Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 48

கடவுள்... பிசாசு... நிலம்! - 48
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்! - 48

தொலைந்துபோன ஓலைச்சுவடிகளின் ஆவிகள் குடிகொண்டிருக்கும் தனிப்பனை மரத்தின் கீழே, பூட்டம்மாவைப் புதைக்கிறோம்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 48

தொலைந்துபோன ஓலைச்சுவடிகளின் ஆவிகள் குடிகொண்டிருக்கும் தனிப்பனை மரத்தின் கீழே, பூட்டம்மாவைப் புதைக்கிறோம்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்! - 48
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்! - 48

ஒருவன் காட்டினுள்ளே தனித்து நடக்கிறான் என்பதே கற்பனையானது. யாரும் தனித்துவிட முடியாதபடி காடு அரவணைத்து நிற்கும். உப்புக்காட்டின் நிழல் என்னைச் சிலிர்க்கச் செய்தது. மெல்ல அசையும் மரக்கிளைகளில் செம்போத்துப் பறவைகள் அமர்ந்திருந்தன. அவற்றின் சிவந்த கண்கள் காட்டின் சிறிய மச்சத்தைப்போலிருந்தன. நான் முன்னேறிக்கொண்டிருந்தேன். போராளிகளின் முகாமொன்றைத் தாண்டி நடந்துபோனேன். அவர்கள் கதைக்கும் சத்தம் கேட்கிறது. ஏதோ சொல்லிச் சிரிக்கிறார்கள். இந்தக் காட்டைப்போல எத்தனையெத்தனை காடுகள் போராளிகளைச் சுமந்திருக்கின்றன. “இயக்கப் பெடியளை சனங்களின்ர வீடுகள் காப்பாற்றினதைவிடவும் காடுகள்தான் காப்பாத்தியிருக்கு” என்று அம்மா சொல்வது நினைவுக்கு வந்தது. “வேலுப்பிள்ளையோட மோனுக்குக் காடுதான் துணை, காடுதான் கூட்டாளி” என்பாள் பூட்டம்மா.

“மணலாற்றுக் காட்டுக்கு ஒரு சிறப்பு இருக்கு. அங்கதான் அமைதிப்படை காலத்தில இயக்கம் இருந்து சண்டை செய்தது. ஆனால் உப்புக்காடு அதுக்கு முதலே வரலாற்றில இடம் பிடிச்ச காடு” என்று சொல்வார் நெடுவல் ராசன்.

“அதென்ன வரலாறு?”

“ஆதீரா, அது பெரிய கதை, ஒரு நாளைக்கு ஆறுதலாய்ச் சொல்லுறன்.”

நெடுவல் ராசன் சொன்ன கதைகளைப்போல சொல்லாமல்போன கதைகளும் ஏராளமுண்டு. திரியைத் தீண்டிவிட்டு நெருப்பை அணைப்பதைப்போல, நிறைய விநோதங்களைச் செய்துவிட்டுப் போய்விட்டார். காட்டின் மீது அந்தி விழுந்துவிட்டது. காட்டின் அடர்ந்த பகுதிக்குள் நுழைந்தேன். பெரும் விளைச்சலான புடையன் பாம்பொன்று சருகுகளை அசைத்துக்கொண்டு ஊர்ந்தது. நான் அதற்கு முன்பாக நடக்க விரும்பினேன். ஆனால் காட்டினுள்ளே விரவிக்கிடக்கும் நிசப்தம் சொல்லவியலாத தவிப்பை மெல்ல மெல்ல என்னில் நட்டுவித்தது. அந்திக்குப் பின் வரப்போகும் இருட்டை எண்ணினேன். இன்றைக்கு மட்டுமல்ல, எத்தனை பகல், இரவு கடந்தாலும் ஏழு நடுகற்களையும் காணாது நான் திரும்பேன் என மீண்டும் உறுதிசெய்துகொண்டேன். உயர்ந்து அடர்ந்த மரங்களின் கிளைகள் ஒவ்வொன்றிலும் ஒரு பூர்வீகக் கதையைப்போல மலர்கள் அழகுற நிரம்பியிருந்தன. எங்கிருந்ததெனத் தெரியாமல், அந்தரத்தில் பறக்கும் ஒரு மயிலைப் பார்த்தேன். உடலை இறுக்கிக்கொண்டு சத்தம் எழுப்பியபடி பறக்கும் அந்த மயிலின் மீது அந்தி முழுக்க மாய்ந்திருந்தது.

கடவுள்... பிசாசு... நிலம்! - 48

ஏழு நடுகற்கள் இருப்பதாக நெடுவல் ராசன் சொன்ன இடத்தை அடைந்தபோது இருண்டுபோயிருந்தது. வெளிச்சத்துக்கு ஏதுமற்ற நிலையில், மரத்தின் கொப்பில் ஏறி அமர்ந்துகொண்டேன். காட்டின் வெற்றிடத்தில் இருள் தன்னை அழுத்திப் புகுத்தியது. பறவைகளின் சத்தம் அங்கொன்றும் இங்கொன்றுமாக தூதுப்பாடல்போல தொடர்ந்துகொண்டே இருந்தது. எனக்குத் தோதாக அமைந்த கொப்புள்ள இந்த மரத்திலேயே இரவைக் கழித்துவிட வேண்டும். உருமறைப்புச் செய்த ஒரு போர்வீரனைப்போல பதுங்கிக் கிடக்கும் உப்புக்காட்டின் ஒவ்வோர் அசைவும் புதிதாக இருந்தது. அந்த மயில் என்னைப் பின்தொடர்கிறதா... ஏன் நானிருக்கும் இந்த மரக்கொப்பிலேயே வந்தமர வேண்டும்? மயில் வாசம் ஏதோ கிறக்கத்தைத் தருகிறது. இன்னுமின்னும் எனக்கருகில் வரவே அது முயல்கிறது. அந்த மயிலின் கழுத்தை உற்றுப் பார்க்கிறேன். அம்பிகாவின் கழுத்தைப்போலவே அது வெட்கத்தில் சுழல்கிறது. மயில் எனக்கு முன்னிருக்கும் கொப்பில் வந்தமர்கிறது. மெல்ல தன் தோகையை விரித்து, அந்தரத்தில் எழும்பி அகவுகிறது. இடியிடிக்க மின்னல் விழுகிறது. மழை விசுக்கென பெய்யத் தொடங்கியது.

அத்தகைய இருளோடும் தனிமையோடும் யாழ்ப்பாணத்தில் வேறு கோயிலில்லை. ஒரு நூற்றாண்டாக வேர்பரப்பி சடைத்தெழுந்து நிற்கும் அரசமரத்தின் கிளைகளில் எந்தப் பறவையும் வந்தமர்ந்து பார்த்தது கிடையாது. சருகுகள் உதிர்ந்து நிரம்பி வெளிர் மஞ்சளாகிப்போயிருந்த கிணற்று நீர், ஆண்டாண்டுகளாகப் பெய்த மழையின் நிழலாகத் தளும்பும். கோயிலுக்கு அருகிலிருந்த பழங்காலத்துப் பூர்வீக வீடு பாம்புகளின் புகலிடமாயிற்று. வீட்டைச் சுற்றி நாயுண்ணிப் பற்றைகளும் முசுட்டைக் கொடிகளும் வளர்ந்திருந்தன. “இந்த வீட்டில் குடிகொள்ளாது, அம்மன் இருக்கவிடாது” இப்படியாகச் சொந்தத்துக்குள் ஒரு நம்பிக்கை பரவியிருந்தது. ஆனால், நாங்கள் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து போய் அந்த வீட்டில்தான் வசிக்கிறோம். அந்திக் கருக்கலிலேயே ஆழ்ந்த சுதியைப்போல ஒளிரும் பழைய லாம்ப்பை அம்மா வெளிச்சமூட்டி வைக்கிறாள். இரண்டு குப்பி விளக்குகளில் நிம்மதியற்ற ஆர்ப்பரிப்போடும் அலைச்சலோடும் வெளிச்சம் எரிந்துகொண்டிருக்கிறது. இரவானால் அமானுஷ்யம் திறந்து மூண்டெழும் நடுவீட்டில், அச்சம் தலையுதறி நிற்கிறது. அம்மாவுக்கும் அக்காவுக்கும் நடுவில் நித்திரையாகி எழும்புகிறேன். எப்போதும் அதிகாலையைத் தனது கூந்தலில் சூடிக்கொண்டு துயில் உதறும் அம்மா, சூரியன் உதிப்பதற்கு முன்னர் கோயில் வளவு முழுவதையும் வலுசுத்தமாகக் கூட்டி முடிக்கிறாள். கோயிலின் வலதுபுறமுள்ள தேசிக்காய் மரத்திலிருந்து கனிந்துதிர்ந்த பழங்களை ஒவ்வொன்றாகப் பொறுக்குவது அவளது நித்ய கருமங்களில் ஒன்றாகியிருக்கிறது. மாதவிலக்கு வரும் பெண்கள் கோயில் கிணற்றில் நீரள்ளக் கூடாது. அம்மாவுக்கு நிரந்தரமாக நின்றுபோயிருந்ததால் பிரச்னையற்று இருந்தது. அம்மாவும் நானும் கிணற்றில் நீரள்ளி இரண்டு மூன்று பரல்களில் நிரப்பிவைத்துவிடுவோம். கூட்டுக்குள் நின்றபடி அக்கா குளித்து முடிக்கிறாள். ஆனாலும், இங்கே மிகுந்திருந்த விதிமுறைகளைச் சகிக்க முடியாமல் வேறொரு வீட்டுக்குப் போய்விடலாமென அம்மாவிடம் சொல்கிறாள். “கொஞ்ச நாளுக்குப் பல்லைக் கடிச்சுக்கொண்டு இருங்கோ, இஞ்ச வேற வீடு தேடி அலைஞ்சாலும் கிடைக்காது” என்கிறாள் அம்மா.

தொலைந்துபோன ஓலைச்சுவடிகளின் ஆவிகள் குடிகொண்டிருக்கும் தனிப்பனை மரத்தின் கீழே, பூட்டம்மாவைப் புதைக்கிறோம். அவளுடைய ஆசையது. அவள் இறந்துபோவதற்கு முந்தைய நாளின் அதிகாலையில் என்னைத் தட்டியெழுப்புகிறாள். பழங்கால வடிவமைப்புகொண்ட தனது இறங்குப்பெட்டியைத் திறந்து, இரண்டு செப்பேடுகளையும் ஒரேயொரு ஓலைச்சுவடியையும் என் உள்ளங்கையில் வைக்கிறாள். என்னை அவளது மார்போடு அணைத்து, “மோனே, இந்தத் திரவியங்களை நீ எப்பவும் கைவிடக் கூடாது. ஆச்சி மோசம் போனாலும் நீ கவலைப்படக் கூடாது. இந்தத் திரவியங்களை நிலத்திடம் ஒப்படைக்க ஒருநாள் புலரும். அதுநாள் வரை இந்த உப்புக்காட்டோடு நீயும் காத்திரு” என்கிறாள். நாங்கள் அவளைப் புதைப்பதற்காகக் கிடங்கு வெட்டிக்கொண்டிருந்த அன்றைக்குத் தனிப்பனையிலிருந்த கிளியொன்று நீண்டநேரம் ஒலியெழுப்பிக்கொண்டிருந்தது. பூட்டம்மா நிலத்துக்குள் மலர்ந்து நிமிர்ந்து படுக்க, பனம்பூவின் வெறியூட்டும் நறுமணம் விழிக்கிறது. செப்பேடுகளையும் ஓலைச்சுவடிகளையும் ஷெல் பெட்டியொன்றுக்குள் வைத்து மூடி பத்திரப்படுத்துகிறேன்.

ஆக்காண்டி, ஆக்காண்டி

எங்கெங்கே முட்டை வைத்தாய்?

கல்லைக் குடைந்து

கடலோரம் முட்டை வைத்தேன்.வைத்ததுவோ அஞ்சு முட்டை

பொரித்ததுவோ நாலு குஞ்சு

நாலு குஞ்சுக் கிரை தேடி

நாலுமலை சுற்றி வந்தேன்.

மூன்று குஞ்சுக் கிரை தேடி

மூவுலகம் சுற்றி வந்தேன்.ஆக்காண்டி, ஆக்காண்டி

எங்கெங்கே முட்டை வைத்தாய்?

கல்லைக் குடைந்து

கடலோரம் முட்டை வைத்தேன்.குஞ்சு பசியோடு

கூட்டில் கிடந்த தென்று

இன்னும் இரைதேடி

ஏழுலகும் சுற்றி வந்தேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 48

கடலை இறைத்துக்

கடல் மடியை முத்தமிட்டேன்.

வயலை உழுது

வயல் மடியை முத்தமிட்டேன்.கடலிலே கண்டதெல்லாம்

கைக்கு வரவில்லை.

வயலிலே கண்டதெல்லாம்

மடிக்கு வரவில்லை.கண்ணீர் உகுத்தேன்

கடல் உப்பாய் மாறியதே.

விம்மி அழுதேன்

மலைகள் வெடித்தனவே.ஆக்காண்டி, ஆக்காண்டி

எங்கெங்கே முட்டை வைத்தாய்?

கல்லைக் குடைந்து

கடலோரம் முட்டை வைத்தேன்.

வண்டிகள் ஓட்டி

மனிதர்க் குழைத்து வந்தேன்.கையால் பிடித்துக்

கரைவலையை நானிழுத்தேன்.கொல்லன் உலையைக்

கொளுத்தி இரும்படித்தேன்.நெய்யும் தறியிலே

நின்று சமர் செய்தேன்.சீலை கழுவி

சிகையும் அலங்கரித்தேன்.வீதி சமைத்தேன்.விண்வெளியில் செல்லுதற்குப்

பாதை சமைக்கும்

பணியும் பல புரிந்தேன்.ஆனாலும் குஞ்சுக்கு

அரை வயிறு போதவில்லை.

காதல் உருகக்

கதறி அழுது நின்றேன்.கதறி அழுகையிலே

கடல் ரத்தம் ஆயினதே.

விம்மி அழுகையிலே

வீடெல்லாம் பற்றியதே.கடல் ரத்தம் ஆகுமென்று

கதறி அழவில்லை.

வீடுகள் பற்றுமென்று

விம்மி யழவில்லை.ஆக்காண்டி, ஆக்காண்டி

எங்கெங்கே முட்டை வைத்தாய்?

கல்லைக் குடைந்து

கடலோரம் முட்டை வைத்தேன்.குஞ்சு வளர்ந்ததும்

குடல் சுருங்கி நின்றார்கள்.பசியைத் தணிக்கப்

பலகதைகள் சொல்லி வந்தேன்.கடலை இறைத்துக்

களைத்த கதை சொல்லி வந்தேன்.வயலை உழுது

மடிந்த கதை சொல்லி வந்தேன்.கொல்லன் உலையும்

கொடுந் தொழிற் சாலையதும்

எல்லா இடமும்

இளைத்த கதை சொல்லி வந்தேன்.சொல்லி முடிவதற்குள்

துடித்தே எழுந்து விட்டார்.

பொல்லாத கோபங்கள்

பொங்கி வரப் பேசுகின்றார்.“கடலும் நமதன்னை

கழனியும் நமதன்னை

கொல்லன் உலையும்

கொடுந் தொழிற்சாலையதும்

எல்லாம் நமது” என்றார்

எழுந்து தடி எடுத்தார்

கத்தி எடுத்தார்

கடப்பாரையும் எடுத்தார்

யுத்தம் எனச் சென்றார்

யுகம் மாறும் என்றுரைத்தார்.

எங்கும் புயலும்

எரிமலையும் பொங்கி வரச்

சென்றவரைக் காணேன்.

செத்து மடிந்தாரோ?வைத்ததுவோ அஞ்சு முட்டை

பொரித்ததுவோ நாலு குஞ்சு

நாலு குஞ்சும் போர் புரிய

நடந்து விட்டார் என்ன செய்வேன்

ஆன வரைக்கும்

அந்த மலைக் கப்பாலே

போனவரைக் காணேன்.

போனவரைக் காண்கிலனே.ஆக்காண்டி, ஆக்காண்டி

எங்கெங்கே முட்டை வைத்தாய்?

கல்லைக் குடைந்து

கடலோரம் முட்டை வைத்தேன்.


சண்முகம் சிவலிங்கத்தின் இந்தக் கவிதை வரிகளை, நான் பாடிக்கொண்டே ஒரு விசரனைப்போல வீதியெல்லாம் அலைகிறேன். இப்படித் துண்டு துண்டாகக் காட்சிகள் எங்கிருந்து எழுகின்றன... அச்சம் அனலாய்க் கொதிக்கிறது. பக்கத்தில் அமர்ந்திருந்த மயிலைக் காணவில்லை. காடும் நானும் இருந்தோம். இருள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது. நானிருந்த மரத்தின் கீழே யாரோ நடந்து திரிவதைப் போலிருந்தது.


“ஆர்?”

“அது நான்!”

“நானெண்டால் ஆர்?”

“நீ தேடி வந்த ஆளில ஒருத்தி!”மூர்க்கம்கொண்ட மழை, மீண்டும் பெய்யத் தொடங்கியது.

(நீளும்...)