Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 61

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

அக்காவின் இயக்கப்பெயர் திடீரென மனதுக்குள் நீந்துகிறது. `தூரிகை.’ ஏன் இந்தப் பெயரை வைத்துக்கொண்டாள் எனத் தெரியவில்லை.

கடவுள்... பிசாசு... நிலம்! - 61

அக்காவின் இயக்கப்பெயர் திடீரென மனதுக்குள் நீந்துகிறது. `தூரிகை.’ ஏன் இந்தப் பெயரை வைத்துக்கொண்டாள் எனத் தெரியவில்லை.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

பவி மாமா வீரச்சாவு அடைந்துவிட்டார் என்கிற செய்தி காற்றெங்கும் பரவியது. அம்மாவின் ஓலம் அடங்க நிமிடங்கள் ஆகின. கொழும்பில் நடந்த மோதலில் பவி மாமா குப்பி கடித்து வீரச்சாவு அடைந்தார் என்ற விவரங்களைக் கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. எப்போது அவர் கொழும்புக்குப் போனார் என்று யாரிடம் கேட்க முடியும்? ரகசியம் இரும்பைப்போல எல்லோரையும் அழுத்தி மூடிவிட்டது. பவி மாமாவின் வித்துடல் கிடைக்காது. இலங்கை முழுவதற்கும் செய்தியாக மாற்றப்பட்ட ‘பயங்கரவாதி’ ஒருவனின் இறந்தவுடலாக பவி மாமாவின் புகைப்படம் சிங்களப் பத்திரிகைகளில் வெளியாகியிருக்கும். அம்மா அழுது களைத்திருந்தாள். அண்ணாவுடன் வந்தவர்கள் வெளியே நின்று கதைத்துக் கொண்டிருந்தனர். அண்ணா வீட்டைவிட்டு வெளியேறினான். பூட்டம்மா அழுவதற்குப் பலனற்றுக் கண்களை வெறித்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தாள். பவி மாமாவை இழந்தோம். எப்போதும் எனக்கு நாயகன் என்று நம்பிய ஒருவனை இழந்தோமென்கிற வேதனை என் நெஞ்சில் வலியாக எழுந்தது. அம்மா அழுவதும் புலம்புவதுமாக இருந்தாள். ஏனென்று அறிய முடியாதபடி எனக்கும் அழுகை வந்தது. வெறுமையும் தவிப்பும் உடலுக்குள் காய்ந்து எழுந்தன. அதன் வெக்கை, எச்சிலைக்கூட விழுங்க மறுத்தது. அக்காவின் நினைப்பு எனக்குள் ஒரு சர்ப்பம்போல நெளியத் தொடங்கியது. அவள் உயிருக்கும் ஏதும் நேர்ந்துவிடுமோ என்று கெட்ட நினைப்புகள் வந்தன. அவளுடைய வித்துடலை வைத்து நாம் அழுவதைப் போன்ற காட்சிகள் மனதுக்குள் சடசடவென்று ஓடுகின்றன. சொல்ல இயலாத நடுக்கம். யாரிடம் சென்று அரற்ற முடியுமென்ற தவிப்பு. `பன்னிச்சைத்தாயே...’ என்று திசை பார்த்து அழைப்பதைவிட வேறு எந்தத் தெரிவுமற்ற கையறுநிலை. அக்காவுக்கு ஏதேனும் நிகழ்ந்தால், என்னால் தாங்கவியலாது. அவளின் வாசனை என்னைக் காவல் செய்யும் ஒரு மந்திரம்போல என்னுள்ளே இருக்கிறது. அக்காவுக்கு எதுவும் நடக்கக் கூடாது. நடந்தால்? என்று ஒரு கேள்வியை என்னுளிருந்து கேட்பது எந்தப் பிசாசு என்று தெரியவில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் அது தீய காட்சிகளை எனக்குள் குட்டி போட்டுக்கொண்டிருக்கிறது. இந்தப் பிசாசைத் துரத்தும் கடவுள் இந்த நிலத்தில் இல்லையா? பூட்டம்மா என்னைப் பார்த்துச் சொன்னாள்...

“பயப்பிடாதே மோனே, போய் முகத்தைக் கழுவிட்டு திருநீற்றைப் பூசு.”

கடவுள்... பிசாசு... நிலம்! - 61

பூட்டம்மாவுக்கு நான் பயந்துபோயிருப்பது எப்படித் தெரியும்... அவள் என்னைப் பார்த்து இப்படிச் சொல்லும் முகாந்திரத்தை எங்கிருந்து பெற்றாள்... மர்மமான சக்தி அவளிடமிருக்கிறது. அவள் சொல்லுவதெல்லாம் நடக்கின்றன. இல்லையில்லை. அவள் சொல்வதெல்லாம் நடக்கின்றனவென்றால் நாம் அழிந்து போய்விடுவோமா? அவள் கூறுவதெல்லாம் நடக்கிறது என்பதை நான் ஏற்க மறுக்கிறேன். பூட்டம்மா என்னைப் பார்த்துச் சிரித்தபடி மீண்டும் சொல்கிறாள். ``எழுந்து சென்று முகத்தைக் கழுவு. திருநீற்றைப் பூசு.’’ அழுது முடித்த அம்மா கண்களைத் துடைத்துக்கொண்டு இயல்புக்குத் திரும்பினாள். அண்ணாவோடு வந்திருப்பவர்களுக்குத் தேத்தண்ணியை ஊற்றிக் கொடுத்தாள். மரணம் நம்மை நிரந்தரமான இழைகளால் பின்னியிருந்தது. அவற்றில் நாம் இரைகளாக அகப்பட்டிருந்தோம். ஆனால் அதன்பொருட்டு நாம் துக்கத்தில் புதையவில்லை. இழைகளை அறுத்துக்கொண்டு விழுந்து எழுந்தோம். கண்ணீர் எங்களுடைய அடையாள அட்டையைப் போன்றது. துயரம் நாம் அணியும் உள்ளாடை. பரிதாபத்துக்கும் பச்சாதாபத்துக்கும் நாம் அந்நியமானவர்கள். விடுதலைக்காகச் சாகத் துணிவதைவிடவும் மேலான மானுட மேன்மை வேறில்லை என்று ஊட்டிய முலைகளில் பாலருந்திய காலமிது. அண்ணாவுக்குப் பரந்தனில் வேலையிருந்தது. முன்னரங்கில் ஒரு பொறுப்பதிகாரியாக இருக்கிறான்போலும். தன்னைக் குறித்து எதையும் பகிர்வதற்கும் விரும்பமாட்டான். இயக்கத்தின் கடுகளவு செய்தியைக்கூட கதைப்பதை விரும்பியதில்லை. எப்போது விடுமுறையில் வந்தாலும், அண்ணாவோடு கதைத்துக்கொண்டிருப்பதை வேலையாக வைத்திருக்கும் சொந்தக்காரர் ஒருவர் கேட்ட கேள்வியும் அதற்கு அண்ணா அளித்த பதிலும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. அவர் கேட்டார்,

“இயக்கம், இந்தச் சண்டையை இறுதிப்போர் என்று சொல்லுது. இது முடிஞ்சால் எங்களுக்குத் தமிழீழம் கிடைக்குமெண்டு நினைக்கிறியளோ தம்பி?”

அதற்கு அண்ணா இப்படிச் சொன்னான். “நான் இப்ப தமிழீழத்தைப் பற்றி யோசிக்கேல்ல, உங்களை மாதிரியான ஆக்களை வெச்சுக்கொண்டு நாங்கள் பெறப்போகிற விடுதலைக்கு எந்தப் பயனும் இல்லையெண்டுதான் யோசனையாய் இருக்கு.”

அவருக்கு முகம் கறுத்துப்போய்விட்டது. “என்ன தம்பி இப்பிடிக் கதைக்கிறியள்?” என்று சொன்னபடி அவசரமாக அந்த இடத்தைவிட்டே நகர்ந்தார்.

அக்காவின் இயக்கப்பெயர் திடீரென மனதுக்குள் நீந்துகிறது. `தூரிகை.’ ஏன் இந்தப் பெயரை வைத்துக்கொண்டாள் எனத் தெரியவில்லை. ஆனால், சமாதான காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த ஓவியக் கண்காட்சியைப் பார்க்கச் சென்றிருந்தாள். ‘வலி மிகுந்த எங்களின் வாழ்வை, தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த புகழேந்தியின் ஓவியக்கோடுகள் தாங்கி நின்றன’ என்று யாரோ ஆற்றிய உரையில் ‘அவரின் தூரிகை – துவக்குக்கு நிகரானது’ என்ற ஓரிடத்தை அவள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்த நாள்களில் தூரிகை என்ற சொல்லின்மீது அவளுக்குக் காதல் பிறந்திருக்கலாம். அவளுக்கு நான் சில பெயர்களைப் பரிந்துரை செய்தும், இந்தப் பெயரில் தீர்மானமான பிடிப்போடு இருக்கிறாள். அவளுக்கு எதுவும் நேரக் கூடாது. நான் இழப்பை எண்ணி அஞ்சுகிறேன். முகத்தைக் கழுவி திருநீற்றைப் பூசிக்கொண்டு பூட்டம்மாவுக்கு அருகில் இருக்கிறேன். அவள் என்னுடைய கையப் பற்றிக்கொண்டு சொன்னாள்.

“கொக்காவுக்கு ஒண்டும் நடக்காது. நீ ஒண்டையும் போட்டு யோசியாத. மனசுக்குள்ள ‘நமசிவாய’ சொல்லு என்றாள். யாருக்காகச் சொல்ல வேண்டும். எனக்காகவா... அக்காவுக்காகவா? எத்தனை பேருக்காக. எத்தனை தடவை சொல்ல வேண்டும்... கொஞ்சம் கொஞ்சமாகக் கோபமும் வெறுப்பும் ஒரு கொடியைப்போல என்னைப் பற்றி ஏறி வளர்ந்தன. நான் கிளிநொச்சி சென்று வருவதாகச் சொல்லிவிட்டு நடக்கலானேன். “திரும்பி வருகிறபோது குளத்து மீன் எதுவும் சந்தித்தால் வாங்கிவர முடியுமா?” அம்பிகா ஓடிவந்து கேட்டாள்.

“குளத்து மீன் சரியான வெடுக்கு, அதை எப்பிடி சாப்பிடுகிறியள்?” என்று கேட்டேன்.

“வாயாலதான்” என்று சொன்ன அம்பிகாவைத் திரும்பிப் பார்க்காமல் நடந்து சென்றேன். அம்பிகா எனக்குக் கேட்கும்படியாக ஓடிவந்து சொன்னாள்.

“மறக்காமல், ஜப்பான் மீன் இருந்தால் வாங்கிட்டு வாங்கோ.”

நான் ‘ஓமெ’ன்று தலையாட்டிக்கொண்டே நடந்து வந்தேன்.

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் சனம் அதிகமாகவிருந்தது. நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றேன். சனங்களின் முகத்தில் நடைபெற்றுவரும் போரின் அச்சவுணர்வு பல வகைகளில் ஏறி நின்றது. என்னருகே வந்தவொருவர் “உங்களோடு கதைக்க வேண்டும். கதைக்கலாமா?” என்று கேட்டார்.

“ஓம் கதையுங்கோ” என்றேன்.

அவருடைய தோற்றத்தைப் பார்த்தால், அரசியல் போராளியாக இருக்க முடியுமெனத் தீர்மானித்தேன். அது பொய்க்கவில்லை. தன்னுடைய பெயரைக் கூறி, என்னுடைய பெயரைக் கேட்டார். சொன்னதும், அவர் கதைக்கத் தொடங்கினார். நாட்டில் நிலவுகிற யுத்த நெருக்கடியையும், இயக்கத்துக்குத் தேவையான ஆளணிப் பற்றாக்குறையையும் ஆழமாகக் கூறி, உங்களைப் போன்ற வலுவானவர்கள் இயக்கத்தில் இணைய வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அவரை நான் விளங்கிக்கொண்டேன்.

“எனக்கு வயசு காணாது என்பது முதல் பிரச்னை. இரண்டு தடவை முயன்றும் முடியவில்லை” என்று சொன்னேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 61

`உங்களுக்கு இப்ப என்ன வயசு?’ என்று அவர் கேட்கவில்லை. ஆனால், ``நீங்கள் போராடக்கூடிய உடல் வலுவோடுதான் இருக்கிறீர்கள்’’ என்றார். அந்தப் போராளி, கடுமையான ஆர்வமாகப் பிரசாரம் செய்து ஆட்களைச் சேர்த்துவிட வேண்டுமென கங்கணம் கட்டியிருந்தார் என்றே தோன்றியது. நான் அவரிடம் சொன்னேன்:

“எனக்கு இயக்கத்தில சேர நிறைய பாதைகள் தெரியும். நீங்கள் இவ்வளவு நேரமும் கதைச்சதைக் கேட்டேன். உங்களுடைய பேச்சு வல்லமை எனக்குப் பிடிச்சிருக்கு.”

அவர் என்னைப் பார்த்துக் கேட்டார். “நீ எங்க படிக்கிறாய்?”

“நான் இடம்பெயர்ந்து வந்திருக்கிறன். இன்னும் பள்ளிக்கூடம் போகவில்லை.”

அந்தப் போராளி என்னுடைய பெயர், விவரங்களைத் தனது குறிப்புப் புத்தகத்தில் எழுதிவிட்டு, இன்னோர் ஆளைத் தேடிச் சென்றார். நான் கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தேன். நீண்ட நேரமாக வேடிக்கை மட்டுமே பார்த்தேன். பேருந்துகளின் இரைச்சல் கொஞ்சம் அமைதியைத் தந்தது. தமிழீழப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்தில் ஏறி, சும்மா சுத்தினால் என்னவென்று தோன்றியது. மனம் நிலையற்ற கிளையைப்போல ஆடிக்கொண்டே இருந்தது. காட்சிகள், புலன்கள் எல்லாமும் சிதறுண்டு சிதறுண்டு பெருகின. பேருந்தொன்றில் ஏறினேன். அது புதுக்குடியிருப்பு போகும் பேருந்து. விசுவமடு மட்டும் பயணச்சீட்டு வாங்கினேன். ஜன்னல் இருக்கையில் அமர்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன். நினைக்க நினைக்க சுகம்தரும் இந்த மண்ணை ஆக்கிரமிப்பாளர்கள் குருதிக்காடாக மாற்றிவிட்டார்களே... கொக்குகளும், மீன்கொத்திப் பறவைகளும் எழுந்து பறக்கும் வயல்களையும் குளங்களையும் கடந்து போய்க்கொண்டேயிருந்தேன். மனம் கொஞ்சம் கொஞ்சமாக ஆறுதலுக்குத் திரும்பியது. பேருந்து முரசுமோட்டை தாண்டிப் போய்க்கொண்டிருந்த போது, இறங்கிவிடலாமென்று தோன்றியது. அடுத்த பேருந்து தரிப்பிடத்தில் இறங்கினேன். எங்கேயாவது ஒரு மரத்தடியில் போய் அமர்ந்துகொண்டால் இன்னும் சுகமாயிருக்கும் போலிருந்தது.

நான் வீடுகளைத் தாண்டி மாமரங்கள் அடர்ந்து நிற்கும் ஓரிடத்தை அடைந்தேன். அது தகரத்தால் அடைக்கப்பட்டிருந்தது. முகப்பு வாசல் மூடப்பட்டிருந்தது. பார்த்தால் போராளிகளின் முகாமெனத் தெரிந்தது. ஆனாலும் என்ன... திறந்துகொண்டே உள்ளே போனேன். ஒருவர் வீட்டினுள் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்தும் “என்ன தம்பி?” என்று கேட்டார். “ஒன்றுமில்லை... இந்த மரத்தடியில கொஞ்ச நேரம் இருக்கவேணும்” என்றேன்.

“எங்கையிருந்து வாறாய், உள்ள வா” என்றழைத்தார்.

நான் உள்ளே போய் அவருக்கருகில் இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டேன். அவரின் கையில் கிடந்த ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையை ஆர்வமாகப் பார்த்தேன்.

“தமிழ்ச்செல்வன் அண்ணையின்ர பேட்டி வந்திருக்கு, படிக்கப் போறியா?”

“ஓம்.”

புத்தகத்தை வாங்கிக்கொண்டு மரத்தடியில் வந்தமர்ந்தேன். நிழல் என்னுள்ளும் கவிந்தது.

(நீளும்...)