Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 67

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

பூட்டம்மா அண்ணாவைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் சொல்வதைக் கேட்க நிறைய சிறுவர்கள் குவிந்திருந்தனர்

கடவுள்... பிசாசு... நிலம்! - 67

பூட்டம்மா அண்ணாவைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் சொல்வதைக் கேட்க நிறைய சிறுவர்கள் குவிந்திருந்தனர்

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

அண்ணாவின் வித்துடல் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. புலிச்சீருடையோடு முகம் விரிந்து பேழைக்குள் கிடத்திவைக்கப்பட்டிருந்தான். கழுத்தின் வலப்புறத்திலிருந்த காயம் தெரிந்தது. அண்ணாவை ஒரு முறை கண்களை மலர்த்தும்படி அம்மா ஒப்பாரியில் இறைஞ்சினாள். வேப்பம் பழங்கள் உதிரும் இரவில் அண்ணாவின் வித்துடலின் கால்மாட்டில் நின்றுகொண்டிருந்தேன். நிறைய போராளிகள் வந்துகொண்டிருந்தனர். அண்ணாவின் தோழர்கள், விடுதலை யாகத்தில் தம் உயிர் ஊற்றி ஆகுதியாகக் காத்திருப்பவர்கள், சொந்தக்காரர்கள் வந்து சேர்ந்தனர். என் அக்காவுடன் இன்னொரு போராளி அக்காவும் வந்து சேர்ந்தார். அது அவளுடைய தோழமையாக இருக்க வேண்டுமென நினைத்துக்கொண்டேன். ஆனால் அவள் முண்டியடித்துக்கொண்டு அண்ணாவின் வித்துடலை அணைத்தபடி அழுதாள். அக்கா, அம்மாவை இறுகப் பற்றிக்கொண்டு அழுதாள். அழுகையின்மீது சலிப்பூறிய இரவு. அண்ணாவின் வித்துடலைப் பார்க்க மாட்டேன் என்று அக்கா அடம்பிடித்தாள். அவனை அப்படிப் பார்க்க மனம் ஒப்பவில்லை என அவள் திடம்பூண்டாள். நல்லாள், அண்ணாவின் வலதுபுறக் கழுத்திலிருந்த காயத்தைத் தடவியபடி கண்ணீரால் கதைத்துக்கொண்டிருந்தாள். அம்மா, நல்லாளைப் பற்றி அக்காவிடம் எதுவும் விசாரிக்கவில்லை. ஆனால், அவளுக்கு எல்லாம் விளங்கியிருந்தது. தனது மகனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலிருந்த காதலைத் தாயார் அறிந்துகொள்ளும் போழ்தில் அந்த மகனே வீரச்சாவைத் தழுவியிருந்தான். நல்லாளை அம்மா ஆற்றுப்படுத்தினாள். அக்கா அழுதுகொண்டேயிருந்தாள். அவளுக்கு நிறைய அழவேண்டுமாற்போலிருந்தது. ஊழிக்குத் தம்மை ஒப்புக்கொடுத்தவர்கள் கண்ணீருக்கு உரித்துடையோர். உப்புக்கரிக்கும் கண்ணீரில் தாகம் தீராது. ஆனால், சமுத்திரத்தை நிறைக்கும் கண்ணீரை இந்தக் காலத்தில் நாம் உகுத்திருப்போம். அம்மாவும் நல்லாளும் அருகருகே இருந்தனர். நல்லாளுக்குக் குடிப்பதற்குத் தோடம்பழம் கரைத்துக் கொடுத்தனர். அம்மாவின் மடியில் கொஞ்ச நேரம் தலைசாய்க்க விரும்பினாள் நல்லாள். அம்மா அவளை அணைத்துக்கொண்டு மடியில் கிடத்தினாள். அம்மாவின் அடிவயிற்றில் எரியும் தீக்கங்கின் வெப்பத்தை நல்லாள் உணர்ந்திருக்க வேண்டும். அவள் தலையை வெடுக்கெனத் தூக்கி “ஏன் இவ்வளவு சுடுகுது?” என்று கேட்டாள். கண்ணீர் ததும்பும் தனது கண்களைத் துடைத்துக்கொண்டு அம்மா சொன்னாள்.

“உன்ர சோழ மறவன, சுமந்த கருவறையின்ர கங்கு.”

பூட்டம்மா அண்ணாவைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் சொல்வதைக் கேட்க நிறைய சிறுவர்கள் குவிந்திருந்தனர். பூட்டம்மா இந்தக் கதையைச் சொல்லத் தொடங்கினாள்.

“அவன் பிறந்தான். ஒரு கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமையில், சூரியன் கடலடியில் வீழ்ந்தபோது அவனது தொப்பூழ்க்கொடியை நானே அறுத்தேன். பீறிட்டு எழுந்த அவனின் முதல் அழுகையை என் செவிகளில் யாழிசையைப்போல ஊற்றுவித்த நிமிடங்கள் நினைவுக்குத் திரும்புகின்றன. அவனது கண்கள் நிலத்தைப் பார்க்கவே எண்ணின. அவனது கால்கள் நிலத்தில் பதியமிடத் துடித்தன. நிலத்துக்காகப் பிறந்தவன் என்றே அவனை நான் முதற்கணம் துதித்தேன். அவனது மேனியில் கிடந்த குருதியின் பிசுபிசுப்பைப் பூவரசம் இலைகளால் துடைக்க வேண்டுமென மனம் உந்தியது. அவனுக்கு ஆபரணமாகப் பனையோலையால் ஒரு மாலையிட வேண்டுமென உத்தரவிட்டேன். அவன் எனது கைகளில் கிடந்தபோது மூத்திரம் கழன்றான். ‘நிலத்துக்காகப் பிறந்தவன்’ என்று எனக்குள்ளே தோன்றியதைத்தான் பன்னிச்சைத் தாயும் சொன்னாள். அவனைப் பன்னிச்சை அம்மா கோயிலுக்குக் கொண்டுசென்ற நாளில், அவன் மண்ணை அள்ளித் தின்று புன்னகைத்தான். அவன் நிலத்துக்காகப் பிறந்தவன்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 67

பூட்டம்மா சொல்லி முடித்திருந்தாள். பின்னர் மீண்டும் ஒரு புதிய நாளின், புதிய செய்தியோடு அண்ணாவை அவள் ஏந்தி நிற்க ஆயத்தமானாள். இரவு ஒளிர்ந்தது. வித்துடலாகக் கிடக்கும் அண்ணாவின் முகத்தில் மின்மினிப்பூச்சிகள் இருந்து பறந்தன. லாம்புகளும், பெற்றோல்மாக்ஸ் விளக்குகளும் இரவின்மீது மஞ்சள் ஒளியை அப்பின. பந்தலுக்குள் இருந்தவர்கள் சிலர் அரசியல் கதைத்துக்கொண்டிருந்தனர். இயக்கத்தின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் நிகழும் அத்துமீறல்கள் பற்றிய விமர்சனங்கள் ஓடிக்கொண்டிருந்தன. மறுபுறத்தே பெருகும் இழப்புகள் பற்றிய அச்சமும், என்ன நிகழப்போகிறதென்ற கவலையும் சடைவிரித்திருந்தது. கள்வெறியில் சிலர் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர். பீடிப்புகை பரவி நிற்க, கடதாசிக் கூட்டம் விளையாடுபவர்கள் சிரித்தும், தூஷணை வார்த்தைகளாலும் அந்த இரவின் பாரத்தை லேசாக்கினார்கள். மிக தாமதமாக வந்திருந்த ஒன்றுவிட்ட சகோதரன் சுகிர்தரன் நிரம்பக் குடித்திருந்தான். அண்ணாவைப் பார்த்து அழுது முடித்துவிட்டு, பக்கத்திலிருந்த கதிரையில் அமர்ந்தான். அவனால் நிற்க முடியவில்லை. பூமியில் அவனது கால்கள் அந்தரத்தில் இருப்பதாக நினைக்குமளவுக்கு மதி மயங்கிய கள்வெறி. ஆனால் அவன் அதைக் காட்டிக்கொள்ளாமல் அண்ணாவின் வீரச்சாவில் தளர்ந்திருப்பதாக பாவனை செய்தான். அடிக்கடி அண்ணாவின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு “என்னையும் கூட்டிக்கொண்டு போ” என்றான். அவனை அங்கிருந்து எழும்பிப் போகுமாறு அம்மா ஒரு முறை சொன்னாள். அவன் அதைக் கேட்பதற்குத் தயாரில்லை. மீண்டும் அண்ணாவின் வித்துடலை அளைந்து நிற்க முடியாமல் விழப்போய் பேழையை இழுத்தான். நல்ல காலத்துக்குப் பேழையை விழாமல் பிடித்துக்கொண்டோம். அம்மா சுகிர்தரனை அங்கிருந்து கூட்டிச் செல்லுமாறு சொன்னதும், அவனைத் தூக்கிவந்து பந்தலில் போட்டோம். அவன் அப்போதும் அண்ணாவை அழைத்து “என்னைக் கூட்டிக்கொண்டு போ” என்று அரற்றியபடியே கிடந்தான். சுகிர்தரனின் இந்தக் கூத்து அங்கிருந்தவர்களுக்குக் கொஞ்சம் பகிடியாக இருந்தது. நடுவிரவில் அவன் பேச்சுமூச்சற்று நித்திரையாகியிருந்தான். அம்மாவும் இன்னும் பல பெண்களும் ஒன்றாக வட்டமிட்டிருந்து அழுதனர். நடு இரவில் அழ வேண்டுமென்ற சடங்கு அது.

‘முத்தத்து முருங்கை முறிய நாளாச்சோ – எங்கன்ர
விளக்கு இண்டைக்கு அணைய நேரமாச்சோ !
கிணத்தடியில் இந்தப்பாசி சறுக்கு விழ நாளாச்சோ
நீ போன இடத்தில் உனக்குக் குளிக்கத்தான் கிணறு உண்டோ
கும்பிடத்தான் கோயிலுண்டோ !

பாலூட்டும் முலையாள் நான்
உனக்கு வாய்க்கரிசி இட நாளாச்சோ
வீதிவரை நான் கொண்டுவந்து விட்டன்.
உனக்குச் சுடலை வரை கால் ஏவினதோ!’


என்ற அம்மாவின் ஒப்பாரியில் நிறைய வார்த்தைகள் அந்தரத்தில் மாய்ந்தன. அழுகையில் தேய்கிற இந்த வார்த்தைகளைப் பொறுக்கியெடுக்கும் எறும்பைப்போல இரவு மெல்ல ஊர்ந்துகொண்டிருந்தது. நல்லாள் அண்ணாவின் முகத்திலிருந்த மின்மினியைத் தனது உள்ளங்கையில் ஏற்றிவைத்திருந்தாள். அது அவளிடமிருந்து பறந்துபோனது. நல்லாள் அண்ணாவைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். இடையிடையே ``சோழா...’’ என்று அழைத்துக்கொண்டாள். ஓர் ஊமைப்பெண்ணின் சொற்களைப்போல அவளுக்குள் துடித்துக்கொண்டிருந்த உயிரின் ரணத்தை என்னால் உணர முடிந்தது. அக்கா அவளைத் தாங்கிப்பிடித்து அமரச் செய்தாள். பூட்டம்மா தன்னுடைய இடத்திலேயே இருந்தாள். அவளுக்கு அண்ணாவிடம் சொல்லவேண்டிய ஒரு சொல் இருந்தது. இன்னும் அவனது வித்துடலை அவள் பார்க்கவில்லை. எப்போது பார்ப்பாள் என்று தெரியாது. சில வேளைகளில் துயிலுமில்லத்தில்கூட அந்தச் சொல்லை அவள் சொல்ல விரும்பியிருக்கலாம். அவள் தனக்கு முன்னிருக்கும் சிறார்களுக்கு அண்ணாவைப் பற்றிய கதைகளைச் சொல்லிக்கொண்டேயிருந்தாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 67

“நிலத்துக்காகப் பிறந்தவனுக்கு அப்போது வயது பத்து. அவன் பள்ளிக்கூடம் சென்று திரும்பிவருகிற வேளையில் அமைதிப்படையின் மனித சங்காரம் நிகழ்ந்திருந்தது. முப்பதுக்கு மேற்பட்டவர்களைக் கொன்று குவித்து, தார் ஊற்றி எரித்தனர். நிலத்துக்காகப் பிறந்தவன் மதகின் மறைவில் நின்று அவற்றைப் பார்த்துக்கொண்டு நின்றான். சிலர் உயிரோடு எரிபட்டு தீயில் வெந்து அலறுவதைக் கேட்டுக்கொண்டான். அவன் வீட்டுக்கு வந்தான். நடந்தவற்றை என்னிடம் சொன்னான். இந்த மிலேச்சர்களை அழித்தொழிக்க வேண்டுமென தீர்மானம்கொண்டான். அவன் ஊமல் கொட்டைகளைப் பொறுக்கி, கருக்கு மட்டைகளை வெட்டி அவர்களுக்கு எதிரான தனது ஆயுதமாகச் சேமித்துக்கொண்டான். பனையை அவன் தனது ஆயுத வழங்கலாக உருவகித்துக்கொண்டு வணங்கவும் செய்தான். அமைதிப்படையின் ரோந்து நேரத்தில், அவன் ஊமல் கொட்டைகளை எறிந்து கருக்கு மட்டைகளால் அவர்களை வெட்டிக் கொல்ல ஆயத்தமாயிருந்தான். அன்றைக்கு இயக்கம் அமைதிப்படையின் ரோந்து அணியை ஆயுதங்களால் பழிதீர்த்தனர். அப்போதுதான் அவனுக்கு இயக்கம் அறிமுகமானது. அவன் ஊமல் கொட்டைகளுக்கு பதிலாகக் கையெறி குண்டுகளும், கருக்கு மட்டைகளுக்கு மாற்றாகத் துவக்குகளும் அண்ணன்மாரிடம் இருப்பதைத் தெரிந்துகொண்டு பனங்கூடலுக்கு ஓடினான். பனையின் முன்பாக நின்றுகொண்டு அதனை வணங்கி மண்ணையெடுத்து நெஞ்சில் பூசினான். அவன் நிலத்துக்காகப் பிறந்தவன்.” பூட்டம்மா இப்படித் துண்டு துண்டுகளாக அண்ணாவின் பிறப்பையும், அவனுடைய சிறுவயது நாள்களையும் நினைவுகூர்ந்துகொண்டிருந்தாள். சிறார், அண்ணாவை ஒரு சரித்திரத்தின் தலைமகனாக எண்ணிக்கொண்டனர். நல்லாள் கண்களைத் துடைத்துக்கொண்டு அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தாள். அக்கா, அண்ணாவை இன்னும் பார்க்கவில்லை. நான் அண்ணாவின் வித்துடலுக்கு அருகில் வந்து உயிர் விம்ம விம்ம பார்த்துக்கொண்டிருந்தேன். அதிகாலை நான்கு மணிக்குச் சில முக்கியமான பொறுப்பாளர்களும், போராளிகளும் வந்திருந்தனர். அம்மாவை அவர்கள் ஆற்றுப்படுத்தினர். அம்மாவுக்கு எத்தனை பிள்ளைகள். அவளுக்கு ஒன்றெனில் சூழ்ந்துகொள்ளும் இந்த மண்ணின் புதல்வர்கள் அனைவரும் அம்மாவின் பிள்ளைகள்தான். ஒரு வாகனம் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய நான்கு போராளிகளும் இயந்திரத் துப்பாக்கியோடு நிற்க, இறுதியாக ஒருவர் இறங்கினார்.

அம்மா பெருங்குரலெடுத்து அழுதாள்.

(நீளும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism