Published:Updated:

ரப்பர் ஸ்டாம்ப்பை திருடி போலியாக கையெழுத்து போட்டுவிட்டார்கள்!

வங்கி
பிரீமியம் ஸ்டோரி
வங்கி

- அதிர்ச்சியூட்டும் விவசாயக் கடன் தள்ளுபடி மோசடி...

ரப்பர் ஸ்டாம்ப்பை திருடி போலியாக கையெழுத்து போட்டுவிட்டார்கள்!

- அதிர்ச்சியூட்டும் விவசாயக் கடன் தள்ளுபடி மோசடி...

Published:Updated:
வங்கி
பிரீமியம் ஸ்டோரி
வங்கி

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, விவசாயக் கடன்கள் தள்ளுபடியாகும் என்று தெரிந்துகொண்டு, அ.தி.மு.க பிரமுகர்கள் பலர் முறைகேடாகப் பயிர்க் கடன்கள் மற்றும் நகைக் கடன்கள் பெற்றதாகச் சர்ச்சை எழுந்தது. இந்தநிலையில்தான் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே மணலி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நடைபெற்றுள்ள விவசாயக் கடன் தள்ளுபடி மோசடி அம்பலமாகியிருக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதேபோன்ற குற்றச்சாட்டு பல்வேறு இடங்களிலும் நடந்திருப்பதாக எழுந்தபோது முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, “பல்வேறு கட்ட ஆய்வுகள் மற்றும் கடுமையான தணிக்கைகளுக்குப் பிறகே கடன்கள் வழங்கப்படுவதால் மோசடிகள் நடந்திருக்க வாய்ப்பு இல்லை” என்று கூறியிருந்தார். ஆனால், மணலி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நடந்திருக்கும் முறைகேடுகளைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை.

லதா
லதா

மணலி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜெயபால் இந்த மோசடி பற்றி நம்மிடம் விவரித்தார்... “இந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் கோயில் நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களின் சர்வே எண்களைப் பயன்படுத்தி, கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா அடங்கல் வாங்கி, பயிர்க் கடன் மற்றும் விவசாய நகைக் கடன்கள் வாங்கியிருக்கிறார்கள். இன்சூரன்ஸும் செய்திருக்கிறார்கள். வேளூர் கிராமத்தில்தான் இந்த மோசடி அதிகமாக நடந்துள்ளது. மேலும், போலியாக நிலங்களின் புல எண்களை உருவாக்கி, அதில் சாகுபடி செய்வதாக சிட்டா அடங்கல் வாங்கி விவசாயக் கடன்களைப் பெற்றிருக்கிறார்கள். நீனெறிநாத சுவாமி திருக்கோயில், சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் ஆகிய கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் சிறு, குறு விவசாயிகள் நிறைய பேர் குத்தகைக்குச் சாகுபடி செய்கிறார்கள். ஆனால், அங்கு சாகுபடியே செய்யாத அ.தி.மு.க பிரமுகர்கள் சிலர் போலியாக சிட்டா அடங்கல் வாங்கி பயிர்க் கடன், நகைக் கடன் வாங்கியிருக்கிறார்கள். இவர்களின் பயிர்க் கடன் மற்றும் நகைக் கடன்களும் தள்ளுபடியாகியிருக்கின்றன” என்றார்.

மேற்கண்ட விவகாரம் பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டிருக்கிறார் இதே பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்லப்பா. “கடன் முறைகேடு தகவல் கிடைத்ததும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வேளூர் கிராமத்தில் 2020-21-ம் ஆண்டு குத்தகை மற்றும் சொந்த நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளின் பெயர், முகவரி, நிலத்தின் அளவு, சர்வே எண்கள் உள்ளிட்ட விவரங்களை வி.ஏ.ஓ-விடம் கேட்டேன். ஆனால், இதுவரை தகவல் தரவில்லை. மணலி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியிலும் பயிர்க் கடன், விவசாய நகைக் கடன் வாங்கியவர்களின் விவரங்களையும் கேட்டேன். அங்கும் விவரம் தர மறுத்துவிட்டார்கள். தள்ளுபடி செய்யப்பட்ட கடன் விவரங்களை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பது வங்கியின் விதிமுறை. அதையும் வங்கி நிர்வாகம் செய்யவில்லை. தவறு நடக்கவில்லையென்றால், இந்த விவரங்களை எல்லாம் தர வேண்டியதுதானே...” என்றார் கோபமாக!

ரப்பர் ஸ்டாம்ப்பை திருடி போலியாக கையெழுத்து போட்டுவிட்டார்கள்!

இந்த விவகாரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டியிருப்பதாகக் கூறுகிறார் சமூகச் செயற்பாட்டாளரான ராமதாஸ். “நீனெறிநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ஏழரை ஹெக்டேர் நிலத்தில் சர்வே எண்கள் 24/1, 24/3, 25/1, 25/3 ஆகியவற்றைப் பயன்படுத்தி, அங்கு குத்தகை சாகுபடி செய்வதாக வி.ஏ.ஓ-விடம் போலியாக சிட்டா அடங்கல் வாங்கி பருத்திச்சேரி ராஜா குடும்பத்தினர் உட்பட அ.தி.மு.க பிரமுகர்கள் பலரும் பயிர்க் கடன் வாங்கியிருக்கிறார்கள். உண்மையில், இந்த நிலத்தில்தான் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த முறைகேடுகளுக்கு வங்கியின் நிர்வாகக்குழுத் தலைவரும் அ.தி.மு.க பிரமுகருமான முருகேசன், வங்கியின் செயலாளர் ஜவஹர், வி.ஏ.ஓ லதா ஆகியோர் உடந்தை. தமிழக அரசு முறையான ஆய்வு செய்து, தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்த விவகாரத்தில் தவறு நடக்கவில்லை என்று யாரும் மறுக்கவில்லை. மாறாக, கிராம நிர்வாக அலுவலர் லதா இது குறித்து கூறும் விளக்கம் அதிர்ச்சியூட்டுகிறது... “என் அலுவலகத்திலிருந்த ரப்பர் ஸ்டாம்ப்பைத் திருடி, என் கையெழுத்தையும் போட்டு, போலியாக சிட்டா அடங்கல் தயார் செய்து முறைகேடு செய்திருக்கிறார்கள்” என்கிறார் அவர். வங்கியின் செயலாளர் ஜவஹரோ, “வி.ஏ.ஓ கொடுக்கும் சிட்டா அடங்கல் அடிப்படையில்தான் விவசாயக் கடன் கொடுக்கிறோம். அதிலுள்ள சர்வே எண்களில் வயல் இருக்கிறதா, கட்டடம் இருக்கிறதா என்றெல்லாம் நாங்கள் ஆய்வு செய்ய முடியாது” என்றார். வங்கியின் நிர்வாகக்குழுத் தலைவர் முருகேசனோ, “அரசியல் காழ்ப்புணர்ச்சியில் புகார் சொல்கிறார்கள்” என்பதுடன் முடித்துக்கொண்டார். போலியாக ஆவணங்களில் கடன் வாங்கியதாகப் புகாருக்குள்ளான பருத்திச்சேரி ராஜாவிடம் கேட்டால், “நாங்கள் சாகுபடி செய்யாத நிலங்களுக்கு விவசாயக் கடன்கள் வாங்கவில்லை. இன்ஷூரன்ஸும் செய்யவில்லை. ஒருவேளை என் பெயரிலோ, என் குடும்பத்தினர் பெயரிலோ கடன் வாங்கியிருந்தால், அது வேறு யாரோ செய்த முறைகேடாக இருக்கும்” என்றார்.

முருகேசன், ராஜா, ஜெயபால், செல்லப்பா, ராமதாஸ்
முருகேசன், ராஜா, ஜெயபால், செல்லப்பா, ராமதாஸ்

இந்தப் பிரச்னையை தமிழ்நாடு வேளாண்மைத்துறை இயக்குநர் அண்ணாதுரை, திருவாரூர் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஆகியோரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். “உடனடியாக விசாரணை நடத்தி, கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சொன்னார்கள்.

வயிற்றுக்குச் சோறும் போடும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் போலிகளைக் களையெடுக்க வேண்டியது அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism