Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! -14

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

அக்கா அடுப்படிக்குள் நுழைந்து சமையலைத் தொடர்ந்தாள். என்னுடைய பாடப்புத்தகங்களை எடுத்து சும்மா புரட்டிக்கொண்டிருந்தேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! -14

அக்கா அடுப்படிக்குள் நுழைந்து சமையலைத் தொடர்ந்தாள். என்னுடைய பாடப்புத்தகங்களை எடுத்து சும்மா புரட்டிக்கொண்டிருந்தேன்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

அக்கா, வாசலில் நிற்கும் தலைக்கவச மனிதனை எட்டிப்பார்த்தாள். எந்தத் தயக்கமுமற்று சாதாரணமாக “உள்ள வாங்கோ மருதன்” என்றாள். “இவர் மருதனில்லை வேறை ஆரோ!” என்றேன். இருவருக்கும் எதிரே நின்றவர் அப்போது தலைக்கவசத்தைக் கழற்றினார். மருதன்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் அவதாரம். ஒவ்வொரு நடை உடை. கண்களைச் சிமிட்டிக்கொண்டு “என்ன தம்பி கடுமையாய் யோசிக்கிறியள்” என்று கேட்டார். “இப்பிடியா எங்களை வந்து பயப்பிடுத்திறது?” என்றேன்.

“அக்காவும் தம்பியும் சேர்ந்து கோபப்படாதேங்கோ, ஒரு தேத்தண்ணியைப் போட்டுத் தாங்கோ குடிச்சிட்டு வெளிக்கிடுறன்.”

“சாப்பிட்டிட்டு போங்கோ” அக்கா சொன்னாள்.

“இல்ல, நான் அவசரமாய் வேறொரு சந்திப்புக்காகப் போகவேணும்.”

மருதன் பணிய அமர்ந்தார். ஒரு வட்டத்தட்டில் அவருக்கு மிக்சரும், பிஸ்கோத்தும் எடுத்துவைத்தேன். அக்கா உலைத்தண்ணியில் நீரெடுத்துத் தேத்தண்ணி போட்டாள். மருதன் குடித்து முடித்ததும் அவசரமாக வெளிக்கிட்டார். போகும்போது என்னைப் பார்த்துச் சொன்னார்.

“ஆதீரன்... நீ உங்கட வாத்தியாருக்காக நடந்த போராட்டத்தில நிண்டு கோஷம் போட்டத பார்த்தனான். எல்லாம் நல்ல வசனங்கள்.”

“நீங்கள் எங்க நிண்டனியல், நான் உங்களைக் காணேல்ல.”

“அங்கினதான் நானும் நிண்டனான். நீ என்னை கவனிக்கேல்ல தம்பி. சரி நான் போய்ட்டு வாறன்.”

அக்காவும் நானும் அவரை வழியனுப்பி வைத்தோம். மருதனின் திடீர் வருகையும் புறப்பாடும் அக்காவை உலர்ச்சியாக்கியது.

“எப்பிடியக்கா மருதன் அண்ணாவை அடையாளம் கண்டனி?”

“ஏன் அவர் என்ன உருமறைப்பா செய்துகொண்டு வந்தவர், பார்த்ததும் தெரிஞ்சிட்டுது.”

“நான் பயந்துபோய்ட்டன். அதுதான் தப்பி ஓடிப்போகலாமெண்டு சொன்னான்.”

“ஆரெண்டு நினைச்சு இப்பிடிச் சொன்னனி?” அக்கா சிரித்தபடி கேட்டாள்.

“ஆரெண்டு தெரியாததாலதான் அப்பிடி பயந்தனான்.”

அக்கா அடுப்படிக்குள் நுழைந்து சமையலைத் தொடர்ந்தாள். என்னுடைய பாடப்புத்தகங்களை எடுத்து சும்மா புரட்டிக்கொண்டிருந்தேன். இப்படியான மனநிலை எப்போதாவது வாய்க்கும். சில வேளைகளில் புத்தகப்பையிலிருந்து அனைத்தையும் கொட்டிவிட்டு மீண்டும் அடுக்கிவைப்பேன். பள்ளிக்கூடத்தில் நடக்கும் மாணவர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகப் பல்வேறு வெகுசன அமைப்புகள் கண்டனம் வெளியிட்டன. கடத்திச்செல்லப்பட்ட ஆசிரியர் சங்கரப்பிள்ளையை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை அறிக்கை வெளியிட்டது. “இந்தப் பிரச்னை முடியுமட்டும் நீ பள்ளிக்கூடம் போக வேண்டாம்” என்று அக்கா சொன்னாள்.

அன்றைக்குப் பின் நேரம் அல்லியக்கா எங்களுடைய வீட்டுக்கு வந்திருந்தாள். மெலிந்து கழுத்தெலும்பு தெரியத் தொடங்கியிருந்தது, மாதக்கணக்காகியும் காந்தி அண்ணா பற்றிய எந்தத் தகவலும் அவளிடமோ, எங்களிடமோ வந்து சேரவில்லை. தொம்மைக் குஞ்சாச்சியின் செத்த வீட்டுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிடும்போது அல்லியக்காவுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறாள். “வன்னியில காந்தியண்ணாவைக் கண்டனியளோ?” என்று கேட்டாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! -14

“இல்லையக்கா... என்ர கண்ணுக்குத் தட்டுப்படேல்ல. அப்பிடி அங்க இருந்திருந்தால் அம்மாட்ட போயிருப்பார். அம்மா அப்பிடி ஒரு தகவலும் சொல்லேல்ல...”

“அப்ப எங்கையடி இந்த மனிஷன் போயிருக்குது?”

“அக்கா, நீங்கள் ஒண்டுக்கும் யோசியாதையுங்கோ... அவர இயக்கம் பாதுகாத்து வெச்சிருக்கும்... அவருக்கு இதென்ன முதல் தடவையா?”

அல்லியக்கா தளர்ந்து போகுமொரு ஆளில்லை, துணிச்சல்காரி. தந்திரம் தெரிந்த நாயகி. ‘யாரையும் நம்பாதே. எல்லோரையும் சந்தேகப்படு’ என்று அக்காவிடம் சொல்லிக்கொண்டே இருப்பாள். `நெய்யாய் உயிரூற்றி வளர்த்த விடுதலை வேள்வியிது’ என்று கவித்துவம் பொங்கக் கதைப்பவள். ஆனால், இந்தப் பிரிவின் ஆற்றாமையை அவளால் சகிக்க முடியவில்லை. ராணுவமும், ராணுவத்தோடு சேர்ந்து இயங்கும் தமிழ் ஆயுதக்குழுவும் காந்தியண்ணாவைக் கொல்ல முடியவில்லையே என்ற அந்தரிப்போடு அல்லியக்காவின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துக்கொண்டே இருந்தனர். காந்தியண்ணா இப்போது எங்கே இருக்கிறார் என அறிந்துகொள்ள எங்களிடமிருந்த ஒரே துருப்பு, சலூன் இனியவன்.

“நீ நாளைக்குக் காலமை வெள்ளனவே சலூனுக்குப் போய், அவரிட்ட கேள்.”

“அவருக்கும் தெரிய வாய்ப்பிருக்குமெண்டு நான் நினைக்கேல்ல. ஆனாலும் ஒரு தடவை கேட்டுப் பார்க்கலாம்.” அக்கா சொன்னாள்.

``இல்லையடி... அவனுக்குத் தெரிய வாய்ப்பிருக்கும். அவன் கடும் ஆள். மல்லாகத்தில வெட்டின மயிரைக் கூட்டிப்பெருக்கினபடிக்கே மானிப்பாயில எத்தினை ஆர்மிக்காரன் நடந்து போறான் எண்டு சொல்லக்கூடியவன்.”

“நாளைக்குக் காலமையாய் போய் விசாரிச்சிட்டு உங்கட வீட்டுக்கு வந்து சொல்லுறன்” என்றேன்.

“பெடியா. நீ வீட்ட வர வேண்டாம். நாளைக்குப் பின் நேரம் கந்தசாமியண்ணாவின்ர மில்லுக்கு வா. நான் அரிசி திரிக்கப் போறன். அங்க நிண்டு கதைச்சால் ஒருத்தருக்கும் கரவு வராது” என்று அல்லியக்கா சொல்லி முடித்ததும், எனக்கும் அதுதான் சரி என்று தோன்றியது.

காலையிலேயே எழுந்தேன். இன்னும் துடக்கு கழிய நாள்கள் இருந்தன. கோயிலுக்குச் செல்லாமல் இருப்பது அதிருப்தியாக இருந்தது. வீட்டின் பின்னால் நிற்கும் முருங்கை மரத்தின் கீழே புலுனிக்குஞ்சுகள் மேய்ந்தபடியிருந்தன. எப்போதாவது வந்தமர்ந்து கூவும் குயில், `இன்றைக்கே கூவியிறப்பேன் பார்’ என்பதைப்போலக் குரல் எழுப்பியது. நேரத்துக்காகக் காத்திருந்தேன். அக்கா குளித்து முடித்து வந்ததும் ராசவள்ளிக்கிழங்கில் களி செய்தாள். உருசையும் வாசமும் காலைப்பொழுதையே அந்தக் கிழங்கின் நிறமென ஆக்கியது. சாப்பிட்டு முடித்ததும் இனியவன் சலூனுக்கு நடக்கத் தொடங்கினேன். அக்கா கூப்பிட்டுச் சொன்னாள்.

“அவரைத் தவிர வேற ஆக்கள் நிண்டால் ஒண்டும் கேக்காத, திரும்பி வா.”

“ஓம். நான் கேக்க மாட்டேன்”

இனியவன் சலூனை அடைந்ததும், கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனேன். அவர் மட்டுமே இருந்தார். நாளேட்டைப் படித்துக்கொண்டிருந்தார். ஊதுபத்தி வாசனை கொஞ்சம் காட்டமாக நாசியில் ஏறியது. மெல்லிய சத்தத்தில் ‘பிள்ளையார் சுழி போட்டு’ பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் “வாங்கோ தம்பி” என்றார். அவருக்கொரு புன்னகையைக் கையளித்தேன். அவரும் என்னைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்குகையில்,

“காந்தியண்ணா எங்க இருக்கிறார் எண்டு எதாவது தகவல் தெரியுமோ, அவற்ற மனிசி கேக்கச் சொன்னவா” என்றேன்.

“அப்பிடியா, எனக்கு இதுவரைக்கும் அது பற்றி எந்தத் தகவலும் தெரியாதே.”

“உங்களை விசாரிச்சால் தெரியுமெண்டு அவா ஒரு நம்பிக்கையோடிருக்கிறா, அதுதான் அனுப்பிவிட்டவா.”

“ஓம் எனக்கு விளங்குது. நான் வேணுமெண்டால் உமக்கொரு உதவி செய்யிறன். ஆனால் நீர் கொஞ்சம் கவனமாய் இதைக் கேட்டு நடக்க வேணும்.”

“சொல்லுங்கோ” என்றேன்.

“நானொரு துண்டொன்று எழுதித் தருவன். அதைக் கொண்டுபோய் நான் சொல்லுற ஆளிட்ட குடும். அவருக்கு அந்த விடயம் தெரிஞ்சிருக்கும்.”

நான் ஓமென்று தலையசைக்கிறேன். இப்போது அடுத்த பாடல் ஒலிக்கத் தொடங்குகிறது. ‘பொம்ம பொம்மதான்’ என்று பெங்களூர் ரமணி அம்மாளின் அந்தக் குரல் என்னை அந்தரத்தில் தூக்கி எறிந்தது. சங்கரப்பிள்ளை வாத்தியார் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல். இனியவன் ஒரு சிறு துண்டில் “கஸ்தூரி மஞ்சள், ஓலைப்பாய்” என்று எழுதினார். எனது கையில் அந்தத் துண்டைத் தருவித்து, “நாளைக்குக் காலமை சின்ன முருகன் கோயிலுக்குப் போய் ஐயரிட்ட இதைக் குடுங்கோ தெரிஞ்சிடும்’’ என்றார்.

கடவுள்... பிசாசு... நிலம்! -14

ரகசியப்பனி, எட்டுத்தொகை, கஸ்தூரி மஞ்சள், ஓலைப்பாய் இவையெல்லாம் என்ன? எத்தனை மர்மங்கள், எத்தனை சொற்கள். எல்லோரும் அறிந்திருக்கும் ஒரு சொல்லைப் புரட்சி தனது ரகசியங்களுக்குப் பயன்படுத்தாது போலும்! நான் அதை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். “கஸ்தூரி மஞ்சள், ஓலைப்பாய்” என்ற இந்தச் சொற்கள் எதைக் குறிக்கின்றன என்று அறியாது அவதியுற்றேன். போராளிகளின் ரகசியக் கோட்டைகள் இரும்பாலானவை அல்ல. சொற்களால் ஆனவை. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று பாடிய தொல்காப்பியன் வன்னியிலுள்ள எந்தப் போராளியின் முகாமில் இருக்கிறானோ என்று வேடிக்கையாக நினைத்துக்கொண்டேன். அக்காவிடம் வந்து நடந்ததைச் சொல்லி இனியவன் எழுதித் தந்த துண்டைக் காண்பித்தேன். அவள் படித்துவிட்டு, “இது என்னடா?” என்று கேட்டாள். நான் சிரித்துக் கொண்டு வாசித்தேன்.

“கஸ்தூரி மஞ்சள், ஓலைப்பாய்.”

பின் நேரம் கந்தசாமியண்ணாவின் மில்லுக்குச் சென்றேன். அங்கே அல்லியக்கா நின்றுகொண்டிருந்தாள். நடந்தவற்றையும் நாளை காலமை கோயிலுக்குச் செல்ல வேண்டுமெனவும் சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக வீட்டுக்கு வந்துவிட்டேன். அப்போதுதான் எனக்கும் அக்காவுக்கும் `துடக்கு’ விஷயம் பொறிதட்டியது. பூட்டம்மாவிடம் கேட்டுப் பாப்பமென்று அக்கா சொன்னாள். நானும் அக்காவும் பூட்டம்மாவின் வீட்டுக்குச் சென்றோம். அவள் அப்போதுதான் இரவுச் சாப்பாடு செய்ய ஆயத்தமாகிக்கொண்டிருந்தாள். அக்காதான் விஷயம் எல்லாவற்றையும் சொன்னாள்.

“ஐயரைக் கோயிலுக்கு வெளியாலவெச்சு சந்திக்க ஏலாதா? அப்படி எதாவது யோசிச்சுப் பார்.”

“அதுக்கு வாய்ப்பு இருந்தாலும், அப்பிடிச் செய்யக் கூடாது. ஆராவது பார்த்தால் கரவாகிடும்.”

“ரத்தத்துடக்கோட கோயிலுக்குப் போறது, கூடாதெல்லே... ஆனால் இதுக்கு ஒண்டும் செய்யேலாது. முக்கியமான விஷயம். பாவம் அல்லி துடிச்சுப்போய் இருக்கிறாள். நீ போ. அது ஒண்டும் நடக்காது” என்றாள் பூட்டம்மா.

“துடக்கோட போனால் ஒண்டும் நடக்காதுதானே” அக்கா மீண்டுமொருமுறை கேட்டாள்.

பூட்டம்மா சொன்னாள். “நான்தானே சொல்லுறன். நீ போ. ஒண்டும் நடக்காது!”

நான்தானே சொல்லுறன் என்ற பூட்டம்மாவின் குரலில், சர்வ வியாபகத்திலும் நிறைந்திருக்கும் கடவுளின் உத்தரவும் மீறலும் தெரிந்தன. “கஸ்தூரி மஞ்சள், ஓலைப்பாய்” என்றெழுதப்பட்ட துண்டோடு படுக்கையில் சரிந்தேன்.

அல்லியக்காவின் வீட்டுக்கு முன்பாக நாய்கள் குரைக்கத் தொடங்கியிருந்தன.

(நீளும்...)