Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 50

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

அம்மா, இவ்வளவு இறுக்கமாய் கதையாதேங்கோ, என்னைக் கொண்டுபோய் எரியுங்கோ” என்று சொல்லுவார்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 50

அம்மா, இவ்வளவு இறுக்கமாய் கதையாதேங்கோ, என்னைக் கொண்டுபோய் எரியுங்கோ” என்று சொல்லுவார்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

மருதனுடைய உடல் வன்னிக்குள் வந்துசேர இரண்டு நாள்கள் ஆகின. கொல்லப்பட்டவர் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதில் ராணுவம் உறுதியாக இருந்தது. ஆனால், புலிகள் மறுத்துவிட்டனர். மருதனின் உடல் எங்களுடைய வீட்டுக்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்பாக, நானும் நாகப்பரும் உப்புக்காட்டைவிட்டு ஊருக்குள் நுழைந்தோம். அம்மாவும், ஊர்ச்சனங்கள் சிலரும் கொண்டுவரப்படும் சடலத்துக்காகக் காத்திருந்தனர். அம்மா என்னைக் கண்டதும், முறைத்துப் பார்த்தபடி “காடேறி இஞ்ச வா” என்றாள். நான் அம்மாவினருகே ஓடிப்போய் அவளை அணைத்துக்கொண்டேன். மருதனின் உடலைக் கொண்டுவந்து இறக்கினார்கள். உடல் கறுத்திருந்தது. எப்போதும் விழிப்புடனிருக்கும் ஒரு போராளியின் கண்கள், அவன் சாவுக்குப் பின்னரும் அந்த விழிப்பு நிலையிலிருந்து பின்வாங்குவதில்லை. கண்கள் மூடிக்கிடக்கும் மருதனின் முகத்தைப் பார்த்தேன். விழிப்பும் அமைதியும் கூடி நின்றன. கண்கள் திறந்து என்னைப் பார்த்து “என்ன ஆதீரன், இப்பிடிப் பார்க்கிறாய்?” என்று கேட்பதைப்போல ஒரு காட்சி பிறக்காதோ என ஏங்கினேன். அண்ணாவுக்கும் அக்காவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அண்ணா வருவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்தது. அக்கா வந்தாலும் வரலாம், ஆனால் உறுதியாகச் சொல்ல முடியாதிருந்தது.

கடவுள்... பிசாசு... நிலம்! - 50

மருதன் ஒரு போராளி. ஆனால், இயக்கம் அவரைப் பொறுப்பேற்கவில்லை. ஒரு மாவீரராக, மண்ணில் விதைக்கப்படவேண்டிய வித்துடலை, ஒரு சாதாரண மனிதனாக இடுகாட்டில் வைத்து எரியூட்டப்போகிறோம் என்கிற குழப்பம் என்னை நோகச் செய்தது. வீரச்சாவுக்கும் வீண்சாவுக்கும் இடையே ஒரு மனிதனின் இருப்பை நினைத்துப் பார்க்கிறேன். `இயக்கம் ஏன் மருதனை இப்படி எந்த அடையாளமும் இல்லாமல் கைவிடுகிறது?’ என்கிற கோபம் எனக்குள் கேள்வியாகப் பெருக்கெடுத்தது. வித்துடலாகப் போற்றப்படவேண்டிய ஒருவரின் உடல் வெறும் பூதவுடலாக அழைக்கப்படுவதில் எனக்கு ஒப்பில்லை. `மண்ணுக்காக மடிந்த ஒரு மாவீரன் நீ, உன்னை நான் போற்றுவேன் மருதன்!’ என்று ஒரு கவிதையை எழுதிப் பாடினேன். பூட்டம்மா என்னை ஆறுதல்படுத்தினாள். பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் நேசன், அம்மாவை அழைத்து `நீங்கள் செய்ய விரும்பும் சடங்குகளைச் செய்யுங்கள்’ என்று சொன்னார். அம்மா ஒரே மூச்சில் சொன்னாள்.

“சடங்கொண்டும் இல்லை, மருதனை நாங்கள் எங்கட காணிக்குள்ளதான் வெக்கப்போறம்.” பூட்டம்மா வேண்டாமென்று மறுத்தாள். அப்பாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தினருகே மருதனின் உடலும் புதைக்கப்படுகிறது என்பது சிலருக்குப் பிடிக்கவில்லை.

அம்மாவைச் சிலர் “விசர் வேலை பார்க்காமல், சுடலைக்குக் கொண்டு போ” என்றனர். அம்மா உறுதியாக இருந்தாள். ``இது எனது முடிவு. இந்த முடிவில் இனி எந்த மாற்றமும் இல்லை. யாரும் என்னை நிர்ப்பந்திக்க வேண்டாம்’’ எனக் கொஞ்சம் கடுமையாகச் சொன்னாள்.

மருதன் இருந்திருந்தால் சிரித்துக்கொண்டே “அம்மா, இவ்வளவு இறுக்கமாய் கதையாதேங்கோ, என்னைக் கொண்டுபோய் எரியுங்கோ” என்று சொல்லுவார். நான் அம்மாவின் முடிவுக்குத் துணையாக இருந்தேன். இன்றில்லை, ஒருநாள் மருதனை இயக்கம் மாவீரராக அறிவிக்கும்போது, இந்த உடலை இங்கிருந்து எடுத்துச் சென்று துயிலுமில்லத்தில் விதைக்க வேண்டுமென அம்மாவிடம் சொன்னேன். ``அதுதான் என்ர திட்டமும்’’ என்றாள். ஊர்ச் சனங்கள் சிலர் முகம் சுளித்தனர். அம்மா ``அவர்களை எந்தக் கதையுமில்லாமல் வெளியேறுங்கள்’’ என்று சொல்லி வீட்டைவிட்டு அனுப்பினாள். மருதனின் உடலுக்குப் பலர் வந்து மரியாதை செலுத்தினர்.

அக்கா வந்துவிடுவாள் என்று உறுதியாக மாலையில் தகவல் கிடைத்தது. ஆனால், உடலிலிருந்து நாற்றம் கிளம்பத் தொடங்கியது. உடல் நன்றாக வீங்கியிருந்தது. தலையில் இரண்டு துப்பாக்கிச்சூடுகள் இருந்தன. முகம் மெல்ல மெல்ல மாறி இன்னும் விகாரமாக ஆகிவிட்டது. உயிரற்ற ஒரு மனிதனின் உடல், நிமிடத்துக்கு நிமிடம் இவ்வுலகை வெறுத்து, தன்னை அடையாளம் இழக்கச் செய்துவிடுகிறது. அப்பாவின் அருகிலேயே இன்னொரு குழி தோண்டப்பட்டது. இப்படியான வேலைகளை அழகுணர்ச்சியோடு செய்து தருகிற கூலியாளிடமே அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. அக்கா வந்துவிட்டால் அடுத்த ஏற்பாடுகளை முடித்துவிடலாமென எல்லோரும் காத்திருந்தனர். அக்காவின் வருகைக்காகக் காத்திருக்கும் எம்மைப்போலவே மருதனும் காத்திருந்தார். மாலை மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டே போயிற்று. அந்தி விழுந்து இருட்டத் தொடங்கிய வேளையில், அக்காவின் வருகை குறித்த தகவல் வந்து சேர்ந்தது. அக்கா வீட்டுக்கு வருவதற்கு இரவு ஒன்பது மணியாகும் என்று நேசன் வந்து அம்மாவிடம் சொன்னார்.

அம்மா ``அதொண்டும் பிரச்னையில்லை. அவள் வந்து பார்த்ததுக்குப் பிறகு எடுப்பம்” என்றாள்.

மருதன் அண்ணாவின் உடலிலிருந்து ஊன் வழியத் தொடங்கிற்று. விளக்கு வெளிச்சத்துக்கு வருகிற இரவுப் பூச்சிகள் அவர் உடலில் ஊர்ந்துகொண்டிருந்தன. அம்மா வேப்பிலையால் தட்டிக்கொண்டிருந்தாள். முகம் கொடுக்கவும், மூச்சிழுக்கவும் முடியாதபடி உடலிலிருந்து வெளியேறிய நாற்றத்தைப் போக்க ஊதுபத்தி கொளுத்தினோம். சில வாசனைத் திரவியங்களை உடல்மீது அடித்தோம். மருதனின் குடும்பம் எங்கே என்று கேள்விகள் எழுந்தன. எல்லாவற்றுக்கும் அம்மாவே பதில் சொன்னாள்.

“அவர்கள் திருகோணமலை. இப்ப ஒருத்தருமில்லை. மருதன் சின்னப் பெடியனிலேயே இயக்கத்துக்கு வந்திட்டார்.”

“இயக்கம் ஏன் இவரைப் பொறுப்பேற்கவில்லை?”

“அது இயக்கத்தோட முடிவு, அவர்களோட ரகசியம்.”

“ஆனால், இப்பிடி ஒருத்தர இயக்கமெண்டு சொல்லாமல் விடக்கூடாதெல்லே?”

“இயக்கம் என்ன செய்யோணும் எண்டு சொல்ல நாங்கள் ஆர். அவங்களுக்கு ஒரு முடிவு இப்பிடி எடுக்கோணும் எண்டு ஏதாவது நிர்பந்தம் இருக்கும். அதில போய் நிண்டு நாங்கள் என்ன செய்யேலும்?”

நேசன் அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவரின் அருகிலேயே இருந்தேன். மருதனின் நினைவுகளைச் சொல்லிக்கொண்டிருந்தேன். நேசனுக்குப் பெரிய அளவில் மருதனைத் தெரியாது. அவர் நான் சொல்வதை வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தார். ``இப்படியான ஒரு போராளியை ஏன் இயக்கம் பொறுப்பேற்கவில்லை?’’ என்று நேசனிடம் கேட்டேன். அவர் “எனக்கும் தெரியவில்லை தம்பி, ஆனால் தலைமைச் செயலகம்தான் இந்த முடிவை எடுத்திருக்கும்” என்றார். இரவு இன்னும் கொஞ்சம் பேர் வந்திருந்தனர். அவர்களுக்கு வெற்றிலையும், பாக்கும், பீடியும் தட்டில் வைத்தேன். மருதனுடைய உடல் நாற்றம், அவர்களை நீண்ட நேரம் அமர்ந்திருக்க இடமளிக்கவில்லை. சிலர் மூச்சைப்பிடித்து அமர்ந்திருந்துவிட்டு அவசரமாக வெளியேறினர். அம்மாவிடம் “பிள்ளை வருமட்டும் ஏன் வெச்சிருக்க வேணும், அடுத்த வேலைகளைத் தொடங்குவம்” என்றனர். அம்மா, “இல்லை அவள் வரட்டும். மருதனை அவள் இறுதியாகப் பார்க்க வேண்டும்” என்று சொல்லி மூக்கைச் சீறி எறிந்தாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 50

நினைக்கும் கணம்தோறும் மருதனின் புன்னகை, ரகசியம், விழிப்பு, நிதானம், என எல்லாமும் வந்துபோயின. நாகப்பர் கடுமையாகக் கள்ளருந்தி நடந்து வந்துகொண்டிருந்தார். இடையிடையே காத்தவராயன் கூத்திலிருந்து சில பாடல்களைப் பாடிக்கொண்டு பீடியை மூட்டினார். மணியன் அப்போதுதான் வீட்டுக்குள் வந்தான். முல்லைத்தீவிலிருந்து செய்தி கேள்விப்பட்டு வந்ததாகச் சொன்னான். அவனது தந்தையார் சொல்லியிருக்க வேண்டும். மணியன், மருதனின் உடலையே பார்த்துக்கொண்டிருந்தான். கண்கள் கலங்கி அவரது உடலைத் தன்னுடலால் போர்த்திக்கொண்டு அழுதான். அவனுக்கு நாற்றமுமில்லை, நிணமும் இல்லை. மருதன் என்கிற ஒரு மாபெரும் போராளியின் வீழ்ந்த சரீரம் மட்டும் இருந்தது. மணியனை அழைத்துவந்து அமரச் செய்தேன். “இதெல்லாம் அந்தப் பழம் செய்த துரோகம்தான்” என்று மணியன் கத்திச் சொன்னான். அவனை நான் சமாதானப்படுத்தினேன். அவன் மூர்க்கம்கொண்டு அழுதெறிந்து கண்ணீரை உகுத்தபடியிருந்தான். மருதன் மெல்லச் சிரித்தபடி “மணியன் இப்பிடி சின்னப்பிள்ளையள் மாதிரி அழாமல், வேலையைப் பார்” என்று சொல்லுவார் என்று எண்ணிக்கொண்டேன்.

இரவு நீளத் தொடங்கியிருந்தது. அம்மா வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள். நேசன் வீட்டின் முகப்பிலேயே சனங்களோடு அமர்ந்திருந்தார். அவரின் வோக்கி இரைகிறது. நேசன், அக்கா வந்துசேர எவ்வளவு நேரமாகுமென மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்கிறார். இன்னும் சில நிமிடங்கள். பன்னிச்சையடிக்குள் வந்துவிடுவோமெனத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மருதனை அக்கா இப்படிப் பார்த்தால், துடித்துப்போய்விடுவாள். அவளின் உயிர் கொடுமையாக அந்தரிக்கும். அவளை எப்படி ஆறுதல் சொல்லி அமைதிப்படுத்துவது? மீண்டும் ஒரு பெட்டி ஊதுபத்தியைக் கொளுத்தி தலைமாட்டிலும் கால்மாட்டிலும் வைத்தோம். பூட்டம்மா விழித்திருந்தாள். நாகப்பர் கள்வெறியில் கூத்துப்பாடலை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாடிக்கொண்டிருந்தார். மருதன் எப்போதும்போல எல்லாவற்றையும் அவதானித்துக்கொண்டிருந்தார். மணியன் சொன்னான், “மருதனைப்போல ஒரு நல்ல மனுஷனை நான் சந்திக்கவேயில்லை. எல்லாற்ற கஷ்டத்தையும் தன்ர கஷ்டமாய்ப் பார்க்கிற மனுஷன்...”

நான் அவன் சொல்வதைத் தலையசைத்து ஆமோதித்தேன். போராளிகளின் இரண்டு பிக்கப் வாகனங்கள் எங்கள் வீட்டைக் கடந்துபோயின. ஆனால், அந்த வாகனத்தில்தான் அக்கா வருகிறாள் என எதிர்பார்த்தோம் அவளில்லை.

சில நிமிடங்கள் கழித்து வந்த வேறொரு வாகனம் எங்களுடைய வீட்டின் முன்னால் நின்றது.

(நீளும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism