Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 55

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

நான் பூட்டம்மாவுக்கு அப்படி பதில் சொல்லியிருக்கக் கூடாது. ஆனால் கட்டுப்படுத்த இயலவில்லை. உப்புக்காட்டுக்குள் பொன்னச்சி சொன்னதையே வீட்டில் பூட்டம்மாவும் சொல்கிறாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 55

நான் பூட்டம்மாவுக்கு அப்படி பதில் சொல்லியிருக்கக் கூடாது. ஆனால் கட்டுப்படுத்த இயலவில்லை. உப்புக்காட்டுக்குள் பொன்னச்சி சொன்னதையே வீட்டில் பூட்டம்மாவும் சொல்கிறாள்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

பன்னிச்சையடி கிராமமே இடம்பெயரும் அவசரத்தில் இருந்தது. என்னைக் காணாது அம்மா தவித்துப்போயிருந்தாள். பூட்டம்மா என்னைக் கண்டதும் “வந்திட்டான் ஆதீரன்” என்றாள். எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. போராளிகளின் வாகனங்கள் பன்னிச்சையடி கிராமத்தின் வீதிகளிலும், வழமைக்கு மாறாக மிக வேகமாகப் போவதும் வருவதுமாக இருந்தன. அக்கா நேற்றைக்கே முகாமுக்குத் திரும்பியிருக்கிறாள். அம்மா சின்னச் சாக்குப்பையில், சில பாத்திரங்களையும் வீட்டில் கிடந்த மரக்கறிகளையும் போட்டுக் கட்டினாள். பூட்டம்மா தன்னுடைய ஒரு பையை எடுத்துக்கொண்டு ஆயத்தமாகியிருந்தாள். எறிகணை காடுகளுக்குள் விழுவதைப்போல சனங்களின் குடியிருப்புகளிலும் விழத் தொடங்கின. வேவு விமானம் பறப்பதாக அம்மா சுட்டிக்காட்டினாள். யுத்தம் தொடங்கிவிட்டது. அழுகுரல்களும், ரத்தச்சுனைகளும் காணும் திசையெங்கும் கொப்பளிக்கப்போகின்றன. காட்டை இழந்து, கிணற்றை இழந்து, சொந்தவீட்டு முற்றத்தை இழந்து போகப்போகிறேன் என்றொரு துயரம் என்னை அழுத்தத் தொடங்கிற்று. பன்னிச்சையடி கிராமத்திலுள்ள குடியிருப்புகளில் சில எறிகணைகள் வீழ்ந்தன. நான்கு பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். போராளிகள் உருமறைப்புச் செய்துகொண்டு வீதியோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். வேவு விமானம் தாழப்பறந்து, போராளிகளின் காலடிகளையும் அறிந்துகொள்ள முயன்றது. அம்மாவும் நானும் சேர்ந்து இன்னும் சில பொருள்களைக் கட்டி முடித்தோம்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 55

“ரெண்டு மூண்டு நாளையில திரும்பி வந்திடுவம், இது பெரிய சண்டையா வராது” அம்மா தனது நம்பிக்கையைச் சொன்னாள்.

“நாங்கள் எடுத்துக்கொண்டு போற பொருள்களோட இனிமே திரும்பி வர மாட்டம். நாங்கள் எஞ்சுறதே கஷ்டம்தான்” என்றாள் பூட்டம்மா.

“ஏன் நீங்கள் இப்படி கதைக்கிறியள்? வாயை மூடிக்கொண்டு சும்மா இருங்கோ” என்றேன்.

பூட்டம்மா என்னை ஆச்சர்யத்துடன் பார்த்துவிட்டு அம்மாவிடம் கேட்டாள்.

“இவனுக்கு என்ன நடந்தது, எனக்கு வாய் காட்டுறான்.”

“பயமும் எரிச்சலும்தான். இதைப் பெரிசுபடுத்தாதேங்கோ. கொஞ்ச நேரத்தில அவனுக்கே தான் கதைச்சது பிழையெண்டு விளங்கிடும்.”

நான் பூட்டம்மாவுக்கு அப்படி பதில் சொல்லியிருக்கக் கூடாது. ஆனால் கட்டுப்படுத்த இயலவில்லை. உப்புக்காட்டுக்குள் பொன்னச்சி சொன்னதையே வீட்டில் பூட்டம்மாவும் சொல்கிறாள். இந்த யுத்தம் எங்களை அழிக்குமென எல்லோரும் சொல்கிறார்கள். கடந்த வருடங்களில் அமைதியும் அழித்தது. எங்களை எல்லாமும் அழிக்கிறது. ஆனால் இந்த யுத்தத்தை விரும்பியது எதிரி. நாம் அமைதி வழியைப் பின்பற்றித் தீர்வைப் பெறவே விருப்பம் கொண்டிருப்பதாக மீண்டும் மீண்டும் இயக்கத்தினர் சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால், அதனைக் கேட்பதற்கோ பொருட்படுத்துவதற்கோ உலகுக்குக் காதுகள் இல்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் எங்களை அழித்தொழிக்கும் கூட்டுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தனர். திணிக்கப்பட்ட, யுத்தத்தை எதிர்கொள்ள அதே யுத்தமே வழியாகிவிட்டது. போராளிகள் சாரை சாரையாக நடந்து சென்றுகொண்டேயிருந்தனர். ஊரைவிட்டுச் சனங்கள் வெளியேறத் தொடங்கினர். அம்மாவும், நானும், பூட்டம்மாவும் வீட்டுக்கு வெளியே வந்து நின்றோம். உழவூர்திகளிலும் பாரவூர்திகளிலும் சனங்கள் நிரம்பி ஏறினர். போராளிகளின் வாகனங்கள் சிலவற்றிலும் சனங்கள் ஏறிக்கொண்டனர். பூட்டம்மா மீண்டும் மீண்டும் வீட்டைத் திரும்பிப் பார்த்தாள். அவளது கண்களில் வீடுகளை இழந்த நிலத்தின் கண்ணீர் பெருகிக்கொண்டிருந்தது. பூட்டம்மாவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு “என்னில கோபமாய் இருக்கிறியளே, உங்களுக்கு நான் வாய் காட்டியிருக்கக் கூடாது. மன்னிச்சுக் கொள்ளுங்கோ” என்றேன். சொந்தக்காரர் ஒருவரின் உழவூர்தியில் ஏறிக்கொண்டோம். எறிகணைகள் எதுவும் இப்போது வீழவில்லை. சனங்களுக்கு அதுவோர் ஆறுதலாக இருந்தது. ‘பன்னிச்சை மரம்’ எரிந்துபோய்விட்டதென அம்மாவிடம் மெல்லமாகச் சொன்னேன். அதைக் கேட்டதும் தலையில் அடித்துக்கொண்டு “என்ர ஐயோ” என்று கத்தினாள். உழவூர்தியில் இருந்த அனைத்துப் பெண்களும் அம்மாவின் அழுகையின் மூலமாக நடந்த விஷயத்தை அறிந்துகொண்டனர். உழவூர்தி, நடுவீதியில் நின்றது. அந்தப் பெட்டியில் அமர்ந்திருந்த அனைத்துப் பெண்களும் மாரில் அடித்துக்கொண்டு அழுதனர். ஆண்கள் உப்புக்காட்டை நோக்கி ஓடினார்கள். எரிந்து கிடந்த பன்னிச்சை மரத்தைப் பார்க்க இயலாது அழுதனர். எறிகணை விழுந்து கந்தக நெடி பரவிக்கிடக்கும் அவ்விடத்தில், தோன்றிய கிடங்கில் நீர் ஊறிவந்தது. நினைக்கவியலாத வடு. ஆற்ற முடியாத பெருங்காயம். குருதியின்மீது விழுந்த வெடி. ஆண்கள் காட்டைவிட்டு வீதிகளுக்கு வந்தனர். போராளிகள் ஆயுதங்களோடு களமுனை நோக்கி விரைந்துகொண்டிருந்தனர். நாகப்பர் அவர்களிடம், “என்ன பிள்ளையள், கிளிநொச்சிக்கு அவனை விட்டியல் எண்டால், எங்கட குண்டியை வைக்க ஒரு குந்துகூட இல்லாமல் போய்டும்” என்றார்.

“அப்பா, இது எங்கட மண். அவனை நாங்கள் கிளிநொச்சிக்கு விட மாட்டம். ஆனால் நாங்கள் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றுவம். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதேங்கோ.”

“நீங்கள் இருக்கிறியள் எண்ட துணிச்சல்தான்” என்றார் நாகப்பர்.

போராளிகள் சிரித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர். அந்தக் குழுவில் இருந்த ஒரேயொரு போராளி மட்டும் நாகப்பரிடம் கேட்டான்.

“இவ்வளவு பேரும் காட்டுக்குள்ள ஏன் போய்ட்டு வாறியள்?”

“எங்கட பன்னிச்சைத்தாய் எழுந்தருளியிருக்கிற பன்னிச்சை மரத்துக்கு மேல ஷெல் விழுந்திட்டுது.”

“பன்னிச்சைத்தாயோ?”

“ஓம். அவா எங்கட பரம்பரை தெய்வம்.”

“அக்கிரமக்காரர்களோட ஆயுதத்துக்கு பூமியையும் தெரியாது. சாமியையும் தெரியாது” என்றார் அந்தப் போராளி.

நாகப்பர் சிரித்துவிட்டு “நீ நல்லாய் கதைக்கிறாயடாப்பா” என்றார்.

போராளிகள் போய்க்கொண்டேயிருந்தனர். அவர்களின் நடையில் இருந்த வேகமும் தீரமும் சிலிர்க்கவைத்தன. அளப்பரிய விடுதலை மாண்பும் தியாக மரபும் கொண்டவர்கள்.

“இந்தப் பிள்ளைகளுக்காக தெய்வத்த கும்பிடவேணும்” என்றார் நாகப்பர்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 55

“இப்பதானே உங்கட பரம்பரைத் தெய்வம் இருந்த மரத்துக்கு மேலேயே ஷெல் விழுந்தது எண்டு சொன்னியள், இப்ப எந்த தெய்வத்தைக் கும்பிடுவியள்?” என்றார் போராளி.

“தெய்வம் இருந்த இடத்தில குண்டு விழுந்தால், இடம்தான் அழியும். தெய்வம் அழியாது.”

“அதெப்படி ஐயா?” போராளியின் கேள்வியில் சிறு எள்ளல் முளைத்திருந்தது. நாகப்பர் அதனைப் பெரிசுபடுத்தவில்லை. ஆனால் அந்தப் போராளியின் கைகளைப் பிடித்து, வலது உள்ளங்கையை விரித்தார். அவன் அணிந்திருந்த புலிச்சீருடையின் வாசனை நாகப்பருக்குப் பிடித்திருந்தது.

“நான் சாகலாம், உன்னைப் போலான தெய்வங்கள் சாகாது மோனே. அந்த அர்த்தத்திலதான் சொல்லுறன். இந்த மரத்தில குடிகொண்டிருக்கிறவள் நெருப்புக்குப் பயந்தவள் இல்லை. அந்த நெருப்பே அவள். தனது ஒரு முலை பறித்துத் தீயை மூட்டிய கொற்றவை. அவளுக்கு யுத்தமும் புதிதில்லை; அழிவும் புதிதில்லை. ஆனால், அவள் நீதிக்காக எழுபவள். உங்கள் படையைப்போல யாருக்கும் அஞ்சாதவள். எனக்கு அவளும் தெய்வம், நீங்களும் தெய்வம். விளங்கினதோ?” என்று கேட்டார்.

அந்தப் போராளி நாகப்பரைக் கட்டியணைத்து, “நான் பிழையாகக் கதைத்துவிட்டேன். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” என்றார். நாகப்பர் போராளியைக் கட்டியணைத்து முத்தமிட்டு “நீங்கள் எல்லாரும் நல்லாய் இருக்கவேணும்” என்றார். பிறகு ஏதோ ஞாபகம் வந்தவராக அவனை உப்புக்காட்டுக்குள் அழைத்துச் சென்று எரிந்துகிடக்கும் பன்னிச்சை மரத்தைக் காட்டினார். மரம் நின்றிருந்த இடத்திலிருந்து மண்ணையள்ளி அந்தப் போராளியின் நெற்றியில் தீட்சைபோல வைத்துவிட்டார். போராளியும் நாகப்பரும் காட்டைவிட்டு வெளியே வந்தபோது, கிராமம் வெறிச்சோடிக் கிடந்தது. யாருமே அற்ற ஊரில் நாய்களும் கோழிகளும் தனித்திருந்தன. ஊர் நகர்ந்த தடத்தின்மீது திரும்பிவர இயலாத ரேகைகள் ஓடிக்கொண்டிருப்பதாக நாகப்பருக்குத் தோன்றியது. போராளி, நாகப்பரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

“நீங்கள் எப்ப பின்னால போறியள் ஐயா?” போராளி கேட்டுக்கொண்டே நடந்தார்.

“நான் போகப்போறதில்லை, இந்த ஊரிலதான் உயிர்போகிற வரைக்கும் இருப்பன்” என்றார்.

“இருங்கோ. நாங்கள் நிலத்தை கைவிட மாட்டம் ஐயா” என்றார்.

நாகப்பர் அந்தப் போராளியைப் பார்த்துக்கொண்டேயிருந்தார்.

பன்னிச்சையடியைவிட்டு பிரதான சாலையில் இடம்பெயர்ந்து செல்லும் மக்களின் வாகன நெரிசல் அதிகரித்திருந்தது. இயக்கத்தின் ராணுவத் தளவாடங்களை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் போர்முனை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டேயிருந்தன. அம்பிகாவும் நானும் உழவூர்தியில் பக்கத்திலேயே அமர்ந்திருந்தோம். அவள் என்னிடம் கேட்டாள்.

“சண்டை வந்தால் எல்லாரும் செத்துப்போய்டுவோமே?”

“என்னைப் பார்த்தால் உங்களுக்குச் சாத்திரி மாதிரியா தெரியுது. எங்கட வாழ்க்கையை ஆரூடம் சொல்ல ஆருக்குத்தான் தெரியும்?” என்றேன்.

“நான் இயக்கத்துக்குப் போகப்போறேன், நீ வருவியா?” என்றாள்.

எங்களுடைய உரையாடலைக் கேட்கும் சூழல் பிறரிடம் இருக்கவில்லை. அவளின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு காதலைச் சொல்வதைப்போல, ``போகலாம்’’ என்றேன். அவளுக்குள் ஏகோபித்த சந்தோஷம். என்னுடைய கைகளை அவள் பற்றிக்கொண்டு அவள் உள்ளங்கையில் ஈரந்துளிர்க்கும் வரையிலும் அப்படியே இருந்தாள். சனங்கள் கிளிநொச்சியை நோக்கி இடம் நகர்ந்தபடியிருந்தனர். போராளிகள் வட போர்முனையில் தயார்நிலையில் நின்றனர்.

“இன்னும் பெடியள் திருப்பி அடிக்கத் தொடங்கேல்ல, ஏதோ பெரிய திட்டம் போட்டிருக்கிறாங்கள் எண்டு நினைக்கிறேன்” என்றாள் அம்மா.

உழவூர்தி மிக மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது. ஏ.9 வீதியில் இடம்பெயரும் சனங்களின் வாடிய முகங்கள் பெருகிப் பெருகி இருந்தன. எங்களுக்கு அருகிலிருந்து ஆட்லெறி குண்டுகள் பாய்ந்து செல்லும் சத்தம் கேட்கத் தொடங்கிற்று. இயக்கம் பதில் தாக்குதலை இவ்வளவு கதியில் செய்வது அம்மாவுக்கு வியப்பாக இருந்தது.

பூட்டம்மா என்னைக் கூப்பிட்டுச் சொன்னாள்.

“ஆதீரா, நான் சொன்ன யுத்தம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. மெல்ல மெல்ல நிலம் இழந்து, கடல் நோக்கி நடக்கும் உத்தரிப்பின் அறிவிப்பு எங்களை வந்தடைந்துவிட்டது.”

நான் இரண்டு காதுகளையும் பொத்திக்கொண்டு அப்படியே இருந்தேன்.

(நீளும்...)