Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! -15

‘தொப்பி’ குயிலனை யாருக்கும் பெரிதாகத் தெரியாது. அவரின் இருபதாண்டுக் காலமும் காட்டுக்குள்ளேயே கழிந்திருக்கிறது.

பிரீமியம் ஸ்டோரி

அதிகாலையில் மழை பெய்யத் தொடங்கியிருந்தது. அக்கா தட்டியெழுப்பினாள். குளித்து முடித்து சின்ன முருகன் கோயிலுக்குச் சென்றேன். ஐயர் அப்போதுதான் சைக்கிளில் வந்திறங்கினார். தாமதத்துக்கு மழை காரணமாக இருக்கலாம். வெளியே கால்களைக் கழுவும் இடத்தில் நின்று அவரிடம் காகிதத்துண்டை நீட்டினேன். என்னை ஏற இறங்கப் பார்த்தவர், அதன் பிறகே துண்டில் எழுதப்பட்டிருந்த ‘கஸ்தூரிமஞ்சள்’ ‘ஓலைப்பாய்’ என்ற சொற்களைப் படித்தார். ``உள்ளே வாங்கோ’’ என்று என்னை அழைத்தார்.

“இல்லை ஐயா... எனக்குத் துடக்கு, நான் வெளிய நிண்டு கும்பிட்டிட்டு போறன்.”

“ஓ... அப்பிடியா! சரி இனியவனிட்ட ஐயர் இப்பிடிச் சொன்னதாய்ச் சொல்லுங்கோவன்.’’

அவரின் அந்தச் சொல்லுக்காகக் காத்திருந்தேன். எனக்குள் வியப்பும் எதிர்பார்ப்பும் கூடியிருந்தது. ஐயர் தன்னுடைய சைக்கிளில் இருந்த நைவேத்திய கூடையை எடுத்தபடிக்கு `` ‘கந்தர் குடில்’ என்று சொல்லுங்கோ, இனியவனுக்கு விளங்கும்’’ என்றார். மழையில் நனைந்தபடி வீட்டுக்கு வந்தேன். அக்காவிடம் நடந்தவற்றைச் சொன்னேன். தலையில் கிடந்த ஈரத்தைத் துடைத்துவிட்டாள். ‘கந்தர் குடில்’ என்பதை இனியவனிடம் போய்ச் சொல்ல வேண்டும் என்றேன். மதிய நேரத்தில் சலூனில் ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்பதால், அந்நேரத்துக்குப் போகச் சொன்னாள் அக்கா. மழையின் மெல்லிய தீற்றல், புலர்ந்த காலையை நீர்வண்ண ஓவியமாக்கியது. இதம் உலாவருகிற குளிர்ந்த காற்றில் பூமி புல்லரிக்கிறது. வீட்டிலிருந்த பழைய நாளேடுகளை எடுத்துப் புரட்டினேன். `வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர் நிறுத்த உடன்படிக்கையில் ரணில் – பிரபா நேற்று கைச்சாத்து. உத்தியோகபூர்வ அறிவிப்பு ஒஸ்லோவில் இருந்து வரும்’’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. இரண்டு வருடங்கள் ஆவதற்குள்ளேயே எத்தனை கொலைகள், எத்தனை கோரங்கள் என்று எண்ணிக்கொண்டேன். போர் நிறுத்தம் என்றால் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் ஒருவரைக் கொல்வதென நினைத்துக்கொண்ட அனைத்துத் தரப்பினரையும் வெறுத்தேன். ராணுவத்தின் சுடுகலன்கள் அப்பாவிகளை சம்ஹாரம் செய்தன. ஆயுத இயக்கங்களோ தமக்கு எதிரானவர்களை, துரோகித்தவர்களை, தம்மைப் புறக்கணித்து மற்றவரை ஏற்றுக்கொண்டவரை எனச் சுட்டு வீழ்த்துகின்றன. நிறைந்த மரணங்கள் சல்லிக்கற்களைப்போல குதிக்காலில் ஏறுகின்றன. பத்து வயதுச் சிறுவனாகிய நான், இந்த உலகின் அக்கிரமங்களைச் சபிக்கிறேன். “யாரொடு நோகேன், ஆர்க்கெடுத்து உரைப்பேன் ஆண்ட நீ அருளிலையானால்” என்று எல்லாக் கடவுளரை நோக்கியும் பாடிக்கொண்டே இருந்தேன்.

முன்னர் ஒருபொழுதில் பன்னிச்சையடிக்குப் போயிருக்கையில் ‘தொப்பி’ குயிலன் என்பவரைச் சந்தித்தேன். சிரட்டைப் பொட்டு நிறம். கண்ணாடி அணிந்திருந்தார். பச்சை நிறத்திலான வட்டத்தொப்பி அணிந்திருந்தார். என்னைப் பார்த்ததும் அம்மாவிடம் சொன்னார்,

“என்னக்கா சின்னக்கடுவன் பூனை மாதிரி இருந்தவன், இப்ப நல்லா வளந்திட்டான்.”

“சாறத்தில இருந்து இயக்கம் ஜீன்ஸுக்கு வளர்ந்த மாதிரித்தான்” என்று அம்மா சொன்னாள்.

‘தொப்பி’ குயிலனை யாருக்கும் பெரிதாகத் தெரியாது. அவரின் இருபதாண்டுக் காலமும் காட்டுக்குள்ளேயே கழிந்திருக்கிறது. இந்திய அமைதிப்படைக் காலகட்டத்துக்கு முன்பாக இயக்கத்தில் இணைந்த குயிலன், இப்போது தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பு அணியிலுள்ள அதிகாரியென அறிந்த வேளையில் கொஞ்சம் திகைத்துவிட்டேன். அப்படியான ஒருவராக இருப்பதற்கான எந்த அடையாளமும் அவரிடமில்லை. என்னோடு கதைத்துக்கொண்டிருந்தார். இடையில் அம்மா தேத்தண்ணியும் வாய்ப்பனும் தருவித்தாள். அவர் ஒரு வாய்ப்பனை எடுத்துக் கடித்தபடி “தம்பியா, ஒண்டுக்கும் யோசியாதை. நல்லாய்ப் படி. நாடு கிடைச்சதும் தமிழீழ அரசில வேலை பார்க்கவேணும்” என்றார்.

கடவுள்... பிசாசு... நிலம்! -15

நான் அவரிடம் கேட்க விரும்புவது படிப்பையல்ல, இயக்கக் கதையை. ஆனால் இவர் சொல்ல மாட்டேன் எனும் பேர்வழியென்றே தோன்றியது. “நல்லாய் படிக்கிறேன்” என்றேன். அவர் ‘சரி’ என்று தலையை ஆட்டினார்.

“நீங்கள் இயக்கத்தில சேர்ந்து இத்தனை வருஷத்தில எத்தின சண்டைக்குப் போயிருக்கிறியள்?”

குயிலன் தன்னுடைய வட்டத்தொப்பியைக் கழற்றுவதைப்போலக் கையாண்டு சரிசெய்தார். அவருக்கு அதுவொரு சுபாவம் போலாகியிருந்தது. பிறகு கேட்டார்.

“இப்ப இதத் தெரிஞ்சு, உனக்கு என்ன வரப்போகுது?”

“சும்மா கேட்டனான். சொல்லக் கூடாது எண்டால் விடுங்கோ. வேண்டாம்.”

‘தொப்பி’ குயிலன் மெல்லிதாய் இருமி முடித்துச் சொன்னார்.

“தம்பியா... சண்டையை எண்ணிக்கொண்டு போராட எங்களுக்கு நேரமில்லாமல் போச்சு. ஒவ்வொரு நாளும் காட்டுக்குள்ள சண்டையும் ரத்தச் சகதியுமாய் இருந்த நாள்கள்தான் அதிகம். ஆனால், இப்ப கொஞ்சம் மூச்சுவிட ஒரு வாய்ப்பு. ஆனால் இது நிரந்தரமில்லை.”

“எதைச் சொல்லுறியள்?”

“இந்தப் போர் நிறுத்தக் கூத்துதான்.”

“ஏன் இயக்கம் சண்டையைத்தான் விரும்புதா?”

“நாங்கள் ஆயுதமேந்தவேணும் எண்டு எப்பிடி ஒரு உள்நாட்டு நெருக்கடி இருந்ததோ... அப்பிடி இந்த ஒப்பந்தம் ஒரு சர்வதேச நெருக்கடி. விளங்குதா உனக்கு?”

“நீங்கள் எப்பிடி சொல்லுறியள், இந்தப் போர் நிறுத்தம் குழம்புமெண்டு...”

“ஓம். சிங்களத் தரப்பு ஒரு பாரிய போருக்கு ரெடியாகுது. அதுவரைக்கும் இது தாங்கும். அவன் பலமாக இது தானாய் விழும். இருந்து பார்.”

“இயக்கம் குழப்பாதோ.”

“என்னத்த?”

“போர் நிறுத்த ஒப்பந்தத்தைதான்.”

“ஒரு காலமும் இல்லை. அதைத் தலைவர் எங்களிட்ட மட்டுமில்ல. நோர்வேகாரங்களோட நடந்த முதல் சந்திப்பிலேயே உறுதியாய்ச் சொன்னவர்.”

‘தொப்பி’ குயிலன் ஆழமான உரையாடல் செய்யவல்லவர். நடைமுறைரீதியாக எல்லாவற்றையும் அணுகக்கூடியவர். இயக்கத் தலைமைக்கு அணுக்கமானவர். சில முக்கிய பொறுப்புகளை வகிக்கக்கூடியவர். நோர்வே சமாதானத் தூதுவர்களுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமைக்கும் நிகழ்ந்த முதல் சந்திப்பைப் பற்றி என்னிடம் சொன்னது ஆச்சர்யத்தை தந்தது. இப்படித்தான் அவர் அந்த நாள் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

“ஆதீரா! வயதில் மிகச்சிறியவனாக இருக்கின்ற போதிலும் உன்னுடைய பரந்த தேடலும், புத்திக்கூர்மையான கேள்விகளும் என்னை வியக்கவைக்கின்றன. நிகழும் போர் நிறுத்தம் பற்றி இவ்வளவு நேரமும் என்னோடு உரையாடினாய் என்பதால் அந்த நாளின் கதையை உனக்கு நான் சொல்கிறேன். 2000-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 31-ம் திகதி, நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தலைமையில் ஒரு குழுவினர் தலைவரைச் சந்திக்க வந்திருந்தனர். அவர்களுடனான சந்திப்பை எங்கே நிகழ்த்துவது என்ற குழப்பங்கள் பாதுகாப்பு மட்டத்தில் எழுந்தன. ஒரு முக்கிய தளபதி தேவாலயம் ஒன்றைப் பரிந்துரை செய்தார். இன்னொருவர் பள்ளிக்கூடம் ஒன்றைப் பரிந்துரை செய்தார். அரசியல் அறிஞர் ஒருவர் கூரையுள்ள கட்டடம் ஒன்றே போதுமானது என்றார். ஆனால், இன்னொரு தரப்பு வெளிநாட்டிலிருந்து வருகிறவர்களுடனான இந்தச் சந்திப்பை நாம் உயர்தரத்திலான சூழலில் செய்ய வேண்டுமென ஆணித்தரமாக முன்வைத்தனர். உயர்தரமான ஒரு சூழலில் அனைத்து உள்ளக வடிவமைப்புகளும் கொண்ட வசதிகளோடு ஒரு வீட்டைத் தயார்ப்படுத்தி, அதை ஓர் அலுவலகமாகக் காண்பிக்குமாறு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன. முதலில் புதுக்குடியிருப்பென தீர்மானிக்கப்பட்டு பல்வேறு ஊகங்கள், பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பின்னர் மல்லாவிக்கு மாற்றப்பட்டது. அன்றைக்கு நிகழ்ந்த சந்திப்பில், எரிக்சொல்ஹெய்ம் தமிழ்ச்செல்வண்ணாவின் பெயரை உச்சரித்தவிதம் கொஞ்சம் கோணலாக இருந்தது. எங்களுடைய பிரச்னைக்குச் சமரசப் பேச்சுகள் மூலம் ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்கு இயக்கம் தயாராக இருப்பதாக அறிவித்தது. இந்தச் சந்திப்பு நடந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது” என்றார்.

கடவுள்... பிசாசு... நிலம்! -15

‘தொப்பி’ குயிலன் ஆரூடம்போல நடக்கவிருக்கும் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் சொன்னார். பழிதீர்க்கும் கொலைகள் தவிர்க்க முடியாத வழிமுறைகளாக ஆகுமென்றார். இன்றைக்கு அதுதான் நிகழ்கிறது. எங்கள் பள்ளிக்கூட அதிபரைத் துரோகியென இயக்கம் கொன்றது. அதே பள்ளிக்கூடத்தின் நாடக வாத்தியார் சங்கரப்பிள்ளையை ராணுவம் கடத்தியிருக்கிறது. என்னைச் சுற்றி நீந்தும் இந்தக் கொதிப்பைச் சீர்செய்ய முடியாது தவிக்கிறது இத்தீவு.

“தம்பி நீ சலூனுக்குப் போய்ட்டு வந்து சாப்பிடச் சரியாய் இருக்கும்” என்ற அக்காவின் குரல் கேட்டது. எங்கள் வாழ்வின் கீழேயும் மேலேயும் படிகிற புகைத்திட்டுகளில் நடுக்கம் கறுப்பெனவிருக்கும்.

நான் சலூனுக்குள் நுழைந்தேன். அங்கே இனியவன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். ஒரு வயோதிகர் அமர்ந்திருந்து ஈழநாடு நாளேட்டினைப் படித்துக்கொண்டிருந்தார். இனியவன் என்னைப் பார்த்ததும் மிக இயல்பாக “இருங்கோ தம்பி” என்றார். நான் எதுவும் கதையாமல் வாங்கில் அமர்ந்தேன். இனியவன் சாப்பிட்டு முடித்தார். வயோதிகர் முடியை வெட்ட கதிரை அமர்த்தப்பட்டார். இனியவன் நெஞ்சிலிருந்து தொண்டைவரை காறிய சளியைத் துப்பும் சாக்கில் வெளியே போனார். பிறகு உள்ளே வந்தார். ஏதோ பாடல் வேறு ஒலித்துக்கொண்டிருந்தது. ஆனால் அது ரஹ்மான் பாடல் இல்லை. மீண்டும் காறிக்கொண்டு வெளியே போகிற இனியவன் என்னை அழைத்தார். நான் கதவைத் திறந்துகொண்டு வெளியே போனேன்.

“என்ன சொன்னவர்?” இனியவன் கேட்டார்.

“கந்தர் குடில்” என்றேன்.

இனியவன் சிரித்தபடி “தம்பி நீங்கள் பயப்பிடுகிற மாதிரி அவர் வேற எங்கையும் போகேல்ல. எங்களுக்குப் பக்கத்திலதான் இருக்கிறார். வெகு விரைவாய்ச் சந்திக்கலாம் என்று சொல்லுங்கோ” என்றார்.

“எங்களுக்குப் பக்கத்தில எண்டால் எங்கை?”

“ஐயோ தம்பி... அந்த இடம் எனக்கும் தெரியாதடா. தெரிஞ்சால் உனக்கு நானே சொல்ல மாட்டேனா?”

இனியவன் இப்போது சொல்வது பொய். ஆனால் அவருக்கு அது ரகசியக் காப்பு. ஒரு மர்ம மாளிகையைத் திறக்க ஆயிரம் திறப்புகள் இருப்பதைப்போல இனியவனின் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு கதவும், ஒவ்வோர் அசைவும். களைப்பும் சோர்வும் தள்ள வீட்டுக்கு வந்தேன்.

அம்மாவின் குரல் கேட்டது.

(நீளும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு