Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 57

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

முடியும், முடியாதெண்டு சொல்ல நாங்கள் ஆர்... களத்தில நிண்டு எங்களுக்காகப் போராடுகிற ஒவ்வொரு போராளியும் சுதந்திரத்த உறுதிப்படுத்தினம்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 57

முடியும், முடியாதெண்டு சொல்ல நாங்கள் ஆர்... களத்தில நிண்டு எங்களுக்காகப் போராடுகிற ஒவ்வொரு போராளியும் சுதந்திரத்த உறுதிப்படுத்தினம்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

மூன்று நாள்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் உக்கிரமான மோதலில், போராளிகள் வெற்றிபெறுவதாகத் தகவல்கள் வந்தன. நாங்கள் இடம்பெயர்ந்து வாழும் வீட்டு வளவில், இன்னும் சில குடும்பங்கள் வந்து குடிசையை அமைத்தன. கிளிநொச்சி நகரம் பரபரப்பாகியிருந்தது. சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் இடம்பெயர்ந்து வந்திருக்கும் மக்களைச் சந்தித்து, தேவையான பொருள்களின் விவரங்களை வாங்கிக் கொண்டன. சிறுவர்களை இணைத்து ஆற்றுப்படுத்தும் கலை நிகழ்வுகளை நடத்தின. போராளிகளின் வீரச்சாவு செய்திகளும், காயப்பட்ட தகவல்களும் வரத் தொடங்கின. அதேவேளையில், போராளிகள் தாங்கள் நிலைகொண்டிருந்த இடத்திலிருந்து சிறிய பகுதியை முன்னேறிக் கைப்பற்றியிருப்பதாக உறுதிப்படுத்தாத கள நிலவரங்களும் சனத்திடம் பேசுபொருளாகின. அம்மா எதைப் பற்றியும் கதைப்பதோ, கருத்து சொல்வதோ இல்லை. அவள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டாள். பூட்டம்மாவுக்குக் கொஞ்சம் உடம்பு ஏலாமல் கிடந்தது. காய்ச்சல் விட்டு விட்டுக் காய்ந்தது. இடையிடையே வயிற்றுப்போக்கும் அவளைச் சோர்வில் வீழ்த்தியது. அம்பிகா குடிசைக்கு வெளியே அமர்ந்திருந்து, அந்த வளவையே பார்த்துக்கொண்டிருப்பாள். எங்கும் மக்களின் நடமாட்டம். நானும் அவளும் குளத்துக்குக் குளிக்கப் போவோம். கனகாம்பிகைக் குளத்தில் அம்பிகா நீச்சலடித்துக்கொண்டிருந்த ஒரு மதிய நாளில், காற்றைக் கிழித்துக்கொண்டு மூன்று போர் விமானங்கள் வன்னி வான்பரப்பில் பறந்துபோயின.

கடவுள்... பிசாசு... நிலம்! - 57

“முகமாலையில கடுமையான சண்டைதான் நடக்குதுபோல.” அம்பிகா சொன்னாள்.

“ஓமோம், வான்வழியாவும் தாக்குதல் தொடங்கிட்டுது. சண்டையோட பண்புகள் மாறுது” என்றேன்.

“இந்தச் சண்டையில இயக்கம் யாழ்ப்பாணத்தைப் பிடிச்சால்தான் நான் யாழ்ப்பாணம் போவேன்.” நீச்சலடித்தபடி அம்பிகா சொன்னாள்.

“சிலவேளையில உங்கட ஆசை நிறைவேறக் கூடும்” என்றேன்.

“அதென்ன சிலவேளை, ஏன் இயக்கத்தால யாழ்ப்பாணத்த பிடிக்க முடியாதே?” என்று அம்பிகா கேட்டதும், தலையை ஆட்டிவிட்டுச் சொன்னேன்.

“முடியும், முடியாதெண்டு சொல்ல நாங்கள் ஆர்... களத்தில நிண்டு எங்களுக்காகப் போராடுகிற ஒவ்வொரு போராளியும் சுதந்திரத்த உறுதிப்படுத்தினம். அவையளோட தியாகமும், போர்த்திறனும், லட்சிய நோன்பும் எங்களுடைய எல்லா விலங்குகளையும் உடைக்கும்.”

அம்பிகாவுக்கு நீச்சலடிப்பதில் அதிக விருப்பம். முதலையைப்போல நீருக்குள்ளேயே மூச்சுப்பிடித்து நின்று சாகசம் காண்பிப்பாள். நான் போகலாமென்று குளத்தைவிட்டு எழும்பி கரைக்கு வந்து, உடுப்பை மாற்றினேன். அம்பிகாவும் கொஞ்ச நேரத்தில் கரைக்கு வந்து உடுப்புகளை மாற்றிக்கொண்டாள். அவளது நனைந்த கூந்தலை நன்றாகத் துடைத்துவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தேன். யாருமில்லை, ஈரம் பூத்திருந்த அவளுடலில் எச்சிலால் முத்தமொன்றைப் பதியமிட்டேன். அம்பிகாவின் உயிர் வரை சிலிர்ப்பு மின்னலாக ஓடியது. உடல்கள் மகரந்தத்தைப்போல முத்தங்களைப் பரிமாறிக்கொண்டிருந்த வேளையில், வான்பரப்பில் நான்கு போர் விமானங்கள் இரைந்துகொண்டு போயின. அம்பிகாவும் நானும் திளைத்திருந்த முத்தமிடலிலிருந்து விலகினோம். எனக்குள் ஒரு குற்றவுணர்ச்சி அலையடித்தது. அம்பிகாவுக்குள்ளும் குற்றவுணர்ச்சியின் பேரலை தோன்றியிருக்கும். அவள் கேட்டாள்.

“ஆதீரா, நாங்கள் செய்தது பிழையா?”

“காதலர் கொஞ்சுவதற்கு இயக்கம் தடைவிதிக்கேல்ல.” நக்கலாகச் சொன்னேன்.

“கொஞ்சினது பிழை இல்லை. ஆனால், இப்பிடிச் சண்டை நடந்துகொண்டிருக்க நாங்கள் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறமெண்டு எனக்கு ஒரு மாதிரியாய்க் கிடக்கு.”

“நீ பயப்பிடாதே, முத்தமிடுவது தேசத்துரோகத்தில சேராது” என்றேன்.

“உங்களுக்கு எப்பப் பார்த்தாலும் நக்கலா ஆதீரன்?”

“நான் இப்ப என்ன நக்கலாய்ச் சொன்னான், சரி வீச்சாய் நடவுங்கோ. ஏற்கெனவே நல்லாய்ப் பிந்திப் போச்சு.”

பூம்பாவை அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள். தொடர்ந்து விழுந்த எறிகணைகள் எல்லோரையும் அச்சுறுத்தின. நாங்கள் பதுங்கு குழியைவிட்டு வெளியே செல்லவில்லை. மழை பெய்ததால் சில எறிகணைகள் விழுந்து வெடிக்காமல் மண்ணில் புதையுண்டிருந்தன. நாங்கள் இரவு முழுவதும் அப்படியே இருந்தோம். தாக்குதல் பிரிவைச் சேர்ந்த போராளிகள் பலர், வீரச்சாவு அடைந்த செய்தி எங்களுக்குத் தெரியவந்தபோது கொஞ்சம் திகிலடைந்தோம். ராணுவத்தின்மீது ஒரு வலிந்த தாக்குதலைச் செய்யச் சென்ற தாக்குதல் பிரிவுப் போராளிகள் பலரின் வித்துடல், களமுனையைவிட்டு எடுத்துச் செல்லப்பட்டது. நாங்கள் பதுங்கு குழியைவிட்டு வெளியே தலைநீட்ட முடியாதபடி எறிகணைத் தாக்குதலுக்குள் அகப்பட்டுக்கொண்டோம். நான் இரண்டு கைகளையும் சேர்த்துக் கும்பிட்டபடி “பன்னிச்சைத்தாயே...” என்றேன். இளவெயினி என்னைப் பார்த்துச் சிரித்தாள். நான் எதுவும் பதிலளிக்க விரும்பவில்லை. அவளுக்காகவும் வேண்டிக்கொண்டேன். நான் போராளியாகச் சேர்ந்து வருடமானாலும் இதுவே எனக்கு முதல் களமுனை. எதிரியின் ஆயுதங்களுக்கு எதிராக நின்று சமராடும் இந்த அனுபவம் புதிதிலும் புதிது.

அடுத்த நாள் காலையில் தாக்குதல் அறவே இல்லாதிருந்தது. நாங்கள் பதுங்கு குழியைவிட்டு வெளியே வந்தோம். இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காக ஒருவர் மாறி ஒருவராகச் சென்று வந்தோம். நேற்று இரவு நடந்த தாக்குதலில், கடுமையான இழப்பினை இயக்கம் சந்தித்திருப்பதை அறிய முடிந்தது. களத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்ட வித்துடல்கள், காயப்பட்டவர்களின் எண்ணிக்கையென எல்லாமும் மனச்சோர்வையே தந்தன. இளவெயினி சொன்னாள்.

“நான் வீரச்சாவு அடைந்தால், விடுப்புக் கேட்டு நீங்கள் ரெண்டு பேரும் துயிலுமில்லம் வரவேணும்.”

“நாங்களும் வீரச்சாவு அடைந்தால்தான் விடுமுறை கிடைக்கும்” என்றேன்.

பூம்பாவை மெல்லச் சிரித்தபடி “வீரச்சாவு அடையிறதில்ல பிரச்னை, வித்துடல் ராணுவத்திட்ட அகப்படக் கூடாது” என்றாள்.

காலையிலேயே வேறொரு பெரிய அணி முன்னரங்குக்கு நகர்த்தப்பட்டது. நேற்றைக்குச் சென்ற அணியைவிடவும் பலமான, விவேகமான அணியாக இருக்கலாமென்று நினைத்துக்கொண்டேன். போராளிகள் சுமை மிகுந்த மூட்டைகளையும் சுமந்துகொண்டு போகின்றனர். பூம்பாவை அவர்களைப் பார்த்ததும் என்னிடம் சொன்னாள்.

“தூரிகை... எங்களிட்ட இருக்கிற இந்தச் சின்னத் துவக்கையே சில நேரத்திலே என்ன இவ்வளவு பாரமாய்க் கிடக்கெண்டு யோசிப்பம். ஆனால் இவையளப் பார்... எத்தினை பாரமான ஆயுதங்கள். பாவம் எவ்வளவு சுமை?”

“ஓம், ஆனால் இவையள் அதுக்கான பயிற்சி பெற்ற ஆக்கள்” எனச் சொன்னேன்.

“என்ன பயிற்சி எடுத்தாலும் சுமை சுமைதான்” இளவெயினி சொன்னாள்.

மெல்ல மெல்லத் தாக்குதல் தொடங்கியிருந்தது. காலைச் சூரியன் சாட்சியாக இரு தரப்பும் மோதலைச் செய்தன. நாங்கள் இருந்த பகுதியில் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. இளவெயினியும் நானும் பதுங்கு குழிக்குள் அமர்ந்தோம். பூம்பாவையைக் காணவில்லை. அவள் எங்கேயாவது போய்ப் பதுங்கியிருப்பாள் என்று நினைத்தேன். எறிகணை விழுவது நின்றதும் அவள் வந்து சேருவாள் என்று இளவெயினி சொன்னாள். அதற்கான நிச்சயம் இல்லாதபோதும் நம்பிக்கொண்டிருந்தோம். இங்கு யாருக்கும் எதுவும் நிச்சயமில்லை. நாங்கள் அமர்ந்திருக்கும் பதுங்கு குழி L வடிவத்தில் அமைந்திருக்கிறது. மண் மூட்டைகளால் அரண் அமைக்கப்பட்டு மேலே பலகையால் மூடப்பட்டிருக்கிறது. அருகில் விழுகிற எறிகணை இந்தப் பலகையின்மீது விழுந்தால் எங்களுடல் பஞ்சென கந்தகத்தோடு காற்றில் பறக்கும்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 57

நான்தான் பூம்பாவை. வயது இருபத்து நான்கு. முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் என்னுடைய சொந்தவூர். இயக்கத்தில் இணைந்து வருடமாகப் போகிறது. கடுமையான பயிற்சிக்குப் பின்னர் நேரடியாக இந்தக் களமுனைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறேன். எறிகணைகள் வீழ்ந்து வெடித்தபடியிருக்கும் இந்தப் பொழுதில், என்னுடைய தோழிகள் இருக்கும் பதுங்கு குழிக்குப் போக முடியாமல் இன்னொரு பதுங்கு குழியில் அமர்ந்திருக்கிறேன். இந்தப் பதுங்கு குழிக்குள் நான் மட்டுமே தனித்திருக்கிறேன். ஆனால் துவக்குகள் இரண்டும், ஒரு வோக்கியும் இரைந்தபடி இருக்கின்றன. ஆனால் யாரையும் காணேன். இந்தப் பதுங்கு குழியில் இருந்த போராளிகள் எங்கு போயினர்... அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டதா என்றெல்லாம் யோசிக்கத் தோன்றிற்று. ஆனால் நல்லவற்றையே எண்ணிக்கொண்டேன். அவர்கள் பதுங்கு குழிக்குத் திரும்புவார்கள் என்று நம்பிக்கை கொண்டேன். என்னைக் காணவில்லையென தூரிகையும் இளவெயினியும் தேடக்கூடும். ஆனால் இப்போது வெளியால் செல்ல முடியாது. எறிகணைகள் இடைவிடாது வீழ்ந்து வெடிக்கின்றன. ராணுவம் தன்னுடைய போர்த்திறனை நம்பாமல், கனரக ஆயுதங்களால் எங்களை அழித்தொழிக்க எண்ணுகிறது. இந்தச் சமர்க்களத்தில் என்னை மிகவும் அச்சுறுத்துவது ஆயுதங்கள் அல்ல. இருள். வெடிகுண்டுகள் வீழ்ந்து வெடிக்கும் பாழ்வெளியில் அடர்ந்து நிற்கும் இருளில் பதுங்கு குழிக்குள் அமர்ந்திருக்கும் என்னை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

நான் இயக்கத்தில் சேர்ந்து போராட வேண்டுமென விரும்பினேன். அதன் பொருட்டே இக்களம் புகுந்தேன். நான் போரிடுவதற்காகக் காத்திருக்கிறேன். என்னையும் என் நிலத்தையும் அபகரிக்க எண்ணும், கீழ்மைப்படுத்தத் துடிக்கும் கொடுங்கோலரை சங்ஹாரம் செய்யவே ஆங்காரம்கொண்டிருக்கிறேன். பூம்பாவையாக எனது பெயரை மாற்றிக்கொண்டு, கழுத்தில் நஞ்சணிந்து என்னை நானே துடிகொள்ளச் செய்தேன். இப்போது எறிகணைகள் விழுவது சற்று குறைந்திருக்கிறது. நான் மெதுவாக வெளியே தலை நீட்டிப் பார்த்தேன். களமுனை எரிந்துகொண்டிருந்தது. சில காவலரண்கள் மீதும் எறிகணைகள் வீழ்ந்திருக்கின்றன. என்னைத் தேடிக்கொண்டு தூரிகை ஓடி வருகிறாள். நான் அவளைப் போகச் சொல்லுகிறேன். அவள் அங்கேயே நின்றுகொண்டு ``ஓடி வா’’ என்கிறாள். தூரிகை எல்லோருக்கும் உதவுகிற, எல்லோருக்காகவும் வேண்டுகிற ஒரு நல்ல பிறவி. தூரிகையை அணைத்துக்கொண்டு “நான் வீரச்சாவு என்று நினைச்சியோ?” என்றேன். அவள் என்னை இறுக அணைத்தபடி “இப்படியேன் கதைக்கிறாய்?” என்று கடிந்துகொண்டாள். நாங்கள் எங்களுடைய பதுங்கு குழிக்குச் செல்வதற்கு இடையில் மீண்டும் எறிகணைகள் பரந்து விழத் தொடங்கின. தூரிகையும் நானும் ஒரு பதுங்கு குழிக்குள் சென்றமர்ந்தோம். ஏற்கெனவே அதற்குள் இரண்டு போராளிகள் இருந்தனர். அவர்கள் எங்களுக்கு இடத்தை ஒதுக்கிச் சமாளித்துக்கொண்டனர். இளவெயினி பதுங்கு குழிக்குள் தனித்து இருந்தாள். அவள் எங்களைத் தேடக்கூடும். கடுமையாக பயந்தும் போய்விடுவாள்.

“இளவெயினி பயந்து அழப்போகிறாள்” என்றேன்.

தூரிகை சிரித்துக்கொண்டு சொன்னாள், “அவள் ஏற்கெனவே உன்னை நினைச்சு பயந்துகொண்டிருக்கிறாள்.”

“என்னை நினைச்சோ, ஏன்?”

“நீ வீரச்சாவு அடைந்திருப்பாய் என்றுதான்.”

வஞ்சினம் முழக்கி எழடா! மானத்தின்

வல்லமை உன் பகை உடைக்கும்! - அட

நெஞ்சில் தமிழ்வீரம் பொங்க நில்லடா!

நிமிர்ந்த வரலாறு கிடைக்கும்!

இளவெயினி பதுங்கு குழிக்குள் தனித்து இருந்துகொண்டு இந்தப் பாடலை முணுமுணுத்தாள்.

(நீளும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism