Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 68

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

அக்காவும் அம்மாவும் நல்லாளும் நேற்றிலிருந்து சாப்பிடவில்லை. அம்மா ஒரு சொட்டுத் தண்ணீரும் அருந்தவில்லை. அக்காவுக்கு இடையிடையே தேநீரும் பழச்சாறும் கொடுத்தனர்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 68

அக்காவும் அம்மாவும் நல்லாளும் நேற்றிலிருந்து சாப்பிடவில்லை. அம்மா ஒரு சொட்டுத் தண்ணீரும் அருந்தவில்லை. அக்காவுக்கு இடையிடையே தேநீரும் பழச்சாறும் கொடுத்தனர்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

சூரியன் எழுந்தது. அண்ணாவின் தலைமாட்டு விளக்குத்திரி, பிரகாசம் கொண்டசைந்தது. அதிகாலையில் வந்திருந்த தளபதியொருவர் சனங்களோடு கதைத்துக் கொண்டிருந்தார். அம்மாவுக்கருகில் வந்த தளபதி, கைகளைப் பற்றிக்கொண்டு கண்கள் கலங்கி நின்றார். அண்ணாவைச் சிறுவயதிலிருந்தே அறிந்தவர். அப்பாவின் உற்ற தோழன். இந்தத் தளபதியின் நிழலைக் கண்டாலே பகைவன் அஞ்சுவான் என்கிற கூற்றினைக் கேட்டு வளர்ந்தோம். என்னை அழைத்து தனக்கருகில் அமரச் சொன்னார். அவருடைய புலிச்சீருடை வாசனை அவ்வளவு பிடித்திருந்தது. என்னுடைய தோளில் கைபோட்டுக்கொண்டு “அண்ணாவ நினைச்சுக் கவலைப்படாத, நாங்கள் எல்லாரும் இருக்கிறம்” என்றார். அப்படி ஒருதுளி கவலையும் எனக்குள் எழவில்லை. வீரச்சாவு அடைந்த என்னுடைய அண்ணாவை நினைத்து நான் கலங்கியிருக்கவில்லை. ஆனால், அவனின் பிரிவு என்னைச் சூழ்ந்து வருத்தும் என்பதை அறிவேன். அண்ணாவின் வித்துடல் காலை பதினொரு மணிக்கு வீட்டிலிருந்து எடுத்துச்செல்லப்படும். பின்னர் பொதுநோக்கு மண்டபத்தில் வீரவணக்கக் கூட்டம் நடைபெற்று துயிலுமில்லம் எடுத்துச் செல்லப்படும் என்று திட்டமிடல்கள் செய்யப்பட்டன. தளபதி வீட்டிலிருந்து புறப்பட்டார்.

பூட்டம்மா தன்னுடைய இடத்தைவிட்டு எழவேயில்லை. அண்ணாவின் வித்துடலைப் பார்க்கப்போறதில்லை என்றே சொல்லிக்கொண்டிருந்தாள். முகத்தில் எந்தச் செந்தளிப்பும் இல்லாமல் காலை வானத்தை அண்ணாந்து பார்த்தாள். பிறகு என்னை அழைத்து “பெரியவனை எப்ப கூட்டிக்கொண்டு போகப்போறம்” என்று கேட்டாள். “பதினொரு மணிக்குத் திட்டமிடுகிறார்கள்” என்றேன். நல்லாளை அழைத்துவருமாறு சொன்னாள். பூட்டம்மாவின் உத்தரவின் பேரில் வருத்தமுற்று வாடிப்போயிருந்த நல்லாள் அருகில் சென்றேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 68

“உங்களைப் பூட்டம்மா கூட்டிக்கொண்டு வரச்சொன்னவா, வாங்கோ” என்றேன்.

நல்லாள், பூட்டம்மாவைத் திரும்பிப் பார்த்துவிட்டு அப்படியே இருந்தாள். என்னோடு வருவதைப்போலத் தெரியவில்லை. மீண்டும் நல்லாளிடம் சொன்னேன்.

“உங்களைப் பூட்டம்மா கூட்டிக்கொண்டு வரச்சொன்னவா, வாங்கோ.”

நல்லாள் எழுந்தாள். எனக்கு முன்பாகவே பூட்டம்மாவை நோக்கி நடந்துபோனாள். அவளின் பின்னால் வேகமாக ஓடிப்போனேன். பூட்டம்மா அவளைத் தனக்கருகில் அமரச்சொல்லி, தன்னுடைய கைகளால் தலையைத் தடவிக்கொடுத்தாள். நல்லாள் எதுவும் கதையாமல் அமர்ந்திருந்தாள். பூட்டம்மா என்னைப் போகுமாறு கண்ணைக் காட்டினாள். கொஞ்சம் அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது. நான் அங்கிருந்து அகன்றேன்.

வீரவணக்கக் கூட்டம் நடைபெறும் பொதுநோக்கு மண்டபத்தின் முகப்பு வாயில், எழுச்சிக்கோலம் பூண்டிருந்தது. சிவப்பு, மஞ்சள் கொடிகள் அசையும் காற்றில் கம்பீரம் இழைந்து நிலமெங்கும் ஈன்றது. பெரிய இரண்டு ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டு மேடை தயார் நிலையில் இருந்தது. பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர், வீட்டுக்கும் பொதுநோக்கு மண்டபத்துக்குமென மாறி மாறி ஓடித் திரிந்தார். பக்கத்திலிருந்த பள்ளிக்கூட மாணவர்கள் அணிவகுத்து பூக்களோடும், மாலைகளோடும் வீட்டுக்கு வந்திருந்தனர். வித்துடல்மீது சார்த்தப்பட்ட மலர் மாலைகள் குவிந்திருந்தன. எல்லாப் பூக்களும் நறுமணம் பெருக்கின. சவத்தின்மீது போடப்படும் மாலையைப்போலில்லை இவை. தாம் பூக்கும் மண்ணுக்காய் மாண்ட ஒரு போர் மறவர் நெஞ்சில் தன்னைக் கிடத்திய மாலைகள். பள்ளிக்கூட மாணவர்கள் மாலையை அணிவித்தனர். வித்துடல் மலர்களால் அபிஷேகிக்கப்பட்டது. இந்த மண்ணில் உதிக்கும் எல்லாவற்றோடும் மாவீரர்களின் குருதி கலந்திருக்கிறது. சனங்கள் குவிந்தனர். அழுகை ஓங்கி எழுந்தது. இன்னும் சொற்ப நேரத்தில் வித்துடல் வீட்டிலிருந்து பொதுநோக்கு மண்டபம் கொண்டுசெல்லப்படுமென பொறுப்பாளர் கூறினார்.

அக்காவும் அம்மாவும் நல்லாளும் நேற்றிலிருந்து சாப்பிடவில்லை. அம்மா ஒரு சொட்டுத் தண்ணீரும் அருந்தவில்லை. அக்காவுக்கு இடையிடையே தேநீரும் பழச்சாறும் கொடுத்தனர். நல்லாள் தண்ணீரை மட்டுமே உணவாக்கிக்கொண்டாள். அண்ணா காதலித்த பெண்ணைக் காணும் நாளில், அவன் வீரச்சாவு ஆகியிருக்கிறான் என்பது துயரம். தலைச்சன் பிள்ளையை மண்ணுக்கு அளித்த அம்மாவோ, கண்களை வெளியில் குத்தி வெறுமையை உணர்கிறாள். பூட்டம்மா நல்லாளுக்கு ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். நான் அருகில் போனேன். அவள் என்னைப் பார்த்தும் பொருட்படுத்தாமல் நல்லாளிடம் சொன்னாள்.

“அவன் உன்னுடைய அரசன். உன்னுடைய கூந்தலில் நீ எப்போதும் சூடிக்கொண்ட மலர் அவன். அவனைப் பிரித்துவிட்ட இந்தக் காலத்தை யாராலும் எதுவும் செய்ய இயலாது. மண்ணிலே உயிர் விதைக்கும் காலமிது. நாம் அறுவடையாக எதைப் பெறுவோம் என்ற யோசனைகள் இங்கில்லை. எல்லாமும் விதைப்பு பற்றிய பூரிப்பில் இருக்கிறோம். நான் என்ன செய்வேன். கண்ணீர் சிந்தும் உன்னுடைய துயரத்தை என்னால் தாங்கவியலாது இருக்கிறது. அவனை நான் தூக்கி வளர்த்தேன். அவனுக்கு நான் அமுதூட்டினேன். அவனை நான் மண்ணாலும் மூடப்போகிறேன். எனது துயரத்தை நீ அறிய மாட்டாய் நல்லாள்.”

“சோழன் உங்களைப் பற்றி நிறைய தடவை என்னிடம் சொல்லியிருக்கிறார்.”

“என்ன சொன்னவன்?” பூட்டம்மா கேட்டாள்.

“பூட்டம்மா தீர்க்கதரிசி. எங்கட குடும்பத்தோட செல்வம். அவளின்ர ஒரு சொல்லும் பொய்க்காது என்று கனக்கச் சொல்லியிருக்கிறார்.”

“அவன் உன்னைப் பற்றியும் என்னட்ட சொல்லியிருக்கிறான். என்னட்ட மட்டும்தான் சொல்லியிருக்கிறான்” என்ற பூட்டம்மாவை அதிர்ச்சியாகப் பார்த்தேன். தன்னைப் பற்றி சோழன் பூட்டம்மாவிடம் சொல்லியிருக்கிறார் என்கிற செய்தி நல்லாளுக்கும் வியப்பாக இருந்தது. பூட்டம்மா சொன்னாள்.

“உன்னை அவன் சண்டைக்களத்தில் சந்தித்த நாளில் நிலவற்ற இருட்டும், எதிரிகள் ஊடுருவிவிடுவார்களோ என்ற அச்சத்தோடும் போராளிகளாகிய நீங்கள் விழித்திருந்தீர்களாம். விடிகிற வரை பேச்சு மூச்சற்று இரவோடு இரவாக மறைந்திருந்து எல்லையைப் பாதுகாத்திருக்கிறீர்கள். காலையில் நீங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டது ஒரு பனை குளத்தில் வைத்து, அதுவும் நீ அவனிடம் பற்பொடி கேட்டாய் எனச் சொன்னதாக ஞாபகம்.”

கடவுள்... பிசாசு... நிலம்! - 68

நல்லாள் தலையசைத்துத் தொடருங்கள் என்பதைப்போல பூட்டம்மாவின் கதையில் லயித்திருந்தாள்.

“அவன் தன்னுடைய உடைமைப் பையில் பற்பொடியை எடுத்துத் தந்து, `நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், என்னிடம் இன்னொன்று இருக்கிறது’ என்று சொன்னதும், நீ உன் கூந்தலை இறுக்கிக்கொண்டு `என்னிடமும் இருக்கிறது. எங்கோ தவறிவிட்டது. நாளை நான் பார்த்துக்கொள்வேன்’ என்று முகத்தை நீட்டினாயாம். அவன் உன்னுடைய முகத்தைப் பார்த்து, `கோபப்படும் பூனைபோல இருக்கிறது’ எனச் சொல்லி வாயைக் கொப்பளித்து அங்கிருந்து போனானாம். பல்லைத் தீட்டியபடியே அவனுக்குப் பின்னால் ஓடிப்போன நீ `என்னைப் பார்த்தால் பூனை மாதிரித்தான் தெரியுதோ, உங்களைப் பார்த்தால் கருவாடு மாதிரி தெரியுது’ என்று சொல்லிவிட்டுப் போனாயாம். அவன் உன்னைத் திரும்பிப் பார்த்து `நடையில புலிக்குணம் இருக்கு’ என்றதும், `நான் எல்லாத்திலையும் புலிதான், பூனை எண்டு சொல்லுற ஆக்களோட இனி கதை கிடையாது’ என்றாயாம்.’’

ஆற்றில் விழுந்த இலையென நல்லாள் நினைவுகளில் இழுத்துச்செல்லப்பட்டாள். பூட்டம்மா சொல்லிக்கொண்டிருக்க அவளது கண்கள் நீர்த் தேக்கமென ஆகியிருந்தது.

“அவனை நீதான் முதலில் விரும்பத் தொடங்கினாய். ஒரு அதிகாலைப்பொழுதில் ராணுவத்துடன் நிகழ்ந்த நேரடி மோதலில் அவன் தலைமையேற்ற அணியில் நீ சேர்ந்திருந்தாய். அன்றைக்கு மாலையிலும் முடியாத மோதல், அடுத்த நாள் மதியம் வரை நீடித்தது. அவனுடன் நீ களமுனையில் சேர்ந்து நின்றாய். உன்னுடைய சுடுகலனில் ஒரு கண்ணைப் பதித்து எதிரிகளை சங்ஹாரம் செய்தாய். இன்னொரு கண்ணால் அவனை உன்னுள் மலரச் செய்தாய். போர் நிகழும் களத்திடை உன் வேந்தனாக அவனை நீ தெரிந்த கணத்தில், எதிரியை மூன்று கிலோமீட்டர்கள் பின்தள்ளி வெற்றிவாகை சூடியிருந்தீர்கள். அன்றைய நாளிலேயே நீ உனது விருப்பத்தை அவனிடம் தெரிவித்தாய். எல்லாவற்றையும்போல அவன் ராணுவ தொனியோடு உனது காதல் கோரிக்கையை எடுத்துக்கொண்டு `சரி’ என்று மட்டும் சொன்னான். நீ அவனை வழிமறித்து, கொஞ்சம் அடம்பிடித்து `நீங்கள் சிரித்துக் கதைக்க மாட்டியளா?’ என்று கேட்டதும், வேணுமென்றே முகத்தை விரித்துச் சிரித்துக் காட்டிவிட்டு போனானாம்.”

நல்லாள், பூட்டம்மாவின் மடியில் கிடந்து விசும்பி அழுதாள். பூட்டம்மா கண்ணீரை உகுத்து “என்ர கொழுந்து கருகிட்டுது” என்று மாரிலடித்து அழுதாள். நல்லாள் கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள். பூட்டம்மா என்னிடம் கேட்டாள்.

“தூக்கப்போறாங்களோ?”

“இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்.”

“அவனிட்ட ஒரு சொல் மட்டும் சொல்ல வேணும். அது சொல்லும்போதுதான் அவனை நான் பாப்பன்.”

நல்லாள் பூட்டம்மாவிடம், “வாங்கோ நான் கூட்டிக்கொண்டு போறன்” என்றாள்.

“இல்லை பிள்ளை, நீ போ. நான் அந்த நேரமாய்ப் பார்த்து வாறன்.”

நானும் நல்லாளும் வித்துடல் இருக்கும் இடத்துக்கு வந்தோம். காலை வேளையில் வந்திருந்த சொந்தக்காரர்கள் கூடியிருந்தனர். அண்ணாவின் முகம், கொஞ்சம் கறுத்துப்போயிருந்தது. ஊதுபத்தியைக் கொளுத்திவைத்தேன். இன்னும் சில நிமிடங்களில் `மாவீரர் ஊர்தி’ வந்துவிடுமென தகவல் வந்தது. ஊர்தி வந்தால் நேரமிருக்காது. பூட்டம்மாவைக் கூட்டிக்கொண்டு வரலாமெனத் தோன்றியது. அவளை நோக்கிப் போனேன். அவள் படுக்கையைவிட்டு எழுந்து என்னுடைய கையைப் பற்றிக்கொண்டு நடந்துவந்தாள்.

எல்லோரும் பூட்டம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

(நீளும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism