Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 49

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

பூட்டம்மா நித்திரையிலிருந்து விழித்தாள். மழைக்குளிர் நடுக்கம் மெல்லிசாய் இருந்தது. விடாமல் பெய்துகொண்டிருந்த மழையின் சத்தம் நிரம்பி நின்றது

கடவுள்... பிசாசு... நிலம்! - 49

பூட்டம்மா நித்திரையிலிருந்து விழித்தாள். மழைக்குளிர் நடுக்கம் மெல்லிசாய் இருந்தது. விடாமல் பெய்துகொண்டிருந்த மழையின் சத்தம் நிரம்பி நின்றது

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

அதிகாலையின் தூறலோடு நாகப்பரும் காட்டுக்குள் வந்திருந்தார். ``ராத்திரி மழையில் நனையாமல் எப்படி தப்பினாய்?’’ என்று கேட்டார். “கொஞ்சமாய் நனைஞ்சனான், ஆனால் இப்ப காய்ஞ்சிட்டுது” என்றேன். நாங்கள் இருவரும் நடக்கத் தொடங்கினோம். அம்மா என்னைத் தேடியிருக்கிறாள். நாகப்பர் தன்னுடைய வீட்டில் நான் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். நெடுவல் ராசனின் நினைவுகள் இப்போது எனக்குள் எழுகிறது. அவர் நினைவுகள் என்னுடனே வருகிற காவல் பிம்பம். மழை முற்றாக ஓய்ந்திருந்தது. காட்டுக்குள் சொட்டிக்கொண்டிருந்த மழைத்துளிகளை இயற்கையின் தொனிப்பாக எண்ணிக்கொண்டேன். நிலம் இருளைப் பிரிந்து ஒளிக்குக் காத்திருக்கிறது. மழையில் நனைந்த நடுக்கம் உடலைப் பற்றியிருந்தது. காடெங்கும் நீரின் சலசலப்பு. நடுகற்களைப் பார்க்காமல் நான் வீடு திரும்புவதில்லை என்கிற சத்தியத்தை மீண்டும் நினைவுபடுத்தினேன். “மானுடர் சத்தியத்துக்கு மட்டுமே மண்டியிட விரும்புகிறார்கள்போலும், சத்தியத்திலிருந்து பிறழ்ந்தவன் பிற அடிப்படை நேர்மைகள் இருந்தும் அனைத்தையும் இழந்துவிடுகிறான். நான் சத்தியத்துக்கு அஞ்சுகிறேன். அதற்குப் பணிகிறேன். இந்தக் காடு மழைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததைப்போல, நான் சத்தியத்துக்கு உண்மையாக இருக்கிறேன்” ஒருநாள் நெடுவல் ராசன் சொன்னது மாதிரி, “உப்புக்காடு எங்களுடைய தாய். அவளின் சேயாக நான் ஏழு நடுகற்களையும் கண்டுபிடிப்பேன். பெருஞ்சரித்திரத்தின் சில பக்கங்களை நிலத்திலிருந்து பெறுவேன் என்பது மட்டும் உறுதி” என்றேன். நாகப்பர் என்னுடைய தோளைத்தட்டி “நீதான் கண்டுபிடிப்பாய்” என்றார். மெல்லிய செருமலுக்கு பிறகு அவரே தொடர்ந்தார்.

“ஆதீரா, உப்புக்காட்டுக்குப் பல பெருமைகளும் சிறப்பும் இருக்கு. இந்த ஏழு நடுகற்கள் மட்டுமில்ல, உப்புக்காட்டுக்குள்ள பிரபாகரன் மறைஞ்சு இருந்த சங்கதி உனக்குத் தெரியுமா?”

“இல்லை, எந்தக் காலத்தில?”

“அமைதிப்படைக் காலத்தில, இந்தக் காடு இயக்கத்துக்குப் பெரிய அளவில கைகொடுத்தது.”

“எல்லாரும் மணலாற்றுக் காட்டையெல்லா சொல்லுவினம், நீங்கள் சொல்லுறது எனக்குப் புதுசாய் இருக்கு.”

“அதுவும் உண்மை, இதுவும் உண்மை. ஆனால் இஞ்ச இருந்தது கொஞ்ச நாள்தான்.”

கடவுள்... பிசாசு... நிலம்! - 49

“நீங்கள் தலைவரை நேரில பார்த்து இருக்கிறியளோ?”

நாகப்பர் மனக்கண்ணாலும் என்னைப் பார்த்தார். பிறகு செருமிக்கொண்டு சொன்னார். “ஓம், பார்த்திருக்கிறன். கொஞ்ச நாள் அவரோடயே இருந்துமிருக்கிறேன்.”

ஆச்சர்யம் மிதக்கக் கேட்டேன் “உண்மையாவோ?”

“ஓம். ஆனால் அப்ப இருந்த இயக்கம் வேற, இப்ப இருக்கிற இயக்கம் வேற.”

“விளங்கேல்ல.”

சிரித்துக்கொண்டு “உனக்கு விளங்காது” என்றார்.

பூட்டம்மா நித்திரையிலிருந்து விழித்தாள். மழைக்குளிர் நடுக்கம் மெல்லிசாய் இருந்தது. விடாமல் பெய்துகொண்டிருந்த மழையின் சத்தம் நிரம்பி நின்றது. பூட்டம்மாவுக்குச் சாயத்தண்ணி குடித்தால் இதமாயிருக்குமெனத் தோன்றியது. மெள்ளவெழுந்து சலமிருக்க வெளியே போனாள். மயிர்க்காலெங்கும் வயோதிகம் வழிந்தபடியிருக்கும் தீவெளி வாழ்வில் ஊன்றிப் பிடித்தபடி முக்கிச் சலமிருந்தாள். வெளியே காற்று மோதி மழையின் பரவசம் பெருகியது. வழிந்தோடும் பெயலில் சலம் கலந்தது. சாயத்தண்ணியைக் குடித்து முடித்து கதிரையில் அமர்ந்தாள். அடுப்படிக்குள் இருந்தபடி அம்மா சொன்னாள்.

“ஆதீரன இன்னும் காணேல்ல, இவ்வளவு நேரமாய் நாகப்பர் வீட்டில அவன் இருக்க மாட்டான்.”

“அவன் நாகப்பர் வீட்டில இல்லை.”

“பின்ன எங்க போய்ட்டான்?”

“உப்புக்காட்டுக்குள்ள நிக்கிறான்” என்றாள் பூட்டம்மா.

“அங்க என்ன செய்யிறான்?”

“ஓம். அவன் வருவான், அவனைப் பற்றி யோசியாத.” பூட்டம்மா சொன்னாள்.

“உப்புக்காட்டுக்குள்ள போய் நிண்டு என்னத்தத்தான் தேடுகிறானோ தெரியேல்ல.”

“அவன் தேடுகிறது, எனக்குமில்ல, உனக்குமில்ல. நாளைக்குப் பிறக்கப்போகிற எங்கட குழந்தைகளுக்கு.”

“அப்பிடி என்னத்தத் தேடுறான்?” அம்மா கோபமாகக் கேட்டாள்.

“எங்கட நாய்ச்சிமார.”

“நாய்ச்சிமாரோட என்னத்த கண்டுபிடிக்கப் போறான்?”

“நடுகற்களைத்தான். அவனுக்குப் பன்னிச்சைத் தாய் துணை நிக்கும்.”

நாகப்பரும் நானும் வெக்கை தாங்க முடியாமல் காட்டுக்குள்ளிருக்கும் குளத்துக்குள் இறங்கி உடலைக் குளிர்மைப்படுத்தினோம். தாமரை அதிகம். நீச்சல் தெரியாதவர்கள் இறங்க பயப்படும் ஆழம். நான் நீச்சலில் வித்தைக்காரன் இல்லை. ஆனால் மூச்சைப் பிடித்து நீருக்குள்ளேயே தவமிருப்பதில் விருப்பம். நாகப்பர் கடுமையான நீச்சலடி வீரன். மேனியை மட்டுமல்ல, உள்ளத்தையும் புத்துணர்வாக்கும் நீரை நாள்தோறும் இவ்வுலகம் வணங்கியே ஆக வேண்டும். நாகப்பர் குளித்து முடித்து, கரையில் அமர்ந்திருந்து “ஏழு நடுகற்களை நீ கண்டுபிடிக்க இன்னும் சில நாள்கள் காத்திருக்க வேண்டும்” என்றார்.

“காத்திருக்க வேண்டுமா, ஏன்?”

“நீ, நடுகற்களைக் காணும் நாள் இந்த நிலத்துக்கு முக்கியமானது.”

“அந்த நாள் எப்ப?”

“தெரியவில்லை, ஆனால் இன்றில்லை, நாளையில்லை.”

“நீங்கள் என்னை திசைதிருப்பப் பார்க்கிறீர்கள், சோர்வடையச் செய்ய எண்ணுகிறீர்கள். நான் உங்கள் திட்டத்துக்குப் பலியாகேன்.”

“என்னையே நீ சந்தேகப்படுகிறாய்?” நாகப்பர் கொஞ்சம் நொந்தபடி என்னிடம் கேட்டார்.

“ஓம், என்னை நீங்கள் பின்வாங்கச் சொல்லுகிறீர்கள். காத்திருக்கச் சொல்லுகிறீர்கள். நான் உங்களைச் சந்தேகிப்பேன்” என்றேன்.

நாகப்பர் அதற்குப் பிறகு எதுவும் கதைக்கவில்லை. நாங்கள் காட்டின் ஒரு பக்க எல்லையை அண்மித்திருந்தோம். அங்கே நின்றிருந்த காட்டுப்பன்றி ஒன்று எங்களைக் கண்டு வெருண்டு ஓடியது. நடுகற்கள் இருக்கும் இடத்துக்கும் எங்களுக்குமிடையே ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்காலில் நீர்ப்பெருக்கு அதிகமாக இருந்தது.

“இப்பிடித் தண்ணி பெருக்கெடுத்து ஓடுது” என்றேன்.

“நேற்றைக்குப் பெய்த மழையே ஒரு நாளுக்கு ஓடும். நல்ல மழை” நாகப்பர் சொல்லிக்கொண்டு வாய்க்காலின் அருகில் போய் நின்றபடி “இங்கையிருந்து இன்னும் கொஞ்ச தூரத்தில் முனிப்பனை வந்திடும்” என்றார்.

“அப்ப ஏழு நடுகற்களுக்கு பக்கத்திலதான் இருக்கிறம்” என்றேன்.

“உனக்கு எப்பிடித் தெரியும்?”

“முனிப்பனை தாண்டிக் கொஞ்ச தூரமெண்டு நெடுவல் ராசன் சொன்னது ஞாபகம் இருக்கு.”

நாகப்பர் ஆமோதித்துத் தலையசைத்தார். நாங்கள் அந்த வாய்க்காலைக் கடந்துபோக, பல வகைகளில் முயன்றோம். இறுதியில் பெருக்கெடுத்தோடும் நீரைக் குறுக்காக நீந்திக் கடந்து மறுகரை அடையலாம் என எண்ணினோம். நாகப்பர் என்னை முதுகில் சுமந்து நீந்திப்போக முடியுமென்று நீரில் இறங்கினார்.

வீட்டுக்கு வந்திருந்த பவி மாமா அம்மாவிடம் என்னை விசாரித்திருக்கிறார். அம்மா சிரித்துக்கொண்டே “அவன் உப்புக்காட்டுக்குள்ள போயிருக்கிறான்” என்றாள்.

“அவனுக்கு என்ன பிரச்னை, ஏன் இப்பிடியெல்லாம் காடேறி மாதிரி சுத்தித் திரியிறான்?”

“அவன் செய்யிற காரியத்தை உங்களாலும் செய்ய ஏலாது” என்றாள் பூட்டம்மா.

“அப்பிடி என்ன காரியம்?” மாமாவின் நக்கல் கேள்வியை பூட்டம்மா எதிர்கொண்டாள்.

‘‘பறங்கியப் படைகளுக்கு எதிராகப் போர் செய்த ஆறு வன்னிச்சியரின் பணிப்பெண்ணான பொன்னச்சியைக் கேள்விப்பட்டிருக்கிறாயோ?’’ என்று மாமாவைப் பார்த்து பூட்டம்மா கேட்டாள்.

“இல்லை, ஆனால் பொன்னச்சி என்கிற பேர் நல்லாயிருக்கு” மாமா சொன்னார்.

“எங்கட ஏழு நாய்ச்சிமாரும் எப்பிடி போராடி மடிஞ்சதெண்டாவது தெரியுமோ?”

கடவுள்... பிசாசு... நிலம்! - 49

அம்மா எதுவும் சொல்லாமல் பூட்டம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள். அந்தப் பார்வைக்கு பதில், பூட்டம்மாவின் வழியாகத் தனக்குத் தெரியாத வரலாற்றை அவள் கேட்க விரும்புகிறாள் என்பதே. பூட்டம்மா ஏழு நாய்ச்சிமாரின் கதையைச் சொல்லத் தொடங்கினாள்.

``வன்னி வளநாட்டிலே வன்னியனார் ஆறுபேர் ஆட்சி செய்து வந்தனர்...’’ என்று சொல்லிக்கொண்டிருந்தபோது வீட்டின் முன்னால் வந்து நின்ற வாகனத்தின் வேகம் கிளப்பிய புழுதி எல்லோரையும் அங்கேயே பார்க்கவைத்தது. வாகனத்தைவிட்டு கீழே இறங்கிவந்த நேசன், ஒரு பொறுப்பாளர். அம்மா அவருக்கு ஒரு கதிரையைக் கொடுத்து இருக்கச் சொன்னாள். பவி மாமாவையும், பூட்டம்மாவையும் புதிதாகப் பார்த்த நேசன், அம்மாவுக்கு ஒரு செய்தியைச் சொன்னார்.

“எங்கட மருதன இண்டைக்குக் காலமை யாழ்ப்பாணத்தில சுட்டுப்போட்டாங்கள்.”

``ஐயோ கடவுளே! காயமே?”

“மருதன் வீரச்சாவு. ஆனால், இயக்கம் இப்ப அவரை ஒரு போராளி எண்டு க்ளெய்ம் பண்ணாது”

அம்மாவின் வயிற்றில் நெருப்பெரிந்தது. அவள் தன்னுடைய விம்மலை உடலுக்குள் புதைத்து வார்த்தைகளுக்கு பலம் கொடுத்தாள். பவி மாமா ஒரு போராளியாகத் தன்னைக் காண்பிக்காமல் நேசனோடு கதைத்துக் கொண்டிருந்தார். பூட்டம்மாவுக்கும் மருதனைத் தெரியும். அவருக்கு அடைக்கலம் கொடுத்து சில நாள்கள் வைத்திருந்தவள். அம்மா கண்களைத் துடைத்துக்கொண்டு “அந்தப் பிள்ளையும் என்னை விட்டிட்டு ஒரேயடியாய் போய்ட்டான், உங்களுக்குத் தேத்தண்ணி போடுறன்” என்றாள். நேசன் ஓமென்று தலையசைத்துவிட்டு மருதனின் உடலை யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்குள் கொண்டுவருவதற்கான வேலைத் திட்டங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். மருதனின் உடலைக் கொண்டுவந்து எங்களுடைய வீட்டில் வைத்து இறுதிக் கிரிகைகளைச் செய்ய வேண்டுமென அம்மா விரும்பினாள். நேசன் அதற்கு உதவுவதாகக் கூறினார். ஆனால், அதற்கு இரண்டு நாள்கள் ஆகிவிடுமென எல்லோருக்கும் தெரிந்திருந்தது. நேசனுக்கு அம்மா தேத்தண்ணியைக் கொண்டுவந்து கொடுத்தாள். பவி மாமா அங்கிருந்து விடைபெற ஆயத்தமானார். பூட்டம்மா கொஞ்ச நேரம் இருக்கச் சொன்னாள். மருதன் செத்துப்போய்விட்டார் என்றால், அக்காவினால் தாங்க முடியாது.

நாகப்பரும் நானும் வாய்க்காலைக் கடந்து முனிப்பனையின் கீழே நின்றிருந்தோம். அந்தோ தெரிகிறது நடுகற்கள் என்று சொல்லிக்கொண்டு முன்னே ஓடிப்போனேன்.

‘நாகப்பர் நில்லடா விசரா” என்று உறுமினார்.

ஒருகணம் திகைத்து நின்று, அவரைத் திரும்பிப் பார்த்தேன். அவரைக் காணவில்லை.

(நீளும்...)