Published:Updated:

8 மாதங்களுக்குப் பின் இயல்புநிலை... மீண்டும் கடைகளைத் திறந்த பழங்குடி பெண்கள்!

தோடர் பழங்குடிகள்
தோடர் பழங்குடிகள்

ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் 8 மாதங்களுக்குப் பின் சிறு, குறு வணிகர்கள் நம்பிக்கையுடன் கடைகளை விரித்துள்ளனர்.

சுற்றுலாவை முக்கிய வருவாய் ஆதாரமாகக் கொண்டுள்ள நீலகிரி மாவட்டம், ஆயிரக்கணக்கான சிறு, குறு வணிகர்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வந்தது.

மேலும், பழங்குடிப் பெண்கள் முன்னேற்றத்துக்காக மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை, வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களில் கடைகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பழங்குடிப் பெண்கள் தயாரிப்பில் உருவான எம்பிராய்டரி, பூ வேலைப்பாடு பொருள்கள், கைவினைப் பொருள்கள், வெம்மை ஆடைகள், யூகலிப்டஸ் தைலம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. சுற்றுலாவாசிகளை மட்டுமே வாழ்வாதாரத்துக்குச் சார்ந்திருந்த ஆயிரக்கணக்கான சிறு, குறு வணிகர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர்.

தோடர் பழங்குடிகள் & சுற்றுலாப் பயணிகள்
தோடர் பழங்குடிகள் & சுற்றுலாப் பயணிகள்

கடந்த மாதம் முதல் நீலகிரிக்கு இ-பாஸ் முறையில், கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த முறையிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இ-ரெஜிஸ்ட்ரேஷன் முறையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை மெல்ல அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் 8 மாதங்களுக்குப் பின் சிறு, குறு வணிகர்கள் நம்பிக்கையுடன் கடைகளை விரித்துள்ளனர்.

தோடர் பழங்குடிகள்
தோடர் பழங்குடிகள்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 8 மாதங்களுக்குப் பின் கடை திறந்துள்ள தோடர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த நிலா, ``நாங்க பத்து பொண்ணுங்க குழுவா இந்தக் கடைய நடத்தி, இதுல கிடைக்கிற வருமானத்துல குடும்பத்த நடத்துறோம். கொரோனா காலத்துல நாங்க பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்ல. ரொம்ப சுருண்டுட்டோம். இந்த வாரம்தான் டூரிஸ்ட்ங்க வர ஆரம்பிச்சிருக்காங்க. நேத்துதான் கடைய திறந்தோம்.

முன்னெயெல்லாம் ஒரு நாளைக்கு 2,000 வரைக்கும் வியாபாரம் ஆகும். இப்போ இருநூறுக்கு ஆகுது. மெதுவா பழைய நிலைக்குத் திரும்பும்னு நம்புறோம்" என்றார் நம்பிக்கையுடன்.

வசந்தம் திரும்பட்டும்!

அடுத்த கட்டுரைக்கு