Published:Updated:

“காவிரிப்படுகையை காவுகொடுக்கிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள்...”

திருவாரூர் பேரணி
பிரீமியம் ஸ்டோரி
திருவாரூர் பேரணி

- கொந்தளிக்கும் டெல்டா விவசாயிகள்!

“காவிரிப்படுகையை காவுகொடுக்கிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள்...”

- கொந்தளிக்கும் டெல்டா விவசாயிகள்!

Published:Updated:
திருவாரூர் பேரணி
பிரீமியம் ஸ்டோரி
திருவாரூர் பேரணி

“காவிரிப்படுகையில் விவசாயத் தொழிலாளர்களுக்காக அன்று உயிரைக் கொடுத்துப் போராடிய கம்யூனிஸ்ட்டுகள், இன்று ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு ஆதரவாகப் போராடிக் கொண்டிருப்பதுதான் காலக்கொடுமை” என்று வேதனை தெரிவிக்கிறார்கள் விவசாயிகள்.

கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி, ``ONGC-ஐ காப்போம்!’, `ONGC ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பாதுகாப்போம்!” என்ற முழக்கத்துடன் சி.பி.ஐ - சி.பி.எம் இடதுசாரிக் கட்சிகளின் தொழிற்சங்கங்களான AITUC, CITU சார்பில் மிகப்பெரிய பேரணி, ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தை நோக்கிப் புறப்பட்ட இந்தப் பேரணியை நாகை எம்.பி செல்வராஜ் தொடங்கிவைக்க, எம்.எல்.ஏ-க்கள் கே.மாரிமுத்து, நாகை மாலி மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சேர்ந்த டெல்டா நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இந்தச் சம்பவம்தான் டெல்டா பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

“காவிரிப்படுகையை காவுகொடுக்கிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள்...”

இது குறித்துப் பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் த.செயராமன், ``காவிரிப்படுகையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டப்படி, புதிய எண்ணெய்க் கிணறுகள் அமைக்கத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பழைய கிணறுகளை மராமத்து செய்வதாகக் காட்டிக்கொண்டு, புதிய கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி முற்பட்டதால்தான் சமீபத்தில் அடியக்கமங்கலம், பெரியகுடி பகுதிகளில் அதன் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. பெரியகுடி ஓ.என்.ஜி.சி கிணற்றை கலெக்டரே மூட உத்தரவிட்டார். மக்கள் அனைத்து எண்ணெய்க் கிணறுகளையும் மூடி, முழுமையான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக் கோரிவரும் நிலையில், இடதுசாரிக் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் வேறு சில அமைப்புகளுடன் சேர்ந்துகொண்டு எண்ணெய்க் கிணறு வேலைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றன. எதிர்ப்பவர்களை அந்நிய கைக்கூலிகள் என்று இழிவுபடுத்தி போஸ்டர் போடுகிறார்கள். தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகளை வழங்கும்படி அரசிடம் கோருவதை விடுத்து, ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்காகக் களமாடுகிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள். இது சமூக அக்கறையற்ற செயல்” எனக் கடுமையாக விமர்சித்தார்.

செயராமன்
செயராமன்

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் தலைவர் பி.ஆர்.பாண்டியனிடம் பேசியபோது, ``மண்ணையும் விவசாயிகளையும் காப்பதும், கார்ப்பரேட்களை எதிர்ப்பதும்தான் இடதுசாரிகளின் அடிப்படைக் கொள்கையே. ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே, `ஓ.என்.ஜி.சி டெல்டாவுக்கு வந்தால் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்’, `சாலைவசதி மேம்படும்’ என்று கூறி கம்யூனிஸ்ட்டுகள் வரவேற்றார்கள். நாளடைவில் ஓ.என்.ஜி.சி-யால் வேலைவாய்ப்பு உருக்குலைந்து, நிலத்தடி நீர், விளைநிலங்கள், பாசனக் கட்டுமானங்கள் சீரழிந்துபோனதை நேரடியாக உணர்ந்ததால், இரு கட்சிகளும் எங்களுடன் இணைந்து ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகப் போராட்டம் நடத்தின. அதேசமயம், தற்போது அரசு நிறுவனமாக இருந்த ஓ.என்.ஜி.சி-யின் பங்குகள் பெரும்பாலும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப் பட்டுவிட்டன. இந்த நிலையில், ஓ.என்.ஜி.சி எனும் பெயர் பின்னணியில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கால்பதிக்க, இங்குள்ள சில கம்யூனிஸ்ட் கட்சியினர், கட்சியின் பெயரையும் மக்கள் பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தையும் தவறாகக் பயன்படுத்திவருகின்றனர். இதற்கு ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட் கட்சியும், தலைமையும் ஆதரவா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

``இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற இப்பகுதியின் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், தாங்கள் சார்ந்துள்ள தொழிற்சங்கத்தின் சில ஆயிரம் உறுப்பினர் நலனுக்காக தனக்கு வாக்களித்த லட்சக்கணக்கான பொதுமக்களின் நலனைக் காவு கொடுக்கத் துணிந்துவிட்டார்களா?” எனக் காட்டமாகக் கேள்வி எழுப்புகிறார் காவிரி உரிமை மீட்புக்குழுவைச் சேர்ந்த கலைச்செல்வம்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பேரணியில் கலந்துகொண்ட இடதுசாரித் தலைவர்களிடம் விளக்கம் கேட்டோம். சி.பி.எம் கட்சியின் கீழ்வேளூர் எம்.எல்.ஏ-வாக இருக்கும் நாகை மாலி, ``பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் `ஏற்கெனவே உள்ள பழைய எண்ணெய்க் கிணறுகள் வழக்கம்போலச் செயல்படலாம்’ என்கிறது. ஆனால், அதற்கும் பிரச்னை ஏற்படுத்தும்விதமாக, மராமத்துப் பணிகள் செய்யக் கூடாது, இயங்கக் கூடாது என சிலர் போராட, திருவாரூர் மாவட்ட ஆட்சியரும் தடை உத்தரவு போடுகிறார். இந்த ஓ.என்.ஜி.சி கிணறுகளை நம்பித்தான் சுமார் பத்தாயிரம் தொழிலாளர்கள் பணிசெய்கிறார்கள். அவர்களின் நிலை என்னவாகும்... கடந்த 40 ஆண்டுகளாக ஓ.என்.ஜி.சி செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அதனால் விவசாயத்துக்குப் பெரிதாக எந்தவொரு பாதிப்பும் வந்ததாகத் தெரியவில்லை. எந்தவொரு திட்டத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரு மைனஸ் இருக்கும். அதேபோல, ஆயில் எடுக்கும்போது, ஒன்றிரண்டு இடங்களில் லீக்கேஜ் ஏற்படத்தான் செய்யும். அப்படிக் குழாய் உடைந்து விவசாயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்களே அரசிடமிருந்து நிவாரணமெல்லாம் வாங்கிக்கொடுத்திருக்கிறோம். விவசாயிகள் நலனில் எங்களுக்கு சமரசமில்லை; அதேசமயம் காவிரிப்படுகை பாதுகாக்கப்பட்ட சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்கிறோம்” என்றார்.

நாகை மாலி
நாகை மாலி
செல்வராஜ்
செல்வராஜ்

சி.பி.ஐ கட்சியின் நாகை தொகுதி எம்.பி செல்வராஜிடம் பேசியபோது, ``ஒரு நாட்டுக்கு கச்சா எண்ணெய் அவசியம். இந்தியா தனக்குத் தேவையான 70% கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நிலையில், அதை நம் நாட்டிலேயே எடுப்பது நல்லதுதானே... டெல்டாவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக ஓ.என்.ஜி.சி., சி.பி.சி.எல் போன்ற அரசு நிறுவனங்கள் கச்சா எண்ணெய் எடுத்துவருகின்றன. எந்த விவசாயியும் பாதித்ததாக நான் பார்க்கவில்லை. செயராமன், பி.ஆர்.பாண்டியன் போன்ற சிலர்தான் பாதிப்பு என எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கு ஒவ்வொரு மனுஷனும் முக்கியம்தான். விவசாயிகள், விவசாயத்தைப் பாதுகாப்பதுபோல, ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்கிறோம். ஓ.என்.ஜி.சி-யால் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை விவசாயிகளிடம் கேட்டுக்கொள்ளுங்கள். நாங்கள் இப்போது ஒப்பந்தத் தொழிலாளர்களுக்காக போராடிக்கொண்டிருக்கிறோம். ஓ.என்.ஜி.சி-யில் பணி நிரந்தரம் வேண்டும் என்கிறோம்” எனத் தெரிவித்தார்.