Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 32

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடவுள்... பிசாசு... நிலம்!

கறுப்பு நிறத்திலான கடல் அலைகளால் கொண்டுசெல்லப்பட்டவர் களை நினைத்து அழுதுகொண்டே இருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் கொஞ்சம் தாமதமாகவே எழும்பினேன். பிறந்தநாள் கொண்டாடிய களைப்பில் எல்லோரும் இருந்து கதைத்துக் கொண்டிருந்தனர். ஒரேயடியாக மதியம் சாப்பிட்டுவிட்டு இன்றைக்குப் பின்நேரமே தொப்பிக் குயிலன் அண்ணாவிட்ட போகப்போறதை அம்மாவிடம் சொல்லலாமென்று நினைத்தேன். சைக்கிளில் வந்திறங்கிய மணியனின் தந்தையார், “ஊருக்குள்ள கடல் வருகுதாம்” என்று பதற்றத்துடன் சொன்னார். “அதெப்பிடி கடல் வரும், உங்களுக்கு என்ன விசரே” என்று யாரோ பதில் சொல்லினர். “ஒரு பனையளவுக்கு கடல் எழும்பிவந்ததாமென்று கதை பரவுது, நான் என்ன பொய்யா சொல்லுவன்” என்று மீண்டும் சொன்னார். பிரதான சாலையிலிருந்து வருகிறவர்கள் ஒருவிதப் பதற்றத்தோடு ஊருக்குள் நுழைந்தனர். நான் வீதியில் நின்றுகொண்டு வருவோர் போவோரிடம் கேட்டேன். யாருக்கும் தெளிவாக எதுவும் சொல்லத் தெரியவில்லை என்றே தோன்றியது. சைக்கிளை எடுத்துக்கொண்டு பிரதான வீதிக்கு விரைந்தேன். அம்மா, ‘கவனம்!’ என்று மட்டும் சொல்லியனுப்பினாள். பன்னிச்சையடியிலிருந்து ஏ-9 பிரதான வீதிக்கு வந்தபோது, ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஒலி தூரத்தே கேட்கத் தொடங்கிற்று. போராளிகளின் பச்சை நிறத்திலான விரைவூர்திகள் அதிவேகமாகக் கடந்தன.

கடவுள்... பிசாசு... நிலம்! - 32

“தாளையடி, மருதங்கேணி பக்கமெல்லாம் சனங்களை கடல் கொண்டுபோயிற்றுதாம்” என்று ஒருவர் சொல்லிக்கொண்டே தனது வீடிருக்கும் திசை நோக்கி விரைந்தார். நான் சைக்கிளை விடாமல் உழக்கிக்கொண்டு சந்தையடிக்கு வந்தேன். அங்கே சைக்கிளை தரித்துவிட்டு வீதியில் நின்றேன். அத்திசை நோக்கிப் போகும் போராளிகளின் வாகனத்தில் ஏறிப்போகலாமென்று கைகாட்டி மறித்தேன். இதோ காயப்பட்ட சனங்களின் அழுகுரலோடு வாகனம் என்னைக் கடந்துபோகிறது. அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படலாம். நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் மருத்துவமனைக்குச் சென்றேன். உடலில் காயப்பட்டவர்கள், அதிர்ச்சியிலிருந்து மீள முடியாது கண்களை வெறித்துப் பார்ப்பவர்கள், அப்போதே இறந்துபோனவர்கள் எனச் சிறிய மருத்துவமனை விழிபிதுங்கி மூச்சுத் திணறியது. காயப்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்குவதற்காக மருத்துவப் போராளிகளும் இணைந்தனர். சனங்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் வந்துகொண்டிருந்தன. மருத்துவமனை வளாகத்தில் நிழல் பரப்பி நிற்கும் மாமரங்களின் ஒவ்வொரு இலையிலும் ஓலத்தின் எதிரொலி திகைப்போடு மோதியது.

காயப்பட்ட சனங்களின் அழுகுரல்கள் யேசுவை நோக்கி எழுந்தன. கறுப்பு நிறத்திலான கடல் அலைகளால் கொண்டுசெல்லப்பட்டவர் களை நினைத்து அழுதுகொண்டே இருந்தனர். நீலக்கடலின் அலைகள் கறு நிறத்தில் திரண்டெழுந்து தங்களை பலி கேட்டுவிட்டதென ஒப்பாரி பாடினார்கள். அலைகளின் மீதேறி கரையெங்கும் மீன் குவித்த தங்கள் வாழ்வின்மீது யார் கண்பட்டதோ எனக் கதறிக் கொண்டிருந்தனர். காயப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு வந்த போராளிகளின் வாகனமொன்றில் கடற்கரை கிராமத்துக்குச் சென்றேன். பனைகள் முறிந்துகிடந்தன. வீடுகள் இருந்தமைக்கான தடயங்களாக சனங்களின் ஆடைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சுருண்டுகிடந்தன. பிணக்காடு. எந்தக் காயமுமற்ற குழந்தையின் சடலமொன்றைக் குப்புறக் கிடந்த மீன்பிடிப் படகின் இடுக்கிலிருந்து தூக்கினேன். இது அனர்த்தமா? இல்லை. ஊழி. ஆழியின் ஊழி. எத்தனை யுத்தங்களையும் இடப்பெயர்வுகளையும் தாண்டி வாழ்ந்துகொண்டிருந்த உயிர்களை இந்தக் கடல் கொன்றுபோட்டிருக்கிறது! வலைகளில் சிக்குண்ட மீன்களைப்போல, கண்ணுக்குத் தெரியாத நீரின் கண்ணிகளில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத்திருந்தோம். பல பிரிவுகளைச் சேர்ந்த போராளிகளும் காவல்துறையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அன்றைக்கு முழுக்கவே இறந்துபோன பிணங்களை அடுக்கிக் கொண்டேயிருந்தோம். கண்டெடுக்கப்பட்ட சனங்களின் நகைகளைக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். போராளிகள் பசி, தாகம் எதுவுமின்றி வேலை செய்துகொண்டே இருந்தனர். “தலைவற்ற கட்டளை, சனங்களின்ர துயரக் களத்தில போராளிகள்தான் துயர் களையவேணும். அது இன ஒடுக்குமுறையாய் இருக்கலாம், இயற்கை அனர்த்தமாய் இருக்கலாம்” என்றார் ஒரு போராளி.

அன்றைக்கு இரவு நான் வீட்டுக்குப் போகவில்லை. பாதிக்கப்பட்ட சனங்களுக்கான நிவாரண முகாமாக இருந்த பள்ளிக்கூடத்திலேயே தங்கினேன். இரவிரவாகப் போராளிகளோடு இணைந்திருந்தேன். அவர்களோடு பணிகளில் ஈடுபட்டேன். பாதிக்கப்பட்ட சனங்களுக்கான உடனடித் தேவைகளைத் தீர்த்துவைக்கும் குழுவில் நியமிக்கப்பட்டேன். ஒரு பெண், அவளுடைய தலையில் பலமாக அடிபட்டிருந்தது. நத்தார் பெருவிழாவைக் கொண்டாடிவிட்டு அப்படியே உறங்கியிருக்கிறாள். அவளுடைய தமையனை அலைகள் சுருட்டிச் செல்வதைப் பார்த்து பயந்திருந்தாள். திடீரென குரல் எழுப்பி “ஐயோ அண்ணா, உன்னைக் கடல் கொண்டுபோக, நான் கரையில தனிச்சனே” என்று அழத் தொடங்கினாள். அவளுடைய தலையில் கட்டுப்போடப்பட்டிருந்தது. உயிர்தப்பிய ஒவ்வொரு குழந்தையும் நேற்றைக்குப் பிறந்த இயேசு பாலனைப்போலவே எனக்குத் தோன்றினர். சனங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கொடுத்துதவ போராளிகள் விழித்திருந்தனர். பெண் போராளிகளின் தலைமைப் பொறுப்பாளர் ஒருவர் அங்கேயே தங்கியிருந்தார். இந்த நாளின் துயரம் பல அடுக்குகளில் எங்களை பாதிக்கப்போகிறதே என்று மனதுக்குள் அச்சம் தோன்றியது. கடலை ஒட்டியிருந்த போராளிகளையும் கடல் கொண்டுபோய்விட்டதென சனங்களுக்குள் ஒரு கதை உருவாகியிருந்தது. ‘அது உண்மையா, பொய்யா’ என்று அறிய வழிகள் இல்லை. அன்றைக்கிரவு வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை அம்மா சனங்களுக்குக் கொடுத்தாள். “நான் இங்கேயே தங்கி நிற்கிறேன் அம்மா” என்று சொன்னதும், “ஓம் நிண்டு சனங்களுக்கு உதவி செய்” என்றாள். நான் விடிய விடிய அழுகுரல்களோடு இருந்தேன். ஆறுதல் சொல்ல வார்த்தைகளற்ற அந்த இரவில், வானில் நிலவு மறைந்திருந்தது.

அடுத்தநாள் அதிகாலையில் அங்கிருந்து கொண்டுவரப்பட்ட பிணங்களை வேறொரு இடத்தில அடுக்கிவைத்தோம். ஒவ்வொரு பிணத்தையும் பொலித்தீன் பைகளால் பொதி செய்தோம். அவற்றை அடுக்கி இறுதி அஞ்சலிக்காக ஒழுங்குபடுத்தினோம். பிணங்கள் அனைத்தும் கறுத்து வீங்கிப்போயிருந்தன. இன்றும் புதைக்காவிட்டால் சீழ்வடியத் தொடங்குமென்று கதைத்துக்கொண்டோம். சிலரின் உடல்கள் கிடைக்கவேயில்லை. ஒவ்வொருவரும் பிணங்களை அடையாளம் கண்டனர். இன்னும் பலரோ தங்களது உறவினரின் சடலம்கூடக் கிடைக்கவில்லையென தாளாத துயரோடு கதறியழுதனர். மதிய நேரம் நிகழ்ந்த இறுதி அஞ்சலி நிகழ்வோடு சடலங்களை ஓர் உழவூர்தியில் அடுக்கினோம். ஊரின் புறத்தே இருக்கும் முந்திரிக்காட்டைத் தாண்டியிருக்கும் ஒரு குளத்தருகே புதைப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது. நீளமும் அகலமும் சரியாக அளவிடப்பட்டு ஜே.சி.பி இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட குழியில் பிணங்களை அடுக்கினோம். பொலித்தீன் பையை நீக்கி ஒவ்வொன்றாக அடுக்குவதற்கே நேரம் போய்க்கொண்டிருந்தது. கடல் நிகழ்த்திய மாபெரும் கொலைவெறி ஆட்டத்தில் உயிரிழந்த அந்த உயிர்களுக்கு நான் அஞ்சலி செலுத்தினேன். குளத்திலிருந்து ஒரு தாமரை மலரைப் பிடுங்கிவந்து புதைகுழிக்குள் நட்டுவைத்தேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 32

அப்படியே வீட்டுக்குப் போனேன். நன்றாக அள்ளி முழுகினேன். ஒவ்வொரு தடவையும் நீரையள்ளி தலையில் ஊற்றுகிறபோது கடல் என்னைச் சுழற்றுவதைப்போல பயம் பிறந்தது. இறந்த மனிதர்களின் உடலத்தைத் தொடுகிறபோது ஏற்படுகிற கலக்கமும் வெதும்பலும் எதனால் வருகிறது. இந்தக் கடல் மணலில் மூச்சற்றுக் கிடக்கும் ஒவ்வொருவரின் கண்களும் ஏன் திறந்திருக்கின்றன. அவர்களின் கண்கள் நீச்சலிடும் மீனைப்போல எனக்கு மட்டுமா தெரிகின்றன? சாப்பிட்டுவிட்டு நன்றாக நித்திரை கொள்ள வேண்டும். மனதுக்குள் கடல் புரள்கிறது. பிணங்கள் நாறுகின்றன. ‘ஆழிப்பேரலை’ எனும் இந்தச் சொல்லைப் புலிகளின் குரல் வானொலி சொல்லிக்கொண்டே இருந்தது. ‘சனங்களைக் கொன்ற ஆழிப்பேரலை’ என்று சொன்னால் என்ன? நவாலி தேவாலயத்தின்மீது போர் விமானங்கள் நிகழ்த்திய தாக்குதலில் கொல்லப்பட்ட சனங்களின் புகைப்படங்கள் நினைவுக்கு வருகின்றன. ஒரு பக்கம் மிலேச்சர்கள் கொல்கிறார்கள். இன்னொரு பக்கம் இயற்கை கொல்கிறது. இன்னும் நம்மைக் கொல்ல காத்திருப்போர் யாரோ அறியேன்!

குளித்து முடித்துவிட்டுச் சாப்பிட்டேன். கண்களை மூடினால் நித்திரை வரவில்லை. கடல் வருகிறது. கைகளில் குழந்தையைத் தூக்கிவைத்திருக்கும் மாதாவின் சுருவம் கண்களுக்குள் உயர்கிறது. கடவுளோ பிசாசோ காக்க முடியாத நிலமா இந்நிலம்? அம்மாவைக் கட்டியணைத்துக்கொண்டு படுத்தேன். அம்மா கேட்டாள் “என்னடா பயமாய் இருக்கோ?”

“பயமில்லை, ஆனால் நித்திரைகொள்ள முடியவில்லை.”

“திருநீறப் பூசிக்கொண்டு ஒண்டையும் யோசியாமல் படு.”

“ஒருநாளும் கடல் தங்களை இப்பிடிக் கொன்றுபோடுமெண்டு அவையள் நினைச்சிருக்க மாட்டினமெல்லே.”

“ஓம், இப்பிடி அழிவு காலம் எங்கட தலையில வந்து விழுமென்று ஆர்தான் நினைச்சது?”

“இயக்கத்துக்கும் பெரிய இழப்பு வந்திருக்கெண்டு கதைக்கினம், அப்படியே அம்மா?”

“இனிமேல் இவங்கள் சொன்னால்தானே அது தெரியும்.”

“தலைவருக்கும் ஏதோ பிரச்னை எண்டு சந்தையடியில ஒரு கதை ஓடிக்கொண்டிருக்கு.”

“என்னவாம்?”

“அவர் இருந்ததும் கடலை ஒட்டித்தானாம்.”

“கதைக்கிறவன் போய் பார்த்தவனாமே, இவங்களுக்கு வாயில புழுத்தான் வைக்கப்போகுது”

அம்மா கோபங்கொண்டு திட்டினாள். தலைவருக்கு ஏதாவது நடந்துவிட்டதென கதைத்தாலே காளியாகிவிடுவாள். நான் கொஞ்சநேரம் கதையாமல் அப்படியே இருந்தேன். அப்போதுதான் எனக்கு தணிகைமாறன் அண்ணாவின்ர முகாம் ஞாபகத்துக்கு வந்தது.

அந்தக் கடலின் சத்தம் எனது காதில் ஒலிக்கத் தொடங்கியது. நான் அம்மாவிடம் சொன்னேன், ‘‘தணிகைமாறன் அண்ணாக்களுக்கு பிரச்னையில்லையா?’’

அம்மா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். எனக்கு பயமாக இருந்தது!

(நீளும்...)