Published:Updated:

அன்று அமைச்சர்கள்... இன்று அகதிகள்!

காலித் பயண்டோ
பிரீமியம் ஸ்டோரி
காலித் பயண்டோ

உணவு டெலிவரி... ஊபர் கார் டிரைவர்... தலைமறைவு வாழ்க்கை...

அன்று அமைச்சர்கள்... இன்று அகதிகள்!

உணவு டெலிவரி... ஊபர் கார் டிரைவர்... தலைமறைவு வாழ்க்கை...

Published:Updated:
காலித் பயண்டோ
பிரீமியம் ஸ்டோரி
காலித் பயண்டோ

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியதிலிருந்து கடுமையான பழைமைவாத சட்டங்களால் 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றிருக்கிறது நாடு. பொருளாதார நெருக்கடியால் பசி, பட்டினியில் சிக்கி மக்கள் தவிக்க... குழந்தைகள் எலும்பும் தோலுமாக உருக்குலைந்துபோயிருக்கிறார்கள். பயங்கரவாதிகள் ஆட்சியில் இருப்பதால், பெரும்பாலான நாடுகள் ஆப்கனுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. இன்னொரு பக்கம் அதிபர், அமைச்சர்கள், அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களில் பலரும் தலைமறைவாக இருக்கும் நிலையில், சிலர் மட்டுமே வெளியில் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள்?

கார் டிரைவரான நிதியமைச்சர்!

ஆப்கனின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானியின் அமைச்சரவையில், நிதியமைச்சராக இருந்தவர் காலித் பயண்டோ. தாலிபன்கள் ஆப்கனைக் கைப்பற்றுவதற்கு ஐந்து நாள்கள் முன்பாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த காலித், தன் குடும்பத்தை முதலில் அமெரிக்காவுக்கு அனுப்பினார். பிறகு ஆப்கன் முழுமையாக தாலிபன்கள் கைகளுக்குச் சென்றுவிட்டதை அடுத்து, அவரும் அமெரிக்காவுக்குச் சென்றார். வாஷிங்டன் நகரில் குடியேறியது காலித்தின் குடும்பம். கையில் வைத்திருந்த சேமிப்புகள் படிப்படியாகக் கரைய, வேலை செய்ய முடிவெடுத்தார் காலித். ஊபர் நிறுவனத்தில் கேப் டிரைவர் வேலை கிடைக்க, தினமும் ஆறு மணி நேரம் கார் ஓட்டிவருகிறார். சமீபத்தில் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ ஊடகத்துக்குப் பேட்டியளித்த காலித், “நாங்கள் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய ஆப்கன், இன்று சீட்டுக்கட்டுபோல சரிந்துவிட்டது. உயிருக்கு அஞ்சிதான் இங்கு தப்பி வந்தோம். தற்போது எனது குடும்பத்தின் அன்றாடச் செலவுகளுக்காக நாளொன்று 150 டாலர் சம்பளத்துக்கு கார் ஓட்டுகிறேன்” என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, காலித் `ஹோண்டா அக்கார்ட்’ காரை ஓட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன!

அன்று அமைச்சர்கள்... இன்று அகதிகள்!

பீட்சா டெலிவரி செய்யும் தகவல் தொடர்பு அமைச்சர்!

ஆப்கனின் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் சையத் அகமத். லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தொலைத் தொடர்புத்துறையில் மாஸ்டர் டிகிரி பெற்ற இவர், தற்போது ஜெர்மனி நகர வீதிகளில் உணவு டெலிவரி செய்யும் பையுடன் சைக்கிளில் பயணிக்கும் வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகிவருகின்றன. அஷ்ரப் கானி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சையத், அரசு மீதான அதிருப்தியால் 2020-ம் ஆண்டே பதவியை ராஜினாமா செய்துவிட்டார். தாலிபன்களின் தாக்குதலால் உள்நாட்டுப் போர் தீவிரமடைய, ஜெர்மனிக்குக் குடிபெயர்ந்திருக்கிறார் சையத். அங்கு நீண்ட நாள்களாக வேலை கிடைக்காமல், கடைசியாக உணவு டெலிவரி செய்யும் வேலை கிடைத்திருக்கிறது!

ஜெர்மனியின் லீப்ஜிக் நகரில் பீட்சா டெலிவரி செய்துகொண்டிருந்தவர் ஜெர்மனி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ``வேலையே செய்யாமல் இருப்பதுதான் அவமானம். கிடைத்த வேலையைச் செய்வது அவமானமல்ல. உணவு டெலிவரி செய்யும் வேலையில் கிடைக்கும் பணத்தைவைத்து ஜெர்மன் மொழியைக் கற்றுவருகிறேன். ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொண்டதும், டெலிகாம்துறையில் வேலைக்குச் சேர்வதுதான் எனது தற்போதைய இலக்கு. மற்ற ஆப்கன் அரசியல்வாதிகளும் தலைமறைவாக இருக்காமல், கிடைக்கும் வேலையைச் செய்ய வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார் சையத். அமைச்சராக இருந்தபோது ஆப்கனின் கிராமப்புறங்கள் அனைத்துக்கும் தொலைபேசி சேவையை விரிவுபடுத்திய சையத், இன்று தனது கைப்பேசிக்கு வரும் உணவு ஆர்டர்களை டெலிவரி செய்வதுதான் பயங்கரவாதத்தின் விளைவுகளில் ஒன்று!

ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்னாள் அதிபர்!

ஆப்கனின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி, தாலிபன்கள் தலைநகர் காபூலை அடைவதற்கு முன்பாக தனி விமானத்தில் குடும்பத்தோடு நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார். சில மாதங்களுக்கு முன்பு `மனிதாபிமானத்தின் அடிப்படையில் அஷ்ரப் கானிக்கு இடமளித்துள்ளோம்’ என்று ஐக்கிய அரபு அமீரகம் தகவல் வெளியிட்டதை அடுத்துத்தான், அவரது இருப்பிடம் வெளியே தெரிந்தது. அதிகம் வெளியில் தலைகாட்டாமல், சமூக வலைதளங்களில் மட்டும் அவ்வப்போது கருத்துகளைப் பதிவிட்டுவரும் அஷ்ரப் கானி, இறுதியாகக் கடந்த மார்ச் 21 அன்று, ஆப்கன் மக்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளை (ஆப்கன் மக்களுக்கான புத்தாண்டு தினம்) சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்!

தலைமறைவான அமைச்சர்கள், அதிகாரிகள்!

சமீபத்திய ஐ.நா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், `ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானியின் அரசைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரை தாலிபன்கள் கொன்று விட்டார்கள்’ என்று சொல்லப்பட்டிருந்தது. அது உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஆப்கனின் முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் தலைமறைவாகவே இருக்கிறார்கள். அமெரிக்காவின் `நேஷனல் பப்ளிக் ரேடியோ’ ஊடகத்திடம் சமீபத்தில் பேசிய மூத்த அதிகாரி ஒருவர், ``எங்களைப் போன்ற அதிகாரிகளைக் கொல்ல தாலிபன்கள் தனிப்படை அமைத்திருக்கிறார்கள். எங்கே அவர்கள் என்னைக் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் குடும்பத்தினரிடம்கூட எப்போதாவதுதான் பேசுகிறேன். தினம் தினம் புதுப்புது இடங்களில் ஒளிந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறேன்” என்று கதறியிருக்கிறார்!

ஒரு காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கையில் வைத்திருந்தவர்களின் நிலை, இன்று தலைகீழாக மாறிவிட்டது. இந்த உலகில் எதுவுமே நிரந்தரமல்ல என்பதற்கும் இவர்களும் ஓர் உதாரணம்!