Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 31

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
News
கடவுள்... பிசாசு... நிலம்

நாங்களும் அப்படித்தான் நினைச்சனாங்கள். ஆனால் வரேல்ல” சொல்லிக்கொண்டே அம்பிகாவைப் பார்த்தேன். அவளின் முகத்தில் அமைதி குழம்பிக்கிடந்தது.

அண்ணாவின் வருகைக்காகக் காத்திருந்து அம்மா ஏமாற்றமடைந்தாள். பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்தவர்களை இனியும் காத்திருக்கவைக்க முடியாதென அம்மா முடிவெடுத்தாள். அக்கா கேக்கை வெட்டி அம்மாவுக்குத் தீத்திவிட்டாள். அம்மாவைக் கட்டியணைத்து அக்கா முத்தமிட்டபடி புகைப்படக்காரரின் சைகைக்காகக் காத்திருந்தாள். சொந்தக்காரர்களும் போராளிகளும் குழுமியிருந்தனர். கள் குடித்து மயக்கத்திலிருந்த சிலர், வீட்டின் மாமரத்தடியிலிருந்து கதைத்துக்கொண்டிருந்தனர். பவி மாமாவை அழைத்து அம்மா புகைப்படம் எடுத்துக்கொண்டார். அக்காவின் தலையைத் தடவி மாமா முத்தமிட்டார். வலம்புரியக்கா வாங்கி வந்த சட்டையை அணிந்துகொண்டு வந்த அக்காவோடு ஒரு தொகையினர் புகைப்படங்களை எடுத்தனர்.

சொந்தக்காரர்களில் சிலர், சாப்பிடுவதற்கு ஆயத்தமாயினர். நாகப்பர் அன்றைக்குச் சாப்பாட்டை கவனித்துக்கொண்டார். மணியனின் அப்பா அவருக்குத் துணையாக இருந்தார். பெரிய பாத்திரத்தில் நூடுல்ஸ் இருந்தது. இன்னொரு பாத்திரத்தில் குழல் புட்டு அடுக்கப்பட்டிருந்து. சாப்பாடு பரிமாறப்பட்டது. நாகப்பர் தன்னுடைய கண்காணிப்பின் கீழே சபையை நடத்தினார். `அளவறிந்து குழம்பு பரிமாறு’ எனக் குரல் கொடுத்தார். அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தேன். இசைத்தென்றல் தேவாவின் பாடல்கள் ஒலித்தவண்ணமிருந்தன. ‘குலுக்கி வெச்ச கோக கோலா போல...’ என்ற பாடல் தொடங்கும்போதே சின்னஞ்சிறுவர்கள் ஆடத்தொடங்கினர். புழுதி மண் இரவைப் போர்த்தியது. மின்குமிழ்களின் வெளிச்சத்தில் ஆட்டமும் பாட்டமும் உச்சம் பெற்றன. இரண்டு மின்விளக்குகளை வீட்டின் முன்னால் கட்டியிருந்தனர். மண்ணெண்ணெயும் பெட்ரோலும் கலந்து ஓடிக்கொண்டிருந்த சிறிய இயந்திரம், முக்கி முனகி வெளிச்சத்தைத் தந்துகொண்டிருந்தது. அம்பிகா, போராளி அக்காக்களோடு அமர்ந்திருந்தாள். சிலர் சாப்பிட்டு முடித்து, அம்மாவிடம் சொல்லிவிட்டுச் சென்றனர். பவி மாமாவோடு வந்திருந்த குமணன் அண்ணாவோடு கொஞ்ச நேரம் இருந்து கதைத்தேன். ‘‘நீங்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு எங்கட வீட்டில வந்து தங்குங்கோ’’ என்றேன். குமணன் ஓமென்று தலையசைத்தார்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 31

வீதியில் போராளிகளின் நிறைய வாகனங்கள் நின்றன. சர்வதேசத் தொண்டு நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக வேலை செய்யும் ஒருவர் வந்திருந்தார். அண்ணாவின் நெருங்கிய நண்பர் அவர். அம்மா அவரை இன்முகம் கொண்டு வரவேற்று அமரச் சொன்னாள். “அண்ணா வரவில்லையா?” என்று என்னிடம் கேட்டார். ‘இல்லை’யென்று சொன்னதும், “வருவானென்று நினைத்தேன்” என்றார்.

“நாங்களும் அப்படித்தான் நினைச்சனாங்கள். ஆனால் வரேல்ல” சொல்லிக்கொண்டே அம்பிகாவைப் பார்த்தேன். அவளின் முகத்தில் அமைதி குழம்பிக்கிடந்தது. ஆனால் இப்போது போய் கதைத்தால், எதுவும் சொல்ல மாட்டாள். பிடிவாதக்காரி. போராளிகள் பலர் அக்காவை மீண்டும் வாழ்த்திவிட்டுச் சென்றனர். வலம்புரியக்கா நீண்ட நேரம் அமர்ந்திருந்தாள். ஒவ்வொருவரையும் பார்த்துக்கொண்டிருந்தாள். காந்தியண்ணா இரவு ஒன்பது மணியிருக்கும்போது வந்தார். முல்லைத்தீவிலிருந்து வருவதற்குத் தாமதம் ஆகிவிட்டதென அக்காவிடம் சொன்னார். நாகப்பர் காந்தியண்ணாவுக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டுவந்து கொடுத்தார். அம்பிகா என்னை அருகில் அழைத்தாள்.

“ஒருக்கால் வீட்ட போய்ட்டு வர வேணும். என்னோட துணையா வாறியளா?”

“ஓம், நீங்கள் வெளிக்கிடும்போது சொல்லுங்கோ, வாறன்.”

“நான் ரெடி, போகலாம்.”

வீதியில் வாகனங்கள் நிறைந்திருந்தன. சில போராளிகள் வெளியே நின்றனர். அம்பிகா என்னுடைய கைகளைப் பிடித்துக்கொள்ள எத்தனித்தாள். ஒரு இளங்கன்றின் துள்ளலோடு அவளுடைய விரல்களைப் பற்றினேன்.

“இன்னும் கொஞ்சம் கெதியாய் நடக்கலாம் அம்பிகா, போய்ட்டு திரும்பி வரவேணும்.”

“ஓம், அக்காவுக்கு ஒரு சட்டை வாங்கினான், அதை எடுக்கத்தான் போறன்.”

“உனக்கு ஏன் இந்தத் தேவையில்லாத வேலை, அக்கா உன்னைத் திட்டுவாள்.”

“ஏன், நான் உடுப்புக் குடுத்தால் அக்கா போட மாட்டாவே?”

அம்பிகாவின் வீடிருக்கும் ஒழுங்கைக்குள்ளால் நடந்து போகிறோம். அவள் என்னுடைய கையைப் பிடித்து முத்தமிட்டாள். இந்த இரவின் சருமமெங்கும் அவளது வாசனையைப் பூசிக்கொண்டது. நான் அவளை இறுக அணைத்து முத்தமிட்டேன். யாரோ இருட்டில் நடந்துவருவது தெரிந்தது. அம்பிகாவும் நானும் சில அடிகள் இடைவெளிவிட்டு நடக்கத் தொடங்கினோம். இருட்டில் வந்தவர் எங்கள் இருவரையும் அடையாளம் கண்டுகொண்டார். நாங்கள் வீட்டுக்குப் போகிறோமென சொல்லிக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். அம்பிகாவின் வீடு பூட்டிக்கிடந்தது. மறைத்துவைத்திருந்த இடத்தில் திறப்பை எடுத்துக் கதவைத் திறந்தாள். நான் வெளியே நின்றுகொண்டிருந்தேன். வீட்டுக்குள் நுழைந்தவள், லாம்ப்பைத் திரி தீண்டினாள். உள்ளே வருமாறு என்னை அழைத்தாள். நான் வெளியே நின்றுகொண்டு, “பரிசை எடுத்துக்கொண்டு வாங்கோ” என்றேன்.

நானும் அம்பிகாவும் வீட்டுக்குத் திரும்பியபோது அண்ணா வந்திருந்தான். அம்மா அவனுக்கென எடுத்த புதிய உடுப்புகளை போடச் சொல்லியிருக்கிறாள். அண்ணா ஆயத்தமாகியதன் பின்னர் புகைப்படம் எடுப்பதற்காக என்னைத் தேடியிருக்கிறார்கள். நான் வந்ததும் “எங்கையடா போனீ” என அக்கா உறுத்துக் கேட்டாள்.

“அம்பிகாவோட போயிற்று வந்தனான், உங்களுக்கு அவா சட்டை வாங்கியிருக்கிறா.”

அக்கா எதுவும் சொல்லாமல் என்னை முறைத்துப் பார்த்தாள். புதிய ஆடைகளை அணிந்துகொண்டிருந்த அண்ணனோடு சேர்ந்து நாங்கள் குடும்பமாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். பவி மாமா அம்மாவுக்கு அருகில் நின்றுகொண்டார். வலம்புரியாக்கா மாமாவைப் பார்த்துப் பகிடியாகச் சொன்னாள்.

“மாஸ்டர்... உங்கட அக்கா பாசத்த நினைச்சால், எங்களுக்குக் கண்ணீர் வருதெல்லே.”

பவி மாமா கொடுப்புக்குள் சிரித்தார். அண்ணா வந்ததற்குப் பிறகு, அம்மாவின் மனத்தில் விழாக்கோலம் குடிபுகுந்தது. இரவு பதினொரு மணியளவில் தொப்பி குயிலன் வந்திருந்தார். அண்ணாவோடு கதைத்துக்கொண்டிருந்தார். நான், பாலன் பிறப்புக்குப் போகவேண்டுமென ஆயத்தமானேன்.

பன்னிச்சையடியிலிருந்து இருபது நிமிடங்கள் சைக்கிளில் போனால் தேவாலயம் வந்துவிடும். அங்குதான் போக வேண்டுமென தீர்மானித்திருந்தேன்.

தொப்பி குயிலன் தானும் தேவாலயம் வருவதாகக் கூறினார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. திரும்பி சாமத்தில் பயமில்லாமல் வீட்டுக்கு வந்துவிடலாம். தொப்பி குயிலன் என்னைத் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தேவாலயம் நோக்கிப் புறப்பட்டார்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 31

தேவாலயத்தின் முகப்பில் வண்ண விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. உள்ளே சனங்கள் நின்றுகொண்டிருந்தனர். பாதிரியார் உள்ளே பைபிள் வாசகங்களைக் கூறி உரையாற்றிக்கொண்டிருந்தார். பாலன் பிறப்புத் தொட்டில் வெளியே அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பாலன் வானத்தைப் பார்த்தபடி படுத்திருக்க, தொங்கும் நட்சத்திரங்கள் அசைகின்றன. தொப்பி குயிலன் என்னைக் கூட்டிக்கொண்டு உள்ளே போனார். தேவாலயத்துக்குள் இடமில்லை. சனங்கள் நிறைந்திருந்தனர். வெளியேயுள்ள கல்லிருக்கையில் அமர்ந்துகொண்டு காரம் சுண்டல் சாப்பிடுவோம் என்றார். காரம் சுண்டல் வண்டி அருகே போனோம். அப்போதுதான் அவரிடம் சொன்னேன்.

“இண்டைக்குக் காலமை தணிகைமாறன் அண்ணாவின்ர இடத்துக்குப் போனான்.”

“கடலில குளிக்கக் கூட்டிக்கொண்டு போனவனே?”

“இல்லை, எனக்கு நீச்சலும் தெரியாது” என்றேன்.

“தணிகையோட இருந்தால் கடலில நீச்சல் தெரியாமலே நீந்திப்போகலாம்.”

“எனக்குப் பயிற்சி தருவார் எண்டு நினைச்சன், ஆனால் நல்லாய் படி என்று சொல்லிவிட்டு அனுப்பிவைத்துவிட்டனர்.”

“உனக்கு இப்ப என்ன பயிற்சி வேணும்?”

“வேற என்ன? ஆயுதப் பயிற்சிதான். நேற்றைக்கு ஒருக்கால் துவக்கால சுட வாய்ப்பு கிடைச்சது.”

“துவக்கோ, உன்ர கையில ஆர் தந்தது?”

“சொல்ல மாட்டன்.”

“நீ இப்பிடி நடந்துகொள்ளக் கூடாது ஆதீரன். உனக்கு இந்தச் சின்ன வயசில ஆயுதத்தின் மேல இருக்கிற கவர்ச்சி இன்னும் கொஞ்சம் வளந்தால் இல்லாமல்கூடப் போகும். ஒரு துவக்கை ஏந்தி நீ சுடும்போது, அதில உனக்கொரு கிளர்ச்சி இருக்கும். அது இந்த வயசின்ர கோளாறு.”

‘‘நான் அப்பிடி நினைக்கேல்ல அண்ணா. கோலியாத்தைச் சிறுகல்லால் வீழ்த்திய தாவீது சிறுவனாகவே இருந்தான். அவனுக்கு நீங்கள் சொல்வதைப்போல போரிலோ ஆயுதத்திலோ, கவர்ச்சியோ கிளர்ச்சியோ இருக்கவில்லை. ‘நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடயத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய ராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்’ என்று கூறி, ஒரு கல்லை எடுத்து, கவணிலேவைத்துச் சுழற்றி, கோலியாத்தின் நெற்றியிலே பட எறிந்தான். அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்துபோனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான் என்று படிக்கும்போதே தாவீதுவின் கவணும் கல்லும் என்னிடமில்லையே என்று தோன்றுவது வயசுக் கோளாறா? என்னை நீங்கள் மிகக் குறைவாக எடைபோடுகிறீர்கள். எனக்குத் தேவை ராணுவத் தந்திரமே தவிர உங்கள் ஆயுதமில்லை’’ என்றேன்.

தொப்பி குயிலன் என்னை அள்ளி அணைத்து முத்தமிட்டுச் சொன்னார்.

“ஆதீரா, உன்னைப்போல இவ்வளவு தெளிவாய் கதைக்கிற ஒரு சின்னப்பெடியனை நான் சந்தித்ததே கிடையாது. உன்னுடைய தேவை என்னவோ அதை நான் தீர்த்துவைக்கிறன். நீ கவலைப்படாதே. ஆனால், கொஞ்சநாள் என்னோடையே இருக்கவேணும்.”

“எத்தின நாள்?”

“ஒரு மாசம்.”

‘‘ஓம் நான் வாறன்.’’

தேவாலயத்தில் மணி ஒலித்தது. ‘பாலன் பிறந்தார்’ என்று நற்செய்தி சொல்லப்பட்டது.

(நீளும்...)