந்த தொடர் ஆராய்ச்சி எல்லாவற்றிலும் என் பங்களிப்பு அதிகம். திரவ எரிபொருள் திட்டத்துக்குத் தலைமை வகித்தேன். அது பெருமிதமான விஷயம். கிரயோஜனிக் என்பது, திரவ எரிபொருள் திட்டத்தின் இன்னொரு பிரிவுதான். ரூம் டெம்பரேச்சரில் எரிபொருளை திரவ வடிவில் வைப்பதுதான் கிரயோஜனிக் தொழில்நுட்பம். இந்தியாவில் முக்கியப் பொறுப்பில் பணி செய்துகொண்டு, விகாஸ் இன்ஜினை முதன்முதலாக முழுமையாக டெஸ்ட் செய்தேன். அதுதான் என் மனதுக்கு நிறைவளித்த தருணம்.''

``கிரயோஜனிக் இன்ஜின் வடிவமைப்பில் என்னென்ன சவால்கள் இருந்தன?''

``கிரயோஜனிக்கைக் கையாளுவதே மிகப் பெரிய வித்தை. அதைப் பற்றி விரிவாக ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன். திட எரிபொருளைவிட திரவ எரிபொருளுக்கு உந்துவிசை சக்தி அதிகம். அதைவிட கிரயோஜனிக்குக்கு உந்துவிசை மிக அதிகம்.இதனால்தான் அதைக் கையாளுவது கடினமாக இருந்தாலும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதைவிட அதிக உந்துவிசை சக்தியுள்ள வேறொன்று கிடைத்தால், இதை விட்டுவிட்டு அதற்குச் சென்றிருப்போம். அதற்்காக செமி கிரயோஜனிக் எனும் திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்கள்.''

``விண்வெளித்துறையில் மாணவர்களுக்கு என்ன மாதிரியான வாய்ப்புகள் இருக்கின்றன?''

``விண்வெளித்துறையில் இல்லாத வாய்ப்புகளே இல்லை. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கின் கீழே வரக்கூடிய துறைகள்தான் ஹீட் ட்ரான்ஸ்பர், கம்பஷன் இன்ஸ்டெபிளிட்டி(Combustion instability), புரொடக்‌ஷன் டெக்னாலஜி, அசெம்பிள் அண்டு இன்டகிரேஷன், தெர்மோ டைனமிக், தியரி ஆஃப் மெஷின் போன்றவை. எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷனை எடுத்துக்கொண்டால் எலெக்ட்ரானிக்ஸ், கன்ட்ரோல் இன்ஜினீயரிங், கைடன்ஸ் இன்ஜினீயரிங் போன்றவை விண்வெளித் துறைக்கு மிகவும் தொடர்புடையவை. புவியீர்ப்பு விசைக்கு வெளியே போன பிறகு நமக்கு ஏற்படும் மாற்றங்கள், அதன் ஆதிக்கங்கள் போன்ற புதுப் புதுத் துறைகளும் இருக்கின்றன. புதுப் புது விஷயங்களில் வேலை செய்ய வேண்டும் என்ற முயற்சியும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு விண்வெளித்துறையில் நல்ல வாய்ப்பு இருக்கிறது.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கலாமைக் காப்பாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது!”

``விண்வெளித்துறையில் சாதிக்க நம் நாடு எப்படித் தயாராக வேண்டும்?''

``இந்திய விண்வெளித்துறையின் மும்மூர்த்திகள் டாக்டர் விக்ரம் சாராபாய், புரொபசர் சதீஷ் தவான், டாக்டர் யு.ஆர்.ராவ். சாராபாய்தான் இதற்கான அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர். சதீஷ் தவான், புளூ பிரிண்டர்; அதாவது, எப்படி இஸ்ரோ இயங்க வேண்டும் என்று திட்டங்கள் வகுத்தவர். யு.ஆர்.ராவ், அவற்றை செயல்படுத்தினார்.

1963-லிருந்து 1971 வரை எட்டு ஆண்டுகள் விக்ரம் சாராபாய் இஸ்ரோவின் தலைவராக இருந்தார். அதன்பின் சதீஷ் தவான் 12 ஆண்டுகளும், யு.ஆர்.ராவ் 12 ஆண்டுகளும் தலைவராக இருந்தார்கள். இந்திய விண்வெளித்துறையில் இந்த மூன்று பேருடைய பங்களிப்பும் மறக்க முடியாதது. ஒன்றுமே இல்லாத சமயத்தில் நாம் கனவு காணும்போது, ஓர் அளவுக்கு மேல கனவு காண முடியாது அல்லவா? ஆனால், மூன்று இன்ச் டயா மீட்டர் ராக்கெட்கூட இல்லாத சமயத்தில், கிட்டத்தட்ட பத்து அடி டயா மீட்டர் அளவிலான ராக்கெட்டை யோசிக்கும் சக்தி இவர்களுக்கு இருந்தது. 1966-ல் இருந்து இந்த மூன்று பேருடனும் மிக நெருக்கமாகப் பணியாற்றியிருக்கிறேன் என்பது எனக்குப் பெருமை தரும் விஷயம். நான் இஸ்ரோவில் பணியில் சேரும்போது 28 பேர் மட்டும்தான் இருந்தோம். இப்போது 25,000 பேர் இருப்பார்கள்.

பூமியில் இருந்து மற்றொரு கிரகத்துக்குச் செல்வது பற்றியெல்லாம் அவர்கள் யோசிக்கவில்லை. சதீஷ் தவான், `மற்றவர்கள் அதைச் செய்யட்டும், அதற்கு அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்' என்று சொல்லுவார். அதன்பிறகு சந்திரயான், மங்கல்யான் போன்ற பல புராஜெக்டுகள் வந்தாலும், அந்தத் திட்டங்கள் தெளிவாக இல்லை என்பது என் அபிப்பிராயம். திட்டங்கள் தெளிவாக்கப்பட வேண்டும்; நமது இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும். இதில் பணம் ஒரு பிரச்னையாக வரும். அமெரிக்கா, நிலவில் மனிதன் காலடி எடுத்துவைப்பது வரை செய்தார்்கள். 1975-லேயே அந்தத் திட்டத்தை விட்டுவிட்டார்கள். அதன் பிறகு சுமார் 45 ஆண்டுகளாக எதுவுமே செய்யவில்லை. அதேசமயம் போயிங், அமேசான் போன்ற சில நிறுவனங்களுடன் இணைந்து செய்கிறார்கள். அதேதான் பிரான்ஸ் நாட்டின் கதையும். ரஷ்யாவும் அதன் பிறகு எதுவுமே செய்யவில்லை. சீனா, இப்போது கொஞ்சம் ஆக்டிவாகச் செய்துகொண்டிருக்கிறது. நம் நாடு விண்வெளித்துறையில் ஒரு திட்டம் வகுக்க வேண்டும். பணம் முதலீடு செய்யும் தகுதிகொண்ட தனியார் நிறுவனங்களைக் கொண்டுவர வேண்டும். தனியார் நிறுவனங்கள் சேவைக்காக வரமாட்டார்கள். அவர்களுக்கும் ஆதாயம் கிடைப்பதுபோல திட்டங்கள் இருக்க வேண்டும்.''

``அப்துல் கலாமுடன் பணி செய்த அனுபவம்?''

அப்துல் கலாம் மிகச்சிறந்த, இனிமையான மனிதர். அவருடன் நான் வேலை செய்ததைப் பெருமையாக நினைக்கிறேன். அப்துல் கலாம், நான், சத்யா, சுதாகர், அப்துல் மஜீத் என ஐந்துபேரும் மூன்று டேபிள்களைச் சேர்த்துப் போட்டுக்கொண்டு சுற்றி சேர் போட்டு அமர்ந்திருப்போம். அதுதான் தொடக்கம். தும்பாவில் சர்ச் ஒன்றை இஸ்ரோவுக்காக எடுத்தோம். அதில் பிஷப் ஹவுஸ், பள்ளிக் கட்டடம் ஒன்றும் இருந்தது. பிஷப் ஹவுஸுக்கு உள்ளே அப்துல்கலாம் ஆபீஸ். தனித் தனி அறையோ, பெரிய பர்னிச்சரோ கிடையாது என்பதால், நாங்கள் அப்படி இருந்து வேலை செய்தோம். அதுதான் தொடக்கக்காலம். அப்போதே அப்துல் கலாமுக்கு மிக அதிகமான கனவுகள் எல்லாம் உண்டு.

கன் பவுடர், பிரஷர் குறைந்தால் வெடிக்காது. ராக்கெட் மேலே போகும்போது பிரஷர் குறையும். ஆனாலும் எங்களுக்கு வெடிக்கவைக்க வேண்டும். கன் பவுடர் பிரஷர் குறைந்தால் வெடிக்காது என்பதை, தரையில் நிரூபிக்கும் ஆய்வை நான் செய்து காட்டினேன். அப்துல் கலாமுக்கு அதில் சந்தேகம் ஏற்பட்டதால், திரும்பவும் வந்து அதைப் பார்த்தார். ஆர்வத்தில் அவர் முகத்தை மிக அருகில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் ஒரு தவறு நடந்து வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டுவிட்டது. அப்படியே அவர் பார்த்துக்கொண்டு இருந்த நிலையில் இருந்திருந்தால், முகம் வெடித்துச் சுக்குநூறாகப் போயிருக்கும். அந்தச் சமயத்தில் நான் வேகமாகச் செயல்பட்டு அவரைக் கீழே தள்ளி, அவரின்மீது விழுந்தேன். எங்கள் தலைக்கு மேலாக அது வெடித்துச் சிதறியது. அப்துல் கலாமைக் காப்பாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.''

``விண்வெளித்துறைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த உங்கள்மீது, திடீரெனக் கிளம்பிய புகாரின் பின்னணி என்ன?''

``இதை சுப்ரீம் கோர்ட் பொய் வழக்கு என்று சொல்லிவிட்டது. இதை எதற்காகச் செய்தார்கள், யாருக்காகச் செய்தார்கள், அதன் நோக்கம் என்ன என்று கண்டுபிடிக்க ஜெயின் கமிட்டி அமைக்கப்பட்டு, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இதன் பின்னால் வெளிநாட்டுச் சதி இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நம்முடைய கிரயோஜனிக் சிஸ்டம் வந்திருந்தால், எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் திட்டத்தின் வெற்றியை அடைந்திருப்போம். இஸ்ரோவுக்குப் பெரிய பிசினஸ் நடந்திருக்கும். செயற்கைக்கோள் அனுப்புவது இன்று பெரிய பிசினஸ். அதில் நாம் போட்டியாளராக வரக் கூடாது என்று இதைச் செய்ததுபோலத் தெரிகிறது. அது என்ன என்பதை நிச்சயம் விசாரணையில் கண்டுபிடித்துச் சொல்வார்கள் என்று நம்புகிறேன்.''

“கலாமைக் காப்பாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது!”

``இந்த வழக்கை எதிர்கொள்ளும் மன உறுதியை எப்படி வளர்த்துக்கொண்டீர்கள்?''

``தவறே செய்யாத ஒருவன்மீது ராஜதுரோக வழக்கு. அதை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று ஆதங்கம், ஆத்திரம், எரிச்சல் எல்லாமே நெஞ்சில் இருக்கும். அது எல்லாமே ஒரு ஊக்க சக்தியாக மாறி, இதை நிரூபிக்க வேண்டும் என்கிற உறுதியைத் தரும். நாளாக நாளாக அதுவே உறைந்துபோய்விடும். 27 ஆண்டுகள் அந்த வழக்கில் நான் போராடியிருக்கிறேன். 1998-ல் சுப்ரீம் கோர்ட், `நீங்கள் குற்றவாளி இல்லை, இது பொய் வழக்கு' என எனக்குச் சாதகமான தீர்ப்பு கூறியது. நான் அப்போதே விட்டுவிட்டுப் போயிருக்கலாம். ஆனால், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்பதற்காக, 21 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தினேன். `காக்கிச்சட்டை போட்டால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம்; யாரும் கேட்கமாட்டார்கள், நாங்கள்தான் உலகத்தில் பெரிய சக்தி வாய்ந்த மனிதர்கள் என்று நினைத்துகொண்டிருந்தவர்களுக்குப் பெரிய அடி. தனி ஒருவனாகப் போராடி 27 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் குற்றவாளி என்பதை நிரூபித்து, அவர்களைத் தண்டிக்க முடிந்தது. இதுபோலச் செய்ய போலீஸ்காரர்கள் இனி தயங்குவார்கள் அல்லவா? எத்தனையோ குற்றங்கள் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கின்றன. ஒன்றும் அறியாத அப்பாவிகளைக் கைது செய்து கொண்டுபோய் அடித்துக் கொல்வது, தற்கொலை செய்துகொள்ள வைப்பது... இப்படியெல்லாம் இனி நடக்காது. அதற்காக என் வழக்கை நிறைய இடங்களில் மேற்கோள் காட்டுகிறார்கள்.''

``அந்த நெருக்கடியை உங்கள் குடும்பத்தினர் எப்படி ஜீரணித்தார்கள்?''

``என் குடும்பத்தினர் பட்ட கஷ்டங்களை விவரிக்கவே முடியாது. பெரும் மன உளைச்சல், சங்கடம், வருத்தம் என ஒரு மனுஷனுக்கு வரக்கூடிய துன்பங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. ஒன்றுமே செய்யாத ஒருவரைக் குற்றவாளி என்கிறார்கள், அவரைக் கொண்டுபோய் சித்திரவதை செய்கிறார்கள். குடும்பத்தில் யாரும் வெளியே இறங்கி நடக்க முடியாத அளவுக்கு மக்களின் பார்வை இருந்தது. உதவி செய்வதற்கு யாருமே கிடையாது. எல்லாருமே ஒதுங்கிப் போனார்கள். அந்த நிலையை விவரிப்பதே கஷ்டம்.''

“கலாமைக் காப்பாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது!”

``நடிகர் மாதவன் உங்கள் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுத்திருக்கிறாரே?''

``என் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க பலர் கேட்டார்கள். அவர்கள் எல்லோரும் வியாபார ரீதியாகத்தான் என் கதையைப் பார்த்தார்கள். ஆனால், உணர்வுபூர்வமாக, மனிதாபிமானத்துடன் பார்த்தது மாதவன் மட்டும்தான். அவர் அற்புதமான மனிதர். நான் பட்ட துன்பங்களை அவரால் உணர முடிந்தது. அவர் என்னிடம் திரும்பத் திரும்ப என் கதையைக் கேட்டார், படித்தார்், சம்பவங்களைக் கேட்டு உணர்ந்தார். என் கதையைக் கேட்டுக் கேட்டு அவரே நம்பி நாராயணனாக மாறிவிட்டார். இந்தக் கதை, காட்சிக்காகவே அவர் மூன்று ஆண்டுகள் மெனக்கெட்டார். 2020 ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்தார்கள். தியேட்டர்கள் திறக்காததால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. 2022 ஏப்ரல் 1-ம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவித்திருக்கிறார்கள்.

படம் முழுக்க முழுக்க மாதவனின் உழைப்பு என்றுதான் நான் சொல்வேன். என்னுடைய நடை உடை பாவனைகளை அப்படியே உள்வாங்கி நடித்திருக்கிறார். அவருடைய பல் அமைப்பைக்கூட டெண்டிஸ்ட் மூலமாக என்னைப் போன்று மாற்றியிருக்கிறார். நரை முடிக்காக விக் வைக்காமல், ஒவ்வொரு இழை இழையாக எடுத்து கிரே கலர் செய்திருக்கிறார். அதுக்காக 14 மணிநேரம் சேரிலேயே உட்கார்ந்திருக்கிறார். படம் எனக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது. இது பற்றி நான் சொல்வதைவிட மக்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும்.''

``உங்கள் வாழ்க்கை மூலமாக இளைஞர்களுக்கு என்ன கருத்து கூற விரும்புகிறீர்கள்?''

``உங்களுக்கு ஒரு விஷயத்தில் உறுதி இருந்தது என்றால், தெளிவு இருந்தது என்றால், அந்தக் கருத்துக்காக நீங்கள் எந்த எல்லை வரைக்கும் போய்ப் பாடுபடலாம். நிச்சயம் வெற்றிபெறுவீர்கள். இதுதான் என் வாழ்க்கையிலிருந்து இளைஞர்களுக்கு நான் சொல்வது.''