Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 47

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

அப்படியெனில் பிரிந்து சென்றவரால் இயக்கத்துக்கு இழப்பில்லை என்கிறீர்கள். அல்லது நான் அப்படி விளங்கிக்கொள்கிறேன்

கடவுள்... பிசாசு... நிலம்! - 47

அப்படியெனில் பிரிந்து சென்றவரால் இயக்கத்துக்கு இழப்பில்லை என்கிறீர்கள். அல்லது நான் அப்படி விளங்கிக்கொள்கிறேன்

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

பொறிக்குன்றன். அண்ணாவின் உற்ற நண்பர். வடபோர்முனைக் கட்டளைப் பணியகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர். இப்போது ராதா வான் காப்புப் படையணியில் இருக்கிறார். படலையைத் திறந்து அவரை உள்ளே அழைத்தேன். அவரின் முகம் கலக்கத்தில் இருந்தது. “அம்மா நிக்கிறாவோ” என்று குரலை திடப்படுத்திக் கேட்டார். நான் அடுப்படியைக் காட்டினேன். பொறிக்குன்றன் செருப்பை வெளியே கழற்றிவிட்டு அடுப்படிக்குள் நுழைந்தார். அம்மாவுக்கு பொறிக்குன்றனைப் பார்த்ததும் சந்தோஷம். அவரைப் பார்த்து நிறைய நாள்கள் ஆகிவிட்டன. ஒரு கோப்பையைத் துடைத்து, இரண்டு சோடி அப்பத்தைப் போட்டு நீட்டினாள். சாப்பிட்டபடி “உங்களிட்ட ஒரு தகவலைத் தெரியப்படுத்தச் சொல்லி பவியண்ணா அனுப்பிவிட்டவர்” என்றான். அம்மா ``சொல்லுங்கோ’’ என்றாள். கூட இருந்த என்னைப் பொறிக்குன்றன் பார்த்தார். விளங்கிக்கொண்ட அம்மா “பத்து, பதினைஞ்சு பூவரசமிலை, ஆய்ஞ்சு கொண்டு வா” என்றாள். நான் அடுப்படி முகப்பில் குனிந்து வெளியேறினேன். பொறிக்குன்றன் கொண்டு வந்திருக்கும் செய்தி என்ன, ஏன் பவி மாமா வராமல் இன்னொருவரிடம் தகவலைச் சொல்லி அனுப்புகிறார் என்ற யோசனைகளோடு பூவரசம் இலைகளை ஆய்ந்துகொண்டு அடுப்படிக்குள் நுழைந்தேன். பொறிக்குன்றன் எல்லாவற்றையும் சொல்லி முடித்த திருப்தியோடு அப்பத்தைச் சாப்பிட்டு முடித்திருந்தார். அம்மா எல்லோருக்குமாய்த் தேத்தண்ணி போட்டுப் பரிமாறினாள். அக்கா இயக்கத்துக்குப் போய்விட்ட செய்தியை பொறிக்குன்றனுக்குச் சொன்னேன். அவர் முகத்தைச் சுருக்கிக்கொண்டு “தங்கச்சி ஏன் அவசரப்பட்டது?” என்று மட்டும் கேட்டார். “இதில என்ன அவசரத்தைக் கண்டனியள் பொறி?” என வினவினேன். பொறி சிரித்தாரே தவிர பதில் எதுவும் சொல்லவில்லை. சில போராளிகளின் சிரிப்புக்கு என்ன அர்த்தமென்று தெரியாமல் குழம்பிப்போன தருணங்கள் ஏராளமுண்டு. எங்களுடைய ஊரில் நிகழ்ந்த கலைவிழாவில் பங்குகொண்ட வீரமிகு தளபதியொருவரை இயக்கத்தின் ஆதரவாளர் ஒருவர் கேள்வி கேட்டார்.

“நீங்கள் கடுமையாகச் சண்டை செய்யக்கூடிய தளபதி. உங்களுடைய களமுனையில் எப்போதும் எங்களுக்கு வெற்றிதான் கிடைத்தது. சரி, சொல்லுங்கள். எப்போது தமிழீழம் விடுதலை அடையும்?”

அந்தத் தளபதி சொன்னார்... “அண்ணே, உங்களுக்குத் தெரியாததெண்டு ஒண்டுமில்லை. மிக விரைவில.”

“அதுதான் தம்பி கேக்கிறன். அந்த விரைவெண்டுறது எப்ப?”

தளபதி சிரித்தார்.

இன்னொரு நாள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்த காலத்தில், இயக்கத்தைவிட்டுப் பிரிந்து, அரசுடன் இணைந்துகொண்டவரைப் பற்றிய உரையாடல் ஒன்று நடந்தது. அந்த உரையாடலில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் பரபரப்பான அரசியல் நிலவரங்களுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தார். ஒரு பள்ளிக்கூடத்தின் அதிபர் எழுந்து தமிழ்ச்செல்வனை நோக்கி இப்படிக் கேட்டார்.

“இப்படியான பிளவுகளும் பிரிவுகளும் உங்களுக்கோ அல்லது சனங்களாகிய எங்களுக்கோ புதிதில்லை. ஆனால் இந்தப் பிளவு சாதாரணமானதில்லை. படையியல்ரீதியாகப் பெரிய பின்னடைவாக இருக்குமெனத் தோன்றுகிறது. இதைப் பற்றி நீங்கள் எதுவும் வெளிப்படையாகக் கதைக்க மாட்டேன் என்கிறீர்களே!”

கடவுள்... பிசாசு... நிலம்! - 47

எப்போதும் சிரித்தபடியே இருக்கும் தமிழ்ச்செல்வன் அப்போது இந்த பதிலைச் சொன்னார்.

“ஓம், நீங்கள் சொல்வதைப்போல இந்தப் பிளவு எங்களுக்கோ சனங்களுக்கோ புதியதில்லை. ஒருவரை நம்பி இயக்கமில்லை. இருக்கப்போவதுமில்லை. களத்தில் நிற்கும் போராளிகளின் மனோபலமே எப்போதும் எங்களுக்கு படையியல்ரீதியான வெற்றியைப் பெற்றுத் தந்தது.”

“அப்படியெனில் பிரிந்து சென்றவரால் இயக்கத்துக்கு இழப்பில்லை என்கிறீர்கள். அல்லது நான் அப்படி விளங்கிக்கொள்கிறேன்” என்றார்.

தமிழ்ச்செல்வன் சிரித்துக்கொண்டு அடுத்த கேள்வியை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

“கொம்பனியிட்ட நிறைய ஆயுதங்கள் இருக்கு. நிறைய நுட்பங்கள் இருக்கு. அதில ஒன்றுதான் இந்தச் சிரிப்பும்” என்று சொல்லுவாள் பூட்டம்மா.

அக்கா இயக்கத்துக்குப் போன பின்பு நாள்கள் காய்ந்திருந்தன. அவள் எனக்கு முலையூட்டாத அம்மை என்று கவித்துவம் பொங்கச் சொல்லுவேன். என்னை எப்படியேனும் கல்வியில் கரைசேர்க்க வேண்டுமெனத் துடித்துக்கொண்டிருந்தவள். அதற்காகத் தனது ஆசைகள் பலவற்றைக் கருக்கியவள். சதா என்னைப் பற்றி சிந்திப்பதையே தனது நித்தியமாக ஆக்கிக்கொண்டவள். பிடிவாதமும் இரக்கமற்ற கண்டிப்பும் கொண்டிருந்தாலும், அவளிடம் இருக்கின்ற தாய்மையை எண்ணினால், விசும்பி அழுகை வந்துவிடும். அக்கா பயிற்சிகளை முடித்துக்கொண்டால், சந்திப்பு நடைபெறும். அந்தச் சந்திப்புக்குச் சென்று அக்காவைப் பார்க்க தயாராகிக்கொண்டிருந்தேன். அம்மா அடிக்கடி அக்காவைக் கனவில் கண்டாள்.

நாகப்பர் வந்தார். ``உடும்பு வேட்டைக்குச் செல்கிறேன் வருகிறாயா?’’ என்றழைத்தார். உப்புக்காட்டினுள்ளே சென்று மீள மனம் விரும்பாது. ஒப்புக்கொண்டதைப்போல ஏழு நடுகற்களையும் கண்டுபிடிக்க வேண்டும். நானும் நாகப்பரும் நாய்களோடு நடந்து சென்றோம்.

“ஆதீரா... உனக்கு நடுகற்களைக் கண்டுபிடிக்கிறதில இப்ப விருப்பமில்லாமல் போச்சுபோல...”

“இதென்ன விசர்க்கதை. உங்களிட்ட நான் அப்பிடி ஏதவாது சொன்னனா?”

“பின்ன என்ன, இப்ப உப்புக்காட்டுக்கு வாறதே இல்லையே, அப்பிடி வந்தாலும் அம்பிகாவைக் கூட்டிக்கொண்டுதான் வாறாய்.”

நான் பயந்ததைப்போலவே நாகப்பருக்குத் தெரிந்துவிட்டது. அவர் ஊர்முழுக்கப் பரப்பிவிடுவார். ``மூன்று தடவைதானே வந்தனான்” என்றேன்.

“நாலாவது தடவை அவள் வர மாட்டேன் என்றல்லாவா சொல்லியிருக்கிறாள்” என்ற நாகப்பரை அதிர்ச்சியோடு பார்த்தேன். “என்னடா இப்பிடி முழிக்கிறாய்?” எனக் கேட்டார்.

“ஓம், நான் அவளை விரும்புறன். அண்டைக்கு அவளுக்குச் சுகமில்லை. அதால வர மாட்டேன் எண்டிட்டாள்.”

“பாவடைக்குப் பின்னால சுத்தினால், உப்புக்காட்டுக்குள்ள இருக்கிற ஏழு நடுகற்களையும் நீ கண்டுபிடிக்க மாட்டாய்.”

“நான் கண்டுபிடிப்பன். எனக்கு பன்னிச்சைத் தாயோட ஆதரவு இருக்கு.”

கடவுள்... பிசாசு... நிலம்! - 47

நாய்கள் விரைந்தன. பட்டுப்போன பனையின் கொட்டுக்குள் உடும்பு இருக்கிறது என்பதைப்போல நாய்கள் மூச்சிரைக்க வலம்வந்தன. நாகப்பர் பனையின் அடியைத் தட்டினார். நாய்கள் மோப்பம் பிடித்துக்கொண்டன. அங்கிருந்து விலக மறுத்தன.

“பனையில ஏறடா” என்றார்.

பட்டுப்போன பனையில் ஏறுவது ஆபத்தானது. கொஞ்ச தூரம் வரைக்கும் போகலாம். அதற்குமேல் போவதென்றால் விழத் தயாராக வேண்டும். நாகப்பர் நான் தயக்கப்படுவதைப் பார்த்து “அங்கால தள்ளி நில்லு” என்று சொல்லிக்கொண்டு சாரத்தை கோவணம்போல மடித்து, காலிடைக்குள் செலுத்தி பின்னால் செருகிக்கொண்டு, பனையைத் தழுவி மேலேறத் தொடங்கினார். கொஞ்ச தூரத்தில் நின்றுகொண்டு பனையைத் தட்டினார். கொட்டுக்குள் இருந்த உடும்பு, தலையற்ற பனையின் உச்சியில் தலைநீட்டி நின்றது.

“நல்ல விளைச்சல் சாமானாய் இருக்கு. அப்பிடியே கீழ விழுந்து ஓடவும் வாய்ப்பிருக்கு” நாகப்பர் சொன்னார்.

“அவ்வளவு உயரத்திலருந்து கீழ விழுமே, உங்கட விசர்புத்தி மாதிரியே அதுக்கும்” என்றேன்.

‘‘பின்ன என்ன, அது பனையால இறங்கி உன்னட்ட வந்து நிக்குமோ?”

“அது அங்கயிருந்து விழுந்தால், செத்துப்போடுமல்லே.”

‘‘சாகாது, உயிர் வந்த மாதிரி ஓடி மறையும்.”

“இப்ப என்ன செய்யப் போறியள்?”

“நான் தட்டுறன். அது கீழ விழும். விழட்டும். நீ ஒண்டுக்கும் யோசியாத, நாய்களே பார்த்துக்கொள்ளும்.”

நாய்கள் பனையைச் சுற்றி வட்டம் போட்டு நின்றன. அகன்ற வட்டம். பனையின் உச்சியில் நிற்கும் உடும்பின் கண்களை கீழே இருந்து வேட்கை வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தன. நாய்களால் ஆக்கப்பட்ட அந்த வட்டத்தைத் தாண்டிப் பாயும் பட்சத்தில், அதிர்ஷ்டவசமாகத் தப்பக்கூடும். ஆனால், அது இயலாது. நாகப்பர் கொட்டு அதிரும் வண்ணம் தட்டுகிறார். கைமாற்றித் தட்டுகிறார். உடும்பின் உடல் மெல்ல மெல்ல வெளியே தெரிகிறது. தலை குத்தென உடும்பு மண் நோக்கித் திரும்பி நிற்கிறது. “நல்ல விளைச்சல்” என்று கண்கள் வியந்து எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன். உடும்பின் மொத்த சரீரமும் இப்போது தெரிந்தது. நாகப்பர் சொன்னார்.

“பாயப்போகுது.”

உடும்புப்பிடி கழற்றி பாய்ந்த உடும்பு, நிலம் சேர்வதற்குள் பாய்ந்து பிடித்தேன். கணத்தில் அதன் வாலைச் சுருட்டி கழுத்தில் கட்டினேன். நாகப்பர் பனையில் இருந்துகொண்டு “அடி சபாஷ், நீ விஷயக்காரன்தான்” என்றார். நாய்கள் என்னைச் சூழ்ந்திருந்தன. அவற்றுக்கு அந்த இரையின்மீது தங்கள் எச்சிலை நனைக்க வேண்டுமென்ற உக்கிரம் இருந்தது. நாகப்பர் உடும்பைக் கையில் வாங்கி, நிலத்தில் விரித்து தனது வேட்டைக்கத்தியால் வாலின் குறுக்காக ஒரு வெட்டுப்போட்டு, மீண்டும் கழுத்தில் கட்டி வலது கையில் ஒரு கைப்பையைப்போல போட்டுக் கொண்டார்.

“நீங்கள் வீட்டுக்குப் போங்கோ, நான் நடுகற்களைத் தேடிப் பார்த்திட்டு வாறன்” என்றேன்.

“நீ தனியப் போவியே, காடு திசை மாத்திப்போடும். சும்மா விளையாடாத.”

“இல்லை, நான் தனியப் போய்ட்டு வந்திடுவன்”

“உனக்குச் சும்மா விளையாட்டாக் கிடக்கு” என்று சொன்னபடி நாகப்பர் என்னிடமிருந்து விலகி நடந்து ஊருக்குப் போனார். நான் ஒரு சுதந்திரத்தை உணர்ந்தேன். என்னோடு இயற்கை துணை இருப்பதை நினைத்து மகிழ்ந்தேன். அடர்ந்த காட்டினுள்ளே நடக்கலானேன். நாகப்பர் வேட்டையாடிய உடும்பின் கழுத்தை அறுத்து பன்னிச்சை மரத்தின்மீது ரத்தம் தெளித்தார். நாய்கள் மூக்கில் நஞ்சுப்பையை பிசுக்கினார். ‘ஏழு நடுகற்களையும் காணாது வீடு திரும்பேன்’ எனச் சொல்லிக்கொண்டு அந்தக் காட்டின் மத்தியில் நடந்துபோனேன்.

(நீளும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism