Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 42

கடவுள்... பிசாசு... நிலம்! -
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்! -

அப்போதுதான் மருதன் வீட்டுக்குள் நுழைந்தார். நடந்தவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 42

அப்போதுதான் மருதன் வீட்டுக்குள் நுழைந்தார். நடந்தவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்! -
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்! -

மருதன் அண்ணாவை வீட்டுக்குள் காணவில்லை. அக்கா கடுமையாக பயந்துபோயிருந்தாள். ``என்ன நடந்தது, ஏன் ஆர்மிக்காரங்கள் வந்து போறாங்கள்?’’ என்று கேட்டேன்.

“வீட்ட செக் பண்ணினவங்கள், அவங்களுக்கு ஏதோ தகவல் போயிருக்கு.’’

``மருதன் எங்க?” என்றேன்.

“பின்னுக்குப் போய்ட்டார்” என்றாள் அக்கா.

“அவரை அவங்கள் பார்க்கேல்லையோ?” எனக் கேட்டேன்.

“பார்த்திருந்தால் அவ்வளவுதான், இண்டைக்கு எல்லாரையும் கூட்டிக்கொண்டு போயிருப்பாங்கள்.”

“ஆரோ, ஏதோ தகவல் சொல்லித்தான் அவங்கள் வந்துபோறாங்கள்” அம்மா மீண்டும் சொன்னாள்.

“வந்து என்ன கேட்டவே?”

“வேற என்னத்த... அடையாள அட்டையைத்தான்.”

“அம்மாவைத்தான் ரெண்டு மூண்டு தடவை, விசாரிச்சவங்கள்.”

“நான் வன்னியிலருந்து வந்ததெண்டதும், அவங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்குமெல்லே...”

அப்போதுதான் மருதன் வீட்டுக்குள் நுழைந்தார். நடந்தவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். அவருக்குக் குழப்பம் தோன்றியது. ராணுவத்தினரின் வருகைக்குக் காரணம் எதுவாக இருக்குமென எண்ணினார். அவருடைய உடைமைகளை மறைத்துவைத்திருந்த இடத்துக்கு ஓடிப்போனார். அவற்றை எடுத்துவந்ததும் மருதன் எங்கள் எல்லோரிடமும் சொன்னார்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 42

“நான் இனிமேல் இஞ்ச இருக்கேலாது. வெளிக்கிடுறன்.”

“நாங்களும்தான் மருதன்.” அம்மா சொன்னாள்.

“ஓம் அம்மா, துல்லியத்துக்குள்ள வந்திட்டம். வேகமாய் செயற்படவேணும்.”

அன்றிரவு மருதன் எங்களுடைய வீட்டிலிருந்து வெளியேறினார். அம்மா அவருக்குத் திருநீற்றைப் பூசி வழியனுப்பிவைத்தாள். அக்காவின் முகம் மங்கிப்போயிருந்தது. ஆனால், பாவனையாக முகத்தை மலர்த்தி வைத்துக்கொண்டாள். மருதன் நாளைக்கே எங்களை இங்கிருந்து வெளிக்கிடுமாறு கூறினார். நாங்கள் மூவரும் பூட்டம்மாவின் வீட்டிலேயே இரவு தங்கினோம். வன்னிக்கு எடுத்துச் செல்லவேண்டிய பொருள்களையும் உடுப்புகளையும், பாடப் புத்தகங்களையும் எடுத்து மூன்று பைகளில் இட்டு நிரப்பினோம். காலையில் ஒன்பது மணிக்கே யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்குப் பயணப்பட்டோம். பூட்டம்மா எங்களோடே தானும் வந்துவிடுவதாகக் கூறினாள். யாழ்ப்பாண பேருந்து நிலையத்திலிருந்து கிளிநொச்சி செல்லும் பேருந்தில் ஏறினோம். அம்மாவும் பூட்டம்மாவும் சேர்ந்து இருந்தார்கள். நானும் அக்காவும் இன்னோர் இருக்கையில் அமர்ந்திருந்தோம். யாழ்ப்பாணத்தைவிட்டுச் செல்லும் நாளின் துயரம் எம்மைச் சூழ்ந்திருந்தது. நான் மெல்லக் கலங்கி விசும்பினேன். அக்கா என்னை ஆற்றினாள். அவள் உயிர்த்தெழத்துடிக்கும் ஒரு பட்சியைப்போல உள்ளே துடித்துக்கொண்டிருந்தாள்.

“இப்ப ஏனடா அழுகிறாய், யாழ்ப்பாணத்துக்கு இன்னும் கொஞ்ச நாளில திரும்பி வந்திடலாம். கவலைப்படாத.”

“இல்லை. இவங்கள் இஞ்ச இருக்கிற வரைக்கும் எங்களால இனி வரேலாது. எனக்குத் தெரியும்.”

பேருந்து வெளிக்கிட்டது. பூட்டம்மா, ‘காளித்தாயே...’ என்று கும்பிட்டாள். அம்மா கைகளைக் கும்பிட்டபடி கண்களை மூடித் திறந்தாள். நாம் முகமாலையின் ராணுவ சோதனைச் சாவடியைக் கடக்கும் வரை இந்தப் பதற்றம் இருக்கும். அதைத் தாண்டிவிட்டால் போராளிகள். அவர்களைப் பார்த்துவிட்டால் நிம்மதியாகிவிடும். மருதன் இவ்வளவு கலவரப்பட்டு எங்களுடைய வீட்டிலிருந்து ஏன் புறப்பட்டார்... வீட்டுக்கு வந்த ராணுவத்தினர் அம்மாவையும் அக்காவையும் விசாரித்துவிட்டு மேலதிகமாக எதுவும் கேட்காமல் ஏன் சென்றனர்... இடையில் என்னைக் கண்டும் எதுவும் சீண்டவில்லையே... எல்லாமும் புதிராகவே இருந்தன. என்ன நடக்கிறது, ஏன் இப்படி பயந்தோடுகிறோம் என்றெல்லாம் யோசிக்கத் தோன்றியது.

“நாங்கள் தப்பியோடுகிறோமா?” அக்கா கேட்டாள்.

நான் அவளது கண்களைப் பார்த்துச் சொன்னேன், “தப்பித்திருக்க வேண்டியவர்கள் நாங்களென்று காலம் விரும்பியிருக்கிறது போலும்.”

கடவுள்... பிசாசு... நிலம்! - 42

பேருந்து சாவகச்சேரியைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் ராணுவ சோதனைச்சாவடி வந்துவிடும். பூட்டம்மா, வீதியின் இருமருங்கிலும் தெரிகிற காட்சிகளைப் பார்த்துக்கொண்டு வந்தாள். அம்மாவுக்கு யோசனைகள் ஏராளம். ராணுவத்தினரிடம் சொல்லிக்கொடுத்தவர்கள் யாராக இருக்கலாமென்று அம்மாவுக்குச் சில ஊகங்கள் இருந்தன. அவள் தன்னுள்ளேயே அவற்றைப் பிரதிவாதம் செய்துகொண்டிருந்தாள். நாங்கள் முகமாலை ராணுவ சோதனைச்சாவடியில் பயந்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. பூட்டம்மாவும், அம்மாவும், அக்காவும் வருவதற்காக நான் காத்திருந்தேன். மூவரும் வந்தனர். மீண்டும் பேருந்தில் ஏறி அமர்ந்து எப்போது புறப்படுமெனக் காத்திருந்தோம். பேருந்து மெல்ல மெல்ல முன்னேறத் தொடங்கியது. அழிவுவெளியின் தீக்கங்குகளை, காயமற்றுக் கடந்த சாகசவுணர்வு தோன்றியது. ராணுவத்தின் சோதனைச்சாவடிக்கும் போராளிகளின் இடத்துக்குமிடையே நீண்டிருந்த சூன்யப் பிரதேசத்தில் பேருந்து விரைந்தது. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதியொருவர் கண்காணிப்புக் குடிசைக்குள் அமர்ந்திருந்தார். நாங்கள் மீண்டும் பேருந்தைவிட்டு இறங்கி, போராளிகளின் சோதனைக்கு உள்ளானோம். பன்னிச்சையடிக்குப் போனதும் முதலில் கிணற்றில் அள்ளிக் குளிக்க வேண்டுமென நினைத்துக்கொண்டேன். சொந்தவூர் தண்ணீருக்கு எத்துயரையும் போக்கும் வல்லமை இருக்கிறது. நாங்கள் பிரதான சாலையிலிருந்து வீட்டுக்கு நடந்துவந்தோம். வீட்டினுள்ளே யாரோ கதைப்பது கேட்டது. வெளியே நின்ற வாகனத்தைப் பார்த்ததும் அம்மா சொன்னாள். “கொண்ணா வந்து நிக்கிறான்போலக் கிடக்கு.’’ பூட்டம்மாவின் குரல் கேட்டதும், அண்ணா வெளியே ஓடி வந்தான்.

“என்னடா அதிசியம், கிழவி திடீர் விசிட் அடிச்சிருக்கிறா.”

“விசிட் எல்லாம் கிடையாது. இனிமேல் இஞ்சதான்.”

“ஏன் என்ன நடந்தது?’’

“வீட்ட ஆர்மிக்காரங்கள் வந்திட்டாங்கள். அவங்களுக்கு ஆரோ எதையோ சொல்லியிருக்கிறாங்கள்.”

“என்ன சொன்னவங்கள்?”

“எதுவும் சொல்லேல்ல, அதுதான் சந்தேகமாகயிருந்தது. வந்திட்டம்.”

“நல்ல விஷயம்.”

பூட்டம்மா அண்ணாவிடம் கேட்டாள். “எதடா நல்ல விஷயம், கோயிலையும் வீட்டையும் பூட்டிப்போட்டு இஞ்ச வந்து நிக்கிறமே அதுவா?”

அண்ணா அடுத்த நொடியே சிரித்துக்கொண்டு ஒரு பதில் சொன்னான். “கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக்கொள்ளுங்கோ, எல்லாருமாய்ச் சேர்ந்து யாழ்ப்பாணம் போவம்.”

“எல்லாருமெண்டால்?”

“எல்லாருந்தான்.”

“என்ன... யாழ்ப்பாணத்த பிடிக்கப் போறியளோ?” பூட்டம்மா கேட்டாள்.

‘‘ஏன் பிடிக்க வேண்டாமோ?”

“ஆனால் அது உங்களால ஏலுற காரியமே, அவன் எல்லா இடத்திலையும் பரவி நிக்கிறான்.”

“ஏலுமெண்டு இயக்கம் நினைச்சால், அது ஒரு சின்ன விஷயம்.”

பூட்டம்மா கண்களை விரித்து அண்ணாவையே பார்த்துக்கொண்டிருந்தாள். அண்ணா நிறைய விஷயங்களைச் சொன்னான். ஆனால், அவள் சில இடங்களில் மறுத்துக் கதைத்தாள்.

“முதலிலேயே இயக்கம் யாழ்ப்பாணத்த விட்டிருக்கக் கூடாது மோனே. அது பெரிய பிழை.”

அண்ணா ஆமோதித்து, தலையசைத்தான். பூட்டம்மா தொடர்ந்து கதைத்தாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 42

“நீங்கள் திரும்ப யாழ்ப்பாணத்தப் பிடிக்க ஒரு சண்டை தொடங்குவியளாய் இருந்தால், அது உங்களுக்குப் பெரிய இழப்பாய்தான் எஞ்சும்.”

“ஏன் அப்பிடிச் சொல்லுறியள்?”

“எனக்குத் தெரியும் மோனே, ஆனால் எப்பிடியெண்டு மட்டும் என்னெட்ட கேக்காத.”

“இப்பிடி அடிச்சு சொல்லுறியளே அதுக்காகக் கேக்கிறன். யாழ்ப்பாணத்த இனி இயக்கம் ஆளாதா?”

“இல்லையெண்டுதானே சொல்லுறன்.”

“என்ன காரணம்?”

பூட்டம்மா அதன் பிறகு எதுவும் கதைக்கவில்லை. அவள் உடைமைகளோடு கொண்டுவந்த மாவீரராகிப்போன தனது மகனின் புகைப்படத்தை எடுத்து மேசையில் வைத்தாள். அண்ணா அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். அண்ணாவிடம் சொன்னேன்.

“அவாவிட்ட பிறகொருக்கால் இதைப் பற்றிக் கேப்பம்.”

அவன் சிரித்துக்கொண்டு தன்னுடைய வேலைகளைப் பார்க்கத் தொடங்கினான். இரவும் அவன் விழித்தே இருந்தான்.

முகில்கள் மழையைப் பொழிந்தன. ஆடுகளைப் பட்டிக்குச் சாய்த்துக்கொண்டு போகும் சிறுவன் நனைந்து தோய்ந்துபோயிருந்தான். பழைய தேர்முட்டி மண்டபத்துக்குள் ஆடுகள் சில சிதறி ஏறின. அவன் ஒதுங்கி நிற்க விருப்பமற்று கோபங்கொண்டு முறையிடும் நீரின் கூக்குரலாய் இருண்டு நீடித்த மழையில் மந்தையோடு நடக்கலானான். சிவன் கோயில் வடக்கு வீதியில் நிற்கும் வில்வமரத்தின் கீழே அமர்ந்திருந்த ‘விசரன்’ அப்பையா மழையில் நனைந்தபடி வானத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தார். அவர் சிரிக்கும் திசையிலிருந்து மின்னல்கள் தோன்றுவதைக் கண்ட சிறுவன், மழையிருட்டில் உறைந்துபோய் நின்றான். மந்தைகள் தமது வழித்தடத்தில் நடந்து பட்டியில் சென்று அடைந்தன. அதிகாலை வடக்குவீதியில் கண்விழித்த சிறுவன், விசரன் அப்பையாவிடம் சென்று ‘சுவாமி’ என்றழைத்தான்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 42

அந்த அதிகாலையில் நித்திரையில் கிடந்த தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் போர்த்திவிட்டு, கையில் டோர்ச் லையிற்றை எடுத்தாள் மதி. வீட்டின் கதவுக்கு முன்னால் கிடந்த நாய் அவளைக் கண்டதும் எழுந்து குழைந்தது. அவள் நாயைத் தடவிவிட்டு படலையைத் திறந்து மெதுவாகத் தென்னந்தோப்பை நோக்கி நடந்துபோனாள். கடந்த சில மாதங்களாகவே வாடிக்கையான கருமமாய் இது நிகழ்கிறது. தென்னந்தோப்பில் முருகு காத்திருந்தான். மதி டோர்ச் லையிற்றை அணைத்துவிட்டு, மிக வேகமாக நடந்து தென்னந்தோப்பிலிருக்கும் சந்திப்பு மையத்தை அடைந்தாள். முருகு அவளைக் கட்டியணைத்து மூர்க்கம் கொண்டு புணர்ந்து களித்தான். மதி உணர்ச்சிகளின் நாவுகளால் தீண்டப்பட்டு துளிர்த்தாள். கலவி திறந்து விரியும் உடல்களின் வாசனையோடு தீர்ந்திருந்தது. இருவரும் மண்மேட்டில் படுத்திருந்து கதைத்தபடியிருந்தனர். அதிகாலை ஐந்தரையிருக்கும், மதி அங்கிருந்து வெளிக்கிடத் தயாரானாள். முருகு அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டு அனுப்பிவைத்தான். வாளி நீரில் கால்களைக் கழுவிக்கொண்டு மதி தனது வீட்டுக்குள் நுழைந்தாள். குழந்தைகள் இருவரும் நித்திரையிலிருந்தனர். முருகு தென்னந்தோப்பு மணல் மேட்டில் படுத்திருந்து பீடியைப் புகைத்துக்கொண்டிருந்தான். நான்கைந்து போராளிகள் அந்த வழியாக நடந்துபோயினர். முருகு அவர்களைக் கண்டதும் ‘ஆர்?’ என்று கேட்டான்.

“அது நாங்கள்தான், நீங்கள் பயப்பிடாமல் இருங்கோ” என்றார் ஒரு போராளி.

அவர்களுக்குப் பின்னால் ஒரு படையணியே நகர்ந்து முன்னோக்கிப் போய்க்கொண்டிருந்தது. முருகு நடந்து செல்லும் போராளிகளின் வரிசையைப் பார்த்தான். அது இருளில் தொடங்கி விடியல் வரை நீண்டிருந்தது.

அவனுக்கு மெல்ல ஒரு பயம் தொற்றியது.

(நீளும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism