Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 60

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

சந்தேகம் எல்லாம் இல்லை. ஒரு பயமிருக்கு. இப்பிடி உலக நாடுகளெல்லாம் சேர்ந்து செய்யிற யுத்தத்தில நாங்கள் எப்பிடி நிண்டுபிடிக்கேலும் சொல்லு.

கடவுள்... பிசாசு... நிலம்! - 60

சந்தேகம் எல்லாம் இல்லை. ஒரு பயமிருக்கு. இப்பிடி உலக நாடுகளெல்லாம் சேர்ந்து செய்யிற யுத்தத்தில நாங்கள் எப்பிடி நிண்டுபிடிக்கேலும் சொல்லு.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

“சண்டை மன்னாரிலும் முகமாலையிலும்தான் நடக்குது. ஆனால், அரசாங்கம் சண்டைக்களத்தில நடத்திற தாக்குதலைவிட சனங்களின்ர இருப்பிடங்களிலதான் அதிகமாக நடத்துது.”

“எந்த அரசாங்கம் எண்டாலும் அப்பிடித்தானே, இது என்ன புதுசா?”

“முந்தி இருந்த அரசாங்கத்தைவிடவும், இப்ப இருக்கிறது பல மடங்கு ரத்தம் பருகும். இது மூர்க்கம் கொண்டேல்ல நிக்குது.”

“நேற்றைக்குப் பரந்தனில கிபிர் அடியில செத்த பத்துக்கு மேற்பட்ட சனங்களையும் பயங்கரவாதிகள் என்றெல்லே சொல்லியிருக்கினம்.”

“அவனுக்கு எல்லாரும் பயங்கரவாதிகள்தான். எனக்கு இன்னும் ரெண்டு மாசத்தில பிறக்கவிருக்கிற குழந்தையையும் அவங்கள் அப்பிடித்தான் சொல்லுவாங்கள்.”

“இந்தச் சண்டை ஒரு முடிவு காணாமல் நிக்கப்போறதில்லையெண்டு நினைக்கிறன்.”

“ஓம். இந்தச் சண்டையோட முடிவு எங்களுக்குச் சாதகமாய் முடிஞ்சால், அது எங்கட இனத்துக்கு ஒரு விடிவாய் மாறும்.”

“ஆனால், நீ அப்பிடிச் சாதகமாய் முடியுமெண்டு நினைக்கிறியோ?”

“ஏன் அதில உங்களுக்கு என்னச் சந்தேகம்?”

“சந்தேகம் எல்லாம் இல்லை. ஒரு பயமிருக்கு. இப்பிடி உலக நாடுகளெல்லாம் சேர்ந்து செய்யிற யுத்தத்தில நாங்கள் எப்பிடி நிண்டுபிடிக்கேலும் சொல்லு.”

“எவ்வளவு இயலுமோ அவ்வளவு நாள்களுக்குத் தாக்குப்பிடிப்பம். நாங்கள் மண்டியிடப்போவதில்லை என்று போன மாவீரர் தின உரையில தலைவர் சொன்னது உங்களுக்கு விளங்கேல்லையா?”

கடவுள்... பிசாசு... நிலம்! - 60

“அதெல்லாம் விளங்கினது. சண்டையில வெண்டால் சந்தோசம்தானே. எவ்வளவு பிள்ளையள இந்த மண்ணில வார்த்திருக்கிறம். எல்லாம் அந்த விடுதலைக்குத்தான்.”

முனியப்பர் கோயிலடியில் நின்று கதைத்துக்கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை வானத்தை அண்ணாந்து பார்த்தார். அவருக்கருகில் நின்றுகொண்டிருந்த மாரிமுத்து, தன்னுடைய சாறத்தை இழக்கிக் கட்டியபடி “மேல போறது என்ன சாமான் சொல்லுங்கோ பாப்பம்” என்கிறார். தாமோதரம்பிள்ளை அந்தப் போர் விமானத்தைப் பார்த்துச் சொன்னார்.

“கிபிர்தானே?”

“இல்லையில்லை. இது மிக் - 27”

“இதென்ன புதுப்பெயராய்க் கிடக்கு.”

“இது தமிழ்ச்சனத்தை அழிக்க இந்தியா குடுத்த புதுப்பரிசு.”

“திரும்பத் திரும்ப எங்களைக் கொன்றுபோட வேணுமெண்டு நிறைய பேர் முயற்சிக்கினம். முந்தி ஒரு காலத்தில அமைதிப்படை என்ற பேர்ல செய்த கொலை போதாமல், இப்ப இதையும் கொடுத்துவிட்டிருக்கினமோ?”

“எங்களை இஸ்ரேல் கொல்லும், இந்தியா கொல்லும், அமெரிக்கா கொல்லும், நோர்வே கொல்லும். ஆனா இவ்வளவு பேரையும் எதுத்து நிக்க எங்களிட்ட இருக்கிறது இந்தப் புலிப்படைதான்” என்று சொன்னபடி மாரிமுத்து சைக்கிளை நகர்த்தத் தொடங்கினார். தாமோதரம்பிள்ளை முனியப்பர் கோயிலடியிலே அமர்ந்தார். என்றைக்குமில்லாதவாறு முனியப்பர் தலவிருட்சமான ஆலமரத்தின் மேலே நிறைய கிளிகள் வந்தமர்ந்தன.

தாமோதரம்பிள்ளை அவற்றைப் பார்த்து அகமகிழ்ந்தார். ஆயினும் கிளிகளின் சப்தத்தை அவரால் கேட்க முடியாதிருந்தது. சின்னக் கற்களைப் பொறுக்கி மரத்தை நோக்கி எறிந்தார். கிளிகள் எழுந்து பறக்காமல் சப்தமிட்டபடியே இருந்தன. அந்தச் சப்தம் வன்னி நிலமெங்கும் கேட்டுவிடுமளவுக்கு வான் வரை எழுந்தது. தாமோதரம்பிள்ளை கிளிகளின் இரைச்சல் பொறுக்காது, காதைப் பொத்திக்கொண்டு முனியப்பர் கோயிலடியைவிட்டு ஓடி நகர்ந்தார்.

அம்மா இயல்புக்குத் திரும்பியிருந்தாள். அதிகாலையிலேயே எழும்பிக் குளித்தாள். பூட்டம்மாவுக்குத் தேநீர் போட்டுக்கொடுத்தாள். பூட்டம்மா நிலத்தில் இரண்டு சாக்கைப் போட்டு அதற்கு மேல் போர்த்திப் படுத்திருந்தாள். அவளுக்குப் பசியில்லை. நீரருந்தி வாழும் உயிரி போலாகியிருந்தாள். எனக்குக் காய்ச்சல் வருவதற்கான குணங்குறிகள் இருந்தன. தண்ணீர் ஒத்துவரவில்லையாய் இருக்குமென்று அம்மா சமாதானம் சொன்னாள். சொந்த வீட்டையும், சொந்தக் கிணற்றையும் விட்டுவந்தால் மனசுக்குள் நோய்மை வந்துவிடுமென்று பூட்டம்மா சொன்னாள். தாழ்வாரத்தில் கண் துஞ்சும் கோழிக்குஞ்சைப்போலக் கண்கள் திறக்க முடியாமல் சோர்வுற்றுச் சரிந்தேன். அம்மா தொட்டுப் பார்த்தாள்.

“நல்லாய்க் கொதிக்குது. ஒரு பனடோல் குடி.”

“வேண்டாம், எனக்குச் சத்தி வாற மாதிரிக் கிடக்கு.”

“இரு, ஈரச்சீலை எடுத்துக்கொண்டு வாறன்.”

அம்மா எழுந்து சென்று சின்னத்துணியைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்தாள். படுத்துக்கிடந்த என்னுடைய மேனியை ஈரத்துணியால் துடைத்தாள். சுகமாக இருந்தது. ஆனால் அவள் துடைக்கும்போதே ஈரம் காய்ந்து போகுமளவுக்குக் காய்ச்சல் அடித்தது. பூட்டம்மா தன்னுடைய தலைமாட்டில் கிடந்த திருநீற்றுச்சரையைப் பிரித்து கொஞ்சம் அள்ளிப்பூசினாள். உடம்பு நடுங்கத் தொடங்கியிருந்தது. உடலினுள்ளே தாகத்தின் பெருக்கு. நினைக்கவியலாத வலி மெல்லத் தோன்றியது. அம்மா என்னை அணைத்துவைத்திருந்தாள். மாலையானதும் பூட்டம்மா நீறு போட்டு தண்ணீர் தெளித்துவிடுவதாகக் கூறினாள். இந்தக் காய்ச்சல் ஏன் இப்படி என்னை உலுக்குகிறது?

சொல்லவியலாத வலியும் நடுக்கமும் என்னை ஏன் பீடித்திருக்கின்றன? அம்பிகா என்னை வந்து பார்க்கிறாள். அவளது அண்மை எனக்குக் கொஞ்சம் நிழலாக இருக்கிறது. அவளது கைவிரல்கள் என்னைத் தொட்டு சில்லிடச் செய்கின்றன. குளிர்ந்து உதறும் இந்தவுடலில் அவளுக்கென பூக்கும் மலரை அவளே கண்டுகொள்கிறாள். அம்பிகா என்னுடைய கழுத்தில் அவளது பிறங்கையை வைத்து அடிக்கடி தொட்டுப்பார்த்தாள். நெருப்பை அள்ளி மேனியில் போட்டது போன்ற சூடு. கையை விசுக்கென என்னிலிருந்து எடுத்தவள், “ஒரு பனடோல் குடியுங்கோ” என்றாள். எனக்கு வேண்டாமென்று மறுத்துவிட்டேன். ஆனால், அவள் பிடிவாதமாகத் தண்ணீரும் பனடோலும் எடுத்துவந்தாள். அவள் என்னிடம் இறைஞ்சி “இந்த ஒரு பனடோலைப் போடுங்கோ” என்று சொன்னதைத் தட்டிக்கழிக்க முடியவில்லை. வாங்கி மிண்டி விழுங்கினேன்.

நான் கருகிப்போயிருந்தேன். அம்பிகா கண்ணாடியை எடுத்துவந்து முகத்தைக் காண்பித்தாள். கண்கள் உள்ளிறங்கிப்போயிருந்தன. முகத்தில் அனல் வீசுவது கண்ணாடியில் தெரிந்தது. அம்பிகா என்னை அணைத்து முத்தமிட்டு “கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கொண்டு படுங்கோ, காய்ச்சல் நிண்டிடும்” என்றாள்.

களமுனை அமைதியாக இருந்தது. போராளிகள் காவலரண்களில் நின்றுகொண்டிருந்தனர். ராணுவத்தினர் தாக்குதலைச் செய்தால், பதில் தாக்குதலைச் செய்வதற்காகக் காத்திருந்தோம். இளவெயினிக்குப் பூம்பாவை பற்றிக் கவலை. அவள் தனியாகப் பிரிந்துபோய்விட்டாள் என்கிற வருத்தம் எனக்குமிருந்தது. ஆனால் நான் காட்டிக்கொள்ளவில்லை. இங்கு எதுவும் நிரந்தரமற்றது. தூரிகையாகிய நான் இக்கணமே எறிகணை வீழ்ந்தோ, வான் தாக்குதல் நடந்தோ வீரச்சாவு எய்தலாம். சாதாரணமான எந்த உணர்வுக்கும் நாம் பலியாகிவிடக் கூடாது. பூம்பாவை வேறோர் அணியில் சேர்க்கப்பட்டாலும், அவள் இக்களத்தில் நிற்கிறாள்.

“தூரி! நான் தற்செயலாக வீரச்சாவு அடைந்தால், நீ விடுப்பு கேட்டு என்ர வித்துடல் விதைக்கிற வரைக்கும் இருக்க வேணும்” இளவெயினி சொன்னாள்.

நான் சிரித்துக்கொண்டு கேட்டேன். “நீயும், நானும் ஒண்டாய் வீரச்சாவு அடைந்தால் என்ன செய்யிறது?”

அவள் கோபமாய் என்னிடம் சொன்னாள். “நான்தான் முதலில வீரச்சாவு அடைவன்.”

“இதென்ன புது அறிக்கையாய் இருக்கு, அதெப்படி உனக்குத் தெரியும்?”

“எனக்குத் தெரியும். இரண்டாம் லெப். இளவெயினி என்று என்னோட வித்துடல் மேல நீ மண்தூவி நடப்பாய்” என்றாள்.

“சும்மா இப்பிடி விசர் கதை கதையாதே.”

இளவெயினி என்னைக் கட்டியணைத்து “நீ என்னை விட்டிட்டு வீரச்சாவு அடைந்தால், நான் உங்கட வித்துடல் பார்க்க வர மாட்டன்” என்றாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 60

மெல்ல மெல்ல ராணுவம் சண்டையைத் தொடங்கியது. மாலை வேளையில் அவர்களுக்கு ஏற்படும் பயத்தினால் இது போன்ற தாக்குதலைச் செய்வார்கள். போராளிகள் அதைப் பொருட்படுத்துவது கிடையாது. இரவினில் சில வேளைகளில் மூர்க்கமான முன்னகர்வுகளைச் செய்யத் துணிவார்கள்.

அப்போது போராளிகள் கொடுக்கும் பதிலடித் தாக்குதல் மின்னல் எழுவதைப்போலிருக்கும். இன்று ராணுவம் முன்னகர்வை மேற்கொள்ளுமென வேவுத் தகவல்கள் வந்திருந்தன. போராளிகள் விழிப்புநிலைக்குத் தயார்படுத்தப்பட்டிருந்தனர். சில பகுதித் தளபதிகள் நேரடியான கட்டளைகளை வழங்கியிருந்தனர். மாலை சரிந்தது. இருள் பரவும் வேளையில் மின்மினிப்பூச்சிகள் களமெங்கும் பறந்தன. ``அந்தி கழிந்த பின்னர், பூமி பிரசவிக்கும் வெளிச்சப் பொட்டுகள்’’ என்று இளவெயினி சொன்னாள்.

மாலையில் பூட்டம்மா நீறு போட்டுவிட்டாள். தண்ணீர் தெளித்துவிட்டதும் கொஞ்சம் காய்ச்சல் குறைந்திருந்தது. அம்பிகா என்னை வந்து பார்த்து, ‘இப்ப கொஞ்சம் சுகம்தானே?’ என்று செல்ல விசாரிப்பு செய்தாள். ஆனால் இந்தக் காய்ச்சல் என்னைவிட்டுப் போகவில்லை. இப்போது விலகியிருக்கிறது. வியர்வையாய் வழிந்தோடும் என்னுடலின்மீது குளிர் பரவி நின்றது. அம்மா இடியாப்பமும், மாங்காய் போட்டு சொதியும் வைத்திருந்தாள். காய்ச்சலுக்கு உகந்த சாப்பாடு. மாங்காய்ச் சொதி நல்ல உருசையாக இருக்கும். ஆனால், சாப்பிட முடியாதிருந்தது. பூட்டம்மாவைப்போல சாப்பாட்டினை ஒரு வேண்டாப்பொருளாக என்னிடமிருந்து விலக்கி வைத்தேன். அம்மா கொஞ்சமாக எடுத்து தீத்திவிட்டாள். ஆனாலும் உண்ண முடியவில்லை. இரவு நாங்கள் தங்கியிருந்த வளவுக்குள் யாரோ மூன்று பேர் நடந்து வந்தனர்.

அண்ணாவைப் பார்த்ததும் பூட்டம்மா படுக்கையிலிருந்து எழும்பி, “வா மோனே” என்றழைத்தாள். அண்ணாவும் அவனது தோழர்கள் இருவரும் வந்திருந்தனர். அண்ணாவைக் கட்டியணைத்து முத்தமிட்ட அம்மா, எல்லோரையும் அமரச்சொல்லி பாய் விரித்தாள். அண்ணாவோடு வந்திருந்த இரண்டு பேரும் ஏற்கெனவே பார்த்த முகங்களைப்போல இல்லாதிருந்தனர். நான் காய்ச்சலில், வாயைத் திறந்து கதைக்க பெலமில்லாமல் அப்படியே கிடந்துகொண்டு அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தேன். அண்ணா மெதுவாக வீட்டுக்குள் எழுந்து சென்றான். அம்மாவும் அண்ணாவும் எதையோ கதைத்துக்கொண்டிருந்தனர்.

திடீரென அம்மா ஓலம் பெருகக் கத்தத் தொடங்கினாள்!

(நீளும்...)