Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 52

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

இந்த மழையிருட்டில் அவர்கள் விழிப்போடு இருக்கக்கூடும்” இளைய வன்னியனார்களில் ஒருவன் சொன்னான்

கடவுள்... பிசாசு... நிலம்! - 52

இந்த மழையிருட்டில் அவர்கள் விழிப்போடு இருக்கக்கூடும்” இளைய வன்னியனார்களில் ஒருவன் சொன்னான்

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

உப்புக்காட்டுக்குள் ஏழு நடுகற்கள் இருக்கின்றன என்கிற செய்தியை ஊருக்கெல்லாம் அறிவிக்க வேண்டுமென ஆசை பிறந்திற்று. இந்தக் காட்டிடையே பதுங்கித் திரிந்த போராளிகள் யாருமே இதைக் காணவில்லையா என்ற ஆச்சர்யமும் தோன்றிற்று. பன்னிச்சைத் தாயின் அருள்பாலிக்கும் இந்த ஊரில், எத்தனையோ சிறப்புகள் இருக்கின்றன. இந்த எழுவரின் நடுகற்களும் எங்களுடைய வீர மரபின் சாட்சி. மண்டியிடத் தெரியாத தமிழர் மறத்தை, இந்த ஏழு நடுகற்களும் எமக்கு போதிக்கின்றன. பொன்னச்சி என்னைப் பார்த்துக்கொண்டே நின்றாள். நான் பித்தேறிய ஒருவனைப்போல நடுகற்களைத் தடவிக்கொண்டிருந்தேன். “நஞ்சருந்தி மாண்ட உங்களுடைய உடலைக் காட்டுப்பன்றிகள் இழுத்துச் சென்றன. காகங்கள் கொத்தியுண்டன. புழுக்கள் நிறைந்து நெளிந்தன. அழுகிய நாற்றத்தோடு உங்களுடல்கள் இந்தக் காட்டிடையே விலங்குகளுக்கு இரையாகின என்றீர்கள். பின்னர் இந்த நடுகற்களைக் கட்டியது யார் என்று கேட்டேன் அல்லவா?” என்றேன். பொன்னச்சி மிச்ச கதையைச் சொல்லத் தொடங்கினாள். அவள் சொல்லும் கதையின் பின்னணியில் சிறு பறவை இடையிடையே `க்க்க்க்... க்க்க்க்...’ என்று இசை கோர்த்தது. ``இந்தக் கதையும் யாருக்கும் தெரியாதது’’ என்றாள் பொன்னச்சி. கண்களை விரித்து வியப்புடன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

நாங்கள் உப்புக்காட்டில் இறந்துபோய் மாதங்கள் ஆயின. தலயாத்திரையை முடித்துக்கொண்டு தமிழ்நாட்டிலிருந்து வந்த வன்னியனார்கள் அறுவரும், தாய்நாடு பறங்கியர் வசமானதை அறிந்து கோபங்கொண்டு தாக்குதல் நடத்தத் துணிந்தனர். நாகப்பரும் அவரது படைகளும் அடைந்த வெற்றியும், அதன் பிறகான அவரது வீரச்சாவு செய்தியும் கவலைகொள்ளச் செய்தன. அவர்களுடைய இல்லாள்களுக்கு நடந்தது என்ன, எங்கே போயினர் என்பதை அறிய அவர்கள் நிறைய முயற்சிகளைச் செய்தனர். ஆனால், எங்களின் விசுவாசிகளுக்குக்கூட நாங்கள் என்ன முடிவை எடுத்தோம் என்பது தெரியாமல் இருந்தது.

கடவுள்... பிசாசு... நிலம்! - 52

ஆறு வன்னியனார்களும் நாட்டுக்குள் வந்துவிட்டனர் என்கிற செய்தியைப் பறங்கிப்படை மோப்பம் பிடித்தது. அவர்களை அழித்தொழிக்க மூர்க்கம்கொண்டு தேடியது. ஆனால், அவர்கள் புகலிடம் தேடி சனங்களின் வீடுகளுக்குள் அடைக்கலம் கொண்டனர். வன்னியனார்கள் ஆறு பேரும் போர்க்கலையில் சிறந்தவர்கள். அவர்களைவிட்டுவைத்தால் தனக்கும் ஆபத்தென நம்பி பறங்கிப்படையை உசுப்பிக்கொண்டிருந்தான். துரோகத்தின் குகையில் அவனது கண்கள் இருள் பழகிக்கொண்டன.

வன்னிநாட்டின் ஒவ்வொரு கிராமமும் சுற்றிவளைக்கப்பட்டது. சனங்களின் குடியிருப்புகள் தேடுதல் என்ற பெயரில் சூறையாடப்பட்டன. பறங்கிப்படை எல்லோரையும் சந்தேகம் கொண்டது. துரோகி நம்பி, பறங்கிப்படைகளுக்கு வன்னிக்காட்டின் புவியியலை வரைந்தளித்தான். பறங்கிப்படை வேகங்கொண்டு காடுகளுக்குள் இறங்கியது. காட்டினுள்ளே அவர்களுக்குச் சவாலாக வேட்டை நாய்கள் இருந்தன. விரட்டி விரட்டி அவர்களைக் கடித்துக் குதறப் பாய்ந்தன. ஒவ்வொரு தோட்டாவும் வெளியில் பாய்ந்த போதில், நாய்கள் நிலத்தில் சாய்ந்தன. ஏதோவொரு காட்டுக்குள்தான் அறுவரும் மறைந்திருக்கின்றனர் என்பதில் பறங்கிப்படை தெளிவடைந்தது. வன்னி நாட்டுக்குள் இருக்கும் காடுகளைச் சல்லடையாகத் தேடுவது, சாத்தியமற்றது. காடு தனது மகவுகளையே காப்பாற்றும். அது ஒருபோதும் தனக்குள் பதுங்கிக்கிடக்கும் பாய்ச்சலை எதிரியிடம் காட்டிக் கொடுக்காது. அறுவரும் உப்புக்காட்டுக்குள் மறைந்திருந்தனர். பறங்கிப்படை தேடிக் களைத்தது. வன்னியனார்கள் நாட்டுக்குத் திரும்பவில்லை, அவர்கள் திரும்பியதாக வந்த தகவலே பொய்யானது என முடிவுசெய்தார்கள். காடு தனது பிள்ளைகளைத் தாய்மையோடு காத்துநின்றது. ஒருநாள் இரவு கடுமையாக மழை பெய்யத் தொடங்கியது. அறுவரில் மூத்த வன்னியனார் சொன்னார்.

“இதுதான் சரியான நேரம், இந்த மழையிருட்டில் நாம் பறங்கிப்படைகளைத் தாக்கி அழிக்கலாம். அவர்களை வீழ்த்தலாம்.”

“இந்த மழையிருட்டில் அவர்கள் விழிப்போடு இருக்கக்கூடும்” இளைய வன்னியனார்களில் ஒருவன் சொன்னான்.

“இல்லை, அவர்கள் வேறொரு முடிவுக்கு வந்துவிட்டனர். நாங்கள் இன்னும் நாட்டுக்குள் வரவில்லை என்பதை ஒட்டுமொத்தப் பறங்கிப்படையினரும் நம்பிவிட்டார்கள்” என்றார் மூத்த வன்னியனார்.

“அப்படியா! இதுவே நல்ல நேரம். நாம் முதலில் நம்பியைக் கொல்வோம். அவனைப் போன்ற ஒரு துரோகியை நாம் மன்னிக்கக் கூடாது. அவன் எதிரியைவிடவும் ஆபத்தானவன். நமது இனத்துக்கு வந்துசேர்ந்த கீழ்மை அவன், அவமானம்... அவனே எங்கள் முதல் இலக்காக இருக்க வேண்டும்” என்றார்கள்.

“நம்பியை நா....ன்...னே கொ...கொ...கொல்றேன்” இளைய வன்னியனார்களில் கொன்னைவாய் கொண்டவன் சொன்னான்.

“நீ அவனைக் கொல்லப்போவதாகச் சொல்லி முடிக்கும்போதே அடுத்த மாதம் வந்துவிட்டது. அதெல்லாம் சாத்தியமில்லை” என்றனர்.

அவனுக்கு இந்தப் பகிடி பிடிக்கவில்லை. தலை கவிழ்ந்து மண்ணையே பார்த்துக்கொண்டிருந்தான். மழை, மூர்க்கம்கொண்டு பெய்யுமென நம்பினர். பெருமலையை ஆண்டுவரும் துரோகி நம்பியைக் கொல்ல படை நகரத் தொடங்கியது.

“அறுவரும் போகத்தான் வேண்டுமா?” ஒருவனின் கேள்வி.

“மூன்று பேர் இங்கேயே இருந்து நாச்சிமாரைத் தேடுங்கள். மூன்று பேர் நம்பியை நோக்கிப் போவோம்” பதில் கட்டளையாக வந்தது.

மழையும் இருளும் கலந்துகிடக்கும் நிலத்தில், பதுங்கிப் பதுங்கி வன்னியனார்கள் மூவர் ஊருக்குள் இறங்கி, நடக்கத் தொடங்குகின்றனர். அரவம் எழும்பாதபடி நடப்பதற்கு அவர்கள் கால்கள் பழக்கம்கொண்டிருந்தன. மழையின் இரைச்சல் அவர்களுக்கு இன்னும் உதவியாக இருந்தது. காற்றில் குளிர் நிரம்பிக்கிடந்தது. மூத்த வன்னியனாரும், இன்னும் இருவரும் பறங்கிப்படைகளின் முகாமைத் தாண்டி பெருமலைக்குள் நுழைந்தனர். பெருமலையை ஆண்டுவந்த நம்பியின் உறைவிடத்தில், காவலுக்கு நிற்கும் வீரர்களைச் சாதுர்யமாகக் கையாள வேண்டுமென மூத்த வன்னியனார் கட்டளை இட்டார். தங்களது கைகளில் இருந்த கூர்மையான கற்களைக்கொண்டு எறிந்து திசைகளைக் குழப்பினர். தாக்குதல் எல்லாத் திசைகளிலிருந்தும் தொடுக்கப்பட்டது. திசைதிருப்பும் தாக்குதல். எதிரியின் பார்வையை ஓரிடத்தில் நிலையிருத்தவிடாத போர்த் தந்திரம். ஆனால், நம்பியின் துரோகப்படைகளின் கைகளில் இருப்பது கூரான ஆயுதங்கள் அல்ல. பறங்கிப்படையிடம் வாங்கிய இரும்புத் துப்பாக்கிகள் என்பதை உணர்ந்துகொண்ட வன்னியனார்கள் கொஞ்சம் வேகமாக அவர்களின் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி உள்ளே நுழைந்தனர். மூத்த வன்னியனார் காவலுக்கு நிற்க, ஏனைய இருவரும் உள்ளே இருட்டோடு இருட்டாகப் போயினர். மழைக்கு நன்றி. இருளுக்கு நன்றி. இயற்கை அறத்தின் ஆயுதம். அது அறம்கொண்ட போர், மறவர்க்கு உற்ற துணை செய்கிறது. மூத்த வன்னியனார் வெளியே நின்றுகொண்டிருக்க, உள்ளே சென்ற இருவரும் விறுவிறுவென ஓடிவந்தனர்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 52

“வாங்கோ, வேகமாய்ப் போய்விடலாம் அண்ணா.”

“நம்பியைக் கொன்றுவிட்டீர்களா?’’

“அவன் சல்லாபத்தில் இருக்கிறான். அதுவும் ஒரு பறங்கியப் பெண்ணோடு. இப்படியான ஒரு பொழுதில் எப்படி அவனைக் கொல்ல முடியும்?”

“அவன் துரோகி, எக்கணத்திலும் அவனை நாம் கொல்ல முடியும். சொல்லுங்கள்... என்ன செய்தீர்கள். அவனை இப்படி விட்டுவிட்டு என்னால் வர முடியாது. நானே உள்ளே போகிறேன்” என்றார் மூத்த வன்னியனார்.

“அவனை என்னால் கொல்ல முடியவில்லை. ஆனால்...”

“ஆனால்?”

“இவன் கொன்றுவிட்டான்.”

“நம்பியோடு படுக்கையைப் பகிர்ந்த அந்தப் பறங்கியப் பெண்ணை என்ன செய்தீர்கள்?”

``அவள் எங்களைக் கண்டதும், நம்பியின் ஆட்கள் என நினைத்திருக்க வேண்டும். எந்த அச்சமுமில்லாமல் படுக்கையில் கிடந்தபடி நம்பியை ஆண்டுகொண்டிருந்தாள். ஆனால், நாம் ஆயுதங்களைத் தூக்கியதன் பிறகே விபரீதம் புரிந்தது அவளுக்கு. கைகளைக் கூப்பி எங்களைக் கும்பிட்டு ‘என்னை விட்டுவிடுங்கள்’ என்று கெஞ்சினாள். அந்தப் பெண்ணுக்கு எதுவும் நேரக் கூடாது. என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம் அண்ணா.’’

“நல்லது. எங்களுக்கு இந்த மழையும் இரவும் துணைபுரிகின்றன. மழை நிற்பதற்கு முன்பாக எங்களுடைய இடத்துக்குச் சென்றுவிட வேண்டும். இல்லையேல் எம்மை ஆபத்து சூழ்ந்துவிடும். நம்பிக்கு நாமளித்த தண்டனை பறங்கிப்படைக்குத் தெரிந்துவிட்டால், அவர்கள் உஷாராகிவிடுவார்கள். வேகமாக நடவுங்கள்.”

“நம்பியை நாங்கள்தான் கொன்றோமென பறங்கிப்படை எப்படி முடிவுக்கு வரும்?”

“தனது எதிரியைத் தன்னிலும் பார்க்க சிறந்த படைவீரனாகக் கருதும் பழக்கம் அவர்களுக்கிருக்கிறது. நம்பி எங்களுக்குச் செய்தது துரோகம், அவர்களுக்குச் செய்தது உதவி. ஆனபோதிலும், அவன்மீது பறங்கிப்படைக்கு மரியாதை இருக்காது. அவனைக் கொல்ல எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை அவர்கள் நன்கு அறிவர்.”

``இன்னும் வேகமாக நடப்போம். பெருமலையைக் கடந்துவிட்டோம். இன்னும் சில மணித்துளிகளில் உப்புக்காட்டுக்குள் சென்றுவிடலாம். ஆனால், ஊர் விழித்துவிடும். அதற்கு முன்பாக நாங்கள் சிறிய காடுகளுக்குள் புகுந்துவிட்டால், காட்டின் வழியாகவே நடந்து உப்புக்காட்டை அடையலாம்.’’

“இதுவொரு நல்ல திட்டம். அப்படியே செய்வோம்.”

நம்பியோடு படுக்கையில் இருந்த பறங்கியப்பெண் தனது வாயில் கட்டப்பட்டிருந்த துணியை அவிழ்க்க முயல்கிறாள். முதிரை மரத்தினால் செய்யப்பட்ட அந்த அறையின் கதவை ஓங்கி அறைகிறாள். வெளியே காவலர்கள் இறந்துகிடக்கின்றனர். உறைவிடத்தின் முகப்பு வாசலில் இருக்கும் ஒரு காவலாளி சத்தம் கேட்டு அறை நோக்கி ஓடிவருகிறான். இறந்துகிடக்கும் சக காவலாளிகளைப் பார்த்து அலறியடித்துச் சத்தமிடுகிறான். அறைக்கதவைத் திறக்கிறான். அங்கே நம்பி ரத்த வெள்ளத்தில் மிதக்கிறான். அந்தப் பெண்ணின் வாயையும் கையையும் கட்டுகளிலிருந்து அவிழ்த்து காவலாளிகள் வெளியே கூட்டிச் செல்கின்றனர். நம்பி கொல்லப்பட்டான் என்கிற தகவல் பறங்கிப்படைகளுக்குப் பறக்கிறது.

உப்புக்காட்டுக்குள் நுழைந்து, சிறிது தூரத்தில் அழுகி எலும்புக்கூடுகளாய்க் கிடக்கும் மனித உடல்களைக் காண்கின்றனர் மூவரும். ஆட்களை எண்ணுகின்றனர், எழுவர். மூத்த வன்னியனார் சொன்னார்.

“என்ன சொன்னார்?” என்று கேட்டேன். பொன்னச்சி சிரித்தபடி, ``நாளை வரை காத்திரு’’ என்றாள்.

(நீளும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism