Published:Updated:

கொட்டும் மழை; 600 மீ தூரத்தில் கடல்! - சித்தார்த்தாவை கண்டுபிடிக்க போராடும் மீட்புப் படையினர்

சித்தார்த்தா காணாமல் போன பிறகு, இன்று காலை காஃபி டேவின் பங்குகள் 20% -க்கும் அதிகமான சரிவுடனேயே தொடங்கின.

சித்தார்த்தா
சித்தார்த்தா

காஃபி டே நிறுவனரும் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான வி.ஜி.சித்தார்த்தா, நேற்று மாலை மங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள உல்லால் பாலத்துக்கு அருகில் மாயமாகியுள்ளார். காரில் இருந்து இறங்கிய அவர், நீண்ட நேரமாகியும் திரும்பாததால் பதறிய கார் ஓட்டுநர், அவரின் வீட்டுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து நடந்த விசாரணையில், யாரோ ஒருவர் நேத்ராவதி ஆற்றில் குதித்ததைப் பார்த்ததாக, காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

நேத்ராவதி ஆறு
நேத்ராவதி ஆறு
ANI

சித்தார்த்தா காணாமல் போனதால், அதே பகுதியில் ஆற்றில் குதித்தது அவராக இருக்கலாம் என்ற கோணத்தில், ஆற்றில் சித்தார்த்தாவைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது. இன்று காலை தொடங்கிய தேடுதல் பணியில் மீட்புப் படையினர், கடற்படையினர், மீனவர்கள், மங்களூரு காவல்துறையினர் மோப்ப நாய்களுடன் ஈடுபட்டுள்ளனர். சித்தார்த்தா காணாமல் போன பகுதியைச் சுற்றி தற்போது பலத்த மழை பெய்து வருவதால், மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், மழையின் காரணமாக அங்கு அதிக போக்குவரத்து நெரிசல் நிலவுவதால், காவல்துறையினர் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

சித்தார்த்தா குதித்ததாகச் சொல்லப்படும் நேத்ராவதி ஆற்றுப் பகுதியிலிருந்து 600 மீட்டர் தொலைவில்தான் கடல் உள்ளது. நேத்ராவதி நதியின் நீரோட்டமும் கடலை நோக்கி உள்ளதால், மீட்புப் பணிகளில் தொடர்ந்து சிக்கல் நீடித்துவருகிறது. இதற்கிடையில், காஃபி டே உரிமையாளரை மீட்க மத்திய பாதுகாப்புப் படையின் உதவி வேண்டும் என பா.ஜ.க-வின் மக்களவை உறுப்பினர் கரந்லஜே (Karandlaje), மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகாவின் பா.ஜ.க எம்.பி-க்களும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இதே கோரிக்கையை வைத்துள்ளனர்.

எஸ்.எம் கிருஷ்ணா வீடு
எஸ்.எம் கிருஷ்ணா வீடு
ANI

எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன் காணாமல் போயுள்ளார் என்ற தகவல் அறிந்ததும், கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் கட்சிகளைக் கடந்து அவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவருகின்றனர். கர்நாடக முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸின் டி.கே. சிவகுமார் மற்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமி போன்ற பலரும் எஸ்.எம். கிருஷ்ணாவைச் சந்தித்தனர்.

ஊழியர்களுக்கு எழுதிய உருக்கமான கடிதம்!- 'கஃபே காஃபி டே' உரிமையாளர் மாயமான பின்னணி

1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் காஃபி டே கடைக்குப் பின், தற்போது இந்தியா முழுவதும் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக 1,750 கிளைகள் உள்ளன. இவை மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா, மலேசியா, நேபால், எகிப்து போன்ற பல நாடுகளிலும் இந்த நிறுவனத்தின் கிளைகள் இயங்கி வருகின்றன.

காஃபி டே
காஃபி டே

காஃபி மட்டுமல்லாமல், பல மென்பொருள் நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார் சித்தார்த்தா. மார்ச் 31, 2019 நிலவரப்படி, காஃபி டே நிறுவனத்தின் மொத்தக் கடன் ரூ. 6,547 கோடி. இது, அந்நிறுவனத்தின் நிறுவன மதிப்பான ரூ.2,529 கோடியுடன் ஒப்பிடும்போது, இரண்டரை மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தார்த்தா காணாமல் போன பிறகு, இன்று காலை காஃபி டேவின் பங்குகள் 20% -க்கும் அதிகமான சரிவுடனேயே தொடங்கின.