Published:Updated:

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுத்து கோசாலை மாடுகள் சிறைவைப்பு- போராட்டத்துக்குப் பிறகு விடுவிப்பு

அப்பால ராஜுவும், அவருடைய மாடுகளும்

பசு பாதுகாவலர் என்ற பெயரைக் கூறி வடமாநிலங்களைப்போல இங்கும் பணம் பறிக்க சில அமைப்புகள் முயல்கின்றன. தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 128 கால்நடைச் சந்தைகள் இயங்குகின்றன.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுத்து கோசாலை மாடுகள் சிறைவைப்பு- போராட்டத்துக்குப் பிறகு விடுவிப்பு

பசு பாதுகாவலர் என்ற பெயரைக் கூறி வடமாநிலங்களைப்போல இங்கும் பணம் பறிக்க சில அமைப்புகள் முயல்கின்றன. தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 128 கால்நடைச் சந்தைகள் இயங்குகின்றன.

Published:Updated:
அப்பால ராஜுவும், அவருடைய மாடுகளும்

ஈரோடு மாவட்டம், திங்களூர் வீரசங்கிலிப் பகுதியில் கோசாலையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த மாடுகளை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக விடுவிக்கக் கோரி அனைத்துக் கால்நடைச் சந்தை வியாபாரிகள், லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம், தமிழ் புலிகள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, நேற்று இரவு மாடுகள் விடுவிக்கப்பட்டன.

கடந்த 2021-ம் ஆண்டு ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜின்ஜல நாக அப்பால ராஜு, தஞ்சாவூர் கால்நடைச் சந்தையிலிருந்து 33 காளை மாடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது கால்நடைகளை ஏற்றிவந்த லாரியை திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே தமிழக இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் வழிமறித்து லாரி டிரைவர் மற்றும் லோடுமேனிடம் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. விதிமுறைகளை மீறி மாடுகளை லாரியில் அடைத்து ஏற்றிச் செல்வதாகக் கூறி அவிநாசி போலீஸில் புகாரளித்தார்.

போலீஸார் பேச்சுவார்த்தை
போலீஸார் பேச்சுவார்த்தை

இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்கு பதிவுசெய்து அவிநாசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 33 மாடுகளும் ஆஜர்படுத்தப்பட்டன.
வழக்கை விசாரித்த அவிநாசி நீதிமன்றம், இடைக்கால பராமரிப்புக்காக ஈரோடு மாவட்டம், திங்களூரை அடுத்த வீரசங்கிலியிலுள்ள கோசாலைக்கு 33 மாடுகளையும் அனுப்பிவைக்க உத்தரவிட்டது. அதன்படி மாடுகள் அந்தக் கோசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இந்த நிலையில் தனக்குச் சொந்தமான 33 மாடுகளையும் மீண்டும் தன்னிடமே திரும்ப ஒப்படைக்கக் கோரி, அவிநாசி நீதிமன்றத்தில் அப்பால ராஜு மனுத்தாக்கல் செய்திருந்தார்.  
இந்த மனுவை அவிநாசி குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பால ராஜு மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 2-2-2022 அன்று கூறிய தீர்ப்பில் கோசாலையிலுள்ள மாடுகளை அதன் உரிமையாளரான அப்பால ராஜுவிடமே ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

பேச்சுவார்த்தை நடத்தும் போலீஸார்
பேச்சுவார்த்தை நடத்தும் போலீஸார்

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தக் கோரி அவிநாசி காவல் நிலையத்தில் உத்தரவு நகல் அளித்தபோதும் அப்போதைய காவல் ஆய்வாளர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த  தாமதப்படுத்தினார் எனக் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், கோசாலையில் வைத்து 33 மாடுகளையும் பராமரித்த வகையில் தனக்கு ரூ.35 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கேட்டு தமிழ்செல்வன் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்  22-8-2022-ல் வெளியிட்ட உத்தரவில், "கோசாலை என்பது லாப நஷ்ட கணக்கின் அடிப்படையில் இயங்குவது அல்ல. கோசாலை என்பது சேவை மனப்பான்மையுடன் இயங்கவேண்டியது என்பதால் இதற்கான நஷ்ட ஈட்டைத் தரவேண்டியதில்லை.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு செல்லுபடியாகும். அதன்படி கோசாலையிலுள்ள மாடுகளின் உரிமையாளரான அப்பால ராஜு வசமே அனைத்து மாடுகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும்" என உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தக் கோரி மீண்டும் அவிநாசி காவல் நிலையத்துக்குச் சென்றபோதும் அவர்கள் இந்த உத்தரவை வழக்கம்போல கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து அனைத்து கால்நடை சந்தை வியாபாரிகள், லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம், தமிழ் புலிகள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் நேற்று மாலை விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காகத் திரண்டனர். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த அவிநாசி டிஎஸ்பி பவுல்ராஜ், இன்ஸ்பெக்டர்கள் அவிநாசி சரஸ்வதி, பெருந்துறை மசூதாபேகம் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீஸாருடன் அனைத்துக் கால்நடைச் சந்தை வியாபாரிகள், லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஈஸ்வரன், மாநிலச் செயலாளர் முகமது ஜாகீர், தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சிந்தனைச்செல்வன் உள்ளிட்ட கட்சி, அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

ஈஸ்வரன்
ஈஸ்வரன்

அந்தப் பேச்சுவார்த்தையில், `உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கடந்த ஆகஸ்ட் 22-ல் வெளியாகி சுமார் மூன்று மாதங்களாகியும், நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த போலீஸார் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் கோசாலையில் உள்ள மாடுகளுக்கு போதுமான தீவனம் இல்லாததால், அவை எலும்பும் தோலுமாகிவிட்டன. அதுமட்டுமின்றி 33 மாடுகளில் எட்டு மாடுகள் இறந்துவிட்டதாகக் கூறுகின்றனர். உண்மையில், கோசாலையில் இருப்பவர்கள்தான் பிராணிவதையில் ஈடுபட்டிருக்கின்றனர். உண்மையிலேயே மாடுகள் உயிரிழந்துவிட்டனவா என்பது சந்தேகமாக இருக்கிறது. எனவே, இதை உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும். தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் கோசாலையிலுள்ள மாடுகளை மீண்டும் அப்பால ராஜு வசம் ஒப்படைக்க வேண்டும்' என்றனர்.  

இதையடுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்பதாகக் கூறி நேற்று இரவு கோசாலையிலிருந்து 25 மாடுகளும் உரிமையாளர் அப்பால ராஜுவிடம் ஒப்படைக்கப்பட்டன.

இது குறித்து அனைத்து கால்நடைச் சந்தை வியாபாரிகள், லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஈஸ்வரன் நம்மிடம் கூறியதாவது, ``எங்கள் சங்கத்தின் உறுப்பினரான அப்பால ராஜு, பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்திய பிறகும் மாடுகள் விடுவிக்கப்படவில்லை. தற்போது  போராட்டத்தில் இறங்குவதாகக் கூறிய பிறகே மாடுகள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனன.

அப்பால ராஜுவும், அவருடைய மாடுகளும்
அப்பால ராஜுவும், அவருடைய மாடுகளும்

தமிழ்ச்செல்வன் என்பவர் பணம் கொடுக்காவிட்டால் மாடுகளை கோசாலைக்கு ஓட்டிச் செல்வோம் என்று கூறி ரகளையில் ஈடுபட்டார். பசு பாதுகாவலர் என்ற பெயரைக் கூறி வடமாநிலங்களைப்போல இங்கும் பணம் பறிக்க சில அமைப்புகள் முயல்கின்றன. தமிழகம் முழுவதும்  38 மாவட்டங்களில், 128 கால்நடைச் சந்தைகள் இயங்குகின்றன. இவர்கள் கால்நடைச் சந்தையில் மாடு விற்பனை செய்பவர்களிடம்  பிரச்னை செய்வதில்லை. மாடுகளை வாங்கிச் செல்பவர்களின் வாகனங்களை மறித்து, பணம் பறிக்கும் நோக்கத்துடன் பிரச்னை செய்கிறார்கள். இவர்கள்மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.