Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 2

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

ஊரின் வைரவர் கோயிலுக்கு முன்பாகக் குழுமியிருந்த ராணுவத்தினர் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் இறங்கினர்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 2

ஊரின் வைரவர் கோயிலுக்கு முன்பாகக் குழுமியிருந்த ராணுவத்தினர் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் இறங்கினர்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

மாலை நேரங்களில் ‘உதயசூரியன்’ வாசகசாலைக்குச் சென்று நாளிதழ்களை வாசிப்பேன். உலகச் செய்திகளில் இராக் முக்கிய இடம்பிடித்திருக்கும். பன்னாட்டுப் படைகளுக்கும் இராக்குக்கும் நிகழ்ந்த மோதல் செய்திகள் என்னை அதிரச்செய்தன. ‘பக்காத்தில் கார் குண்டுத் தாக்குதல், ஐம்பது பேருக்கு மேல் பலி’ என்கிற செய்தி தொடர்ச்சியாக வந்துகொண்டேயிருந்தது. வழமைபோல வாசகசாலையில் நாளிதழை வாசித்துக்கொண்டிருந்தேன். நான்கு ராணுவத்தினர் உள்ளே நுழைந்து அங்கிருந்த இரண்டு அண்ணன்மாரை பலவந்தமாக ஆயுதமுனையில் இழுத்துச் சென்றனர். எனக்கோ உயிர் நடுங்கியது. இருவரும் சேர்ந்து கூச்சலிட்டு அழுதனர். சனங்கள் கூடினர். கிழவியொருத்தி துணிச்சலாக ராணுவத்திடம் வாதிட்டாள். ``முகாமுக்கு வந்து கதையுங்கள்’’ எனச் சொல்லிவிட்டு விரைந்தனர். சனங்கள் சோர்வுற்றுக் கலைந்தனர். இரண்டு இளைஞர்களின் வீடுகளுக்கும் தகவல் போனது.

அரச உத்தியோகத்தரான கிராமச் சேவையாளரை அழைத்துக்கொண்டு முகாமுக்குப்போன பெற்றோர்களை அடுத்த நாள் வருமாறு ராணுவ அதிகாரி கூறினான். “எங்கட பிள்ளையளை என்னத்துக்கு நீங்கள் பிடிச்சு வெச்சிருக்கிறியள்?” என்ற துயரக் கேள்விக்கு, “உங்கள் பிள்ளைகள் புலி” எனச் சொல்லப்பட்டது. ராணுவ அதிகாரியைப் பார்த்து ஒரு தாய் அழுதுகொண்டே மீண்டும் சொன்னாள். “என்ர பிள்ளை புலியுமில்லை, ஆர்மியுமில்லை. அவன் பொதுசனம் சேர்.’’ பெற்றோரை வெளியேறும்படி சிப்பாய்கள் இழுத்துத் தள்ளினர்.

அடுத்த நாள் நாளிதழ்களில் `ராணுவத்தினரால் இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது’ என்கிற செய்தி வெளியானது. நித்தியத்தின் மீது படிந்துள்ள இந்த அழுகுரல்களின் இயலாமையை என்னால் சகிக்க முடியாதிருந்தது. கற்களைக்கொண்டாவது இந்த மிலேச்சர்களைத் தாக்க வேண்டுமென எனக்குள் எழுந்த தணலினை எந்தக் கடல்கொண்டும் அணைக்க முடியாதிருந்தது.

கடவுள்... பிசாசு... நிலம்! - 2

பூட்டம்மாவின் வீடு பிரதான வீதியிலிருந்தது. ராணுவத்தினர் ரோந்து செல்லும் நேரங்களில் வீட்டுக்குள் இருந்துவிடுவாள். பலாலியில் நடந்த ராணுவத்துடனான மோதலில், பூட்டம்மா தன் தலைச்சன் பிள்ளையை நாட்டுக்காக உவந்தளித்திருந்தாள். வீரவேங்கை இரவி என்றழைக்கப்பட்ட அவரின் வரிச்சீருடையுடனான புகைப்படமொன்றை வைத்திருந்தாள். மாவீரர் நாள் அன்றைக்கு, கோப்பாய் துயிலுமில்லத்துக்கு பூட்டம்மாவுக்குத் துணையாகச் சென்றுவருவேன். பிள்ளையின் கல்லறையில் சந்தன வாசம் கமழும் ஊதுபத்திகளைப் புகைக்கவிடுவாள். தானே ஆய்ந்து கட்டிய நித்திய கல்யாணியிலான மாலையைச் சாற்றி அழுது ரணமாவாள்.

மாவீரர்களின் நினைவாக, இயக்கத்தால் தரப்பட்ட தென்னம்பிள்ளையை அவளது வீட்டுக்காணியில் நட்டோம். நாங்கள் துயிலுமில்லத்துக்குச் சென்றுவந்ததை யாரிடமும் சொல்ல வேண்டாமென என்னை எச்சரித்தாள். எல்லோரையும் எல்லோரும் சந்தேகிக்கும் வாழ்க்கையில் பகிர்வதற்கு தருணங்கள் இல்லாமலிருந்தன. எல்லாவற்றிலும் பயங்கரம் தனது கனத்த மிதிகளால் அழுத்திக்கொண்டிருந்தது. இரண்டு நாள்களுக்குள் இயக்கத்துக்கு ஆதரவாளர்களாக இருந்த சிலரின் வீடுகள்மீது கைக்குண்டுகள் வீசப்பட்டன. மாவீரர்களின் பெற்றோர்களை துயிலுமில்லம் அழைத்துச் சென்ற மன்னன் அண்ணாவின் வீடு கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. சமாதானத்தின் சடலம் ராணுவ முகாம்களில் புதைக்கப்பட்டது.

பூட்டம்மாவின் சாமியறைக்குள் எவரும் நுழைய முடியாது. குங்குமக்கடல்போலச் சிவந்திருக்கும் அறையினுள்ளே கொடுவாளும் சூலமும் ஏந்தியாடும் காளியின் பெரிய புகைப்படம் இருக்கும். உக்கிரம் உறைந்த நீர்வண்ண ஓவியம்போலிருக்கும் சாமியறைக்குள்ளிருந்து பூட்டம்மா எழுப்பும் பறவைகளின் குரல்களைக் கேட்கவே பயமாயிருக்கும். அம்மா, திறந்திருக்கும் கதவு வழியே பூட்டம்மாவைப் பார்த்துக் கும்பிடுவாள். செய்வினையால் பீடிக்கப்பட்டு துன்பம் விரிந்திறங்கியவர்களை காளியின் கொடுவாளாலும் சூலத்தாலும் பூட்டம்மா குணப்படுத்துவாள். அவளுக்கு முன்னே யாவும் அடக்கம். தணல் அவியும் சின முகத்தோடு பறவைகளின் குரல் எழுப்பியபடி அவள் ஓய்ந்துபோகும் தருணத்தில், அறையின் கதவுகள் தானாக மூடிக்கொள்ளும்.

எல்லோரும் அவளது அறையை நோக்கி வணங்கிவிட்டுச் செல்வார்கள். பூட்டம்மா தேன் பருகிய ஜொலிப்போடு அறையிலிருந்து வெளியேறுவாள். அம்மா “பன்னிச்சைத் தாயே...” எனக் கும்பிடுவாள். அம்மா யாழ்ப்பாணத்துக்கு வந்துபோகும் நாள்களில் மட்டுமே பன்னிச்சையடி கிராமம் பற்றி பூட்டம்மா வாய்திறப்பாள். சொந்தவூரின் ஏக்கம் விளையும் அவளது குரலில் வலி நீந்தும். அவளது நெஞ்சில் ஒரு பந்தம் எரியத் தொடங்கும். அப்போது பன்னிச்சையடி கிராமத்திலுள்ள உப்புக்காட்டின் மீது வெக்கை எழும்.

உப்புக்காட்டில் போராளிகளின் பாசறைகள் அமைந்திருந்தன. வேட்டைக்காரர்களுக்கு எல்லைகளை வகுத்திருந்தனர். நெடுவல் ராசன் போராளிகளின் சொல்லுக்கு மரியாதை கொடுத்து எல்லைமீறாமல் இருந்தார். பள்ளிக்கூட விடுமுறை நாள்களில் சொந்தக் கிராமத்துக்குச் செல்வதுண்டு. வாய்ப்பு கிடைத்தால் நெடுவல் ராசனோடு வேட்டைக்குப் போய்வருவேன். உப்புக்காட்டுக்கும் திருநீற்று வாய்க்காலுக்கும் இடையிலுள்ள பனங்கூடலுக்குள் ஏழு நடுகற்கள் இருப்பதாக நெடுவல் ராசன் அடிக்கடி சொல்லுவார்.

இரண்டு மார்புகளுக்கும் நடுவே மெழுகுபோல் மினுங்கும் பழைய காயத்தின் தழும்பைத் தடவிக்கொண்டு “உப்புக்காட்டு முனியை நேருக்கு நேராய்க் கண்டும் உயிரோட திரும்பிவந்த ஒரேயொரு வேட்டைக்காரன் நாந்தானே” என்பார். நெடுவல் ராசனோடு வேட்டைக்குப் போகத் தொடங்கிய நாள்களில், அவரை விநோதமாகவே பார்த்தேன். காட்டுக்குள் இறங்கியதும் கதைக்கவே மாட்டார். வேட்டைநாய்கள் சுவடு பிடித்தபடி ஓட, விரைவாக நடக்கத் தொடங்குவார். காட்டினில் நெடுவல் ராசன் உண்டாக்கும் வழித்தடங்கள் பின்னர் தன்னியல்பாகவே மறைந்துபோவதைக் கண்டிருக்கிறேன்.

ஆவேசங்கொண்ட வேல்முனைக் கண்களால் காட்டின் நடுவே நின்று, மூச்சை இழுத்துக் கண்களை மூடி இரையிருக்கும் திசை அறிவார். தன்னுடைய நாக்கை வெளியே தள்ளியபடி நாய்களுடன் நிற்கும் நெடுவல் ராசனை மூர்க்கம்கொண்ட தேவதை அழைத்துச் செல்வாள். உடும்புகளை வேட்டையாடிக் கொண்டு ஊருக்கு நடந்துவரும் வழியில் நிற்கும் பன்னிச்சை மரத்தின் முன்னால் வீழ்ந்து வணங்குவார். சிறிய வேட்டைக்கத்தியை எடுத்து, உடும்பின் கழுத்தை அறுத்து, அதற்குள்ளிருக்கும் நஞ்சுப்பையையும் துளிக் குருதியையும் பன்னிச்சை மரத்தின் வேர்களில் பிசுக்கிவிடுவார். பின்னர் எதுவும் கதையாமல் நடக்கத் தொடங்குவார். ஊருக்குள் வந்ததும் பொதுக்கிணற்றடியில் கால்களைக் கழுவிக்கொண்டு வீட்டுக்குப் போவோம்.

உப்புக்காட்டுக்குள் மட்டுமே நெடுவல் ராசன் ஆயிரக்கணக்கான உடும்புகளை வேட்டையாடியிருக்கிறார். அவரின் வீட்டு வேலி முழுக்க உடும்புத்தோல்கள் வெயிலில் காய்ந்து நாறிக்கொண்டிருக்கும். சிறுவர்கள் அந்தத் தோலை எடுத்து சிறிய மண்பானைகளின் வாயை மூடிக்கட்டி மேளம் இசைப்பார்கள்.

நெடுவல் ராசன் இன்றைக்கு இல்லை. அவரைச் சலரோகம் முறித்துப்போட்டது. உப்புக்காட்டுக்கும் திருநீற்று வாய்க்காலுக்கும் இடையிலுள்ள பனங்கூடலுக்குள்ளிருக்கும் நடுகற்களைக் கூட்டிச்சென்று காட்டுவதாகக் கூறிய நான்காவது நாள், மலை வேம்பொன்று முருங்கைக் கொப்பாய் உளுத்துப்போனது மாதிரி அவருயிர் விழுந்தது. சூறையின் சப்தம் உப்புக்காடெங்கும் கேட்கத் தொடங்கிற்று. அந்த நாள்களில் நோவு விழுந்த குழந்தையென பாஷையற்று விம்மித் துடித்தேன். அவரின் மறைவு ரணமாய் விழிவிரித்து கொழுந்து விட்டெரிந்தது. துயர் கடையும் மத்தைத் தனது கரங்கள் தேயத் தேய காலத்தின் ஒவ்வொரு நொடியும் அசைத்துக்கொண்டேயிருந்தது. நெடுவல் ராசன் உப்புக்காட்டை விட்டகல்வார் என்று நான் எண்ணியதில்லை. அவரை எரித்துமுடித்துக் காடாற்றிய நாளில் வேட்டைக்குச் சென்றேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 2

தனது பெருவாழ்வில் முதன்முறையாக வாதையருந்திய மெளனம், விழிப்புக்குலைந்த அதன் கண்கள், கிளைத்தெழுந்த புத்தம்புது தளிர்களிலும் துயரடர்ந்த குளிர்மை, ஒவ்வொரு இலையிலும் தவிப்பின் மெல்லிய காய்ச்சல் அசைய, எந்த வாசனையுமற்று உப்புக்காடு வெறித்திருந்தது. பாதைகள் அழிந்திருந்தன. வேட்டையினருள் அன்று பாலிக்க எண்ணவில்லை. வெறுங்கையுடன் வீடு திரும்புகையில் பன்னிச்சை மரத்தடியில் நின்றுகொண்டிருந்த கிழவியொருத்தி, மாயமாய் மறைந்துபோவதைக் கண்டேன். இரண்டு முயல்கள் விசுக்கென துள்ளிப் பாய்ந்தன. ஆன்மாவைப் பிழிவதைப்போல மழை பெய்யத் தொடங்கியது. கால்களைத் தீண்டிக்கொண்டோடும் வெள்ளத்தில் கொப்பளித்தது தகிப்பு. பன்னிச்சை மரத்தைக் கட்டியணைத்து அழுதேன். மூதாதையரின் கமழும் வாசத்தோடு என்மீது பூக்கள் சொரிந்தன. நிசப்தமும் தனிமையில் கரைந்தது. மரத்திலிருந்து குரல் கிளைத்து “மகனே கலங்காதே, இனிவரும் நாள்களில் உன் பாதங்களை நானே வழிநடத்துவேன்” என்றது. யாரிடமும் எதுவும் சொல்லாமல் இரண்டு நாள்கள் காய்ச்சலில் கிடந்தேன். மரத்தில் கிளைத்த குரல் புனல்போலச் சிந்திக்கொண்டேயிருந்தது.

நான் யாழ்ப்பாணத்துக்குச் செல்லத் தயாரானேன். அம்மா என்னைப் பேருந்தில் ஏற்றிவிட்டாள். ஏ-9 வீதியிலுள்ள இயக்கத்தின் முகமாலை சோதனைச்சாவடியில் பேருந்து நின்றது. அங்கு முடிவடைந்து ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் பேருந்து நுழைந்தது. மீண்டும் சோதனை. யுத்தக் கண்காணிப்புக் குழுவினரின் அலுவலகத்தில் இருந்த வெள்ளைக்காரரொருவர் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார். நான் வீட்டுக்கு வந்தடைந்த நேரத்தில் அக்காவைக் காணவில்லை. வழமையாகத் திறப்புவைக்கும் கிணற்று வாளியைப் பார்த்தேன், அதில் திறப்பில்லை. நேராக பூட்டம்மாவின் வீட்டுக்குச் சென்றேன். அங்கேதான் அக்காவும் இருந்தாள். உப்புக்காட்டில் நேர்ந்ததைப் பூட்டம்மாவிடம் சொல்லத் தோன்றியது. இப்போது வேண்டாமென மனம் சொன்னது. அக்காவும் நானும் அங்கிருந்து வீட்டுக்கு வந்தடைந்தோம்.

இருளை ஊடுருவிப் பெய்துகொண்டிருந்தது மழை. நாய்கள் ஊளையிட்டு ராணுவத்தின் வாகனங்களை எதிர்த்தன. ஊரின் வைரவர் கோயிலுக்கு முன்பாகக் குழுமியிருந்த ராணுவத்தினர் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் இறங்கினர். குழந்தைகள் வீறிட்டு அழுதனர். நிலம் எந்தச் சலனமுமில்லாமல் இருந்தது. ராணுவம் சிலரை இழுத்துக்கொண்டு வீதியில் போட்டு வதைத்தது. இரவின் ஓலம் கொந்தளிக்க, மழை ஸ்தம்பித்தது. பயத்தின் கண்கள் மின்னலாய்த் திறந்தன. குருதியின் அபயம் கோரும் காற்று வீசிக்கொண்டிருந்தது. சனங்கள் பதகளிப்பில் தனித்திருந்தனர். ராணுவம் அங்கிருந்து சென்றதும் வதைபட்டவர்களைத் தூக்கிக்கொண்டு சனங்கள் வீடுகளுக்குள் ஓடினர்.

அடுத்தநாள் அதிகாலையில், முருகன் கோயிலின் கோபுரவாசலில் இரண்டு சடலங்களைத் தூக்கிவீசியது வெள்ளை வேன். கண்டிப்போன ரத்தக்காயங்களோடு கறுத்திருந்த சடலங்களில் உசாக்கால மணியோசை அதிர்ந்தது. ‘உதயசூரியன்’ வாசக சாலையிலிருந்து இழுத்துச்செல்லப்பட்ட இரண்டு அண்ணன்மாரும் சடலங்களாக அடையாளம் காணப்பட்டனர். இந்தப் பதற்றங்களுக்கு பதிலடியாக வீட்டுக்கருகில் இருந்த சிறிய ராணுவ முகாம்மீது தாக்குதல் நிகழ்ந்தது. கையெறி குண்டுகளாலும் கைத்துப்பாக்கியாலும் படையினர் கொல்லப்பட்டிருந்தனர். சுற்றுவட்டாரமே ராணுவத்தின் சுற்றிவளைப்புக்கு உள்ளானது. வீட்டின் மின்குமிழ்களை அணைத்துவிட்டு சிறிய விளக்கை வீட்டினுள் ஏற்றிவைத்தாள் அக்கா. முடிக்குள் பதுங்கும் பேன்களைப்போல அறைக்குள் மறைந்து இருந்தோம்.

வீட்டின் முன்கதவை உதைத்துத் தள்ளும் சத்தம் கேட்கத் தொடங்கியது!

(நீளும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism