Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 39

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
News
கடவுள்... பிசாசு... நிலம்

எத்தினை பிள்ளையளத்தான் இந்தப் பாழ்படுவாருக்குச் சாகக் குடுப்பமோ” என்று சலித்துக்கொண்டாள்.

அக்கா எப்போதோ வீட்டுக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தவள், எங்கே போனாள் என்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றேன். “அவா வருவா, நீங்கள் முழுகுங்கோ” என்றார் மருதன். நான் அக்காவைத் தேடிக்கொண்டு வீதிக்கு ஓடினேன். கபிலனின் வீடுவரை சென்றேன். வீதியிலும் சரி, கபிலனின் வீட்டிலும் சரி அக்காவைக் காணவில்லை. பூட்டம்மா வீட்டுக்குப் போக வாய்ப்பில்லை. செத்த வீட்டுக்குப் போனால் யாருடைய வீட்டுக்கும் போகாமல், வீட்டுக்கு வந்துவிடுவாள். மீண்டும் வீட்டுக்கு நடந்தேன். நான் போகும்போது அவள் வீட்டுக்கு வந்திருக்க வேண்டுமென வேண்டிக்கொண்டேன். ஆனால், அக்கா அப்போதும் வந்திருக்கவில்லை. அவசர அவசரமாக முழுகிவிட்டு பூட்டம்மா வீட்டுக்குப் போகலாமென்று ஆயத்தமானேன். அப்போதுதான் அக்காவின் குரல் கேட்டது. மருதன் சிரித்துக்கொண்டு “தம்பி, உங்களைத் தேடிப் பார்த்து களைச்சு, உதயன் பேப்பருக்கு செய்தி குடுக்கவெல்லாம் ஆயத்தமாகிட்டான்” என்றார். “வர்ற வழியில, பாலு பெரியப்பாவை பார்த்திட்டன், அவர் கதைக்கத் தொடங்கினால் தெரியும்தானே, நிப்பாட்ட மாட்டார். அதுதான் பிந்திப் போச்சு” என்றாள் அக்கா. அக்காவைக் காணவில்லையென்றதும் மனதுக்குள் எழுந்த பயம் எதனால் என்றெல்லாம் தெரியாது... ஆனால் கடுமையாக பயந்துவிட்டேன். நான் பூட்டம்மாவைப் பார்க்கப் போனேன். அக்கா வெள்ளென வரச்சொல்லி அனுப்பிவைத்தாள்.

பின்நேரம் முகத்தைக் கழுவிக்கொண்டு, திருநீற்றைப் பூசிவிட்டு கதிரையில் அமர்ந்திருந்தாள். அவளின் முகத்தில் நிரந்தரப் பிரகாசம் சுடர் விட்டுக்கொண்டே இருந்தது. என்னைக் கண்டதும் அருகில் அழைத்து “கபிலன் கொம்பனியோ” என்று மெதுவாகக் கேட்டாள். ``எங்கட காந்தியண்ணா மாதிரி ஆதரவாளர்போல’’ என்றேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 39

“எத்தினை பிள்ளையளத்தான் இந்தப் பாழ்படுவாருக்குச் சாகக் குடுப்பமோ” என்று சலித்துக்கொண்டாள். பூட்டம்மாவுக்கு பன்னிச்சையடி கிராமத்துக்குச் செல்லவேண்டுமென ஆசையாக இருக்கிறதென்றாள். ``என்ன திடீர் சொந்தவூர் பாசம்?’’ என்று பகிடியாகப் கேட்டேன். அவள் எதுவும் கதையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். கொஞ்சம் கலங்கிப்போயிருக்க வேண்டும்.

“என்ன, கடுமையாய் யோசிக்கிறியள்?” கேட்டேன்.

அவள் எதுவுமில்லையெனத் தலையை மட்டும் ஆட்டினாள். கண்களிலிருந்து கண்ணீர் பிரிந்தது. பூட்டம்மா இப்படி உறைந்துபோய் அழுவதில்லை. அவளிடம் நிறைய ஏக்கமும் துயரமும் பொங்கிக்கொண்டிருந்தன. நான் வீட்டுக்குத் திரும்பினேன்.

அடுத்தநாள் உதய காலப்பூசை முடிந்ததும் கோயிலிலிருந்து வெளிக்கிட்ட நான் பள்ளிக்கூட முடக்கைத் தாண்டி நடந்து போய்க்கொண்டிருந்தேன். ஏகாம்பரம் வாத்தியாரின் வீட்டுக்கு முன்னால் சனங்கள் கூடி நின்றனர். அவர்களுக்கு நடுநாயகமாக கிராம சேவையாளர் பாஸ்கரதாஸ் நின்றுகொண்டிருந்தார். நான் அந்தக் கூட்டத்துக்குள் நுழைந்து என்ன பிரச்னையென அறிய முற்பட்டேன். ஏகாம்பரம் வாத்தியாரைப் பார்த்தேன். பழங்கால வேலைப்பாடுகள்கொண்ட கதிரையொன்றில் சோர்ந்து போய் அமர்ந்திருந்தார். அவருடைய மனைவியின் முகத்தில் எந்த அசைவுமில்லாமல் எதிரே நின்ற எல்லோரையும் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். தேமா மரத்தின் கீழே இறந்து கிடக்கும் நாயின் உடலை யாரோ உரப் பைகொண்டு மூடியிருந்தனர். “அறுபது பவுன் நகையும், ரெண்டு லட்சம் காசுமெல்லே... சும்மா விடேலுமே தாஸ், நீங்கள் உங்கட பக்கத்தால எனக்குக் கொஞ்சம் உதவி செய்யவேணும்” என்ற ஏகாம்பரம் வாத்தியாரின் கோரிக்கைக்கு பாஸ்கரதாஸ் ஓமென்று தலையசைத்தார். பொலீஸ் வந்து வீட்டைச் சுற்றிப் பார்த்து, திருடர்களின் தடயங்களைச் சேகரித்தனர். இறந்துகிடந்த நாய் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாகக் காவல்துறை கூறியது. காவல்துறையையே அபயமென நம்பிக்கொண்டு வீட்டுக்கு வெளியே வந்த தன் மனைவியை “நீர் உள்ள போயிரும் லதா” என்றார் ஏகாம்பரம் வாத்தி. கூடியிருந்த சிலர் அங்கிருந்து வெளிக்கிடவும் “ஊருக்குள்ள களவுகள் கூடிப்போச்சு, கவனமாய் இருக்கவேணும்” என்ற சமாதான நீதிவான் மகாலிங்கத்தின் உந்துருளியில் தொற்றிக்கொண்டு வீடு நோக்கி வந்தேன்.

யாழ்ப்பாணத்திலுள்ள கிராமங்கள் சிலவற்றில் களவுகளில் ஈடுபடுகிறவர்களை, லேசில் யாராலும் கண்டுபிடித்துவிட முடியாது. அவர்களின் தடயங்கள் எதுவும் மிஞ்சாது. நேர்த்தியும் ஒழுங்கும் கொண்டவர்கள் இந்தக் கள்வர்கள். ஏகாம்பரம் வாத்தியாரின் வீட்டுக்குள் புகுந்தவர்களின் தடயங்கள் சில விடுபட்டுப் போயிருந்தன. அவற்றில் முக்கியமானவை கைக்கடிகாரமும், அறுந்துபோன செருப்பும். ஆனால், இந்தக் களவைக் கண்டுபிடிக்குமளவுக்கு அந்தத் தடயங்கள் உதவுமா என்பது சந்தேகம்தான். ஊருக்குள் ஒரு களவு நடந்தால் அது ஒரு தொடர்கதையாக நிகழும். மருதன் அண்ணாவுக்கும் அக்காவுக்கும் நடந்திருப்பதைச் சொன்னேன்.

“ஏகாம்பர வாத்தியாரோட நப்பிக் குணம் தெரிஞ்சவன் ஆரோதான் வீட்டுக்குள்ள இறங்கி களவெடுத்து இருக்கவேணும்” என்றாள் அக்கா.

“அந்தாள் பாவம். உடைஞ்சுபோய் இருந்ததைப் பார்த்தால் சாப்பிடக்கூட மனம் வரேல்ல” என்றேன்.

“சரி இண்டைக்கு சாப்பிடாத தம்பி, ஏகாம்பரத்துக்காக விரதமிரு” என்றார் மருதன்.

அக்கா பால்புட்டு செய்திருந்தாள். நான் உள்ளே போய் சட்டியோடு சாப்பிடத் தொடங்கினேன். காகம் ஒன்று வீட்டு வாசலில் நின்று கரையத் தொடங்கியது. மருதன் காகத்தை துரத்திவிட்டு “ஏற்கெனவே விருந்தினராய் நான் இருக்கிறேன்... ஓராளே காணும் போ” என்றார்.

“நீங்கள் என்ன விருந்தினரோ?” நான் சாப்பிட்டபடி கேட்டேன்.

“ஓம், அப்பிடித்தானே!”

அக்கா தலையை உதறிக்கொண்டு நின்றாள். நேற்றைக்கு கபிலனின் வீட்டிலிருந்து கைத்துப்பாக்கியை எடுத்து வந்தது குறித்து அக்காவிடம் சொல்ல வேண்டாமென மருதன் சொன்னார். நான் ஓமென்று தலையாட்டிவிட்டு சொன்னேன்.

“அது இயக்க ரகசியம், நான் எப்பிடிச் சொல்லுவேன்?”

“அது இயக்க ரகசியம்தான். ஆனால், தம்பி நீங்கள் இயக்கமில்லை.”

“நான் என்னை இயக்கமெண்டு இப்ப சொன்னனா?”

“இல்லை.”

“பின்ன ஏன் அப்பிடிச் சொன்னியள்?”

கடவுள்... பிசாசு... நிலம்! - 39

“நீ அப்பிடி நினைச்சிடக் கூடாதெண்டுதான்.”

நான் சாப்பிட்டு முடித்து கையைக் கழுவிக்கொண்டு கபிலன் அண்ணாவின் வீட்டுக்குச் சென்றேன். “துடக்கு வீட்டில சாப்பிடாதே, மத்தியானம்போல வந்திடு” என்றாள் அக்கா. கபிலனின் வீட்டுக்குப் போகிற வழியில் இருக்கிற பூதவராயர் கோயில் பூட்டிக் கிடந்தது. அவரின் மறைவையொட்டி மூன்று நாள்களுக்குக் கோயிலில் பூசை இல்லையென அறிவிக்கப்பட்டது. வீட்டின் முன்னாலுள்ள பந்தலில் கபிலனின் நண்பர்கள் அமர்ந்திருந்தனர். இரண்டு ராணுவத்தினர் உந்துருளியில் வந்து கபிலனின் வீட்டுக்குள் நுழைகின்றனர். அப்போதுதான் நானும் நுழைகிறேன். நண்பர்கள் என்னவென்று ராணுவத்தினரிடம் கேட்க, ``கபிலனின் அம்மாவை வரச்சொல்லுங்கள்’’ எனக் கூப்பிடுகிறார்கள். கபிலனின் அம்மா வெளியே வந்ததும், அவளுக்கு ஆறுதல் சொல்கின்றனர். அவள் அடிவயிற்றில் எரியும் நெருப்பால் இவர்களைப் பொசுக்கிவிட்டால் என்னவென்று தோன்றுகிறது. அவர்கள் அங்கிருந்து உடனடியாக வெளிக்கிட்டனர். கூடியிருந்த சொந்தக்காரர்கள் சிலர் ராணுவத்தினரைத் திட்டித் தீர்த்தனர். கபிலனின் அம்மா நாங்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்து, ``பிள்ளையள் நிறைய சாப்பாடு கிடக்குது, சாப்பிடுங்கோ’’ என்றாள். நாங்கள் ஓமென்று தலையாட்டினோம்.

அக்கா சொன்னதைப்போல மதியம் அங்கிருந்து வெளிக்கிட்டு வீட்டுக்கு வந்தேன். அம்மாவின் குரல் கேட்டது. `எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு அடைக்கல மாதா யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறா’ என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். மருதனிடம் சொன்னேன்.

“பார்த்தியளா, காலையில காகம் கரைஞ்சது. இந்த விருந்தினருக்குத்தான்.”

“அதுசரி, இவா யாழ்ப்பாணத்துக்கு விருந்தினர்தான்” மருதன் பதிலுக்குச் சொன்னார்.

அம்மாவைக் கட்டியணைத்துக்கொண்டு சொன்னேன். “இஞ்ச இருந்து படிக்க எனக்கு பிடிக்கேல்ல அம்மா. நான் வன்னிக்கு வரப் போறன். பூட்டம்மாவும் அங்க வந்து இருக்க ஆசைப்படுகிறா.”

அம்மா எனது தலையைத் தடவியபடி “சரி யோசிக்கலாம்” என்றாள். அக்கா என்னை எரிக்கும் கண்களால் பார்த்துக்கொண்டிருந்தாள். “நீங்கள் இஞ்ச வந்தால் அவனுக்குச் செல்லம் கூடிப்போகுது” அக்கா அம்மாவிடம் முறையிட்டாள். ஆனால், நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். யாழ்ப்பாணத்தின் பதற்றச் சூழல் எனக்குப் பிடிக்கவில்லை. நாளும் பொழுதும் அஞ்சி வாழும் வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆக வேண்டுமென்று அவசியமில்லை.

அன்றைக்கு மாலையில் நானும் அம்மாவும் பூட்டம்மாவின் வீட்டுக்குப் போனோம். அக்கா இரவுணவு சமைத்துக்கொண்டிருந்தாள். மருதன் தன்னுடைய வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். அவருக்கு என்ன வேலையென்று நினைப்பேன். பிறகு அவர் எதையாவது எழுதிக்கொண்டோ, வாசித்துக்கொண்டோ இருப்பார். பூட்டம்மா, அம்மாவைப் பார்த்ததும் “எப்பையடி வந்தனி?” என்று வியப்புடன் கேட்டாள். அம்மா ``மதியம்போல வந்திட்டேன்’’ என்றாள். அவள் பன்னிச்சையடியிலிருந்து கொண்டுவந்த திருநீற்றை, பூட்டம்மாவின் கையில் கொடுத்தாள். சின்னச் சரையில் சுற்றிக்கிடந்த திருநீற்றை எழும்பி நின்று நெற்றியில் பூசிக்கொண்டாள்.

“நானும் அங்க வந்து இருக்கலாமெண்டு யோசிக்கிறன். நீ என்ன நினைக்கிறாய்?” என்று அம்மாவிடம் கேட்டாள்.

“வாங்கோ, இதென்ன கேள்வி... நீங்கள் எங்களுக்குப் பக்கத்தில இருந்தால் எவ்வளவு துணையாய், துணிவாய் இருக்கும்...” அம்மா சொன்னதும், ``ஓம் நான் வரப்போகிறேன்’’ என்றாள் பூட்டம்மா.

மருதன் வந்து என்னை அழைத்தார். “ஒரு சின்ன வேலையாக நீயும் நானும் போகவேண்டியிருக்கு தம்பி, வாறியா?” என்றார்.

``எங்க?”

``நாங்கள் இப்ப வெளிக்கிட்டு போகேக்க, எந்த இடமெண்டு தெரியும்’’ என்றார்.

அம்மாவிடம் சொல்லிவிட்டு மருதனோடு நடந்து சென்றேன்.

(நீளும்...)