Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 51

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

குன்றுமணியையும் செங்கல்லையும் சேர்த்து இடித்து மாப்போல உருட்டி, எல்லோர் கையிலும் உருண்டையாக்கிக் கொடுத்தேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 51

குன்றுமணியையும் செங்கல்லையும் சேர்த்து இடித்து மாப்போல உருட்டி, எல்லோர் கையிலும் உருண்டையாக்கிக் கொடுத்தேன்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

பொன்னச்சி நின்று கொண்டிருந்தாள். வேட்கையின் தடத்தில் தம்முயிர் விதைத்தவர்களில் ஒருத்தி. மண்ணுக்காய் நஞ்சுண்டு மடியும் மரபின் முதற்சோதியின் ஏழாவது அடவாக ஆகியிருப்பவள். பொன்னச்சியின் கண்கள் சடுதியாக என்னுடைய அம்மாவை ஞாபகப்படுத்தின. “ஆதீரா, உன்னை இங்கே அழைத்துவந்த உன்னுடைய பாதங்கள், இனி சோர்விலாது நடக்கப்போகின்றன” என்றாள். பொன்னச்சி என்ன சொல்கிறாள் என்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. என்னுடைய பூட்டம்மா அருள்வாக்குச் சொல்வதைப் போன்ற மொழியில் நிறைய சொல்லிக்கொண்டிருந்தாள். “நிலத்தின் நீளம் சுருங்கி, கடல் உள்ளே போகப்போகிறது. அன்றொரு நாள் குன்றுமணிகளையும் செங்கற்களையும் அரைத்து நாமுண்ட நஞ்சின் மீதியை நிலம் முழுதும் உண்ணப்போகிறது” என்றாள். பொன்னச்சியை எதிர்த்து கதைக்க விரும்பினேன். அவள் சொல்வது சாடையாக விளங்கத் தொடங்கியது. “இனியொரு யுத்தம் நடக்குமாக இருந்தால், அது எங்களை அழித்துவிடும்” என பூட்டம்மா சொன்னதைத்தான் சொல்கிறாள். நான் பொன்னச்சியோடு கதைக்க விரும்பவில்லை. அவளைவிட்டு நடந்து ஏழு நடுகற்கள் அமைந்திருந்த இடத்துக்குள் நுழைந்தேன். இதுவோர் துயிலுமில்லம். ஆதியில் வீரச்சாவைத் தழுவிய ஏழு அம்மைகளின் துயிலுமில்லம்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 51

“வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்.

வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்.

உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்.

உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்.

வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்.”

என்ற மாவீரர் நாள் பாடல் வரிகள் எனக்குள் ஒலிக்கின்றன.

நினைவு தெரிந்து முதன்முறையாக நான் யாழ்ப்பாணத்திலுள்ள கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் சென்றேன். பூட்டம்மாவுக்குத் துணையாக அக்கா என்னை அனுப்பிவைத்தாள். கல்லறைகளும் நடுகற்களும் நிறைந்திருந்த பெரு வளாகத்தில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. பெருந்திரளான சனக் கூட்டத்தின் நடுவே நடந்து செல்வதே களைப்பாக இருந்தது. மலர் மாலைகளும் ஊதுபத்திகளும் படையல்களோடும், கல்லறைகளுக்கு முன்பாகவும், நடுகற்களுக்கு முன்பாகவும் மாவீரர்களின் பெற்றோர்களும் குடும்பத்தாரும் அமர்ந்திருந்தனர். பூட்டம்மா தன்னுடைய மகனின் நடுகல்லைக் கண்டடைந்து அதன் முன்னே போய் அமர்ந்திருந்தாள். நாங்கள் கொண்டுசென்ற மாலையை நடுகல்லுக்கு அணிவித்தாள். வாசனையில் சிறந்த ஊதுபத்தியை எடுத்துக் கொளுத்தினேன். தனது மகனுக்குப் பிடித்த சிறிய பண்டங்களை எடுத்துப் படையலிட்டாள். தங்களுடைய பிள்ளைகளின் கல்லறைக்கு முன்னாலும், நடுகல்லுக்கு முன்னாலும் கண்ணீர் சொரிய அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரும் வீரயுகத்தின் மாந்தர்கள். ஆயுதம் ஏந்திப் புறப்பட்ட விடுதலை வீரர்களைக் கருவில் சுமந்தவர்களின் கண்ணீர், அந்திப்பொழுதின் வானத்தை என்றுமில்லாதவாறு இருட்டச்செய்யும். இந்நிலத்தின் கண்ணீர், மழையை வரவழைக்கும். மின்னலும் இடியும் பெருகி மண்ணுக்குள் வாழும் பிள்ளைகள் பேசும் அசரீரியாக உருக்கொள்ளும். மழையின் துளிகள் விழும் அக்கணமெங்கும் அசையும் தீபத்தின் சுடர்கள் அணைவதில்லை. தியாகத்தை மிஞ்ச பூமியிடம் இயற்கையில்லை. தீரத்தின் கனலில் உயிர் வளர்க்கும், இவ்வாழ்வின் உணர்ச்சியான பொழுது இது. மகவுக்குப் பால் சுரந்த அம்மைகளின் ஆற்றாமையைத் தாங்காது, தேச விடுதலைக்காகக் குருதிப்பால் ஊட்டிய மாவீரர்கள் மண்ணுக்குள்ளிருந்து கதைக்கத் தொடங்குவர். கல்லறைகளுக்கும் நடுகற்களுக்கும் தலை கோதியபடி மகனையோ, மகளையோ சீராட்டுகிறவர்கள் தாயும் நிலமும் ஆகி தாய்நிலமாகக் காட்சியளிக்கின்றனர். பூட்டம்மா அழுவாள். விக்கித்து அழுகிற பூட்டம்மாவை முதன்முறையாக அங்குதான் பார்த்தேன். அவள் எச்சிலை விழுங்கி விழுங்கி அழுவதும், தனது சேலையால் கண்ணீரைத் துடைப்பதுமாக இருந்தாள். கல்லறைக்கும் நடுகல்லுக்கும் என்ன வித்தியாசம் என்று குழப்பமாகவிருந்தது. பூட்டம்மாவிடம் கேட்டேன்.

“கடைசியில பெடியளோட உடம்பு கிடைக்காமல் போனால், நடுகல்லாய் கட்டிப்போடுவினம். உடம்பு கிடைச்சால் கல்லறை” பூட்டம்மா சொன்னாள்.

“அப்ப, இவரோட வித்துடல் கிடைக்கேல்லையே?”

“இல்லை. ராணுவம் மொத்தம் பதினாறு பெடியளையும் ரோட்டில போட்டு எரிச்சவங்கள்” என்று சொல்லியபடியே பூட்டம்மா அடிவயிற்றில் அடித்துக்கொண்டு அழுதாள். தீபக்கடல் நடுவே நானொரு நடுகல்லின் முன்னே நின்றுகொண்டிருந்தேன். தீப ஒளியின் மீது மழையழகு தீற்றலாக வழிந்தது. அந்த மாவீரர் நாள் உரையில் நிறைய சூளுரைகள் தொனித்தன. பூட்டம்மா உரையைக் கேட்டுவிட்டுச் சொன்னாள்.

“மோனே, பிரபாவுக்கு இப்ப இருக்கிற நெருக்கடியைவிடவும் கூடப்போகுது. ஆனால், சனத்தை மட்டுமே நம்புகிற தலைவனாக இருக்கிறது ஒருவகையில நல்ல பலம்.”

கோப்பாய் துயிலுமில்லத்தைவிட்டு நாங்கள் வெளியே வருவதற்கிடையில், பூட்டம்மாவை இரண்டு தடவைத் தவறவிட்டுவிட்டேன். சனக் கூட்டம். போராளிகளைப்போலவே ராணுவப் புலனாய்வாளர்களும் நின்றிருந்தனர். பூட்டம்மா நிலத்தைப் பார்த்து மட்டுமே நடந்தாள். நாங்கள் பேருந்தில் ஏறுகிற வரை எதுவும் கதைக்கவில்லை. அவள் வீட்டிலிருந்து கொண்டுவந்த தண்ணீரை எடுத்து இரண்டு மிடறு குடித்துவிட்டு என்னிடம் தந்தாள். தாகம்தான். ஆனால், நீரருந்திப் போகும் தாகமில்லை.

“கூண்டுப் பறவை சிறகு விரிக்கும்

குனிந்த முகங்கள் நிமிர்ந்து சிரிக்கும்

மாண்ட வீரர் கனவு பலிக்கும்

மகிழ்ச்சிக் கடலில் தமிழ்மண் குளிக்கும்”
என்ற காசி ஆனந்தனின் பாடல்வரிகளை தேனிசை செல்லப்பா எனக்குள் பாடத் தொடங்கினார்.

நடுகற்கள். உடல் கிடைக்காத வீர மறவர்களின் நினைவுப் பீடம். ஆனால் இந்தக் காட்டிலேயே நஞ்சருந்தி மாண்ட இந்த எழுவரின் உடலும் எங்கே போயின? திரும்பிப் பார்த்தேன். பொன்னச்சி சிரித்துக்கொண்டு சொன்னாள்,

“இங்குதான் இருக்கிறோம், எங்கும் போகவில்லை.”

“நீங்கள் நஞ்சருந்துவதற்கு முன்னர் என்ன நடந்தது?”

கடவுள்... பிசாசு... நிலம்! - 51

``குன்றுமணியையும் செங்கல்லையும் சேர்த்து இடித்து மாப்போல உருட்டி, எல்லோர் கையிலும் உருண்டையாக்கிக் கொடுத்தேன். எங்கள் அணியிலிருந்த மூத்த நாச்சி சொன்னாள்... `சகோதரிகளே... நாங்கள் நஞ்சருந்துவது அச்சத்தாலோ, கோழைத்தனத்தாலோ அல்ல. பகைவன் கையில் அகப்பட்டு மண்டியிடக் கூடாது என்பதற்காக. ஆம். நாங்கள் சாவை மண்டியிடச் செய்வோம்.’

அதற்கு இளைய நாச்சி கேட்டாள். `சாவதற்கு எங்களுக்கு அச்சமில்லை, ஆனால் இந்தப் பகைவர்களை உயிருடன் விட்டுவிட்டு மடிவதா என்கிற சோகம் மட்டுமே என்னை வதைக்கிறது.’ `நாம் அவர்களிடம் நிலத்தை இழந்துவிட்டோம். எங்கள் குடிகளை அவர்கள் வன்கவர் செய்துவிட்டனர். எங்கள் படைவீரர்களை நாம் முற்றாகப் பறிகொடுத்துவிட்டோம். அவர்களின் சுடுகலனுக்கு முன்னால் எங்கள் போர்க் குதிரைகள் சருகுகளைப்போல நிலமெங்கும் இறந்து வீழ்கின்றன’ சொன்னாள் மூத்த நாச்சி.

இன்னொரு நாச்சி தன்னுடைய உள்ளங்கையில் இருக்கிற நஞ்சுருண்டையை வாயில் போட்டு சாப்பிடத் தொடங்கினாள். `இந்த மண் எங்களின் சொந்த மண் – விடுதலை அடைவதே எங்கள் சத்தியம்’ என்று சொன்னபடி உயிரை மாய்த்துக்கொண்டாள். அப்போதுதான் இந்தக் காட்டில் முதல் விதை விழுந்தது. அப்போதும் மழை பொழிந்தது. நாங்கள் எழுவரும் அமர்ந்திருந்த இடத்தில் செங்காந்தள் மலர்கள் பூக்கத் தொடங்கின. முதல் விதையான எங்கள் சகோதரியை செங்காந்தள் மலர்களினால் அஞ்சலி செய்தோம்.

இளைய நாச்சி சொன்னாள், `நான் போரிடப்போகிறேன். அதற்கான சாத்தியங்களைத் தேடப்போகிறேன். எதிரியின் கையில் அகப்பட்டால் என்னை நானே அழித்துக்கொள்வேன்.’

`உன்னை நீயே அழித்துக்கொள்ள வழி கிடைக்கும்படியாக எதிரியினர் நடந்துகொள்ள மாட்டார்கள்.’

`ஏன்?’

`தன்னுடைய பகைவனை உயிருடன் பிடித்துக் கொண்டால், வன்கவர் வெறியர்கள் மிலேச்சர்களைப்போல நடந்துகொள்வார்கள். போர் செய்வதை நீ தவறாக விளங்கிக்கொண்டிருக்கிறாய். எதிரியோடு சம பலமாக இருந்தாலொழிய போரை நாம் வெல்ல முடியாது.’

இளைய நாச்சி சற்றுத் தணிந்தாள். அவளது உள்ளங்கையில் கிடந்த நஞ்சுருண்டையை விழுங்கிக்கொண்டே `சுதந்திரத் தாயகமே எங்கள் தாகம்’ என்று சொன்னபடி மண்ணில் விழுந்தாள். பின்னர் எல்லோரும் சிறு நேர இடைவெளிகளில் நஞ்சையுண்டு, மண்ணை முத்தமிட்டோம். இறுதியிலும் இறுதியாக நான் நஞ்சுருண்டையை உண்பதற்கு முன்பாக அறுவரின் வித்துடல்களையும் அடுக்கிவைத்து அவர்களது கூந்தலில் செங்காந்தள் மலர்களைச் சூடிவிட்டேன். எனது கூந்தலிலும் ஒரு மலரைச் சூடி முடித்து நஞ்சுண்டேன்.’’

“பின்னர் என்ன ஆயிற்று?” என்று பொன்னச்சியிடம் கேட்க விளைந்தேன். ஆனால், என்னை நானே தடுத்தாட்கொண்டேன்.

பொன்னச்சி சிரித்துக்கொண்டு சொன்னாள். ``நாம் நஞ்சருந்திய நாளில் வானில் நிலவு பூரணமாகச் செழித்திருந்தது. மண்ணுக்காக மாண்டுபோன எழுவரின் மேனியிலும் நிலவின் ஒளி பரவி நின்றது. நாள்கள் சென்றன. மண்ணை வன்கவர்ந்த பறங்கிப் படையினர் சனங்களைக் கொடுமை செய்தனர். பெருமலையைச் சேர்ந்த நம்பியைப் பறங்கிப் படையினர் கொலை மிரட்டல் விடுத்து “உன்னுடைய எல்லையிலேயே நீ நடமாடு” என்று எச்சரித்தனர். துரோகியானவன் எதிரியின் காலடியில் மண்டியிட்டு, தனது கீழ்மைகளை அரங்கேற்றி, அதிகாரத்தின் ஒரு கவளச் சோற்றுக்காகக் காத்திருப்பான். நம்பி அப்படியே பறங்கிப் படையினரின் வாசல்களில் காத்திருந்தான். நஞ்சருந்தி மாண்ட எங்களுடைய உடலைக் காட்டுப்பன்றிகள் இழுத்துச் சென்றன. காகங்கள் கொத்தியுண்டன. புழுக்கள் நிறைந்து நெளிந்தன. அழுகிய நாற்றத்தோடு நம்முடல்கள் இந்தக் காட்டிடையே விலங்குகளுக்கு இரையாகின.’’

``பின்னர் இந்த நடுகற்களைக் கட்டியது யார்?’’ என்று கேட்டேன்.

``சொல்கிறேன்’’ என்றாள் பொன்னச்சி.

(நீளும்...)