Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 56

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

என்னுடைய பாசறைத் தோழியான இளவெயினி, கதைத்துக்கொண்டிருந்தபோதே அழத் தொடங்கினாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 56

என்னுடைய பாசறைத் தோழியான இளவெயினி, கதைத்துக்கொண்டிருந்தபோதே அழத் தொடங்கினாள்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

யுத்தம் தொடங்கிவிட்டது. எதிரியால் ஏவப்பட்ட எறிகணைகள் பேரிரைச்சலோடு விழுந்து வெடித்தன. போராளிகளின் கனரக ஆயுதங்களும் பதில் தாக்குதலைச் செய்தன. நாங்கள் சென்றுகொண்டிருந்த பிரதான வீதியில் வாகன நெரிசலும், அச்சத்தால் அள்ளுண்டுபோன சனங்களும் நிறைந்திருந்தனர். புதையல் வைரவர் கோயிலைத் தாண்டி சென்றுகொண்டிருந்தோம். அம்மா இரண்டு கைகளையும் தலைமேல் உயர்த்தி, மனதுக்குள் ஏதோ சொல்லிக் கும்பிட்டாள். அம்பிகா என்னுடைய கைகளைப் பற்றியபடி அப்படியே அமர்ந்திருந்தாள். நாங்கள் கிளிநொச்சியைச் சென்றடைவதற்கு நான்கு மணித்தியாலங்கள் பிடித்தன. எங்களுடைய சொந்தக்காரர்கள் இரணைமடுவில் இருந்தனர். அவர்களுடைய வீட்டுக்காணியில் இருந்த சிறிய குடிசையில் புகலிடம் பெற்றோம். அதே காணியில் இன்னும் சில வீடுகளைப் போட்டு அம்பிகாவின் குடும்பத்தினரும் இருந்தனர். பூட்டம்மாவுக்குக் கடுமையான களைப்பாக இருந்தது. அவளுக்கான உணவை அம்மா எங்களுடைய வீட்டுப் பாத்திரத்திலேயே தயார்செய்ய வேண்டும். பூட்டம்மா கடுமையான வைதிகவாதி. சொந்தக்காரர் வீட்டிலேயே நீரருந்த மாட்டாள். பூட்டம்மாவின் இப்படியான கடும்போக்கை அம்மா சகித்துக்கொண்டாள். ஆனால் இடப்பெயர்வு காலகட்டத்திலும் ஏன் இப்படி முரண்டுபிடிக்க வேண்டுமென எனக்குள் நானே கேட்டுக்கொண்டேன். பூட்டம்மாவுக்குப் பொரி அரிசிமாவைக் குழைத்து உருண்டைகளாக்கிக் கொடுத்தாள். குடிசைக்கு வெளியே மூட்டிய அடுப்பில் தேத்தண்ணி தயாரித்து எல்லோருக்கும் பரிமாறினாள். வடபோர்முனையில் நடந்துவருகிற யுத்தச் சத்தமும், அதைக் குறித்த சனங்களின் ஊகங்களும் வன்னிப் பெருநிலப்பரப்பின் கொதிப்பாக உலையேறியது. அக்கா இந்தக் களமுனையில் இருப்பாளா... அண்ணா எங்கிருப்பான்? அக்காவும் அண்ணாவும் ஒன்றாக நின்று போராடும் போர்க்களமாக இருக்கிறதா வடபோர்முனை. பன்னிச்சைத் தெய்வமே... எங்கள் எல்லோரையும் காப்பாற்று!

கடவுள்... பிசாசு... நிலம்! - 56

`வணக்கம், என்னுடைய பெயர் தூரிகை. வடபோர்முனையின் முன்னரங்கில் நின்றுகொண்டிருக்கிறேன். தமிழீழ விடுதலையே எனது இலட்சியமும் தாகமுமாய்க்கொண்டு ஆயுதம் ஏந்திய ஒரு போராளியாக நிற்பதில் இறுமாந்திருக்கிறேன். என்னுடைய தந்தை இந்த மண்ணுக்கான போராட்டத்தில் துரோகிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர். என்னுடைய சகோதரன் எனக்கு முன்னரே போராளியாக ஆனவன். இந்தக் களமுனையில்கூட அவனும் போராடிக்கொண்டிருக்கலாம். இளைய சகோதரனான ஆதீரனும் அம்மாவும் இடம்பெயர்ந்து வேறோர் ஊரில் வசிப்பார்கள் என்று எண்ணுகிறேன். இந்தக் களமுனை எனக்குப் புதியது. நான் கையில் ஏந்தியிருக்கும் துவக்கும், நெஞ்சில் கட்டியிருக்கும் கையெறி குண்டுகளும் என்னையே எனக்குப் புதிதாய்ப் புலப்படுத்துகின்றன. மருதன் சொன்ன கதைகள் பல நினைவுகளைத் தைக்கின்றன. “ஒருவர் சாதாரண வாழ்க்கையிலிருந்து போராளியாக மாறுகிற நாள்கள் மிகமிகச் சிக்கலானவை. தன்னுடைய குடும்பத்தையும் ஊரையும் மட்டுமன்றி அந்நபர், நேற்றுவரை இருந்த தன்னையும் துறக்க வேண்டும்.” மருதன் ஒருமுறை இப்படிச் சொன்னது இப்போது சரியெனவே தோன்றுகிறது. நான் போராளியாக என்னை இணைத்துக்கொண்ட நாளிலிருந்து இக்கணம் வரை நிறைய மாறுதல்களை என்னில் உணர்கிறேன். என்னைச் சுற்றி வீழ்ந்து கொண்டிருக்கும் எறிகணைகளின் சத்தம் என்னை பயமுறுத்தவில்லை. எனது கையில் கிடைக்கும் ஆயுதங்களால் எதிரியின் பீரங்கியைத் தகர்க்கும் ஓர்மமும் வல்லபமும் எனக்குள் இருப்பதாக எண்ணிக்கொள்கிறேன். இருட்டும் மழையும் ஒன்றாக வந்து நிற்கின்றன. களமுனை கொதிக்கிறது. விஷேடத் தாக்குதல் அணியினைச் சேர்ந்த போராளிகள் ஒருங்கிணைக்கப்பட்டு களத்தை வந்தடைந்துள்ளனர். படைத்தளபதிகள் நுட்பங்களை விவரிக்கின்றனர். களத்தின் வரைபடம் இருட்டின் மேனியில் விரிகிறது. தளபதியின் கையிலிருந்து வெளிச்சம் பிறக்கிறது. வரைபடத்தின் மீது அந்த ஒளி நகர்ந்து நிலைகொள்ளும் இடத்தில் ராணுவத்தினரின் முன்னேற்றம் நிகழுமென உறுதியாகக் கூறுகிறார் தளபதி. போராளிகள் கண்களை விரித்து தமது அணித் தலைவர்களோடு நின்று கொண்டிருக்கின்றனர். ராணுவத்தினரின் முன்னகர்வைத் தடுத்து நிறுத்துகிற தற்காப்புச் சமரையே இயக்கம் செய்யப்போவதாக எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் இங்கு நிகழப்போவது வலிந்த தாக்குதல். எதிரியைத் தற்காப்புச் சமர் என்று நம்பவைக்கும் அதேவேளையில், ஒரு வலிந்த தாக்குதலை இன்னொரு திசையை ஊடறுத்துச் செய்யும் தந்திரம். யுத்தத்தின் தந்திரம். மழைக்கும் போராளிகளுக்கும் ஒரு பிணைப்பு இருக்கிறது. இயக்கம் நிறைய யுத்த வெற்றிகளை மழைக்காலத்தில் பெற்றதென அம்மா அடிக்கடி சொல்லுவாள். இன்றைக்கும் மழை பெய்துகொண்டிருக்கிறது. கிளிநொச்சியைக் கைப்பற்றும்முகமாகப் பாரிய நடவடிக்கையை ராணுவம் தொடங்கியிருக்கிறது. போராளிகள் அதை எதிர்த்து சமர் புரிகின்றோம். அதேவேளையில் இந்த மனநிலைக்கு எதிராக ராணுவத்தினருக்குக் கடுமையான இழப்பை ஏற்படுத்த, தாக்குதல் அணியினர் களத்திடை புகுகின்றனர். தாக்குதல் பிரிவில் இருக்கும் ஒவ்வொரு போராளியும் பயிற்சியும் உத்வேகமும் கொண்டவர்கள். ‘எக்களத்திலும் இயலாதது இல்லை’ என்பதே அவர்களின் மந்திரம். இருளின் மீது மழை பொழிகிறது. களமுனையில் வெள்ளம் பாய்கிறது. பதுங்குகுழிகள் நீரினால் நிரம்புகின்றன. போராளிகளுக்குக் கடுமையான சோதனை. ஆனாலும் இந்த மாமழை ஒரு வெற்றிச் செய்தியை எங்களுக்குத் தருமென நம்புகிறோம். ஒவ்வொரு போராளியும் தியாகிப்பது இந்நில மீட்புக்காக அன்றி வேறொன்றுக்குமில்லை. நான் எனது காவலரணை விட்டு மெல்ல வெளியேறி வந்தேன். ராணுவத்தின் எறிகணை வீச்சு சற்று அடங்கியிருந்தது. அன்கொன்றும் இங்கொன்றுமாகத் துவக்குச் சத்தங்கள் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தன. மழையில் நனைந்துகொண்டே நானும் இன்னும் சில போராளிகளும் கதைத்துக்கொண்டிருந்தோம்.

என்னுடைய பாசறைத் தோழியான இளவெயினி, கதைத்துக்கொண்டிருந்தபோதே அழத் தொடங்கினாள். தான் வீரச்சாவு அடைந்தால் அம்மாவையும் அப்பாவையும் பார்த்துக்கொள்ள யாருமில்லை என்பது அவளது கவலையாக இருந்தது. இளவெயினியை அணைத்துக்கொண்டேன்.

“இளவெயினி, நீ வீரச்சாவு அடையப் பயப்பிடுகிறாயா?”

“இல்லை, ஆனால் அம்மாவும் அப்பாவும் தனித்துவிடுவார்கள். அதுமட்டும்தான் எனது கவலை.”

“சரி, சின்னப் பிள்ளையள் மாதிரி அழாத, உனக்கு ஒண்டும் நடக்காது.”

“இல்லை, எனக்கு ஏதோ உள்ளுக்குள்ள சொல்லுது. நான் வீரச்சாவு அடைஞ்சிடுவன்போலக் கிடக்கு.”

கடவுள்... பிசாசு... நிலம்! - 56

“நீயே ஒன்றை நினைத்து குழம்பாத. தயவுசெய்து அழுகிறத நிப்பாட்டு,” பூம்பாவை சொன்னாள்.

நானும் இளவெயினியும் பூம்பாவையும் ஒரே பயிற்சி முகாமைச் சேர்ந்தவர்கள். பூம்பாவை மன்னாரைச் சேர்ந்தவள். உறுதியான பெண். எல்லாவற்றையும் துல்லியமாக விளங்கிக்கொள்ளக்கூடியவள். “பயமறியாத மகளிர்” என்று பயிற்சி முகாமில் நக்கலடிப்போம். இளவெயினி அழுகையை நிறுத்திக்கொண்டாள். கொட்டும் மழையில் ஒரு பாடல் பாடினால் என்னவென்று அவளுக்குத் தோன்றியிருக்க வேண்டும். என்னிடம் கேட்டாள்.

“நானொரு பாட்டுப் பாடவா?”

“என்ன பாட்டு?”

“சினிமாப் பாட்டுத்தான்.”

“கொஞ்சம் சத்தத்தைக் குறைச்சுப் பாடு. ஆராவது போய் பகுதி கொமாண்டரிட்ட நாளைக்கு அறிக்கை எழுதிக்கொடுத்தால், பிறகு தண்டனையாகிப்போடும்.” பூம்பாவை சொன்னாள்.

“அவளை ஏன் சும்மா வெருட்டுறாய், நீ பாடு” என்றேன்.

அக்கணத்துக்கு மாமழை களிம்பெனத் தோன்றியது. இளவெயினி பாடத் தொடங்கினாள்.

“எனது சொந்தம் நீ

எனது பகையும் நீ

காதல் மலரும் நீ

கருவில் முள்ளும் நீசெல்ல மழையும் நீ

சின்ன இடியும் நீ

செல்ல மழையும் நீ

சின்ன இடியும் நீபிறந்த உடலும் நீ

பிரியும் உயிரும் நீ

பிறந்த உடலும் நீ

பிரியும் உயிரும் நீ

மரணம் ஈன்ற ஜனனம் நீ

ஒரு தெய்வம் தந்த பூவே…”


அவள் பாடிக்கொண்டிருந்தபோதே எறிகணைகள் வீழத் தொடங்கின. பேரிகை எழுந்தது. போராளிகள் ராணுவத்தினரைச் சூழ்ந்து தாக்கியிருக்க வேண்டும். கடுமையான மோதலின் ஒலி மழையிரவை அதிரச் செய்கிறது. நாங்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு மிக அண்மையில் மோட்டார் எறிகணைகள் வீழ, தண்ணீர் நிற்கும் நீளப் பதுங்குகுழியை நோக்கி ஓடினோம். ஆயுதங்களின் பெருக்கு. இரவிலும் மழையிலும் பொழிகிறது. கட்டளைகள் பாய்கின்றன. தாக்குதல் போராளிகளின் தகவல்கள் மகிழ்ச்சியைத் தருகின்றன. நினைக்க இயலாத தாக்குதல் வெற்றி. நூற்றுக்கு மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிற ஸ்தல அறிக்கை. ஆனால் இந்த யுத்தம் நீண்ட நாள்களை அடைகாத்திருக்கிறது. நினைக்கவியலாத ரணங்களைப் பொரிக்க எத்தனிக்கிறது. மழையும் இரவும் அல்ல, பகலும் வெயிலும், நிலவும் வெளியுமென எப்போதும் ஆயுதங்களே நிலைக்கப்போகிறதென எனக்குத் தோன்றியது.

“ஆர்மி இந்தச் சண்டையைத் தொடங்கியிருக்காட்டி, இயக்கமே தொடங்கியிருக்குமெண்டு நினைக்கிறாயோ?” பூம்பாவை கேட்டாள்.

“இயக்கம் சண்டையைத் தொடங்கும், ஆனால் இவ்வளவு அவசரமாக அந்த முடிவை எடுத்திருக்காதெண்டு நினைக்கிறன்.” இளவெயினி சொன்னாள்.

“இல்லை, இயக்கத்துக்கும் சண்டைதான் தெரிவு” என்றேன்.

“எப்பிடி இவ்வளவு உறுதியாய் சொல்லுறாய்?” இளவெயினி கேட்டாள்.

“அப்பிடித்தான் நான் விளங்கிக்கொள்ளுறன்” என்றேன்.

பூம்பாவை சொன்னாள்... “இந்தச் சண்டை எங்களுக்கு வெற்றியில முடியும். ஆனால் நாங்கள் யாழ்ப்பாணத்தைப் பிடிச்சிடுவம் எண்டதை நம்ப முடியாமல் இருக்கு.”

“யாழ்ப்பாணம் அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாதெண்டு இயக்கத்துக்கும் தெரியும்.” இளவெயினி சொன்னாள்.

நான் அமைதியாக இருந்தேன். பூட்டம்மா எப்போதோ சொன்ன வார்த்தைகள் என்னை அச்சுறுத்தின. நினைக்கவியலாத ஆரூடம். கூற முடியாத தீட்சண்யம். பன்னிச்சைத்தாயை வேண்டிக்கொண்டேன். பூம்பாவை என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். நான் எதுவும் சொல்லாதது அவளுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கலாம். எங்களைச் சுற்றியும் எறிகணைகள் விழத்தொடங்கின. கனரக ஆயுதங்களின் தாக்குதல்கள் நெருங்கியிருந்தன.

“தூரிகை, உங்களுக்கு ஏதேனும் பிரச்னையா, ஏன் ஒரு மாதிரி இருக்கிறியள்?”

`ஒன்றுமில்லை’ என்று தலையை மட்டும் ஆட்டினேன்.

நாங்கள் இருந்த பதுங்குகுழி தூர்ந்துபோகுமளவுக்கு மிக அருகில் விழுந்து வெடித்தது ஒரு குண்டு. பூம்பாவை அப்படியே எனது மடியில் விழுந்தாள்.

(நீளும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism