Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 58

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

ஆசைப்பிள்ளை ஏத்தத்தில நிறைய ஆர்மிக்காரங்கள் செத்துப்போய்ட்டாங்களாம், இயக்கம் கடுமையான அடியைக் காட்டியிருக்கு

கடவுள்... பிசாசு... நிலம்! - 58

ஆசைப்பிள்ளை ஏத்தத்தில நிறைய ஆர்மிக்காரங்கள் செத்துப்போய்ட்டாங்களாம், இயக்கம் கடுமையான அடியைக் காட்டியிருக்கு

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

“இயக்கத்துக்குக் கடுமையான இழப்பு, ஆனால் இவங்கள் சொல்ல மாட்டாங்கள்” என்று வெற்றிலையைத் துப்பிக்கொண்டிருந்த தேங்காய் துரையனை முறைத்துப் பார்த்தார் செவிட்டு விநாயகம்.

“உன்னை மாதிரி ஒண்டுக்கு ரெண்ட கட்டிக்கொண்டு வாழுறவனுக்கு இதைக் கதைக்கவே அருகதை இல்லை.” செவிட்டு விநாயகம் முகத்திலடிப்பது மாதிரி வார்த்தைகளை எறிந்தார்.

“ரெண்டு கலியாணம் செய்தவன், அரசியல் கதைக்கக் கூடாதே, இதென்ன புதுச்சட்டமாய் இருக்கு.”

“நீங்கள் மஞ்சத்தில வலதுக்கு ஒண்டு, இடதுக்கு ஒண்டெண்டு அணைச்சுக்கொண்டு படுத்திருப்பியள். விடிஞ்சதும் தீப்பிழம்புக்கு நடுவில நிண்டு யுத்தம் செய்யிற போராளிப் பிள்ளையளைக் குறைசொல்லிக் கதைப்பியள். அதைக் கேட்டிட்டு சும்மா இருக்க வேணுமே நாங்கள்?”

தேங்காய் துரை மூச்சுப் பேச்சில்லாமல் நின்றார். செவிட்டு விநாயகம் வெற்றிலையை எடுத்து சுண்ணாம்பைத் தடவினார். பிறகு சீவலை அள்ளிச் சேர்த்துக்கொண்டு வாயில் போட்டு அதக்கினார். தேங்காய் துரை எதுவும் கதையாமல் நிற்பதை உணர்ந்தவர், “துரை இந்தச் சண்டையில பெடியள் வெல்லுவாங்கள். ஆனால் இறுதியில நாங்கள் தோப்பம்.”

“உங்களுக்குத் தெரியுமோ தெரியாது, நீங்கள் இப்ப கதைக்கிறது துரோக நடவடிக்கையில சேர்மதி ஆகும்.” தேங்காய் துரை நக்கலாகச் சொன்னார்.

“என்ர மனசு சொல்லுறதுதான் இதுவரைக்கும் நடந்திருக்கு, அது உனக்கு மட்டுமில்ல, இயக்கத்துக்கும் தெரிஞ்ச சங்கதி” செவிட்டு விநாயகம் அறுதியிட்டுக் கூற, தலையசைத்தார் துரை.

கடவுள்... பிசாசு... நிலம்! - 58

“ஆசைப்பிள்ளை ஏத்தத்தில நிறைய ஆர்மிக்காரங்கள் செத்துப்போய்ட்டாங்களாம், இயக்கம் கடுமையான அடியைக் காட்டியிருக்கு. பால்ராஜ் தன்ர அணியைக் கொண்டுபோய் சண்டை செய்யிறதாய் ஒரு கதை அடிபடுது.” தம்பிமுத்து வீட்டின் முற்றத்தில் இருந்தபடி மனைவிக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்.

மனோன்மணி, தையல் இயந்திரத்தை உழக்கியபடி துணியை அழுத்திப் பிடித்து வார்த்தைகளைத் தொகுத்துக்கொண்டிருந்தாள். கணவர் சொன்னதற்கு என்ன பதிலைச் சொல்லலாம் என்கிற குழப்பம் அவளுக்குள் தைத்துக்கொண்டிருந்தது. மனோன்மணி நூலின் பிசிறைக் கத்தரிக்கோலால் சரி செய்துகொண்டு, “இஞ்சருங்கோ, பெடியள் உங்களை பங்கர் வெட்டக் கூப்பிட்டால்கூட போகாமல் ஒளிஞ்சு தெரியிற நீங்கள் உதைப்பற்றி கதைக்கிறத கேக்க எனக்கே பொறுக்குதில்லை. தயவுசெய்து எழும்பிப் போய் ஆட்டுக்குக் குழை வெட்டிக்கொண்டு வாங்கோ. அதையாவது செய்யுங்கோ” என்றாள்.

தம்பிமுத்துவுக்கு வந்த கோபத்துக்கு மனோன்மணியை அடித்தால் என்னவென்று தோன்றியது. ஆனால் அவரால் இயலாத காரியங்களில் அதுவுமொன்று. தம்பிமுத்து விநோதமான பிறவி. கொஞ்சம் விசர் ஆகிவிட்டார் என்றுகூடப் பேச்சு இருக்கிறது. நாங்கள் இடம்பெயர்ந்து இருப்பது அவரின் வீட்டு வளவில்தான். ஆனால் தம்பிமுத்து எங்களிடம் எதுவும் கதைகொடுக்க மாட்டார். அமைதிப்படை ராணுவத்தின் படுகொலைகளால் மனதளவில் பாதிக்கப்பட்ட தம்பிமுத்து, ஒரு சவப்பெட்டியை வாங்கி வீட்டுக்கு எடுத்துவந்திருக்கிறார். வீட்டிலுள்ளவர்கள் அதிர்ந்து சவப்பெட்டி எதற்கென கேட்டபோது, தம்பிமுத்து சொன்ன பதில் பிரபலமானது.

“என்னை அமைதிப்படை ராணுவம் சுட்டுக்கொல்லும் பட்சத்தில், பூதவுடலை நீங்கள் இந்தப் பெட்டியில் வைத்து வீதியில் வையுங்கள். நான் மூன்றாவது நாள் உயிர்த்தெழுவேன். நான் பூவுடலாக இப்பூமியைவிட்டு வெளியேறி புனித உடலாகத் திரும்பும் நாளில் உங்கள் சுதந்திரம் உறுதியாகும்” என்றிருக்கிறார்.

மனோன்மணி ஆட்டுக்குக் குழைவெட்டச் சொன்னதும், கத்தியை எடுத்துக்கொண்டு சென்றார். வீதியில் சிறுவர்கள் தம்பிமுத்துவைப் ``பெட்டி, பெட்டி’’ என்று அழைத்துச் சீண்டினர். ஆனால் அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை. தன்னைச் சீண்டும் சிறுவர்களைப் பார்த்து புன்னகைத்துவிட்டு நடக்கத் தொடங்கினார்.

நானும் பூம்பாவையும் பதுங்குகுழியை விட்டு இளவெயினி மட்டும் அமர்ந்திருக்கும் எங்களுடைய இடத்துக்கு ஓடிப்போனோம். இளவெயினி எங்களைப் பார்த்ததும் முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு “இவ்வளவு நேரமும் சோடி போட்டுக்கொண்டு எங்க சுத்தினியள்?” என்று கேட்டாள்.

“நாங்கள் ஒருக்கால் கொழும்பு வரைக்கும் போய்ட்டு வாறம்.” பூம்பாவை சொன்னாள்.

“ஏன் அப்பிடியே அங்கேயே நிண்டு பால்சோறு சாப்பிட்டு பைலா பாடிக்கொண்டிருக்கலாமே?” இளவெயினி இன்னும் ஆக்ரோஷமாய் பதிலளித்தாள்.

“நான் இருக்கலாமெண்டுதான் சொன்னான், ஆனால் தூரிகை போகலாமெண்டு அடம்பிடிச்சிட்டாள்.”

இளவெயினி என்னைப் பார்த்து “இப்ப என்ன அவசரம், அங்கேயே இருந்திட்டு வந்திருக்கலாம்தானே” என்றாள்.

அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு மெல்ல அருகில் போனேன். அவளைக் கட்டியணைத்து, “நீ தனிய இருந்து பயந்திருப்பாய் என்று எனக்கு விளங்குது. ஆனால் நாங்கள் ரெண்டு பேரும் கடுமையான ஷெல் அடிக்குள்ள மாட்டிட்டம். உன்னைப் பார்க்க ஓடோடி வந்திருந்தால் நாங்கள் இப்ப வீரச்சாவு ஆகியிருப்பம்.”

இளவெயினி என்னை அணைத்துக்கொண்டு “என்ன விசர்க்கதை கதைக்கிறியள், அப்பிடி ஒண்டும் நடக்காது. சரி இந்தக் கதையை விடுங்கோ” என்றாள். இளவெயினி இப்படித்தான் கொஞ்சம் சின்னப்பிள்ளை மாதிரி கோபித்துக்கொள்வாள். அவளது குணம் தூய்மையானது. யாருக்கும் தீங்கு எண்ணாதவள். எல்லோரையும் செல்லமாக பாவிப்பவள். ஆனால் பூம்பாவை அப்படிக் கிடையாது. கொஞ்சம் தெளிவும், காரியத்தில் குறியாகவும் இருப்பவள். உணர்ச்சிவசப்படுவதற்கு எதிரானவள். என்னிடமே அடிக்கடி பூம்பாவை சொல்லுவாள்... “தூரி, நீங்கள் உணர்ச்சிவயப்பட்ட ஆள். அது ஒரு போராளிக்கு அவசியமற்றது.”

கடவுள்... பிசாசு... நிலம்! - 58

வணக்கம். என்னுடைய பெயர் இளவெயினி. இருபத்து மூன்று வயதான எனக்கு இந்தக் களமுனை முதல் அனுபவம். நான் இயக்கத்தில் சேரத் துடித்த கடந்தகாலங்களை நினைத்துப் பார்க்கிறேன். பதினாறு வயதில் ஒருமுறை இயக்கத்தில் சேர்ந்துவிடலாமென்று போனபோது அவர்கள் என்னைத் திருப்பி அனுப்பினார்கள். “பதினெட்டு வயசுக்குப் பிறகு வாங்கோ” என்றனர். ஆனால் இன்று நானொரு விடுதலைப் போராளி. எறிகணைகளும், குண்டுகளின் பொழிவுக்கும் நடுவில் நின்று போராடும் இந்த யுகத்தில் வதைபடும் மானுடத்தின் மீட்பர்களில் நானுமொருத்தி. இயக்கம் இந்தச் சண்டையை எப்படி எதிர்கொள்ளப் போகிறதென்று எனக்கு யோசனைகள் வருவதுண்டு. ஆனால் யாரிடமும் பகிர்ந்துகொள்வதில்லை. எங்களுடைய பயிற்சி நிறைவு விழாவுக்கு வருகை தந்து எழுச்சியுரை ஆற்றிய மகளிர் படையணித் தளபதி ஒருவர் “இனி வருகிற சண்டையில் நாம் மீட்கப்போகிற ஒவ்வோர் அடி மண்ணும் எங்களுடைய பிள்ளைகளுக்கு நாங்கள் அளிக்கும் விடுதலையின் உத்தரவாதம்” என்று சொன்ன வார்த்தைகள் என்னைத் திடப்படுத்தின. சாதாரணமான ஒரு துப்பாக்கியைக்கொண்டு பாரிய படைநகர்வைத் தடுத்து நிறுத்தி எதிரிகளைக் கொன்றொழிக்கும் அளவுக்கு யுத்தம் ஒன்றும் எளிமையானதில்லை. இந்தப் போர்க்களம் உதித்து ஒரு வாரம் ஆகிவிட்டது. முப்பொழுதும் பரவலான எறிகணைத் தாக்குதலும், வான்வழியிலான தாக்குதலும், தரைவழியிலான முன்னகர்வையும் செய்ய ராணுவம் மாறி மாறி துடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் போராளிகளின் ஆன்ம பலத்துக்கு முன்னால் எதிரிகளின் வன்கவர் வெறி பொடிப்பொடியாகி மாயமாய்ப் போகிறது. ஆனால், நிறைய போராளிகளை நாம் இழந்துவிட்டோம். குறிப்பிட்டுச் சொல்லப்போனால் தாக்குதலைச் செய்வதற்காக ராணுவத்தின் எல்லைக்குள் ஊடுருவிய ஒரு தொகைப்போராளிகள் சுற்றிவளைக்கப்பட்டு, பெட்டியடிக்கப்பட்டு கொல்லப்பட்டுவிட்டனர். அவர்களின் வித்துடலைக்கூட மீட்க முடியாதபடி எஞ்சிய போராளிகள் பின்வாங்கினர். யுத்தம் ரத்தத்தினால் வழிநடத்தப்படுகிறது. விழுப்புண்களும், வீரச்சாவுகளும், வித்துடல்களும் வீரயுகத்தின் நித்தியமான சொற்கள். காலம் அவற்றை உச்சாடனம் செய்கிறது. போர்க்களம் துடியாய் ஒலிக்கிறது. ஒவ்வொரு போராளியும் விடுதலைக்காக ஊழியம் செய்பவர். இந்தப் போர்க்களத்தில் நான் மடிந்துபோனால் ஒரு விதையென துளிர்ப்பேன். இந்த மண்ணில் நானொரு செடியாகவேணும் மறுபிறவியாக இருப்பேன் என்று நினைக்கையிலே உள்ளம் ஆனந்திக்கிறது. நான் மடிகிற நாளில், எதிரியின் முகாம் தீயில் மிளாசி எரியும். அந்த வெக்கையில் நான் ஒளிர்வேன். எக்கணமும் சாவைச் சந்திக்கக் காத்திருக்கும் என்னைப் போன்றவர்களிடம் இருக்கிற வாழ்வு, இவ்வுலகில் எவருக்கும் வாய்க்காதது. நான் அடுத்த பிறவியிலும் இந்த மண்ணில் ஒரு சிறு செடியாகத் துளிர்விடுவேன் என்று நினைக்கும் கணங்களில், திருநாவுக்கரசரின் ஒரு தேவாரம் நினைவுக்கு வரும்.

“குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்

இனித்த முடைய வெடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே”

எனும் இந்தப் பாடலில், சிவனின் அழகைக் காணும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் இவ்வுலகில் மனிதராக மீண்டும் பிறப்பதை விரும்புவேன் என்கிறார் அல்லவா! அதுபோலவே தாய்நிலத்தில் நானொரு தளிராகவோ, ஒரு வேராகவோ எழுவேன். இந்த எண்ணம் சில நாள்களாக என்னைச் சூழ்ந்திருக்கிறது. எறிகணைகள் மீண்டும் விழுந்து வெடிக்கத் தொடங்குகின்றன. இதுவொரு கால அட்டவணைப்படி நிகழும் மோதல் உபாயம். எதிரியானவன் எம்மைத் தயாராகவிடாது நிகழ்த்தும் யுத்த அணுகுமுறை. நாம் நெருப்பில் நீராடி, உக்கிரம் கொள்கையில் கனரக ஆயுதங்களும் பீரங்கிகளும் சுக்குநூறாக உடையும்.

எங்களுடைய பதுங்கு குழிக்கு மேல் நின்றுகொண்டு யாரோ அழைப்பது கேட்டது. தூரிகை எழுந்து பார்த்தாள்.

“உங்களை முன்னுக்கு எடுத்துக்கொண்டு போகச்சொன்னவே. அடி குறையவிட்டு வெளிக்கிட வேணும்” என்றது அந்தக் குரல்.

நாங்கள் எங்களுடைய உடைமைகளை எடுத்து ஆயத்தமானோம். பதுங்கு குழிக்குள் ஒரு சிறு செடி துளிர்விட்டு அசைந்துகொண்டிருந்தது.

(நீளும்...)