Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 1

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

என்னுடைய பள்ளிக்கூடம் ராணுவத்தின் உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தது. ஒவ்வொரு நாளும் சோதனைச்சாவடி வரிசையில் நிற்கவைத்துவிடுவார்கள்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 1

என்னுடைய பள்ளிக்கூடம் ராணுவத்தின் உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தது. ஒவ்வொரு நாளும் சோதனைச்சாவடி வரிசையில் நிற்கவைத்துவிடுவார்கள்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

யாழ்ப்பாணத்தில் துவக்குச்சூடுகள் பெருகியிருந்த நாள்கள் அவை. நாளிதழ்களின் அனைத்துப் பக்கங்களிலும் தோட்டாக்களின் சொற்களே விரவிக்கிடந்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தேசத்துரோகிகளைக் கொன்றது. இலங்கை ராணுவம், பயங்கரவாதிகளைக் கொன்றது. கொல்லப்பட்டவர்கள் குறித்து, கொன்றவர்கள் விளக்கமளித்தனர். வேட்டொலிகளின் நெடியும், ரத்தம் காய்ந்த சடலங்களின் தனிமையும் யாழ்ப்பாணத்து வீதிகளை வெறிக்கப் பண்ணின. ‘அமைதி ஒப்பந்தம்’ ஒரு பிசாசு. தனது பற்களைக் கோரங்களில் தீட்டிக்கொண்டது. அப்பாவிச் சனங்களின் மண்டையோட்டுக்குள் அனிச்சையாகவே கையெறி குண்டுகள் வெடித்தன. குடாநாடு சிவந்து ஓயாது அழுதது. துயர்ப் புழுதி பயங்கரத்தை உமிழ்ந்தது.

அன்றைக்கு நான் பத்து வயதுச் சிறுவனாக இருந்தேன். நாங்கள் குடியிருந்த வாடகை வீட்டுக்கருகில் ராணுவத்தின் சிறிய முகாமொன்று இருந்தது. நாய்களின் குரைப்பொலிக்கு மத்தியில் வாழ்க்கை வெருண்டுபோயிருந்தது. அக்காவும் நானும் பயத்தில் ஒடுங்கிப்போயிருப்போம். ராணுவத்தினரின் மதுவெறிக் கூச்சல்களும், பைலா பாடல்களும் கேட்டுக்கொண்டேயிருக்கும். சிறகுபோல் விரியும் இறுக்கத்தோடு விடியும் வரை விழித்திருப்போம். வெறுமை கப்பிய நித்தியத்தில் எங்களிருவருக்கும் புன்னகைக்க வழியில்லை.

கடவுள்... பிசாசு... நிலம்! - 1

என்னுடைய பள்ளிக்கூடம் ராணுவத்தின் உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தது. ஒவ்வொரு நாளும் சோதனைச்சாவடி வரிசையில் நிற்கவைத்துவிடுவார்கள். சாப்பாட்டுப் பெட்டி வரை திறந்து சோதிக்கும் ராணுவத்தினரின் முகத்தில் மனுஷத்தன்மை இருப்பதில்லை. சோதனைச்சாவடியைக் கடந்து, பேருந்து நகரும்வரை அவமானத்தின் வாய் பிளந்திருக்கும். சோதனைச் சீண்டல் எங்கள் பலரின் மனதைச் சவாலுக்கு இழுத்தது. கொதித்தூறும் கோபத்தை வரவழைத்தது. உலையெனப் பொங்கக் காத்திருந்தது. பள்ளிக்கூடத்தின் நேரக் கட்டுப்பாடுகளை ராணுவத்தினரே வைத்திருந்தனர். காலை எட்டு மணியிலிருந்து மாலை நான்கு மணிக்குள் அனைவரும் உயர் பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியேற வேண்டுமென்ற கட்டளையிருந்தது. ராணுவ வாகனங்களுக்குத் தரிப்பிடமாக இருக்கும் பள்ளிக்கூட வளாகத்தில் காலைப் பிரார்த்தனை நிகழும். அதிபர் உரை நிகழ்த்துவார். ஒழுக்கம் பற்றியும், கல்வியின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறுவார். வன்முறையை யாரும் கையில் எடுக்கக் கூடாதென பொதுப்படையாகப் பேசுவார். நன்றாகப் படித்து, அரச உத்தியோகம் பெற்று, பள்ளிக்குப் பெயர் வாங்கித் தர வேண்டுமெனக் கூறிக்கொண்டேயிருப்பார்.

வானமற்ற பறவைக்கு எத்தனை சிறகிருந்தும் என்ன பயன்? பள்ளிக் கூடத்தைச் சுற்றியிருக்கும் அனைத்து ராணுவ முகாம்களும் சிறுவர்களாகிய எங்களை அச்சுறுத்தின. நாடக ஆசிரியராக இருந்த சங்கரப்பிள்ளை வாத்தியாரிடம் இதைச்ச் சொன்னபோது அவர் கைகளை விரித்து “நான் என்ன செய்யேலும் தம்பியவே” என்றார். அவரின் கண்களில் கையாலாகாத்தனம் மிதந்தது. உடல் வெட்கித்தது. அவர் மனத்துக்குள் அழுகை எழுந்தது.

அன்றைக்கிரவு அண்ணா வீட்டுக்கு வந்திருந்தான். தனது கைத்துப்பாக்கியை முக்காலியில் வைத்துவிட்டு சாப்பிடத் தொடங்கினான். அக்கா உணவைப் பரிமாறினாள். நான் இனிமேல் பள்ளிக்கூடம் போக மாட்டேன் என்று அந்தக் கணத்தில் சொல்லிவிடுவதே சரியெனத் தோன்றியது. சொன்னேன். ``படிக்கப் போகாமல் என்னடா செய்யப்போறாய்?’’ என்று அண்ணா கேட்டதும் “உந்த ஆர்மிக்காரங்களைக் கொழும்புக்கு அடிச்சு துரத்தப்போறன்” என்றேன். அவன் சிரித்துக்கொண்டு “தம்பி அதை நாங்கள் செய்யிறம், நீ படி” என்றான்.

அண்ணா பலரால் அறியப்பட்ட போராளி. மிகக் கடுமையான அதிரடி நடவடிக்கைகளால் பெயர் பெற்றிருந்தான். யாழ்ப்பாண ரௌடிகளையும், அவர்களின் மோதல்களையும் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் சிலரை எச்சரிக்கை செய்திருந்தான். ராணுவ ஆதரவு இயக்கங்களோடு தொடர்பிலிருந்த சில முதலாளிகளை நேரில் சந்தித்து, இனிமேல் அப்படியிருக்க வேண்டாமெனக் கூறியிருந்தான். அவனொரு புயல் காற்று. யாரின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டுத் தடம் தெரியாமல் மறைந்துவிடுவான். வீட்டுக்கருகில் இருந்த ராணுவத்தின் சிறிய முகாம் மீது அவனே தாக்குதல் நிகழ்த்திவிடுவான் என அக்கா பயந்துகொண்டிருந்தாள். ஆனால் அப்படி எதுவும் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்தான். அன்றிரவு வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் முக்காலியில் இருந்த அண்ணாவின் கைத்துப்பாக்கியைத் தடவிப் பார்த்தேன். வேட்கையின் ஆழ்ந்த குளிர் பரவியிருந்தது. மீண்டும் எனது ஆட்காட்டி விரலால் அந்த உலோகத்தைத் தீண்டினேன். மகோன்னதமும் காவியத்தன்மையும்கூடிய ஒரு வரலாற்றுப் பாத்திரமாக என்னை நானே உணர்ந்தேன். தாங்க முடியாத பரவசம் நறுமணமாக எனக்குள் புகைந்தது.

வன்னியிலுள்ள சொந்தக் கிராமத்தில் அம்மா வசித்துவந்தாள். மாதத்தில் இரண்டு நாள்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்து எங்களைப் பார்த்துவிட்டுச் செல்வாள். அம்மா போராளிகளுக்குச் சமையல் செய்துகொடுப்பவள். ஓயாது அடுப்பு வெக்கையில் நின்று வேகுவாள். அவளின் சமையல் ருசியையும் உபசரிப்பையும் பற்றிப் போராளிகளுக்கிடையில் பெருமிதம் பிணைய உரையாடல்கள் நிகழும்.

மிகத் தொடக்க காலத்தில் போராளிகளின் மறைவிடங்களில் ஒன்றாக எங்களுடைய வீடிருந்ததாம். அப்படியொரு நாளில்தான் அம்மா என்னைப் பிரசவித்தாளாம். நான் பிறந்த அன்றைக்கு எங்களுடைய பெரிய வீட்டில் அமைக்கப்பட்டிருந்த நிலக்கீழ் பதுங்குகுழிக்குள் மறைந்திருந்த தாக்குதல் படைப்பிரிவின் பொறுப்பாளர்களில் ஒருவரான லெப். கர்னல் நிலான் எனக்கு ஆதீரன் எனப் பெயர் சூட்டினாராம். யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் ராணுவத்துக்குப் பாரிய சவாலாக இருந்த நிலான் பின்னர் ஒருநாளில் வீரச்சாவு அடைந்தாராம். போராளிகள் மத்தியில் ‘அடைக்கல மாதா கோயில்’ என்ற குழூஉக்குறி எங்களுடைய வீடாகவே இருந்ததாம். இந்தக் கதைகளைப் பெருமை பொங்கச் சொல்லிக்கொண்டேயிருக்கும் அம்மா, வீரயுகத்தின் சாட்சி. அவளுக்குத் தாள முடியாத மனவழுத்தம் நேர்கையில் பன்னிச்சை மரத்தின் முன்னே போய் நின்று `காளித்தாயே...’ எனக் கலங்கி நிற்பாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 1

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வெளிநாட்டு அலுவலர்கள், அம்மாவிடம் நேர்காணல் ஒன்றைக் கேட்டிருக்கின்றனர். “சமாதான காலம் எப்படியிருக்கிறது” என்ற அவர்களின் முதல் கேள்விக்கு அம்மா தனது அடுப்பைக் காட்டி அப்படித்தான் எரிந்துகொண்டிருக்கிறது என்றாள். அம்மாவுக்கு அந்நியர்மீது நம்பிக்கையில்லை. பரிதாபத்தின் உச்சுக்கொட்டலைச் சாம்பலாக்கினாள். விடுதலையைக் கடுந்தவமெனக் கொண்டிருந்த போர்க்காளியின் உக்கிரம் அவளிடமிருந்தது.

எனது பள்ளிக்கூட அதிபர் ராணுவத்தோடு நெருக்கமாக இருந்தார். பள்ளி நிகழ்வுகளுக்கு ராணுவ அதிகாரிகளை விருந்தினராக அழைத்தார். இணங்கிப்போதல் ஒன்றே நல்லதெனக் கூறினார். ஆசிரியர்கள் மத்தியில் அதற்குக் கண்டனங்கள் கசிந்தன. நடக்கவிருக்கும் பரிசளிப்புவிழாவை மாணவர்கள் புறக்கணிக்க வேண்டுமெனச் சிலர் குரல் எழுப்பினர். அதிபர் தனது முடிவில் மாற்றங்கள் இல்லையென அறிவித்தார். நான் அந்தப் பரிசளிப்பு விழாவில் பங்கெடுக்காத நூற்றுக்கணக்கான மாணவர்களுள் ஒருவனாயிருந்தேன். இந்தப் பிரச்னை குறித்து சிலரால் இயக்கத்துக்கு எழுதப்பட்ட கடிதத்தில் அதிபர் துரோகியாக ஆக்கப்பட்டிருந்தார். அதை உறுதிப்படுத்தும் வகையில் சில நிகழ்வுகளும் பள்ளிக்கூட நிர்வாகத்தில் அரங்கேறியிருந்தன. நான் பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்திக் கொண்டேன். வாரத்தில் மூன்று நாள்கள் போகலாமெனத் திட்டமிட்டேன். அக்கா பள்ளிக்கூடத்துக்குப் போகுமாறு பூவரசம் தடியால் என்னை உரித்தெடுத்தாள்.

நான் அழுதுகொண்டே பூட்டம்மாவின் கோயிலுக்கு ஓடிப்போவேன். அங்குதான் அமைதி நிலவிற்று. கண்ணகி அம்மன் எனக்காகவே காத்திருப்பாள். அங்கு வளர்ந்து நிற்கும் மரநிழலின் சாகசத்தில் நானொரு வேங்கை. எனது நகங்கள் அவலத்தைக் கீறி அழிக்கத் துடித்தன. உயிர் நிலத்தில் ஒரு பொழுதுக்கு நிம்மதி தரத் துடித்தன எனது கண்கள். அண்ணாவின் கைத்துப்பாக்கியை ஆட்காட்டி விரலால் தீண்டிய நேரத்தில் பரவிய வேட்கையின் ஆழ்ந்த குளிர் எனக்குள் தோன்றியது. அம்மன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பூட்டம்மா யாழ்ப்பாணத்தின் சாமியாடிகளில் தலைசிறந்தவள். அவளது வாக்கு, அம்புலி வளரும் இரவிலே கேட்கும். செய்வினை அறுப்பதில் அவளை மிஞ்ச ஆளில்லை. உவர்ப்பு ஊறும் நாக்கை வெளியே நீட்டி திக்குவாயால் உச்சாடனம் செய்யும் அவளது குங்கும நெற்றியைப் பார்த்தாலே வீண் பாரங்கள் இறங்கிவிடும். அவளது முகச்சாயல் எங்களிடமிருந்தது. இந்தக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் கண்ணகியாளின் முகம் அனலாக எழும். பூட்டம்மாவுக்கு எல்லாமுமாக இருந்தது இந்தக் கோயில். நான் பள்ளிக்கூடம் போகாமல் ஊர் சுற்றுவதாக அவளிடம் சென்று முறையிட்டாள் அக்கா. பூட்டம்மா என்னிடம் கேட்டாள்.

“படிக்காமல் என்ன செய்யப்போகிறாய்?”

“போராடப் போறன்.”

இளக்காரம் நிறைந்த கடைவாய்ச் சிரிப்போடு “காத்து வளம் பார்த்து மூத்திரம் பெய்யத் தெரியாது, நீ கொம்பனிக்கு போய் சண்டை பிடிக்கப் போறியோ” என்றாள். பூமியில் கண்களை நிலைகுத்தி நின்றேன். அன்றைக்கு மாலையில் அம்மா வன்னியிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தாள். அவளோடு இன்னொருவரும் வந்திருந்தார். அவருடைய பெயர் மருதன். நான்கு நாள்கள் எங்களுடைய வீட்டிலேயே தங்கியிருப்பார் என்றாள் அம்மா. அவரிடம் சொற்கள் குறைவாகவே இருந்தன. மருதன் கடுமையான பக்திமானாகவும் தன்னை வெளிப்படுத்தினார். நான்கு நாள்கள் ஆகியிருந்தன. மருதன் எங்களுடைய வீட்டிலிருந்து வெளிக்கிட்டார். அவர் யார், ஏன் இங்கு வந்து தங்கிவிட்டுச் செல்கிறார் என அம்மாவிடம் கேட்க முடியாது. அப்படி ஒன்றைக் குடைந்து கேட்கும் பழக்கம் எங்கள் யாரிடமும் இருக்கவில்லை. அம்மா வன்னியிலிருந்து கொண்டுவந்த விளாட்டு மாம்பழங்கள் இரண்டினை எடுத்து துண்டுகளாகச் சீவலிட்டாள். தேனொழுகும் உருசையும் வாசமும் பிரித்தறிய முடியாமல் இணைந்திருந்தது. காற்றில் செல்லும் சருகைப்போல இரவு நகர்ந்துகொண்டிருந்தது. ராணுவத்தின் முகாமிலிருந்து பைலா பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. அக்காவும் நானும் அம்மாவைக் கட்டியணைத்தபடி நித்திரையானோம்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 1

காலையில் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் பேருந்துக்காகப் பல மாணவர்கள் காத்திருந்தோம். வழமைபோல எங்களைக் கடந்து உந்துருளியில் போய்க்கொண்டிருந்தார் அதிபர். நாங்கள் வீதியில் நிற்கும்போதுகூட ஓர் ஒழுங்கைப் பேண வேண்டுமெனக் கருதும் ஒழுக்கவான் அவர். அதிபர் எங்களைக் கடந்து சென்ற அரை நொடிகளுக்குள் நான்கு வேட்டொலிகள் மூச்செழுப்பின. என்ன நிகழ்ந்ததென அறியாமல் குழப்பத்தில் நின்ற அடுத்த நொடியில் நாங்கள் நிற்கும் திசை நோக்கிப் பாய்ந்து வந்தது அதிவேக உந்துருளி. தலைக்கவசம் அணிந்திருந்த அந்த மர்ம நபரின் வலது கை, துண்டுப்பிரசுரங்களைக் காற்றில் பறக்கவிட்டது. உந்துருளி மிகவேகமாக வெளியில் போய் மறைந்துவிட்டது. நிலத்தில் வீழ்வதற்காக அலைந்துகொண்டிருந்த ஒரு துண்டுப்பிரசுரத்தை அந்தரத்தில் ஏந்தி வாசிக்கையில் மனம் திகைத்துவிட்டது.

“ஐயோ எங்கட அதிபர சுட்டுட்டாங்கள்” குரல்கள் வான்நோக்கி எழுந்து தவித்தன.

(நீளும்...)

****

அகரமுதல்வன்: ஈழ இலக்கியத்தில் தனித்துவ அடையாளத்துடன் இயங்குபவர். கவிதைகள் வழியாக எழுத்துலகிற்குள் நுழைந்தவர், தற்போது சிறுகதைகள், குறுநாவல்கள் எனத் தொடர்ந்து எழுதிவருகிறார். இவரின் சமீபத்திய குறுநாவல்களின் தொகுப்பான ‘உலகின் மிக நீண்ட கழிவறை’ பல தளங்களில் விவாதிக்கப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது. திரைப்படம் இயக்குவதற்கான தொடக்க வேலைகளில் இருக்கிறார்.

*****

ஈழ இனப்படுகொலை நிகழ்ந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. உலக அளவில் மானுடநீதிக்காகப் போராடத் தலைப்பட்டவர்களாக ஈழத்தமிழர்கள் ஆகியிருக்கிறார்கள். ஈழ இலக்கியங்கள் அங்கு நிகழ்ந்த பேரழிவுகளையும், ராணுவத்தின் மானுட அழித்தொழிப்புகளையும் எழுதிக்கொண்டேயிருக்கின்றன. ஆனபோதிலும் அவை, நேரடியாக யுத்தகாலத்தின் விவரணைகளையும், அந்தச் சூழலின் நெருக்கடிகளையும் பிரதானப்படுத்துகின்றன. அந்தப் போக்கிலிருந்து முற்றாக விலகி, ஈழத்தின் சமாதானகாலப் பகுதியை வெளிப்படுத்தும் தொடராக இது அமைகிறது. புலிகள், ராணுவம் என்கிற இரு தரப்பின் நடவடிக்கைகளையும், அதனால் ஏற்படும் பதற்றமான சூழலையும் முதன்முறையாக ஒரு சிறுவனின் நோக்குநிலையிலிருந்து இத்தொடர் முன்வைக்கிறது. வன்னி கிராமத்தின் பண்பாட்டுப் பின்னணியோடு விரிகிற இக்கதை, இதுவரைக்குமான ஈழ இலக்கியத்தில் வெளிவராத சித்திரங்களை உள்ளடக்கியது. ஈழத்தமிழ் விடுதலைப் போராட்டத்தின்மீது கண்மூடித்தனமான விமர்சனங்களும் விதந்தோதல்களும் பெருகியிருக்கும் இந்நாள்களில், பெரிய ஊடகமொன்றின் வாயிலாக இத்தொடர் வெளிவருவது அறிவுசார் அரசியல் தளத்தில் அவசியமானது. - அகரமுதல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism