Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 45

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

வெளிக்கிடுகிற நேரத்தில ஏன் மோனே இப்பிடிக் கதைக்கிறாய்?” என்று பூட்டம்மா நொந்தாள். அம்மா அவனைக் கட்டியணைத்துக்கொண்டிருந்தாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 45

வெளிக்கிடுகிற நேரத்தில ஏன் மோனே இப்பிடிக் கதைக்கிறாய்?” என்று பூட்டம்மா நொந்தாள். அம்மா அவனைக் கட்டியணைத்துக்கொண்டிருந்தாள்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

அடிக்கடி ஏ-9 பாதையைப் பூட்டுவதும் திறப்பதுமாக அரசாங்கம் சமாதான வேடிக்கையை நடத்தியது. இயக்கமோ மீண்டும் மீண்டும் ‘அரசாங்கம் யுத்தத்துக்கு யத்தனப்படுகிறார்கள்’ என்று சர்வதேசத்துக்கு முறையிட்டனர். ஆனால், யுத்தமென்பது இரு தரப்பின் முதல் தெரிவாகவும் இருந்தது. தொப்பி குயிலனிடம் கதைக்கும்போது “அரசாங்கம் சண்டையைத் தொடங்கினால் இயக்கத்தின்ர முடிவு என்னவாயிருக்கும்?” என்றதும் “பதிலடி குடுப்பம், நாங்கள் சண்டைக்கும் தயார். சமாதானத்துக்கும் தயார். ஆனால், அரசாங்கம் சண்டைக்குத்தான் மும்முரமாக நிக்குது” என்றார். பூட்டம்மா சொன்ன வார்த்தைகள் நினைவில் சுழன்றடித்தன. எங்களுக்குப் பெரிய இழப்பு நேருமென்று எச்சரித்த அந்த நிமிடங்களை என்னால் இப்போது வரை கடக்க முடியாதிருந்தது. யுத்த நிறுத்த மீறல்கள் இன்னும் அதிகரிக்கத் தொடங்கியிருந்தன. குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் நிறைய கொலைகள், எண்ணுவதற்கு அவகாசமற்று பிணங்கள் குவிந்தன. புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் என்று அறியப்பட்ட பலர் அடுக்கடுக்காகக் கொன்றொழிக்கப்பட்டார்கள். வன்னி வேறொரு களத்துக்காகத் தயாராகிக்கொண்டிருந்தது. இனியொரு யுத்தமெனில், அதுவே இறுதி யுத்தமென சனங்களின் மத்தியில் இயக்கத்தினர் உரைகளை நிகழ்த்தத் தொடங்கினர்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 45

அண்ணாவை வழியனுப்ப வைத்தோம். நீண்ட நாள்கள் விடுமுறையைக் கழித்திருந்தான். இனிமேல் எப்போது வருவானென்று தெரியாத கலக்கம் எனக்குள் இருந்தது. அம்மா திருநீற்றை நெற்றியில் பூசிவிட்டு “கிடைக்கிறத நல்லாய்ச் சாப்பிடு” என்று மட்டும் சொன்னாள். அக்கா அண்ணாவைக் கொஞ்சிவிட்டாள். ``அடுத்த தடவை வரும்போது, எனக்கு நீ தொதல் கிண்டித் தரவேண்டும்’ என அண்ணா விரும்பிக் கேட்டான். ``நேற்றைக்குச் சொல்லியிருந்தால் செய்து தந்திருப்பேனே’’ என்றாள். பூட்டம்மா அவனுக்கருகில் சென்று “நீ வலுகெதியாய் விடுமுறையில வருவாய்” என்று சொன்னதும், “நான் என்ன விழுப்புண்படப் போறனோ” என்று அண்ணா சிரித்துக்கொண்டு கேட்டான்.

“வெளிக்கிடுகிற நேரத்தில ஏன் மோனே இப்பிடிக் கதைக்கிறாய்?” என்று பூட்டம்மா நொந்தாள். அம்மா அவனைக் கட்டியணைத்துக்கொண்டிருந்தாள். அண்ணா வாகனத்தில் ஏறியதும் என்னிடம் சொன்னான்.

“ஆதீரா, நீ நல்லாய்ப் படி. போராடுறதுக்கு நாங்கள் இருக்கிறம்.”

“நீங்கள் எனக்காகப் போராடுற மாதிரி, எனக்குப் பிறகு பிறந்தவைக்காக நானும் போராடுவன். அது என்ர உரிமையெல்லே.”

“ஓம் அது உன்ர உரிமைதான்.” அண்ணா புறப்பட்டுப் போனான்.

மாலையில் அம்பிகா வீட்டுக்கு வந்து அக்காவோடு கதைத்துக்கொண்டிருந்தாள். அம்பிகா அடிக்கடி என்னையே பார்த்துக்கொண்டிருந்ததை அக்கா கண்டுகொண்டாள்.

என்னைச் சில வேலைகள் சொல்லி சித்தி வீட்டுக்கு அனுப்பிவைத்தாள். நான் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு வீட்டிலேயே சுழன்றேன். அப்போதுதான் மணியன் வீட்டின் படலையை அடித்துத் திறந்தபடி வந்து நின்றான்.

“எப்ப யாழ்ப்பாணத்தில இருந்து வந்தனீ?” என்று கேட்டேன்.

“நான் வந்து மூன்று நாள் இருக்கும். கிளிநொச்சியில நிண்டிட்டு இண்டைக்குத்தான் இஞ்ச வந்தனான்.”

நாங்கள் கதைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த அக்கா, உள்ளேயிருந்து கேட்டாள். “மருதனும் வன்னிக்குள்ள வந்திட்டாரோ?” மணியன், ‘இல்லை’ என்று மட்டும் தலையசைத்தான்.

“இஞ்சால வாற திட்டத்தோட இருக்கிறாரோ?”

“இயக்கம் சொன்னால் வருவார். ஆனால் அவருக்கு நிறைய வேலைகள். இயக்கம் கூப்பிடாது.”

அக்காவுக்குள் ஒரு விசும்பலும் தவிப்பும் உயிரை உதைந்துகொண்டு வெளியேறின. அவள் அதனை மிக ரகசியமான உணர்வைப்போல கண்ணீரால் மடைமாற்றினாள்.

அம்பிகா, அக்காவிடம் சொல்லிவிட்டு வெளியே வருகிறாள். வருடங்களுக்குப் பிறகு மணியன், அம்பிகாவை நேருக்கு நேராகச் சந்தித்துக் கொள்கிறான். அவனால் அம்பிகாவை எதிர்கொள்ள முடியவில்லை. அவன் மன்னிப்புக் கோரத் தயாராகி நிற்கிறான்போலும். குற்றங்களை உணர்ந்துகொண்டவனாக அம்பிகாவை மறித்து “என்னை மன்னித்துக்கொள்ளுங்கள், நான் அப்பிடி செய்திருக்கக் கூடாது” என்றான். அம்பிகா கொஞ்சம் நிதானித்து, சில நொடிகளில் அவனது முகத்தைப் பார்த்து சிறு புன்னகையை உதிர்த்தாள். குற்றத்துக்கும் மன்னிப்புக்கும் ஒரு நொடி போதுமானதாக இருக்கிறது. ஒரு சிறு புன்னகையில் மன்னிப்பைத் தந்தருளும் கடவுளர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள். அம்பிகா படலையைச் சாத்திவிட்டு வெளியேறினாள். நானும் மணியனும் யாழ்ப்பாணத்து நிலவரங்களைக் கதைக்கத் தொடங்கினோம். சீர்திருத்தப் பள்ளியிலிருந்து அவன் யாழ்ப்பாணத்துக்கு எப்படி வந்தான் என்பதையெல்லாம் கேட்டு அறிய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவன் சொன்ன யாழ்ப்பாணத்து நிலவரங்கள் பயங்கரமாக இருந்தன. எங்களுடைய வீட்டிலிருந்து மருதன் வெளியேறிய அன்று மாலையில், இவன் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறார். ராணுவத்தின் தேடுதல் வலையில் தானும் வந்துவிட்டதாக மருதன் சொன்னதும், மணியனுக்கு பயம் தீண்டிவிட்டது.

“எப்பிடி கண்டுபிடிச்சவங்கள்?”

“தெரியேல்ல... ஆனால், ஆதீரன் வீட்டுக்கு அவங்கள் வந்ததுமே எனக்கு கரவு வந்திட்டுது.”

“எப்பிடி உறுதியாய் சொல்லுறியள்?”

“ஒரு வீட்டுக்கு மட்டும் சோதனைக்கு வந்து எதுவும் செய்யாமல் திரும்பிப் போறாங்கள் எண்டால், விட்டுப் பிடிக்க ஆசைப்படுகிறாங்கள் எண்டு அர்த்தம்.”

“அவையளின்ர வீட்டுக்கு நிறைய பேர் வந்து போறவே, நீங்கள் எப்பிடி அது உங்களைத்தான் எண்டு சொல்லுறியள்?”

“எனக்கு அப்பிடித்தான் தெரியுது.”

“அப்ப ஆதீரன் வீட்டுக்கு ஆபத்து வந்திட்டுதே...”

“ஓம், நான் அவங்களுக்கும் சொல்லிட்டு வந்திட்டன். நாளைக்கு அவங்கள் வெளிக்கிட்டிடுவாங்கள்.”

நாங்கள் அங்கிருந்து வன்னிக்குள் நுழைந்து மூன்றாவது நாளில், ராணுவத்தினர் சுற்றிவளைத்து வீட்டுக்குள் நுழைந்திருக்கின்றனர். யாருமே அற்ற வீட்டில் கிடப்பவை எல்லாவற்றையும் விசிறி எறிந்து கோபத்தில் எரித்திருக்கின்றனர். கோயிலைக் கையெறி குண்டுகள் பலவற்றால் சேதப்படுத்தியிருக்கின்றனர். பூட்டம்மாவின் வீட்டை உடைத்து, அங்கிருந்த பொருள்களை எடுத்து வீதியில் எறிந்திருக்கின்றனர். புலிச்சீருடை அணிந்திருக்கும் மாவீரப்பிள்ளையின் பெரிய ஃபிரேம் போடப்பட்ட புகைப்படத்தைத் துப்பாக்கியால் வெறிகொண்டு சுட்டிருக்கின்றனர். சலூன் இனியவன், ராணுவத்தினரோடு சேர்ந்து இயங்கும் ஆயுதக்குழுவொன்றின் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக மணியன் குறிப்பிட்டான்.

“மருதன் அண்ணா இப்ப எங்க இருக்கிறார், அவருக்கு ஒரு பிரச்னையும் இல்லையா?” மெதுவாகக் கேட்டேன்.

“ஒரு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். அவருக்கு நிறைய வேலைகளை இயக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கு. மருதன் ஒரு இரும்பன். களைக்கவே மாட்டார். வேலைக்கு மேல வேலை செய்கிற ஆள்.”

“உனக்குப் பழத்த தெரியுமே?”

மணியன் ஓமென்று தலையாட்டினான்.

“அவற்ற இடம் நல்ல பாதுகாப்பு. சந்தேகமே வராது. பழமும் நல்ல கெட்டிக்கார மனுஷன்” என்றேன்.

“ஓம் அது உண்மைதான். ஆனால் இப்ப பழமில்லையே...”

“ஏன், பழத்துக்கு என்ன நடந்தது?”

“அந்தாளையும் சுட்டுப்போட்டாங்கள்.”

“என்னடா சொல்லுறாய்... எல்லாரையும் அவங்கள் சுடுகிறாங்கள் எண்டால், இவேன்ர தகவல் அவனுக்கு எப்பிடித் தெரியுது?”

“பழத்தை ஆர்மி சுடேல்ல.”

“பின்ன ஆர்?”

“இயக்கம்தான் பழத்தைச் சுட்டது.”

“எந்த இயக்கம்?”

“என்ன நக்கலா உனக்கு, இயக்கமெண்டால் புலிதான்.”

“ஏன், அவர் என்ன செய்தவர்?”

“கொஞ்சம் டபுள் கேம் காட்டியிருக்கிறார்.”

“தெளிவாய்ச் சொல்லு.”

“ரெட்டை முகவராய் இருந்திருக்கிறார். ஆர்மியிட்டயிருந்து நிறைய காசு அவருக்குக் கிடைச்சிருக்கு.”

“நம்ப முடியாமல் கிடக்கு.”

“ஆராலும் நம்பேலாமல் போச்சு, இயக்கம் விசாரிச்சுப் பார்த்து கண்டுபிடிச்சிட்டுது. மருதனுக்குப் பழம் மேலதான் சந்தேகம். அவர் உங்கட வீட்டுக்கு வந்து போன பிறகுதான் இப்பிடி நடந்ததெண்டு சொன்னவர்.”

கடவுள்... பிசாசு... நிலம்! - 45

“ஓம், பழம் ஒருநாள் ரெண்டு பிஸ்டலை மறைச்சுக் கொண்டுவந்து மருதனிட்ட கொடுத்தவர். அப்ப, மருதன் அண்ணாதான் பழத்தைச் சுட்டவரா?”

“அதெனக்குத் தெரியாது. ஆனால் மருதன்தான் பழத்தின்ர கதையைச் சொன்னவர்.”

நாங்கள் இருவரும் கதைத்துக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, பூட்டம்மா எங்களருகே வந்து “என்னடா பெரிய கதையாய்க் கதைக்கிறியள்?” என்று கேட்டாள். மணியன் சிரித்துக்கொண்டு “அதொண்டுமில்லை, சும்மா படக்கதை சொல்லிக்கொண்டிருந்தனான்.’’ பூட்டம்மா மணியனின் தலையைத் தடவிவிட்டபடி கேட்டாள்,

“நீ எந்தப் படத்தோட கதையைச் சொல்லுறாய் எண்டு எனக்குத் தெரியும். இத்தின வருஷத்தில நான் எத்தின பழத்தைப் பார்த்திருப்பனெண்டு உனக்குத் தெரியுமா?”

மணியன் அதிர்ச்சியடைந்து பூட்டம்மாவைப் பார்த்தான்.

அக்காவுக்கு மருதனின் நிலையைத் தெரிந்துகொள்ள முடியாமல், நிறைய யோசனைகள். அவளுக்குள் அழுதபடியே இருந்தாள். வோக்மெனையும் யேசுதாஸின் குரலையும் மருதனாகப் பாவித்து அவற்றோடு கதைக்கத் தொடங்கினாள். வீட்டின் உச்சியில் காகமொன்று கரைந்துகொண்டேயிருந்தது. இலையினுள்ளே சுருண்டு மறையும் புழுவைப்போல வீட்டினுள் கிடந்தாள் அக்கா. அம்பிகா எப்போதாவது வந்து கதைத்துக்கொண்டிருப்பாள். ஆனால், அக்காவுக்கோ மருதன் வன்னிக்குள் வந்துவிட வேண்டுமென்ற தவிப்பே இருந்தது. அவள் வேண்டாத கடவுளில்லை. தெல்லிப்பழை துர்கையம்மனை நினைத்து நேர்த்தி வைத்துக்கொண்டாள். யாழ்ப்பாணத்துக்கு வரும்வரை உன்னுடைய விசேஷ நாள்களில் இங்கேயுள்ள அம்மன் கோயிலில் கற்பூரச்சட்டி தூக்குவதாக வேண்டிக்கொண்டாள். கரைந்துகொண்டிருக்கும் காகத்தை பூட்டம்மா துரத்த முயன்றாள். காகம் அசையாமல் கரைந்து அழுதது.

“தரித்திரத்தைத் திரத்தி விடு மோனே.”

கல்லை எடுத்து வீசினேன். காகம் எழுந்து பறந்து மீண்டும் வந்தமர்ந்து கரையத் தொடங்கியது. அக்கா வெளியே வந்து கல்லைக்கொண்டு காகத்தை நோக்கி வீசினாள். காகம் வீட்டின் உச்சியில் சரிந்து விழுந்தது.

“அடி விசரி... காகத்தைக் கொண்டிட்டியே” பூட்டம்மா கேட்டாள். அக்கா எதுவும் கதையாமல் வீட்டுக்குள் நுழைந்து தனது இடத்தில் அமர்ந்து சத்தமாகக் கத்தத் தொடங்கினாள்.

(நீளும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism