அலசல்
Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! -21

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
News
கடவுள்... பிசாசு... நிலம்

நான் கொஞ்ச நேரம் அசந்து நித்திரையானேன். நாகப்பர் வீட்டுக்கு வெளியே இருக்கும் மாமரத்தின் கீழே படுத்துக்கொண்டார்.

அம்மாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. உடுக்கு விஷயத்தில் அவளுக்குக் கொஞ்சம் பயமாகிவிட்டது. பன்னிச்சைத்தாய் உடுக்கு தந்ததாகச் சொன்னதுதான் பிசகிவிட்டது. `இனிமேல் நீ உப்புக் காட்டுக்குள்ள போகக் கூடாது’ என்று அம்மா சொல்லிவிடுவாளோ என்று அஞ்சினேன். மன பயம் விழுதெறிந்து நிம்மதியை முறித்தது. நாகப்பர் என்னைத் தன்னோடு அழைத்துச் சென்றார். பிளாவில் கொஞ்சம் கள்ளை ஊற்றி, ``குடி’’ என்றார். சுட்ட கருவாட்டைத் தின்றேன். ``ஒரு மிடறு குடி’’ என்று பிளாவை எனது வாய்க்கருகில் கொண்டுவந்தார். கள்ளு நுரைத்துக்கொண்டிருந்தது. இரண்டு குளவிகள் மிதந்தபடியிருந்தன. அவரிடமிருந்து பிளாவை வாங்கி இரண்டு மிடறுகள் பருகினேன். புளிப்புச்சுவை உடலெங்கும் பாவியது. மீண்டும் ஒரு கருவாட்டை எடுத்துக் கடித்தேன். நாகப்பர் மூன்று பிளா கள்ளு குடித்துவிட்டு தன்னுடைய வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். எனக்குக் கொஞ்சம் கிறுதி வருமாற்போலிருந்தது. பூமிக்கும் கால்களுக்கும் இடையே நிறைய இடைவெளி தோன்றியது. சில வேளைகளில் தலைகீழாக என்னை நானே பார்த்துச் சிரிக்கவும் செய்தேன். நான் தள்ளாடுவதைப் போன்று தோன்றுகிறது. அதற்குள் நாகப்பரின் வீட்டுக்குள் வந்துவிட்டேன். நாகப்பர் என்னைக் கட்டியணைத்து கண்ணீர் சிந்தினார். எனக்குத் தெரியும் ரூபமெல்லாம் தெளிவற்று மாய்கிறது. நாகப்பர் உடுக்கை எடுத்துவந்து அடிக்கத் தொடங்கி பாடல் பாடுகின்றார். எனக்குள் களி பிறந்து ஆடத் தொடங்குகிறேன். உடுக்கின் ஒலியில் ஆதிப்பரவசமும் துடிப்பும் எங்களிடம் திரும்பின. நிலத்தின் கனிவும் நிறைவும் ஒரு வண்ணத்துப்பூச்சியாக எங்களுக்கு முன்னால் பறந்துகொண்டிருந்தன.

“ஆதீரா, இஞ்ச பார்... பேய் வண்ணாத்திப் பறக்குது, உன்ர தொம்மைக் குஞ்சாச்சிபோல கிடக்கு.”

“பறக்கிறது பேய் வண்ணாத்திதான், ஆனால் குஞ்சாச்சி எண்டு எப்பிடிச் சொல்லுறியள்?”

“இப்பதான் பறக்கப் பழகியிருக்கு, பார்த்தால் தெரியுமாடா. நாகப்பனுக்குத் தெய்வத்தையும் தெரியும், பேயையும் தெரியும். விளங்கிச்சோ?”

“ஓமோம்.”

நான் கொஞ்ச நேரம் அசந்து நித்திரையானேன். நாகப்பர் வீட்டுக்கு வெளியே இருக்கும் மாமரத்தின் கீழே படுத்துக்கொண்டார். விழித்துப் பார்த்தேன் என்னுடைய தலைமாட்டில் உடுக்கு இருந்தது. கள்ளு குடித்தது ஒத்துவரவில்லை. கண்கள் வீங்கியிருந்தன. அம்மாவுக்குத் தெரிந்தால் தோலையுரித்து காயப்போட்டுவிடுவாள். பொதுக் கிணற்றடிக்குப் போய் முகத்தைக் கழுவிக்கொண்டேன். களை தீர்ந்ததுபோல் உணர்ந்தேன். உடுக்கை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போனேன். புலிச்சீருடை அணிந்திருந்த அண்ணாவைப் பார்த்தேன். அவனை முதன்முறையாக இப்படிப் பார்த்ததும் அவனைக் கட்டியணைத்துக் கொஞ்சினேன்.

“என்னடா பாசம் பொங்கிக்கொண்டு வருகுது?”

“தெரியேல்ல, இயக்கச் சீருடையில இண்டைக்குத்தான் உங்களைப் பார்க்கிறன். அதுவாய்த்தானிருக்கும்.”

கடவுள்... பிசாசு... நிலம்! -21

நேற்றைக்கு நடந்த எல்லாவற்றையும் அண்ணா கேள்விப்பட்டிருக்கிறான். அம்மா ஒன்றுவிடாமல் சொல்லியிருப்பாள். நான் உடுக்கை கொண்டுபோய் என்னுடைய இடத்தில் வைத்தேன். அம்மா, அக்கா, அண்ணா, நானென எல்லோரும் ஒன்றாக அமர்ந்திருந்து சாப்பிட்டோம். ``இப்படிச் சாப்பிட்டு நிறைய நாள்கள் ஆகிவிட்டன’’ என்றாள் அக்கா.

“ஏனடா உப்புக் காட்டுக்குள்ள சும்மா சுத்தித் திரியிறாய்?” அண்ணா கேட்டான். எப்படி பதில் சொல்லுவதென தெரியாமல் “சும்மாதான்” என்றேன். “ஆர் உனக்கு உடுக்கு தந்தது?” அம்மா மீண்டும் கேட்டாள்.

“நாகப்பர்தான்.”

“அண்டைக்கு வேறை ஆரையோ சொன்னாய்!”

“பன்னிச்சைத்தாய் எண்டு சொன்னான். ஆனால் அது பொய்.”

அன்றைக்கு இரவு வரை அண்ணா வீட்டில் இருந்தான். யாழ்ப்பாணத்திலிருந்து வரச் சொல்லியிருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டேன். கதைத்துக்கொண்டிருந்தேன். நாளையிலிருந்து வேறொரு பயிற்சிக்காக முல்லைத்தீவு போகவிருப்பதாகச் சொன்னான்.

“எத்தனை நாளாகும்?”

“ரெண்டு மாசம் ஆயிடும்.”

“இனிமேல் உங்களை யாழ்ப்பாணத்துக்கு விடமாட்டினமே...”

“இந்தப் பயிற்சி முடிஞ்சதும்தான் தெரியும். இயக்கம் எடுக்கிற முடிவுதான்.”

“இப்ப சமாதான காலம்தானே... பயிற்சியெல்லாம் என்னத்துக்கு?”

“இப்ப சமாதான காலம்தான், பின்னால என்ன நடக்குமோ... அதுக்குத் தயாராக இருக்கவேணுமெல்லே?”

“இந்தச் சமாதானம் நீடிக்காதெண்டு இயக்கம் நினைக்குதா?”

“இது நீடிக்குமெண்டு ஆர்தான் நம்பினம். எல்லாரும் நீடிக்க வேணுமெண்டு விரும்புறம். ஆனால், அதுக்கு அரசாங்கம் ஒத்துழைக்காது.”

“இயக்கமும் சண்டையைத்தான் விரும்புதோ?”

“விரும்பேல்ல, ஆனால், அதுக்குத் தயாராக இருக்கு.”

“ஆனால், சண்டை வந்தால் பெரிய அழிவு நடந்திடும். இராக்கில சனத்தைப் போட்டுக் கொல்லுற மாதிரி எங்களையும் கொல்லுவாங்கள். அரசாங்கத்துக்கு உதவ ஆயிரம் ஆக்கள் இருக்கினம். நாங்கள் என்ன செய்யேலும்?”

“எங்களால போராட முடியும். உயிருள்ள வரைக்கும் போராடுவம். அமெரிக்க வந்தாலும் சரி, இஸ்ரேல் வந்தாலும் சரி... நாங்கள் போராடுவம்” அண்ணா உறுதியாக இதைத்தான் இரண்டு தடவை சொன்னான்.

இரவு பதினொரு மணியிருக்கும்... அண்ணா வீட்டிலிருந்து சென்றான். அம்மா அவனுக்கு உலர் உணவுகளைச் செய்து பொதி செய்திருந்தாள். எல்லாவற்றையும் எடுத்துச் செல்ல மறுத்துவிட்டான். அவனுக்குப் பிடித்த சீனி அரியதரத்தையும், முட்டை பிஸ்கட்டையும் கொண்டு சென்றான். அக்கா அவனை வழியனுப்பிவிட்டு வந்து சாமிப்படத் தட்டில் சுடர்விட்டுக்கொண்டிருந்த விளக்கின் திரியைக் கொஞ்சம் வெளியே இழுத்துவிட்டு வணங்கிக் கொண்டாள். அம்மா, வீட்டின் முற்றத்தில் விரிக்கப்பட்டிருந்த பாயில் படுக்க ஆயத்தமானாள். அக்காவிடம் கேட்டேன்.

“பயிற்சி முகாம் எப்பிடியிருக்கும்?”

“முந்தி பிந்தி நான் போயிருந்தால்தானே சொல்ல ஏலும், எனக்கு எப்பிடித் தெரியும்?”

“நாங்களெல்லாம் போய் பார்க்க ஏலாதோ?”

“பயிற்சி முகாம் இருக்கிற ஐந்து கிலோமீட்டருக்கு முன்னாலேயே ஆக்களை மறிச்சுப்போடுவினம்.”

“ஆனா, நான் பயிற்சி எடுக்கப்போனால் விடத்தானே வேணும்?”

“உன்ர வயசுக்குப் பயிற்சி வேற கேக்குதோ. ஒழுங்காய் இருந்து படிக்கிற வேலையைப் பாரும்.” அக்கா என்னுடைய கண்களை உற்றுப்பார்த்துச் சொன்னாள்.

காலை விடிந்தது. அம்மாவின் வானொலி பாடிக்கொண்டேயிருந்தது. அடுப்படிக்குள் அப்ப வாசனை கமழ்ந்தது. நாகப்பர் வந்து ஊர்ப்புறணி கதைத்துக்கொண்டிருந்தார். அக்கா அவருக்குத் தேத்தண்ணி கொடுத்தாள். நாகப்பர் அம்மாவிடம் சொன்னார்.

“நேற்றைக்கு உன்ர மோனுக்கு கள்ளு குடுத்தனான், வந்து சொன்னவனே?”

அவர் சொன்னது எனக்குக் கேட்டதும் அப்படியே பயத்தில் புரண்டு படுத்தேன். அக்கா நாகப்பரிடம் கேட்கிறாள்.

“நீங்கள் குடுத்ததும் வாங்கிக் குடிச்சவனோ?”

“முதலில் வேண்டாமெண்டு ஒரே அடம்பிடிப்பு, பிறகு பிளாவில ஊத்தி வாயில வெச்சிட்டன். ரெண்டு மிடறு குடிச்சவன்.”

``ஆதீரா...’’ என்று அக்கா உறுமுகிற சத்தம் கேட்டது. நான் படுக்கையிலிருந்து எழும்பவே இல்லை. கண்களை இறுக்க மூடிக்கொண்டு அப்படியே படுத்திருக்கிறேன். அக்கா மீண்டும் கூப்பிடும் சத்தம் கேட்கிறது. இனியும் எழும்பாமல் இருந்தால், படுக்கையில்வைத்தே தோலுரிக்க வாய்ப்பிருக்கிறது. எழும்பிப் போய் எதுவும் அறியாத ஒருவனைப்போல ‘`என்ன?’’ என்று கேட்டேன்.

“நேற்றைக்கு நீ கள்ளு குடிச்சனியே...”

“கள்ளோ, அதையேன் தொடப்போறன்...”

நாகப்பர் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். அக்கா அவரைக் காட்டிச் சொன்னாள்.

“நாகப்பர் சொல்லுறார், நீ பிளாவில கள்ளு குடிச்சனியாம்.”

“இவர் வாய் திறந்தால் பொய்தானே சொல்லுவார். இவற்ற கதையைக் கேட்டே விசாரணை செய்யிறாய்.”

கடவுள்... பிசாசு... நிலம்! -21

நாகப்பர் சிரித்துக்கொண்டு அக்காவிடம் சொன்னார்.

“நான் சும்மா சொன்னதும் நீ நம்பிட்டியே பிள்ளை, அவன் குடிப்பானே. என்னை நம்பின நீ அவனை நம்பேல்லேயே...”

நான் மெதுவாகக் கையில் பற்பொடியைக் கொட்டிக்கொண்டு கிணற்றடிக்கு நடக்கலானேன். அக்கா நாகப்பரை ஏசிக்கொண்டிருந்தாள்.

“முஸ்பாத்தி அடிக்கிறதுதான்... அதுக்காக இப்பிடியே வந்து சொல்லுவியள்?”

“சரி விடடி பிள்ளை. காலமை வெள்ளனவே ஏன் இப்பிடி கோபப்படுறாய்... இந்தக் கிழவன் சும்மா சொல்லிப்போட்டன்.”

அக்கா அடுப்படிக்குள் நுழைந்து இரண்டு சோடி அப்பத்தை எடுத்துவந்து நாகப்பருக்குக் கொடுக்கிறாள்.

நானும் நாகப்பரும் உப்புக்காட்டுக்குள் இறங்கும் நேரம், வெய்யில் நன்றாக ஏறியிருந்தது. பன்னிச்சை மரத்தடியில் உடுக்கை வைத்துவிட்டு வணங்கி எழுந்தோம். வேட்டை நாய்களை விசிலடித்து அழைத்தோம். “நெடுவல் ராசன் இருந்திருந்தால் இந்தக் காட்டுக்கே வாசமும் நிறமும் வேற. அவனை நோய் கொண்டுபோயிற்று.” நாகப்பர் கலங்கி வருந்தினார். நாங்கள் நாய்களை அழைத்துக்கொண்டு உப்புக்காட்டின் அடிவயிறு வரைக்கும் போகலாமெனத் தீர்மானித்தோம். ``தலையில் தொடங்கும் நமது பயணம் போய்ச்சேர அந்தி தாண்டி வந்துவிடும்’’ என நாகப்பர் சொன்னார். ``பரவாயில்லை பார்க்கலாம்’’ என்று நானே ஊக்கப்படுத்தினேன். திருநீற்று வாய்க்காலுக்குப் போனால் அந்த ஏழு நடுகற்களையும் தேடிப் பார்த்துவிடலாமென்று எனக்குள் தோன்றியது. நாகப்பரிடம் கேட்டேன்.

“உப்புக்காட்டைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?”

அவர் இரண்டு கைகளையும் விரித்துப் பிரட்டினார். உதடு வெளியே பிதுங்கிவந்தது. “உப்புக்காட்டைப் பற்றி முழுசாகத் தெரிஞ்சவன் ஒருத்தரும் இஞ்ச இல்லை. நெடுவல் ராசனுக்குத்தான் நிறைய கதைகள் தெரியும்”

“ஓம்... எனக்கும் நிறைய கதைகள் சொன்னவர். உங்களுக்கு அந்த ஏழு நடுகற்களைப் பற்றி எதாவது சொல்லியிருக்கிறாரோ?”

“எந்த ஏழு நடுகற்கள்?”

“அந்த ஏழு நடுகற்களை நீதான் கண்டுபிடிக்க வேண்டும் ஆதீரா...”

“நான் ஏன் கண்டுபிடிக்க வேண்டும்?”

“நீதான்ரா, பன்னிச்சைத்தாயோட பிள்ளை’’ என்று சொன்ன நாகப்பரின் கண்கள், ஒளி பொருந்திய பொன்வண்டுகளைப்போல என்னையே பார்த்திருந்தன!

(நீளும்...)