Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 34

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
News
கடவுள்... பிசாசு... நிலம்

கிரிக்கெட் விளையாடிவிட்டு காந்தியண்ணாவின் வீடிருக்கும் வீதியால் நடந்து வந்தேன். அல்லியக்கா உயிரோடிருக்கும் வரை மலர்ந்து கிடந்த வீடு, இன்றைக்கு இருள் அறைந்து கிடந்தது.

பள்ளிக்கூடத்தின் மாணவ முதல்வரான தவா அண்ணாவை ராணுவத்தினர் தாக்கிய விவகாரம், யாழ்ப்பாணத்தின் கொதிநிலையை இன்னும் அதிகரித்தது. ஆனால் பள்ளிக்கூட அதிபர் ராணுவத்திடமோ, அரச அதிகாரிகளிடமோ சென்று முறையிட விரும்பவேயில்லை. நடக்கும் அநியாயங்களைக் கைகட்டி, வாய் பொத்திப் பார்த்து நிற்கும் நேர்மையான அரச உத்தியோகத்தராகத் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். மாணவர்கள் மத்தியில் கசப்பும் கோபமும் மேலெழுந்தன. அடுத்தடுத்த நாள்களில் உயர்தர மாணவர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கிளிநொச்சி சென்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்ட செய்தியை அறிய முடிந்தது. பள்ளிக்கூடம் எப்போதும் தணியாத பதற்றத்தோடு இயங்கிக்கொண்டிருந்தது. அக்கா வழமைபோலப் பள்ளிக்கூடம் போக வேண்டாமெனத் தடுத்தாள். எனக்கும் அதுவே சரியெனப்பட்டது. பகல் முழுக்க மருதனோடு கதைத்துக்கொண்டிருப்பேன். பின்நேரத்தில் கிரிக்கெட் விளையாடப்போவதும் வழக்கமான கருமங்களாக ஆகியிருந்தன. நடுவீதியில் சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் அரசோடு சேர்ந்து இயங்கிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்களென தெரியவந்தது. ‘எல்லாளன் படை’ என்ற பெயரில் வெளியான துண்டுப்பிரசுரத்தில் கொல்லப்பட்டவர்கள் `தேசத்துரோகிகள்’ என அடையாளமிடப்பட்டிருந்தது.

கிரிக்கெட் விளையாடிவிட்டு காந்தியண்ணாவின் வீடிருக்கும் வீதியால் நடந்து வந்தேன். அல்லியக்கா உயிரோடிருக்கும் வரை மலர்ந்து கிடந்த வீடு, இன்றைக்கு இருள் அறைந்து கிடந்தது. யாருமற்ற வீட்டின் நிலைத்த மெளனத்தின் முன்னால் உறைந்துகிடக்கும் வெறுமையைச் சந்திக்க முடியாதிருந்தது. வீட்டினுள்ளே ஒலித்துக்கொண்டிருக்கும் ஓலம் என் செவிகளை அடைத்தன. நிரந்தரமாக அடைக்கப்பட்ட வீட்டுக் கதவில், ஒரு வரலாற்றுக் காலத்தின் துயரம் தூசிப்படலமாக ஏறியிருந்தது. `அல்லியக்கா...’ என்று மட்டும் ஒரு குரல் கொடுத்தால், அவள் வந்து திறப்பதை நினைத்துப் பார்த்தேன். மண்ணின் விடுதலைக்காக எத்தனையெத்தனை உயிர்களை பலியிடுகிறோமே, நம் வாழ்வின்மீது படர்ந்திருக்கும் இந்தக் கொடியில் பூத்திருப்பவையெல்லாம் சாவின் பூக்களோவென எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். நடந்துவந்த திசையில் நான்கைந்து பேர் நின்று கதைத்துக்கொண்டிருந்தனர். அவர்களை அடையாளம் கண்டதும் நடையில் வேகத்தைக் கூட்டினேன். ஆனாலும், சிறியவனான என்னைப் பெயர் சொல்லி அழைத்தார்கள். நான் கேட்காததைப்போல நடந்து முன்னேறிக்கொண்டிருந்தேன். அவர்கள் யாரென்று எனக்குத் தெரியும். அவர்களிடம் கதைப்பதற்கோ பரிமாறுவதற்கோ என்னிடம் ஒரு வார்த்தையுமில்லை. கடைந்தெடுத்த காவாலிகள். குடியும் குழப்பமும் அவர்கள் பணி. நான் விறுவிறுவென அவர்களின் பார்வையிலிருந்து விலக எத்தனித்தேன். ஒருவர் என்னை “டேய் வேசை மோனே, நில்லடா” என்றார். நிற்காமல் நடந்தேன். பிறகொருவர் என்னைக் கல்கொண்டு தாக்கினார். நான் எதையும் பொருட்படுத்தாமல் சென்றுவிட வேண்டுமெனக் கருதினேன். ஆனால் அவர்கள் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. நான் அவர்களை நோக்கித் திரும்பி நடந்தேன். என்னையொருவர் “வாடா வம்பில பிறந்த நாயே” என்றார். அவர்களைத் தாக்குவதென முடிவெடுத்தேன். நிலத்தில் கிடந்த கற்களைப் பொறுக்கிக்கொண்டு அவர்களுக்குப் பக்கத்தில் போனேன். உந்துருளிகளின் கண்ணாடியைக் கற்களால் எறிந்து நொறுக்கினேன். என்னை ‘வேசை மோனே’ என்றழைத்த பத்தினியின் மகனை முகத்தில் அறைந்தேன். அவர்களுக்கு என்னுடைய அதிரடித் தாக்குதல் திகைப்பிலிருந்து மீள சற்றுநேரம் தேவைப்பட்டது.

கடவுள்... பிசாசு... நிலம்! - 34

“உங்கள மாதிரி குடிச்சுப்போட்டு ஆர்மிக்கும் ரௌடிகளுக்கும் கூட்டிக்கொடுத்துக்கொண்டு திரியிற சுரணைகெட்ட ஆக்களெண்டு நினைச்சியளோ, என்னெட்ட உங்கட சேட்டையைக் காட்டாதேங்கோ. சொல்லிப்போட்டன்.”

நான் விறுவிறுவென நடக்கத் தொடங்கினேன். இப்படி அவர்களை அடித்தும் பேசியும்விட்டு வருவதை என்னாலும் நம்ப முடியாதிருந்தது. ஆனால் அந்த மூவர் மீதும் எனக்கு நிறைய நாள்களாகவே கோபமிருந்தது. எப்போதும் போராட்டத்துக்கு எதிராகவே இயங்குகிறவர்கள். அரச வேலை கிடைக்க வேண்டுமென அரச ஆதரவு இயக்கங்களோடு நட்பைப் பேணுகிறவர்கள். அக்கா ஒருமுறை கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்புகையில், வீதி முடக்கில் நின்று “வன்னிக்குள்ளயும் வெள்ளையாய் பிள்ளையள் பிறந்திருக்குதுகள் மச்சான்” என்று நக்கலடித்தார்களாம். நான் வீட்டுக்குப் போனதும் நடந்தவற்றை ஒன்றுவிடாமல் சொன்னேன். அக்கா கேட்டாள்.

“ஏனடா அவங்களோட போய் முண்டினி. அவங்கள் சோலி பிடிச்ச ஆக்கள்.”

“இந்தப் பிசாசுகளுக்கெல்லாம் பயப்பிடக் கூடாதக்கா.”

“தம்பி, அவங்கள் நல்லவங்கள் கிடையாது. ஆனால், உன்ன அவங்கள் ஏதாவது செய்துபோடுவாங்கள். நீ இனி கொஞ்ச நாளைக்கு வெளியால போகாத.”

மருதன் சிரித்துக்கொண்டே “இது நல்ல கதையாயெல்லா இருக்கு. அவங்களுக்கு பயந்து வெளியால போகாமல் இருக்கிறதா... தம்பி நீ போடா... என்ன நடக்குதெண்டு பாப்பம்” என்றார்.

அக்கா தலையில் அடித்துக்கொண்டாள். இரவு நீண்டநேரமாக மூவரும் கதைத்துக் கொண்டிருந்தோம்.

“நாளைக்கு நீங்கள் என்னோட ஓரிடத்துக்கு வரவேணும், உங்களால ஏலுமே ஆதீரா?”

“ஓம் நான் வாறன்.”

“எங்க கூட்டிக்கொண்டு போகப்போறியள்? அவனை உங்கட வேலைக்கொண்டும் பயன்படுத்த வேண்டாம்.” அக்கா மிகவேகமாகச் சொல்லி முடித்தாள்.

“எங்கட வேலைக்கு ஏன் அவனைப் பயன்படுத்தப் போறம், அப்பிடி ஆரையாவது பயன்படுத்தி இருக்கிறமா?” மருதன் திருப்பிக் கேட்டதும், அக்காவிடம் பதில் இல்லாமல் போயிற்று. அவள் எதுவும் கதையாமல் இருந்தாள்.

“நாளைக்கு நானும் தம்பியும் நெல்லியடி வரைக்கும் போய்ட்டு வாறம்.”

“நெல்லியடியோ, அது சரியான தூரம் வேற.”

அக்கா மீண்டும் முட்டுக்கட்டை போட்டாள். ஆனால், மருதன் என்னை அழைத்துச் செல்வதில் உறுதியாக இருந்தார். எனக்கும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என மனதுக்குள் ஆசை பொங்கியது.

“உங்கட தம்பிக்கு நான் பொறுப்பு, நீங்கள் கவலைப்படாதேங்கோ.” மருதன் சொன்னதும் அக்கா ஓமென்று தலையசைத்தாள்.

“அனுமதி கிடைச்சிட்டுது. நாளைக்குப் போகேக்க அம்மனுக்கு நன்றி சொல்லி ஒரு கற்பூரம் கொளுத்த வேணும்’’ என்றேன்.

மருதனும் அக்காவும் சேர்ந்து சிரித்தனர். ``உனக்கு இவையளோட சுத்தித் திரிஞ்சு நக்கல் கதை கூடிட்டுது’’ என்று அக்கா செல்லமாகச் சொன்னாள்.

நானும் மருதன் அண்ணாவும் அதிகாலையிலேயே வந்திருந்த ஓட்டோவில் பயணத்தைத் தொடங்கினோம். அவரிடமிருந்த சின்னக் கைப்பேசிக்கு அழைப்புகள் வந்த வண்ணமிருந்தன. அவர் அடுக்கடுக்காக பதில்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். எல்லாம் அவர்களின் சங்கேத மொழிகளிலேயே நிகழ்ந்தன.

கடவுள்... பிசாசு... நிலம்! - 34

“ஓமோம்... எங்கட சதாம் ஹுசைனோட கிணத்தடியில மரம் நிக்குது” என்று பதில் சொன்னார். கேட்டதுதான் தாமதம் திகைப்பும் சிரிப்பும் வந்தன. இந்த உரையாடல்களை எவராலும் கண்டுபிடிக்க முடியாது. எல்லாவற்றுக்கும் பேசுபவர்களிடமே அகராதி இருந்தது. நாங்கள் வந்திறங்க வேண்டிய இடத்தை அடைவதற்குச் சரியாக இரண்டு மணித்தியாலங்கள் பிடித்தன. அங்கேயுள்ள சிறிய வீட்டுக்குள் மருதன் என்னை அழைத்துச் சென்றார். உள்ளே புகைபிடித்துக்கொண்டிருந்த வயோதிகரொருவர் என்னைப் பார்த்ததும் புன்னகை மலர்த்தினார். மருதன் சொன்னார் “இவருக்குப் பேர் பழம். முல்லைத்தீவுக்காரர். இப்ப இஞ்சதான் இருக்கிறார்.’’

``இஞ்ச இருந்து என்ன செய்யிறார்?’’

“நானோ ஐஸ்பழம் விக்கிறன். அங்க பார் ஐஸ் பெட்டி தெரியுதா?” என்று கையைக் காட்டினார். வீட்டின் மூலையில் அந்தப் பெட்டி துணியால் மூடிக் கிடந்தது. எதிர்மூலையில் சைக்கிள் ஒன்று நின்றது.

“ஏன் இண்டைக்கு வேலைக்குப் போகேல்லையே?”

“இல்லை, நீங்கள் வருகிறதாகச் சொல்லியிருந்தியள். அதுதான்...”

“வன்னிக்கு போறதோ அல்லது இஞ்சையே தஞ்சமோ?”

“எங்கையப்பு, நேரம் கிடைக்குதில்லை. ஓடி ஓடி உழைக்கணும்... ஊருக்கெல்லாம் குடுக்கணும் எண்டு பாட்டுப் பாடியே வளந்த ஆக்கள் நாங்கள், ஓடிக்கொண்டே இருக்கிறம்.”

மருதன் என்னைச் சாப்பிட அழைத்தார். நான் குசினிக்குள் நுழைந்ததும் நெத்திலிக் கருவாடும், கத்திரிக்காயும் போட்டுச் செய்த தீயல் வாசனை மூக்கை நிரப்பியது.

“பழம் அய்யா உங்கட சமையல் வாசம் ஆளையெல்லே தூக்குது...”

“என்னையும் ஆர்மிக்காரன் தூக்கிக்கொண்டு போய் கொஞ்ச நாளைக்கு முதல்தான் விட்டவன்” என்று சொன்ன பழத்தைத் திரும்பிப் பார்த்தேன். இயல்பு குலையாமல் அடுத்த பீடியைப் புகைக்கத் தொடங்கியிருந்தார்.

“ஆர்மி தூக்கிக்கொண்டு போனவனோ?”

எனது அதிர்ச்சியை அவர் பொருட்படுத்தவில்லை.

மருதன் சாப்பிட்டு முடித்ததும் என்னைக் கூட்டிக்கொண்டு தபால் நிலைய வீதியால் நடந்து போனார். அங்குள்ள வீட்டுக்குள் நுழைந்து யாரையோ பெயர் சொல்லி அழைத்தார். கிருபன் என்பவர் கதவைத் திறந்து என்னையும் மருதனையும் பார்த்து ``உள்ளே வாங்கோ’’ என்றார். வெறுமையான வீடு. தைல வாசனை நிரம்பியிருந்தது. கிருபன் தன்னுடைய அறைக்குச் சென்று அமர்ந்துகொண்டார். மருதன் இன்னோர் அறையைத் திறந்து என்னை அமரச் செய்தார். அலமாரியைத் திறந்து தன்னுடைய உடுப்புகளைப் பையில் எடுத்துவைத்தார்.

“இஞ்சதான் நீங்கள் இருக்கிறியளா?”

“இஞ்சையும்தான்.”

“பின்ன என்னத்துக்கு இந்த உடுப்புகளை எடுக்கிறியள்?”

“இனி வேற இடத்தில தங்கச் சொல்லியிருக்கினம்.”

``எங்கே?’’

“தெரியேல்ல.”

“எங்கட வீடோ?”

“ஏன் தொடர்ச்சியாய் இருக்க விடமாட்டியளே...”

“இல்லை... நீங்கள்தான் அப்பிடி ஒரே இடத்திலேயே தொடர்ச்சியாய் இருக்க மாட்டியள்” என்றேன்.

“சரியாய் சொன்னாய்” என்ற மருதன், தன்னுடைய கைத்துப்பாக்கியை இன்னொரு பையின் அடியில் வைத்தார். அதற்கு மேல் மிச்சமிருந்த உடுப்புகளை அடைந்தார்.

“இப்படியே கொண்டுபோகப் போறமா?” கேட்டேன்.

மருதன் தலையாட்டிக்கொண்டு சொன்னார். “எல்லாம் பழம் கொண்டுவந்து தருவார். நாங்கள் உடுப்பை மட்டும் எடுத்துக்கொண்டு போவம்” என்றார்.

“பழம் எப்பிடிக் கொண்டாந்து தருவார்?”

``அது பழத்தோட வேலை, அதைச் சரியாய் செய்வார். நாளைக்கு பாரும் எங்கட வீட்டில வந்து நிப்பார்.’’

எனக்கு பழம் புகைத்துக்கொண்டிருப்பது ஞாபகத்துக்கு வந்தது.

“அவர் இயக்கமே?” என்று கேட்டேன்.

“இருக்கக்கூடும்” என்றார் மருதன்.

பழம் இந்தக் கைத்துப்பாக்கியை நாளை எப்படி எடுத்துவருவார் என்பதே எனக்கு யோசனையாக இருந்தது.

(நீளும்...)