Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 30

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
News
கடவுள்... பிசாசு... நிலம்

அந்த முகாமிலிருந்து கிளைபிரியும் இரண்டு தென்னந்தோப்புக்குள்ளால் மாறி மாறி அழைத்துச் சென்று சிறிய காட்டுக்குள் நுழைந்தோம்

டிசம்பர் மாதம் இருபத்து நான்காம் திகதி, வெள்ளிக்கிழமை காலை ஏழு மணியிருக்கும். தணிகைமாறனின் முகாமுக்குள் நுழைந்தோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரையும் தென்னைமரங்கள் நிரம்பியிருந்தன. கொஞ்ச தூரத்தில் கடலின் சத்தம் கேட்கத் தொடங்கியது. தணிகைமாறன் தன்னுடைய பையில் கிடந்த புத்தகமொன்றை எடுத்துத் தந்தார். பிரமிள் என்பவர் மொழிபெயர்த்த ஆங்கிலக் கவிதைகளைத் தொகுத்து வைத்திருந்தார். அதிலுள்ள சில கவிதைகளை வாசித்தேன், விளங்கவில்லை. ‘`புதுவை இரத்தினதுரையின் கவிதைகளோ, காசி ஆனந்தனின் கவிதைகளோ எளிதில் வசமாகிவிடும்’ என்றேன். வாகனம் கடற்கரையை ஒட்டிய தென்னந்தோப்புக்குள் நுழைந்து நின்றது. அங்கு நிறைய போராளிகள் இருந்தனர். என்னை உள்ளே கூட்டிச் சென்று அமரவைத்தார். போராளிகளுள் ஒருவர் என்னைப் பார்த்துச் சிரித்து ‘உங்களுக்கு என்ன பெயர்?’ என்று கேட்டார். என்னுடைய பெயரைச் சொன்னதும், தன்னை, `குமணன்’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். கையொன்று இல்லாமல் இருந்தது. முகத்தில் ஒரு பகுதியில் பெரிய போர்க்காயத்தின் தழும்புகள் இருந்தன. இப்படியான போராளிகளைப் பார்க்கும்போது மனம் தத்தளித்து கரையேற முடியாமல் துயரச்சுழலில் சிக்கிவிடுகிறது. மீதியிருக்கும் அவரின் கையைப் பிடித்து முத்தமிட்டேன். ஈரப்பஞ்சுபோலிருந்த அவரின் அந்தக் கையைக் கொஞ்ச நேரம் பிடித்துக்கொண்டிருந்தேன். குமணன் என்னை விசித்திரமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

தணிகைமாறன் என்னை குமணனோடு சேர்த்து எங்கேயோ கூட்டிச் சென்றார். அந்த முகாமிலிருந்து கிளைபிரியும் இரண்டு தென்னந்தோப்புக்குள்ளால் மாறி மாறி அழைத்துச் சென்று சிறிய காட்டுக்குள் நுழைந்தோம். அங்கே மிகச் சொற்பமான போராளிகள் மட்டுமே இருந்தனர். ஒருவர் நல்ல கழுத்துவெட்டிச் சேவலைப் போட்டு உரித்துக்கொண்டிருந்தார். உள்ளே போனதும் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தவர் என்னைப் பார்த்ததும், “இவனா யாழ்ப்பாணத்தில தாக்குதல் நடத்தப்போறதெண்டு ஒற்றைக்காலில நிக்கிற ஆள்?” என்று கேட்டார்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 30

தணிகைமாறன் ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்து எதுவும் கதையாமல் நின்றுகொண்டிருந்தார். அவர் என்னை அமருமாறு சொன்னார். நான் கதிரையை இழுத்துப்போட்டு அமர்ந்தேன்.

“நீ சொன்ன எல்லாத்தையும் தணிகை எனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறான். உன்ர கோபத்தையும், போராட்ட குணத்தையும் பாதுகாப்பாய்வெச்சிரு. தேவைப்படும்போது அதை நாட்டுக்கு குடுக்க வேணும். விளங்குதா?”

அவரின் கண்களின் வழியே தீர்க்கமான சித்திரம் வனையப்பட்டிருப்பது தெரிந்தது. உரையாடுவதற்கு அவர் தயாராகவே இருந்தார். அவரின் உடல்மொழியில் ராணுவத்தன்மை இயல்பாயிருந்தது. நான் மூச்சை இழுத்து மெல்லவிட்டு, “என்னை நீங்கள் சின்னப்பெடியன் எண்டு நினைகிறியள், ஆனால் என்னால அவங்களைத் தாக்க முடியும்” என்றேன்.

“உன்னால தாக்க முடியும், ஆனால் அதுக்கு நாங்கள் பயிற்சி அளிக்க முடியாது. நீ நல்லாய்ப் படி. புத்தகங்களை வாசி. அதுவும் போராட்டம்தான். அதில வெல்லு. நாங்கள் இதைப் பார்க்கிறம். விளங்குதா?”

அவரின் இந்த பதில் எனக்குப் பிடிக்கவில்லை. ஏன் எல்லோரும் என்னை ஆயுதமேந்த வேண்டாம் என்கிறார்கள். தனக்கு நிகழும் அநீதிக்கு எதிராக ஒருவன் போராடுவதற்கு வயது தடைக்கல்லாகிறதே என்று மனதுக்குள் நொந்துகொண்டேன். அன்றைக்குக் காலையில் அங்கேயே சாப்பிட்டேன். கழுத்து வெட்டிச்சேவல் குழம்பு ருசியாக இருந்தது. வெறும் பச்சைமிளகாயும் நல்லெண்ணெயும் ஊற்றி சமைத்திருக்கிறார்கள். வேட்டைக்கறி. சமைத்தவர் என்னைவிட கொஞ்சம் பெரியவராக இருந்தார். சாப்பிட்டு முடிந்ததும் அவரிடம் சென்று “உங்களுக்கு எத்தின வயசு” என்று கேட்டேன். அவர் இருபது என்றார். பெரிய ஆள்தான். கொஞ்சம் குள்ளமாக இருந்ததால் அவ்வாறு எண்ணிக் கொண்டேன். அன்றைக்குப் பகல் முழுக்க முகாமிலேயே இருந்தேன். இரவு அக்காவின் பிறந்த நாள் விழா. பன்னிச்சையடி கிராமத்திலுள்ளவர்கள் அனைவரும் குழுமிவிடுவார்கள். போராளிகள் வருவார்கள். வீடே கொண்டாட்டமாக மாறிவிடும். அண்ணா சிலவேளைகளில் வரக்கூடுமென நினைக்கிறேன். நான் அங்கிருந்த புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சிங்கள நாளிதழ்கள்கூட இருந்தன.

குமணனிடம் “ஆருக்கு இஞ்ச சிங்களம் வாசிக்கத் தெரியும்?” என்று கேட்டேன்.

“பாண்டியன் அண்ணைக்கு வாசிக்கத் தெரியும்.”

“அவர் இரவு வேறொரு சந்திப்புக்காய்ப் போய்ட்டார். இப்ப வருவார்.”

“குமணன் அண்ணா, நீங்கள் உங்கட வீட்டுக்கு எப்ப போனியள்?”

“நான் மட்டக்களப்புத் தம்பி. போறதுக்கு எங்க நேரம்... இப்ப போய்வர சூழலும் சரியில்லை.”

“இண்டைக்கு இரவு நீங்கள் எங்கட வீட்ட வாங்கோ. என்ர அக்காவுக்குப் பிறந்தநாள்.”

“அப்பிடியே, முயற்சிக்கிறன். வர முடியுமோ தெரியேல்ல. பாண்டியன் அண்ணை இண்டைக்கு இரவு எங்கையோ போக வேண்டுமென்று சொன்னவர்.”

“எங்க போனாலும் ஒருக்கால் வந்து சாப்பிட்டு போங்கோ. நான் வேணுமெண்டால் தணிகைமாறன் அண்ணாவிட்ட சொல்லுறன்.”

“சரி பார்க்கலாம்.”

உள்ளே ஒரு வாகனம் வந்து நிற்கிறது. “பாண்டியன் அண்ணா வந்திட்டார்” என்று சொல்லுகிறார் குமணன். நான் பாண்டியனைப் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன். வாகனத்தைவிட்டுக் கீழிறங்கி பவி மாமா வேகமாக உள்ளே நடந்துவருகிறார். குமணனிடம் கேட்கிறேன்.

“இவரா பாண்டியன்?”

“ஓம் இவர்தான்” என்றார் குமணன்.

நான் மாமாவை நோக்கி நடந்துபோனேன். என்னைக் கண்டுவிட்டார். என்னுடைய கன்னத்தைக் கிள்ளி “என்னடா இஞ்ச வந்து நிக்கிறாய், என்ன விசேஷம்?” என்றார். ``தணிகைமாறன் அண்ணாவோட வந்தனான். சும்மா ஏத்திக்கொண்டு வந்தவர்.’’

“அப்ப நீ என்னைப் பார்க்க வரேல்லையோ?”

“நீங்கள் எங்க இருப்பியள் என்று ஆருக்குத்தான் தெரியும் மாமா, அம்மா சொல்லுறது மாதிரி உங்களைக் கண்டால்தான் நீங்கள் உயிரோட இருக்கிறதே தெரியுது” என்றேன்.

குமணன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். நான் பாண்டியனைத் தெரியாது என்று பொய் சொல்லிவிட்டேன் என அவர் கருதக்கூடும். பவி மாமா என்னைத் தூக்கி மடியில் இருத்தி ``சாப்பிட்டியோ?’’ என்று கேட்டார்.

“ஓம் நல்ல சைவச் சாப்பாடு.”

“நீங்கள் சாப்பிட்டியளோ, இண்டைக்கு வீட்ட வருவியள்தானே...”

“ஓமடா இரவுக்கு அங்கதான். கொம்மாவிட்ட சொல்லி மாமாவுக்கு மட்டும் இன்னும் ருசியாய் சமைக்கச் சொல்லு.”

“சொல்லுறன்... வரேக்க குமணன் அண்ணாவையும் கூட்டிக்கொண்டு வாங்கோ மாமா.”

“அவனும் என்னோட வாறான்.”

தணிகைமாறன் உள்ளே வந்தார். அவரின் கையில் நிறைய கோப்புகள் இருந்தன. அவர் என்னைப் பார்த்ததும் “என்னவாம் உங்கட பவி மாமா” என்று கேட்கிறார். நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.

“தணிகை, உன்னைக் கூட்டிக்கொண்டு வரப்போகிறன் எண்டு எனக்குச் சொன்னவன். நான் இஞ்சதான் இருக்கிறனெண்டு உனக்குச் சொல்லேல்லையா?”

“இல்லை.”

“நீதான் ஏதோ போராடப்போகிறன், பயிற்சி தாங்கோ எண்டு கேட்டனியாமே?”

“ஓம்... மாமா. கோபம் கோபமாய் வருகுது.”

“நீ ஒண்டும் செய்ய வேண்டாம். அமைதியாய் இருந்து படி. அதெல்லாம் வளர்ந்த ஆக்கள் செய்து முடிப்பினம். சரியா?”

என்னுடைய தலையை அசைக்காமல் அப்படியே இருந்தேன். பவி மாமா உள்ளே எழுந்து சென்றார். தணிகைமாறன் என்னை அழைத்துப் போகலாமென்று சொன்னார். நான் மாமாவிடம் சொல்லிவிட்டு இந்த முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு நடந்து சென்று அங்குள்ள வாகனத்தில் ஏறினேன். நானும் இன்னொரு போராளியும் வாகனத்தில் பயணமானோம். மீண்டும் அதே தென்னந்தோப்புகளைக் கடந்து வாகனம் போய்க்கொண்டிருந்தது. அந்தப் போராளி கேட்டார்.

“நீ போராட ஆசைப்படுகிறியோ தம்பி?”

“ஓம் அண்ணை.”

“சரி உனக்கு நானொரு உதவி செய்யிறன். என்ர துவக்கைத் தந்து ஒருக்கால் சுட்டுக்காட்டுவன். நீ ஒரேயொரு தடவை சுட்டுப் பார்.”

கடவுள்... பிசாசு... நிலம்! - 30

துவக்கை ஏந்தப் போகிறேனா, இந்தக் கணத்தின் மீது நான் சந்தேகம் கொண்டேன். நடப்பது உண்மையா... எனது கனவா? மீண்டும் மீண்டும் அந்தப் போராளியைப் பார்த்தேன். அவர் வாகனத்தை நிறுத்திவிட்டு தன்னுடைய துவக்கை எடுத்து தென்னைமரத்தின் உச்சியைக் குறிவைத்தார். சத்தம் கேட்டது, இளநீர் குலை மண்ணில் விழுந்தது. அவர் எனக்குத் துவக்கை பிடிக்கும் முறையையும் சுடுவதையும் சொல்லித்தருகிறார். என்னுடைய விரல் அழுத்தப்படுகிறது. பேரிகையின் முதல் ஒலியென வெளியில் கலக்கிறது வேட்டோசை.

நான் வீட்டுக்கு வந்திருந்தபோது சொந்தக் காரர்கள் வந்திருந்தனர். அவர்களில் சிலரை அறவே பிடிப்பதில்லை. மணியனின் தந்தை கதிரைகளை அடுக்கிக்கொண்டிருந்தார். பெண்கள் சிலர் பலகாரங்களைப் பையில் போட்டுக்கொண்டிருந்தனர். அக்கா பெரிய தாச்சியில் போட்டு ஆட்டிறைச்சியைக் கழுவிக்கொண்டிருந்தாள். சில இறைச்சித்துண்டுகளில் ரத்தம் காய்ந்து கிடந்தது. நாகப்பர் சமைப்பதற்காக அடுப்பை ஏற்பாடு செய்திருந்தார். மிளாசி எரியும் விறகுகளை அடுக்கி கொஞ்சமாய் மண்ணெண்ணெய் ஊற்றி அடுப்பைப் பற்றவைத்தார். இறைச்சியை அக்கா நன்றாகக் கழுவி முடித்ததும், எழுந்து குளிக்கச் சென்றாள். சொந்தக்காரர்கள் அங்கங்கு இருந்தபடி கதைத்துக்கொண்டிருந்தனர். பீடி புகைப்பவர்கள், வெற்றிலையை அதக்கியபடி புகையை வெளியேவிட்டார்கள். அதிலிருந்து வருகிற வாசம் எனக்குப் பிடித்தமானது. நான் அம்பிகாவைத் தேடினேன்.

அவள் வெள்ளனவே வந்திருக்க வேண்டும். வேலையாகச் சென்றிருக்க வேண்டுமென எண்ணினேன். மெல்ல மெல்ல அந்தி விழுந்து இருட்டத் தொடங்கியிருந்தது. அக்கா புதிய சட்டையைப் போட்டுக்கொண்டு ஆயத்தமானாள். அவளுக்கு உதவியாக அம்பிகா நின்று கொண்டிருந்தாள். அவளை நான் பார்க்கிறேன் என்று தெரிந்த பின்னர், என்னுடைய கண்களைச் சந்திக்க விரும்பும் அவளது தவிப்பை உடலின் அசைவுகள் சொல்லிக்கொள்கின்றன. ஆனால் அவள் திரும்பிப் பார்க்காமல் நின்றுகொண்டிருந்தாள். நான் குளித்து முடித்துவிட்டு புதிய ஆடைகளை மாற்றினேன். அம்பிகாவுக்கும் அம்மா புதிய ஆடைகளை வாங்கிக்கொடுத்திருந்தாள். அவள் அணிந்திருந்த ஆடை இன்னும் கொஞ்சம் வடிவாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. மஞ்சள் நிறத்தில் வெள்ளைக் கோடுகள் அங்குமிங்கும் வரையப்பட்டிருந்தன. புகைப்படக் கலைஞர் வந்திருந்தார். அம்மா சமைத்து முடித்து உடம்பில் இரண்டு வாளி நீரள்ளி ஊற்றிக்கொண்டு ஆயத்தமானாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் கேக் வெட்டலாம் என எல்லோரும் சொல்லினர். ``அண்ணா வந்ததும் தொடங்கலாம்’’ என்று அம்மா சொன்னாள். அவன் வருவான் என்று அம்மாவுக்கு ஒரு நம்பிக்கை. போராளிகள் வந்துகொண்டிருந்தனர். வலம்புரியக்கா வந்திருந்தார். அக்காவை அழைத்து ஒரு பரிசைக் கொடுத்து, ``இந்தச் சட்டையையும் போட்டு படம் எடு’’ என்றார். பவி மாமா வந்திறங்கினார். உள்ளே நுழைந்ததும் அக்காவுக்கு வாழ்த்து சொன்னார். வீடே கொண்டாட்டக் களை பூத்திருந்தது. நாங்கள் அண்ணாவின் வருகைக்காகக் காத்திருந்தோம்.

(நீளும்...)