Published:Updated:

நீலக்கடலில் மிதக்கும் இந்தியப் பெருமிதம்!

ஐஎன்எஸ் விக்ராந்த்
பிரீமியம் ஸ்டோரி
ஐஎன்எஸ் விக்ராந்த்

ஐஎன்எஸ் விக்ராந்தின் விமான ஓடுதளம், கிட்டத்தட்ட இரண்டு கால்பந்து மைதானங்களின் அளவில் இருக்கிறது

நீலக்கடலில் மிதக்கும் இந்தியப் பெருமிதம்!

ஐஎன்எஸ் விக்ராந்தின் விமான ஓடுதளம், கிட்டத்தட்ட இரண்டு கால்பந்து மைதானங்களின் அளவில் இருக்கிறது

Published:Updated:
ஐஎன்எஸ் விக்ராந்த்
பிரீமியம் ஸ்டோரி
ஐஎன்எஸ் விக்ராந்த்

ஐஎன்எஸ் விக்ராந்த்... முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கிக் கப்பல். இந்த வாரம் இந்தியக் கடற்படையில் இணையும் இதனை ‘நீலக்கடலில் மிதக்கும் இந்தியப் பெருமிதம்' என்றே சொல்லலாம். ஆழ்கடலுக்கு நடுவில் போர் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் இறங்கவும் மீண்டும் பறக்கவும் ஏதுவான விமான ஓடுதளத்தைக் கொண்ட விமானம் தாங்கிக் கப்பலைக் கட்டுவது சவாலான விஷயம். இதுவரை இதை சாதித்திருக்கும் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இதன்மூலம் இணைந்திருக்கிறது இந்தியா. மிக நீண்ட கடல்பரப்பைக் கொண்ட நாடுகளுக்கு, தங்கள் கரையைத் தாண்டி வெகுதொலைவிலும் அந்த நீலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்த இந்தவகைக் கப்பல் முக்கியம்.

உலகின் பெரிய கடற்படையை வைத்திருக்கும் அமெரிக்காவிடம் 11 விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. சின்னஞ்சிறிய கடல் எல்லையை வைத்திருக்கும் சீனா இப்படி மூன்று கப்பல்களை வைத்துள்ளது. இன்னும் இரண்டைக் கட்டிவருகிறது. இதில் இந்தியாவின் நிலை என்ன என்பதிலிருந்து பார்த்தால், விக்ராந்தின் முக்கியத்துவம் புரியும்.

நீலக்கடலில் மிதக்கும் இந்தியப் பெருமிதம்!

இந்தியாவிடம் இதற்குமுன்வரை ஒரே ஒரு விமானம் தாங்கிக் கப்பல் மட்டுமே இருந்தது. ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா என்று பெயரிடப்பட்ட அது, ரஷ்யாவிடமிருந்து ஒரு பழைய கப்பலாய் வாங்கிப் புதுப்பிக்கப்பட்டது. அதன் முந்தைய பெயர், அட்மிரல் கோர்ஸ்கோவ். அது 2013 முதல் இயங்கிவருகிறது. இந்த விக்கிரமாதித்யாவில் 34 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைத்து இயக்க முடியும்.

ரஷ்யாவுக்கு முன்பு பிரிட்டனிடம் நாம் இப்படிப்பட்ட கப்பல்கள் இரண்டை வாங்கிப் பயன்படுத்தினோம். ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் விராட் என்று பெயர்கொண்ட இவை நீண்ட காலம் நம் கடற்படையின் பலமாக இருந்தன. இப்போது அவை இல்லை. 1971 பாகிஸ்தான் போரின்போது ஐஎன்எஸ் விக்ராந்த் வங்கக் கடலில் இருந்தபடி, வங்கதேசத்தில் பாகிஸ்தான் படைகள் மீது விமானத் தாக்குதல் நடத்த உதவியது. பாகிஸ்தான் வீரர்கள் அங்கிருந்து கடல்வழியே வெளியேறுவதைத் தடுத்தது. அதன் நினைவாகவே புதிய கப்பலுக்கு விக்ராந்த் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் கட்டுமானம் இந்தியாவைப் பொருத்தவரை ஒரு மைல்கல் சாதனை. டெல்லியின் கைலாஷ் காலனியில் இருக்கும் ஒரு பழைமையான கட்டடத்தில் இயங்கும் Warship Design Bureau என்ற அமைப்பு இதனை வடிவமைத்தது. நாட்டில் இன்னமும் விற்கப்படாமல் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான, கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் இதைக் கட்டியது.

இதன் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட 76% பொருட்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டவை. பெல், கெல்ட்ரான், கிர்லோஸ்கர், எல்&டி என இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் இதில் பங்களித்திருக்கின்றன. சிறியதும் பெரியதுமாக 100 இந்தியத் தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்பில் இந்தக் கப்பல் உருவானது. 2,000 பேருக்கு நேரடியாகவும், 40 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்தது. இதன் ஒட்டுமொத்த பட்ஜெட்டான 20 ஆயிரம் கோடி ரூபாயில் பெருமளவு இந்தியாவிலேயே செலவழிக்கப்பட்டு, நம் பொருளாதார சுழற்சியில் உதவியது. வழக்கமாக ரஷ்யா அல்லது பிரிட்டனுக்குப் போகும் பணம் அது. அந்தவகையில் இது ஒரு ‘மேக் இன் இந்தியா' கப்பல். இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைக்கு முன்னதாக இந்தியத் தயாரிப்பை அதிகம் பயன்படுத்திய பெருமை கடற்படைக்கு இதன்மூலம் கிடைத்துவிட்டது.

நீலக்கடலில் மிதக்கும் இந்தியப் பெருமிதம்!

ஐஎன்எஸ் விக்ராந்தின் விமான ஓடுதளம், கிட்டத்தட்ட இரண்டு கால்பந்து மைதானங்களின் அளவில் இருக்கிறது. இந்தக் கப்பலின் மேல்தளத்தில் ஒரு சுற்று வந்தால், எட்டு கி.மீ வாக்கிங் போனது போல இருக்கும். அவ்வளவு பிரமாண்டம். மிக் போர் விமானங்கள், காமோவ் மற்றும் சீஹாக் ஹெலிகாப்டர்களை இதிலிருந்து இயக்க முடியும். 30 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை நிறுத்திவைக்க முடியும். கடற்படையினர் 1,600 பேர் தங்கும் வசதிகொண்ட இந்தக் கப்பலில் ஒரு முழுமையான மருத்துவமனை உள்ளிட்ட சகல வசதிகளும் உண்டு.

கடந்த மூன்று வாரங்களாக கடலில் வலம் வந்துகொண்டிருக்கும் ஐஎன்எஸ் விக்ராந்த் முழுமையாக செயல்பாட்டுக்கு வருவதற்கு அடுத்த ஆண்டு இறுதி ஆகிவிடும். ஒரு விமானம் தாங்கிக் கப்பலே எப்போதும் போரில் எளிய இலக்காக ஆகிவிடும். அதனால்தான் இந்தக் கப்பல் தனியே செல்வதில்லை. போர்க்கப்பல்கள், ஏவுகணை தாங்கி கலங்கள், நீர்முழ்கிக் கப்பல்கள் என்று பெரும்படையுடன் ஒரு மன்னரின் பவனி போல இது கம்பீரமாகச் செல்லும்.

ஒரு விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கியது, இந்தியாவைப் பல வகையிலும் முன்னகர்த்தி இருக்கிறது. பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இப்போது 40 போர்க்கப்பல்கள், ஆய்வுக்கப்பல்கள், அணுசக்தி நீர்முழ்கிக் கப்பல்கள் போன்றவற்றை சுயசார்புடன் உருவாக்கி வருகின்றன.

விக்ராந்தின் வெற்றிகரமான உருவாக்கத்தைத் தொடர்ந்து மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பல் ஒன்றைக் கடற்படை கேட்கிறது. ஐஎன்எஸ் விஷால் என்று பெயரிடப்பட்ட அதற்கு இப்போது அனுமதி கொடுக்கப்பட்டாலும், அதைக் கட்டி முடிக்க இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். பாதுகாப்புத் துறைக்கு சுருங்கிக்கொண்டே வரும் பட்ஜெட் காரணமாக இதற்கு மத்திய அரசு தயங்குகிறது. ஒருவேளை அதுவும் வந்தால், சீனாவின் கடல் அச்சுறுத்தலுக்கு இந்தியா கவலைப்பட வேண்டியிருக்காது.