Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 69

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

ஓமடி மோளே! இந்த நிலத்துக்காகப் பிள்ளையள் நீங்கள் போராடுறியள். உயிரைக் கொடுக்கிறியள். தாய்மாரோட அடிவயிற்றுக்கு மேலதான் நிலம் இருக்கு

கடவுள்... பிசாசு... நிலம்! - 69

ஓமடி மோளே! இந்த நிலத்துக்காகப் பிள்ளையள் நீங்கள் போராடுறியள். உயிரைக் கொடுக்கிறியள். தாய்மாரோட அடிவயிற்றுக்கு மேலதான் நிலம் இருக்கு

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

வித்துடலாகக் கிடக்கும் அண்ணாவுக் கருகில் வந்து நின்ற பூட்டம்மாவின் கண்கள் அனலேந்தி நின்றன. நினைவில்லாத ஒரு சொல்லை அகழ்ந்தெடுக்கும் தோரணையோடு, அவள் அண்ணாவைப் பார்த்தாள். முறிந்த பனையைப்போலக் கிடந்த அவனின் நெற்றியில் முத்தமிட்டு “நீ துளிர்ப்பாய் மோனே” என்றாள். எந்த அழுகையோ, கலக்கமோ அற்று பூட்டம்மா வித்துடலுக்கு அருகில் அமர்ந்திருந்தாள். ஊர்தி வந்தது. போராளிகள் சூழ அண்ணாவின் பேழை தூக்கிச் செல்லப்படவிருந்தது. பெண்கள் சிலர் பெருங்குரலெடுத்து கதறி அழுதனர். அம்மா அழுவதற்குப் பெலனற்று விம்மிக்கொண்டிருந்தாள். அழுது களைத்துப்போன காலமதில் கண்களில் வெறுமை கலங்கியிருந்தது. நல்லாளும் அக்காவும் அண்ணாவை முத்தமிட்டு வீட்டிலிருந்து வழியனுப்பக் காத்திருந்தனர். இந்த மண்ணில் எத்தனை வழியனுப்புதல்கள் கண்டோம்... விடுதலைக்காய், காலம் உன்னைக் களம் நோக்கி அழைக்கையில் `சென்று வா மகனே, மகளே’ எனும் வழியனுப்புதலில் தொடங்கி, களத்தில் உயிர் துறந்து மண்ணுக்குள் விதையாக நடுவது வரை வழியனுப்புதல்கள் நிரம்பிவிடுகின்றன. ‘புழுதி துடைத்து முலைகொடுத்துப் போயின தாயை வரவு காணாது அழுது உறங்கும் புறங்காட்டில்’ எனும் மூத்த திருப்பதிகப் பாடல் வரியைப்போல அழுது விழிக்கும் வீரயுகத்தின் வழியனுப்புதல் தொடங்கியது.

பொதுநோக்கு மண்டபத்தில் சனங்கள் நிரம்பியிருந்தனர். அண்ணாவின் வித்துடல் பேழை வீரவணக்கக் கூட்டத்துக்காக வைக்கப்பட்டது. அண்ணாவின் பாசறைத் தோழர்கள், அவரோடு களத்தில் நின்று பழகிய வேறு படையணியைச் சேர்ந்த போராளிகள், அரசியல்துறையில் இருந்த மிக முக்கியமான பொறுப்பாளர்கள் அங்கு வந்திருந்தனர். ஆளற்ற வேவு விமானம் வானத்தில் பறந்துகொண்டிருந்தது. சிறுவர்கள் அதனை அண்ணாந்து பார்த்து குருவிகளோடு மதிப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

“பலாக்கொட்டைக் குருவியோட அளவில தெரியுது.”

“போடா குருட்டுச் சனியன்... அது எவ்வளவு பெரிசாய் தெரியுது. நல்லாய்ப் பார். ஒரு புறாவோட அளவில தெரியுது.”

கடவுள்... பிசாசு... நிலம்! - 69

“உனக்குத்தான் குருடு. நல்லாய்ப் பார்” என்று சொன்னபடி அவனைத் தனக்கருகில் அழைத்து வந்த சிறுவன், தன்னுடைய கையிலிருந்து வானத்தைப் பார்க்குமாறு நீட்டுகிறான். அவன் சொன்னதைப்போல பலாக்கொட்டைக் குருவி அளவில் ஒரு வேவு விமானம் பறந்துகொண்டிருந்தது. பரந்து விரிந்திருந்த வானத்தில் பறவைகளுக்கு பதிலாகப் போர் விமானங்கள். மற்ற சிறுவன் இப்போது தான் கண்ட புறா அளவிலான வேவு விமானத்தைக் காட்டுகிறான். இரண்டு வேவு விமானங்கள் வன்னிப் பெருநிலப்பரப்பின் வான் வெளியில் பறந்துகொண்டிருக்கின்றன. போராளிகள் வந்த வண்ணமிருந்தனர். வீரவணக்கக் கூட்டம் தொடங்கியது. அண்ணாவின் நேசத்துக்குரிய நண்பர்கள் உரையாற்றினார்கள். களமுனையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை இருவரும் உரைகளில் கோர்த்தனர். அண்ணாவை அவர்கள் விவரித்த விதம் கொஞ்சம் புதிதாக இருந்தது. எங்களுக்குத் தெரியாத அண்ணாவை அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தனர். எப்போது பார்த்தாலும் பகிடியாகக் கதைத்துக்கொண்டிருப் பாராம். சண்டையற்று ஓய்வாக இருக்கும் நேரங்களில், வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளைச் சொல்லி, அவரைப்போலவே செய்தும் காண்பிப்பாராம். சண்டை நிகழும் நேரங்களில் உக்கிரமான காளியைப்போல முன்னேறுவதிலும், பகைவனைச் சுட்டு வீழ்த்துவதிலும் தீரமான சக்தியைக்கொண்டிருந்தாராம். ‘சோழ மறவன்’ என்பவரோடு நாம் களத்தில் நிற்கிறோம் என்பதே பெருமையும் மகிழ்வும் தந்ததாக உரையை நிறைவுசெய்தனர். நல்லாள் பேச விரும்பினால், பேசட்டுமென சில நிமிடங்கள் காத்திருந்தனர். ஆனால், அவள் மறுத்துவிட்டாள். வீரவணக்கக் கூட்டம் நிறைவுற்றதும், வித்துடல் ஊர்தியில் ஏற்றப்பட்டு, கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள நிகழ்ச்சி நிரலின்படி யாவும் நிறைவுபெற்று அண்ணாவை விதைத்துவிட்டு நாங்கள் வீட்டுக்குத் திரும்பினோம். போயின பிள்ளையை வரவு காணாது அழுது உறங்கும் புறங்காடாக வீடு இருந்தது. அண்ணாவின் புகைப்படத்துக்கு முன்பாக விளக்கு ஏற்றப்பட்டு, ஒரு செம்பில் நீர் நிரப்பிவைக்கப்பட்டது. சொந்தக்காரர்கள் குவிந்திருந்தனர். மூன்று வீடுகளிலிருந்து சாப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருந்தன. எல்லோரும் சாப்பிட்டும் மிச்சமிருந்தது. நல்லாளும் அக்காளும் வெளியே அமர்ந்திருந்தனர். எல்லோரின் முகத்திலும் இழப்பின் வலி பெருகியிருந்தது. உயிரற்று இருப்பினும் உடலாக இருக்கிறார் என எண்ணும் ஆறுதலும் இப்போதில்லை. அண்ணாவை நானும் தேடத் தொடங்கினேன். அவர் எப்போதாவது வந்தால் அணியும் நீல நிறச் சட்டையை அணிந்திருந்தேன். பூட்டம்மா தனது படுக்கையில் கிடந்தபடி சிரட்டை ஒன்றில் மண்ணை நிரப்பி தன்னுடைய அடிவயிற்றில் கொட்டிக்கொண்டிருந்தாள். பின்னர் அதனை ஒரு மண்மேடாக ஆக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள். நல்லாளை அழைத்து மண்மேடாயிருக்கும் தனது அடிவயிற்றின் மீது நீர்த்துளிகளை தெளிக்கச் சொன்னாள். அவளுக்குக் கொஞ்சம் பயமாகவிருந்தது. பூட்டம்மாவைப் பார்த்துக்கொண்டு நின்றாள். பூட்டம்மா மீண்டும் சொன்னாள்.

“உன்ர கையால மூன்று துளி தண்ணி விடு.”

அவள் எதையும் கேட்கவில்லை. பாத்திரத்தில் இருந்த நீரைத் தனது உள்ளங்கையில் ஏந்திவந்து மூன்று துளிகளை மண்ணில் இட்டாள். பூட்டம்மா அப்படியே கண்களை மூடிக்கொண்டு கேட்டாள்.

“நீ இப்ப தண்ணிவிட்டது மண்ணுக்கா... அடி வயிற்றுக்கா?”

“மண்ணுக்கு.”

“இல்லை. மண்ணுக்குக் கீழே இருக்கிற என்ர அடிவயிற்றுக்கு.”

நல்லாள் எதுவும் விளங்காமல் விழியைப் பிரட்டினாள்.

“ஓமடி மோளே! இந்த நிலத்துக்காகப் பிள்ளையள் நீங்கள் போராடுறியள். உயிரைக் கொடுக்கிறியள். தாய்மாரோட அடிவயிற்றுக்கு மேலதான் நிலம் இருக்கு. அதுதான் தாய்மண். நீ இப்ப சொட்டின தண்ணி, இந்த மண்ணைக் கடந்து என்னோட உடம்புக்குள்ள இறங்கிறதை நான் உணர்ந்தன். நிலமென்றால் தாய்தான். தாயென்றால் நிலம்தான். இப்ப உன்ர ‘சோழ மறவன்’ என்ர அடிவயிற்றுக்குள்ளதான் இருக்கிறான்.”

இரண்டு மூன்று நாள்களாக ஆட்கள் வந்தனர். அண்ணாவின் வீரச்சாவு செய்தியை அறிந்ததும், நிறைய தூரத்திலிருந்து வந்துகொண்டேயிருந்தனர். வேறு களமுனைகளில் இருந்த அண்ணாவின் தோழர்கள் வந்தனர். நினைக்க முடியாத அன்பையும் நட்பையும் கொண்டிருந்த ஒரு ஆன்மாவாக அண்ணாவை அவர்கள் நினைவுகூர்ந்தது, மகிழ்ச்சியாக இருந்தது. அக்காவுக்கும் நல்லாளுக்கும் விடுமுறை முடிந்தது. எட்டுச்செலவு முடிய முதலே அவர்கள் போகவேண்டியிருந்தது. அம்மா சிலரோடு கதைத்து விடுமுறையை நீட்டித்தாள். அவள் வீட்டிலிருந்தபடி எழுதிக்கொடுத்த கடிதத்தின் அடிப்படையில், உடனடியாக இருவருக்கும் விடுப்பு கிடைத்தது. நல்லாளுக்கு அம்மாவைப் பார்க்கப் பார்க்க வியப்பாக இருந்தது. அண்ணாவின் மொத்தச் செழுமையும் அம்மாவிடமிருந்துதான் வந்திருக்கிறது என்பதை உணர்ந்தாள். எட்டுச்செலவு முடிந்து இரண்டு நாள்களில் அக்காவும் நல்லாளும் மீண்டும் களமுனைக்குச் செல்லத் தயாரானார்கள். அம்மா அவர்களுக்கு நிறைய உலர் உணவுகளையும், புதிய உடுப்புகளையும் வாங்கிக்கொடுத்து வழியனுப்பிவைத்தாள். அக்கா, அம்மாவை முத்தமிட்டு, காலில் விழுந்து வணங்கி எழுந்து சென்றாள். பூட்டம்மா இருவருக்கும் திருநீற்றை நெற்றியில் பூசிவிட்டு ‘சென்று வருக’ என்றாள். அக்கா என்னைப் பார்த்துச் சொன்னாள்.

“அம்மாவைக் கவனமாய்ப் பார்த்துக் கொள்ளு, சுத்தி திரியாத.”

“இஞ்ச எங்க சுத்தி திரியிறது... நீங்கள் கவனமாய் இருங்கோ.”

“நாங்கள் கவனமாய் இருந்தாலும், இருக்காட்டியும் நடக்கிறதுதான் நடக்கும். நீங்கள் கவனமாயிருங்கோ ஆதீரன்” என்றாள் நல்லாள்.

நான் ஓமென்று தலையசைத்தேன். அக்காவும் நல்லாளும் வீட்டிலிருந்து புறப்பட்டனர். சொந்தக்காரர்கள் தங்களுடைய வீட்டுக்குப் பேருந்தில் சென்றனர். வீடு மெல்ல மெல்ல ஆட்களை இழந்தது. நாங்கள் மூவரும் தனித்திருந்தோம். அம்பிகா, அம்மாவுக்கு ஆறுதலாக இருந்தாள். சமையல் வேலைகளில் பக்கத்துணையாக இருந்து, வீட்டிலேயே பகல் பொழுதைக் கழித்தாள். பூட்டம்மா தன்னுடைய அடிவயிற்றில் மண்ணை நிரப்பி அதற்கு நீரூற்றுமாறு என்னை அழைத்தாள். எதுவும் பேசாமல் அவள் சொல்வதைச் செய்வேன். அன்றைக்கும் அப்படித்தான் என்னை அழைத்து அடிவயிற்றில் கிடக்கும் மண்மேட்டில் நீர் ஊற்றச் சொன்னாள். அந்த மண்மேட்டில் ஒரு துளிர் அசைவதைக் கண்டேன். அது பன்னிச்சை மரத்தின் வாசனையோடு இருந்தது. பூட்டம்மா சிரித்துக்கொண்டு கேட்டாள்.

“என்ன பயமாய் இருக்கா?”

“இல்லை, ஆனால் அதிசயமாய் இருக்கு.”

“அதிசயப்பட என்ன இருக்கு மோனே, நாங்கள் அற்புதங்களை இழக்கப்போறம். அற்புதங்களோட சீவன் இழுத்துக்கொண்டிருக்கு. எனக்கு அந்தச் சத்தம் கேக்குது.”

“என்ன சொல்லுறியள் எண்டு விளங்கேல்ல.”

“விளங்காது மோனே. சொல்வதற்குச் சொல் இருந்து, கேட்கும் செவிகளுக்குப் பொருள் தெரியாமல் போவது அது தீர்க்கதரிசனத்தோட ஊழ்.”

பூட்டம்மாவின் அடிவயிற்றில் அசைந்த பன்னிச்சைத் துளிரை இப்போது காணவில்லை. நான் அவளின் அடிவயிற்று மண்மேட்டைத் தட்டிக் கொட்டினேன். சுருக்கம் விழுந்து குளிர்ந்துபோன அவளது சருமத்தில் வேர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவளிடம் கேட்டேன்.

“இதென்ன வேர் ஓடுது?”

“நிலத்தோட வேர், எங்கட பன்னிச்சைத்தாயோட வேர்.”

பூட்டம்மா கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு சொன்னாள். “ஆதீரா, இன்று தோற்போம் எனிலும், என்றோ ஒருநாள் நாம் வெல்வோம். அதுவரைக்கும் நீ இந்த வேரை வெட்டிப்போடாத. அது உன்ர வயத்திலயும் படரும்.”

நான் என்னுடைய வயிற்றைத் தடவிப் பார்த்து “இல்லை” என்றேன்.

பூட்டம்மா சொன்னாள். “அது இப்பவில்லை, என்ர சீவன் போகேக்க உன்னட்ட வரும்.”

கடவுள்... பிசாசு... நிலம்! - 69

நாங்கள் இருவரும் கதைத்துக்கொண்டிருக்கையில் போர் விமானங்களின் இரைச்சல் காதைக் கிழித்தது. அடுத்த கணத்தில் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. நாங்கள் இருந்த இடமெங்கும் புகைமண்டலம். தீப்பிழம்பு. அம்மா பெரிதாகக் குரல் கொடுத்து “எல்லாரும் நிலத்தில படுங்கோ...” என்று கூச்சலிடுகிறாள். பூட்டம்மாவை நிலத்துக்கு இறக்குகிறேன். அவள் உடல் குளிர்கிறது. மீண்டும் இரண்டு குண்டுகள் வீழ்ந்து வெடிக்கின்றன. அம்பிகாவின் பெயரைச் சொல்லி அம்மா அழும் சத்தம் கேட்கிறது. மனம் திகைத்து, குருதியைக் கொதிப்பூட்டியது.

“அம்மா அம்பிகாவுக்கு என்ன நடந்தது?” என்று கேட்கிறேன்.

அம்மாவின் குரல் வரவில்லை. நாங்கள் இருந்த குடியிருப்பில் தாக்குதல் நிகழ்த்திவிட்டு, போர் விமானங்கள் மறைந்த கணத்தில் நான் வீடு நோக்கி ஓடினேன். அம்பிகாவை அம்மா தன்னோடு அணைத்துவைத்துக்கொண்டிருந்தாள். அம்பிகாவின் கொதிக்கும் குருதி வீட்டினுள் ஓடிக்கொண்டிருந்தது.

அம்பிகாவின் தலையை சுற்றும் முற்றும் பார்த்தேன். அது எனக்குப் பின்னாலிருந்த கடகத்துக்கு அருகில் இருந்தது. அம்பிகாவின் கண்கள் அப்போதும் எனக்காக மலர்ந்திருந்தன.

ஓலத்தின் குகையில் ஒரு குருடனைப்போல, ஓடும் குருதி கால் அளைய நிற்கிறேன் என் நிலமே!

(நீளும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism