Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 59

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

அன்றைக்கு மருதன் கொஞ்சம் குழப்பமாக இருந்தார். ஆதீரன் பள்ளிக்கூடம் போயிருந்தான். நான் மதியச் சமையலை முடித்துவிட்டு அமர்ந்திருந்தேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 59

அன்றைக்கு மருதன் கொஞ்சம் குழப்பமாக இருந்தார். ஆதீரன் பள்ளிக்கூடம் போயிருந்தான். நான் மதியச் சமையலை முடித்துவிட்டு அமர்ந்திருந்தேன்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

பூட்டம்மாவின் உடலுக்குச் சுகம் திரும்பவில்லை. கடுமையாக மெலிந்திருந்தாள். அம்மா அவளுக்குச் சத்துள்ள உணவுகளாகச் செய்துகொடுத்தாள். அவளுக்குப் பசியின்மை நிறைந்திருந்தது. சாப்பாட்டை அருவருப்பாகத் தன்னிலிருந்து தள்ளிவைத்தாள். அம்மா கவலை கொண்டாள். பூட்டம்மாவை மருத்துவமனைக்குக் கூட்டிச்செல்லத் தயாரானோம். ஆனால், அவள் வர மாட்டேன் என்று மறுத்துவிட்டாள். அம்மா விடாப்பிடியாக நின்று பூட்டம்மாவைச் சம்மதிக்கவைத்தாள். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். இடம்பெயர்ந்து வந்திருந்த சனங்கள், வீதிகளின் மருங்கில் தற்காலிகக் கூடாரங்கள் அமைத்து வாழத் தொடங்கியிருந்தனர். கிளிநொச்சி மருத்துவமனையில் பூட்டம்மாவைப் பரிசோதனை செய்த மருத்துவர், சத்துக்கான குளுசைகளைக் கொடுத்துவிட்டார். பூட்டம்மா வீட்டுக்குத் திரும்பியதும் கொதித்த சுடுநீரால் குளித்து முடித்து உடுப்பை மாற்றிக்கொண்டாள். நாங்கள் தங்கியிருந்த வளவிற்குள்ளால் மூன்று போராளிகள் நடந்துவந்தனர். அம்மா என்ன விஷயமென விசாரித்துப் பார்த்ததில், அதிலொரு போராளியின் குடும்பத்தைத் தேடி வந்திருக்கின்றனர் என அறிய முடிந்தது. பூட்டம்மா தேத்தண்ணியைக் குடித்து முடித்ததும் தலை சாய்க்க விரும்பினாள். சிறிய மாமர நிழலில் பாயை விரித்துப் பூட்டம்மாவைப் படுக்கச் சொன்னாள் அம்மா. அவள் என்றுமில்லாதவாறு பாயில் படுத்தபடி அழத் தொடங்கினாள். பூட்டம்மா அழுவது, என்னால் தாங்க முடியாதிருந்தது. அவளுக்கருகில் ஓடிப்போனேன்.

“ஏன் இப்ப அழுகிறியள்?”

பூட்டம்மாவின் கண்கள் வானத்தில் நிலைகுத்தியிருந்தன. புலன்கள் எங்கோ கட்டுண்டு கிடந்தன. அவளுக்கு நான் கேட்பது விளங்கவில்லை. ஆனால் கண்ணீர் பெருக்கெடுத்து கீழ் நோக்கி வழிகிறது. வார்த்தைகளற்ற மொழியின் ஒரே அசைவா இந்தக் கண்ணீர். மனுஷ வாழ்க்கை கண்ணீருக்குக் கடன்பட்டிருக்கிறது. சுமைகளைக் கீழிறக்கும் தேவநீராக மனுஷர் கண்ணீரைக் கண்டடைந்தனரா? பூட்டம்மாவின் கண்கள் என்னை நோக்கித் திரும்பின. என்னுடைய கைகளைப் பிடித்து விரல்களைப் பற்றினாள். அவளது உள்ளங்கை பலமடங்கு குளிர்ந்திருந்தது. எனக்கொரு சிலிர்ப்பு உள்ளேறியது. பூட்டம்மா சொன்னாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 59

“மோனே, எங்கட கூடுகள் மட்டுமில்ல, மரங்களும் விழப்போகுது.”

“என்ன சொல்லுறியள், எனக்கு ஒண்டும் விளங்கேல்ல.”

“உன்னைப்போல காலத்துக்கும் ஒண்டும் விளங்கேல்ல மோனே. ஆனால், எனக்கு எல்லாமே தெரியுது மோனே. நான் என்ன பாவம் செய்தனான். ஏன் நடக்கப்போறதெல்லாம் எனக்கு மட்டும் தெய்வத்தால அறிவிக்கப்படுது.” பூட்டம்மா கலங்கியபடி சொன்னாள்.

இளவெயினி, பூம்பாவை, நான் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட போராளிகள் இந்த அதிகாலைப் பொழுதில் முன்னரங்குக்கு அழைத்துச் செல்லப்படுகிறோம். பலர் புதிய போராளிகள். எங்களைக் கூட்டிச் சென்று அணியணியாகப் பிரித்துக் களத்தில் நிற்கச் செய்வார்கள். இளவெயினி கேட்டாள்.

‘தூரி, நாங்கள் முதலிலிருந்த இடத்துக்கும் இப்பப் போற இடத்துக்கும் என்ன வித்தியாசம், ரெண்டுமே லைன்தானே?”

“இல்லை, நாங்கள் முதல் நிண்டது, முன்னரங்குக்குக் கொஞ்சம் பின்னால. இப்பதான் முன்னரங்கை நோக்கிப் போகிறோம். முதல் லைன்.”

அதிகாலையில் சில பறவைகள் சத்தமிடுகின்றன. தென்னை மரத்திலிருந்து குரும்பைகள் விழுகின்றன. நிலம் வெக்கையை அணிந்திருக்கிறது. இருளும் ஒளியும் குழைத்த பொழுதில் காண்டீபம் தரித்த மண்ணின் புதல்வர்கள் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

“இயக்கம் ஒரு சண்டையைச் செய்யப்போகுதுபோல...” இளவெயினி என்னிடம் கேட்டாள்.

‘நான் என்ன தலைவரைச் சந்திச்சிட்டா வாறன். உன்னோடதானே இருந்தனான். என்னைக் கேட்டால் எனக்கு எப்பிடித் தெரியும்?”

“இல்லை தூரி. உனக்குத் தெரியும். நீ இயக்கத்தை ஆழமாய் விளங்கி வெச்சிருக்கிறாய்.”

கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு “இயக்கத்தை ஆழமாய் விளங்கிட்டன் எண்டு ஆராவது சொன்னால், அது மகாவம்சத்தை விடவும் பெரிய பொய்” என்றேன்.

அன்றைக்கு மருதன் கொஞ்சம் குழப்பமாக இருந்தார். ஆதீரன் பள்ளிக்கூடம் போயிருந்தான். நான் மதியச் சமையலை முடித்துவிட்டு அமர்ந்திருந்தேன். மருதனுக்குப் பசித்தால் சொல்லுவார். ஆனால் அவருடைய குழப்பமான முகம் எனக்கு அந்நியமாகத் தெரிந்தது.

“என்ன ஏதாவது பிரச்னையா?”

கேட்டதும் மருதன் ஒன்றுமில்லையெனத் தலையாட்டினார். ஆனால் அவர் சொல்ல மறுக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன். அதற்கு மேல் இயக்க ரகசியங்களைக் கேட்கக் கூடாது என்று அம்மாவிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன். மருதன் தன்னுடைய பையிலிருந்த குறிப்புப் புத்தகத்தில் சில தொடர்பு இலக்கங்களை எடுத்து அவர்களை அழைத்துப் பார்த்தார். எங்கிருந்தும் பதிலில்லை. இன்னும் உச்சமான குழப்பத்தை அடைந்தார். மீண்டும் பொறுக்க முடியாமல் மருதனிடம் கேட்டேன்.

“என்ன ஏதாவது பிரச்னையா?”

ஒன்றுமில்லையெனத் தலையாட்டிவிட்டு மீண்டும் ஒரு தொடர்பு இலக்கத்துக்கு அழைத்தார். எதிரே யாரோ `ஹலோ’ என்று சொல்லிக் கேட்டது. மருதன் அந்த ஹலோவைக் கேட்டதும் தொடர்பைத் துண்டித்துவிட்டு வெற்றிப் புன்னகையோடு சிரித்தார்.

“கொஞ்சம் பிரச்னை வந்துவிடுமோ என்று நினைச்சன். ஆனால் இப்ப இல்லை” என்று மருதன் என்னிடம் சொன்னார்.

“ஏன் என்ன நடந்தது?”

“எங்கட முகவர் ஒருவரை ஆமிக்காரன் பிடிச்சதாய் ஒரு தகவல். அவன் பிடிபட்டால் எனக்கும் கடுமையான சிக்கல் வரும். அதுதான்.”

“அவனுக்கு எல்லாரையும் தெரியுமா?”

“எல்லாரையும் எண்டால், என்ன கேக்கிறியள்?”

“யாழ்ப்பாணத்தில உங்கள மாதிரி இருக்கிற எல்லாரையும், அந்த முகவருக்குத் தெரியுமா?”

மருதன் சிரித்தார். “அவன் ஒரு முகவர்தான். அவனுக்கு என்னைக்கூடத் தெரியாது. ஆனால் சிலரின் தொடர்பு இலக்கம் தெரியும்.”

“அப்ப நீங்கள் ஏன் இவ்வளவு குழப்பமாய் இருந்தனியள்?”

“அவன் பாவம். நல்ல பெடியன். இயக்கத்தின்மீது அபிமானம்கொண்டவன். கஷ்டப்பட்ட குடும்பம்.”

“உங்களுக்கு அவரைத் தெரியுமா?”

“ஓம், எனக்குத் தெரியும்.”

“எப்பிடி?”

“நான்தான் அவனை நேர்முகம் செய்தனான். அவன் வன்னிக்கு வந்திருந்தபோது, அவனுக்கான வகுப்புகளை நான்தான் எடுத்தனான்.”

“வகுப்பெடுத்த ஒருவரை அவர் எப்பிடி மறக்க இயலும்?”

“நான்தான் எடுத்தனான் எண்டு அவனுக்குத் தெரியாது. என்ர முகம் மூடிக்கிடக்கும்.”

“அப்பிடியெண்டால், அவருக்கு உங்களைப் பற்றி எதுவும் தெரியாதெல்லே?”

“இல்லை, ஆனால் என்னோட தொடர்பில இருப்பார்.”

“உங்களுக்குள்ளேயே இவ்வளவு குழப்பம் இருக்குமா?” என்று கேட்டேன்.

“ரகசியமும் அமைதியும் எங்களுக்குக் குருதி. அதை இழந்தால் எல்லாமும் போயிடும். அதுமட்டுமில்ல, ஒரேயொரு இலக்குக்காகப் பத்துப் பேர் தயார்படுத்தப்பட்டாலும் ஏனைய ஒன்பது பேர் யாரென்று தெரியாமல் இருக்கும். இங்க ஒருங்கிணைப்புதான் முக்கியம்.”

“இயக்கத்தின்ர விஷயங்களை ஆழமாய் அறிஞ்ச ஆளெண்டால், உங்களுக்கு ஆர் ஞாபகத்தில வருவினம்?” என்று கேட்டேன்.

“அப்பிடி ஒருத்தரும் இருக்க முடியாது. அப்பிடி ஒருத்தன் சொன்னால், அவன் தீர விசாரிக்கப்படவேண்டியவன். இயக்கத்தின்ர உள்கட்டமைப்புகள் ஒன்றோடொன்று தொடர்பற்றவை. ஆனால் அதனை இதுதானென கண்டுபிடிக்க இயலாது. இயக்கத்தைப் புரிந்துகொள்வது ஒரு பெருங்கனா” என்று மருதன் சொன்னார்.

“இயக்கம் ஆருக்கும் உண்மையாயில்லை. அது தன்னை நம்பியிருக்கிற ஆக்களுக்கும்கூட தன்னை வெளிப்படுத்த விரும்பேல்ல. அப்பிடிக் கருதலாமா?”

“இல்லை. முழுப் பிழையான புரிதல். ஆருக்கு எதை வெளிப்படுத்த வேணுமோ, எது தேவையோ அதை மட்டும் சொல்லும். ஒரு விடுதலை இயக்கம் இப்பிடியான கட்டுப்பாடுகளோட இருந்தால்தான் வலிமை கொண்டு இருக்க முடியும். அது உங்களுக்கு விளங்காது.”

“ஏன் எனக்கு விளங்காது எண்டு சொல்லுறியள்?”

“எல்லாருக்கும் அது விளங்கவேணுமெண்டு அவசியமில்லை. சில போராளிகளுக்குக்கூட நீங்கள் சொன்ன மாதிரி பிழையான புரிதல் இருக்கு.”

கடவுள்... பிசாசு... நிலம்! - 59

எங்களுடைய அணி முன்னரங்கில் நிறுத்தப்பட்டது. இளவெயினியும் நானும் ஒன்றாக அணியில் இடம்பிடித்தோம். பூம்பாவை வேறோர் அணியில் சேர்க்கப்பட்டாள். அவளுக்கு அதில் கொஞ்சம் மனத்தொய்வு. நானும் கேட்டுப் பார்த்தேன். அவளும் கேட்டாள். ஆனால் மேலதிகாரிகள் அனுமதிக்கவில்லை. விடிந்து நீண்ட நேரம் ஆகியிருந்தது. எங்களுக்குச் சற்று தூரத்தில் மண் அணை தெரிந்தது. அங்கும் போராளிகள் அரண்கள் அமைத்திருந்தனர். மண் அணைக்கு அந்தப் பக்கத்தில் ராணுவத்தினர் எனச் சொல்லப்பட்டிருந்தது. நானும் இளவெயினியும் சில நிமிடங்கள் அந்த மண் அணையைப் பார்த்துக்கொண்டிருந்தோம். சூரியன் அதற்கு மேலாக ஏறி வந்துகொண்டிருந்தான்.

பூட்டம்மா அழுது கரைந்தாள். இன்னும் உடல் மெலிந்திருந்தது. அம்மா கொஞ்சம் பயந்துபோய்விட்டாள். ஏன் இப்படி மெலிந்துபோகிறாள் என்று தெரியாமல் அவதியுற்றோம். ஒரு நாள் சாப்பாட்டை இரண்டு வேளைகள் என மாற்றிக்கொண்டாள். காலையுணவை மூர்க்கமாகத் தவிர்த்தாள். எல்லாவற்றிலும் பிடிப்பற்றுப்போயிருந்தாள். வெற்றிலையும் சீவலும் மட்டுமே நிலைபெற்றிருந்தன. அதக்கி அதக்கித் துப்பினாள். நானும் அம்மாவும் கிளிநொச்சி செல்ல ஆயத்தமானோம். அம்மாவுக்குச் சந்தையில் மரக்கறி வாங்கினால்தான் பசியடங்கும். பூட்டம்மாவைத் தனியாக விட்டுவிட்டுச் செல்ல முடியுமாவென யோசித்த அம்மா, என்னை வீட்டிலேயே நிற்கச் சொன்னாள். எங்களுக்கெல்லாம் துணையாக இருந்த பூட்டம்மாவுக்கு நான் துணையாக நிற்கும் நாளில், வன்னி வான்பரப்புக்குள் நுழைந்த அரச படைகளின் போர் விமானங்கள் கொடூரமான தாக்குதலைச் செய்தன. கிளிநொச்சியை அடுத்திருக்கும் பரந்தன் பகுதியில் மக்களின் குடியிருப்புகள் மனித மாம்சங்களால் உருகி எரிந்தன. அம்மாவைத் தேடிச் சந்தைக்குப் போவதா அல்லது வீட்டிலேயே நிற்பதா என்று குழப்பமும் தவிப்பும் என்னைப் புரட்டிக் கொண்டிருந்தன. அம்மா வீட்டுக்குத் திரும்பி வந்தாள். அவளிடம் எந்த மரக்கறியும் இல்லாதிருந்தது. அவளின் முகம் வெறித்திருந்தது. குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டாள். எடுத்து வந்தேன்.

“பரந்தனில நிறையச் சனங்கள் செத்தும் காயப்பட்டும் போச்சுதுகளாம், ரோட்டு முழுக்க வாகனங்கள் காயக்காரர்களை ஏத்திக்கொண்டு போகுது.” அம்மா சொன்னாள்.

பூட்டம்மா கண்ணீர் வடியும் கண்களைத் துடைத்துக்கொண்டு “எடியே, நீ என்ன பயந்து போயிருக்கிறாய். அதெல்லாம் ஒண்டுமில்லை. அழாமல் எழும்பி சமை. எனக்குப் பசிக்குது” என்றாள்.

பூட்டம்மாவைப் பார்த்தேன். அவள் மீண்டும் தனது கண்களை வானில் நிலை குத்தி அழத் தொடங்கினாள்.

(நீளும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism