Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 8

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

அம்மா ஓமென்று தலையசைத்தாள். இப்போது எந்தப் பிரச்னையுமில்லை. விடியும் வரை நான் காட்டுக்குள் இருப்பேன். பன்னிச்சைத் தாய் என்னைக் காவல் செய்வாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 8

அம்மா ஓமென்று தலையசைத்தாள். இப்போது எந்தப் பிரச்னையுமில்லை. விடியும் வரை நான் காட்டுக்குள் இருப்பேன். பன்னிச்சைத் தாய் என்னைக் காவல் செய்வாள்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

இரவின்மீது எனக்கிருக்கும் மையலை எவராலும் விளங்கிக்கொள்ள முடியாது. எண்ணிறந்த யுகங்கள் கண்ட பூமி, தனது அடியழித்து துயிலுமோர் பொழுதை மனிதர் இரவென விளித்தனர். குப்பி விளக்கின் வெளிச்சம் போதாமையாக இருந்தது. இரவுக்கென அம்மா சமைத்த முள்ளம்பன்றி இறைச்சிக் குழம்பைப் புட்டோடு பிரட்டிக் குழைத்துச் சாப்பிட்டேன். உதிரும் குளிரும், வீசும் காற்றும் நீண்டெரிந்த கோடையை அந்தரத்தில் புதைத்தன. அம்மா திரி தீண்டியபடி லாம்பை எடுத்துவந்தாள். இரைந்து கொண்டிருக்கும் வானொலிப்பெட்டியை நிறுத்திவைத்துவிட்டு என்னோடு சேர்ந்து சாப்பிடத் தொடங்கினாள். நேரம் இரவு பத்து மணியாகியிருந்தது. சாப்பிட்டு முடித்ததும் உப்புக் காட்டுக்குப் போக வேண்டும். அம்மாவிடம் சொன்னால் விடவே மாட்டாள். நான் சித்தி வீட்டுக்குப் போய்வருவதாகப் பொய் சொன்னேன். அவள் ‘போ’ என்று சம்மதிக்காததைப் போலவே மறுக்கவுமில்லை. “கையில் டோர்ச்சக் கொண்டு போ, பாம்பு, பூச்சிகள் உலவும்” என்றாள். அடுத்தகணமே இரவின் திரி பிளந்து எரிவதைப்போல மின்னல்கள் ஓடின. மேலிருந்து கீழ் விழும் ஒலியென இடிகள் முழங்கின. அம்மா சொன்னாள்.

“மழைக்குணமாய் இருக்கு, ராவிருட்டியில திரியாத, நாளைக்கு காலமை போ.”

“இல்லையம்மா, கொஞ்ச நேரம் போய்ட்டு வாறன்.”

“சரி, மழைக்குள்ள போய் அகப்பட்டால் அங்கைய நிண்டிட்டு, காலமைக்கு வா. மழையில நனைஞ்சுபோய் வராத.”

“ஓமண, நான் அங்கேயே இருந்திட்டு நாளைக்குக் காலமை வாறன்.”

அம்மா ஓமென்று தலையசைத்தாள். இப்போது எந்தப் பிரச்னையுமில்லை. விடியும் வரை நான் காட்டுக்குள் இருப்பேன். பன்னிச்சைத் தாய் என்னைக் காவல் செய்வாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 8

வீட்டின் படலையைத் திறந்து வீதிக்கு வந்தேன். ஒரு மரத்தின் கீழே இருந்தபடி சிலர் கதைத்துக் கொண்டிருந்தனர். ஊரின் கள்ளுக் குடிகாரர்கள். அவர்களைக் கடந்துபோனால் வருவது நெடுவல் ராசனின் வீடு. அது இருள் மண்டிக்கிடந்தது. வாசலில் நாய்கள் படுத்திருந்தன. அவற்றின் கண்கள் நீலநிறத்தில் ஒளிர்ந்தன. நான் யாரையும் எதிர்கொள்ளக் கூடாதென நினைத்துக் கொண்டேன். இந்த நேரத்தில் உப்புக்காட்டுக்குள் போவதை யாரேனும் பார்த்தால், ஏன் என்று கேட்காமல் விலக மாட்டார்கள். என் ரத்தம் கொப்பளிக்க காட்டுக்குள் புகுந்தேன்.

ஓங்கிப் பெய்யும் மழையின் ஓசை, இரவைக் கலவரப்படுத்தியது. பன்னிச்சை மரத்தின் கீழ் தனித்து நின்றேன். சொற்கள் ஊன்றியெழும்பி பன்னிச்சைத் தாயின் மான்மியம் பாடினேன். உயிர் குளிரக் குளிர என் மொழி பிறந்து நதியாயிற்று. என் கண்களுக்கிடையே எரியும் தழலினை உப்புக்காடே என்னுள் ஏவியது. எனது எலும்பு மஜ்ஜைகளால் பேரிகை எழுப்பினேன். யாழ்நகரத்தில் எரியூட்டப்பட்ட ஓலைச்சுவடிகள் எனக்குள் தோன்றின. அவை ஒவ்வொன்றிலும் எழுதப்பட்டிருக்கும் பாடல்களின் மீது பன்னிச்சைத் தாயின் மண்ணெடுத்துப் பூசினேன். எந்தத் தீயினாலும் சாம்பலாக்கிவிட முடியாதவாறு அழியாவரம் பெற்றவை இந்த ஓலைச்சுவடிகள். மழைநீர் நுரைத்து வெள்ளமாக ஓடியது. மின்னல் தெறித்து கணத்தை ஒளிர்வித்தது. பன்னிச்சை மரம் அசைந்து சோதி சுடர்ந்தது. ‘`ஓ எனது நிலமே! பீறிப்பெருகும் குருதியால் உன்னைக் குளிர்விக்கிறோம். எங்கள் காலடியில் சேறாகவும் நீராகவும் குருதி தேங்கிவிட்டது. நெற்கதிர்கள் குருதியில் விளையத் தொடங்கிவிட்டன காண்” என்று குரலெடுத்துப் பாடினேன். அக்கணமே பன்னிச்சைத் தாய் தோன்றினாள். தனது முலையெடுத்து பாலூட்டினாள். உப்புச்சுவை மிகுந்திருந்த அவளின் முலைப்பாலில் தீக்கொழுந்தின் வெம்மை. “அழாதே மகனே, இந்த நிலை நீளாது” என்று ஆற்றுப்படுத்தினாள். ஆனால், நான் உருக்கொண்டு எம்பினேன். கால்கள் அந்தரத்தில் எழுந்தன. பன்னிச்சைத் தாயின் கைகளில் இருந்த உடுக்கை வாங்கி இசைக்கத் தொடங்கினேன். மழை மூச்சுத்திணறும் இரைச்சலோடு அதிவேகமாக இரவைப் புணர்ந்தது. நான் உடுக்கை இசைத்துக்கொண்டு மூர்க்கம் பொங்க திருநீற்று வாய்க்கால் நோக்கி ஓடினேன். எனது அகமெரியும் சத்தம் இரவின் செவிகளை அறைந்தது. என்னெதிரே அலை அலையாக இருள் நீண்டது. யாரோவொருவரின் கை என்னை அணைத்து நிறுத்தியதும் நான் மயக்கமுற்று விழுந்தேன். இருள் முட்டி நிரம்பியது.

அடுத்த நாள் காலையில் வீட்டுக்கு வந்த சித்தி, ‘ஆதீரன் எங்கேயென்று’ கேட்டபோது அம்மா அதிர்ச்சியடைந்தாள். “உன்ர வீட்டதானே வந்தவன்” என்று சித்தியிடம் கேட்டதும், அவள் இல்லையென்று சொல்லிவிட்டாள். அம்மா என்னைத் தேடியிருக்கிறாள். கிடைக்கவில்லை.

“பின்ன பிள்ளை எங்க போயிட்டான்?”

“சரி, போனவன் வருவான்தானே, வரட்டும்” என்றிருக்கிறாள் சித்தி.

நான் காட்டுக்குள் கண் விழிக்கையில் சூரியன் உச்சிக்கு வந்துகொண்டிருந்தான். கையில் கிடந்த உடுக்கோடு வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்கு முன்னால் பன்னிச்சைக் கிராமமே கூடியிருந்தது. மணியன் என்னைப் பார்த்ததும் ஓடிவந்து, “எங்க போய்ட்டு வாறாய். கொம்மாட்ட நல்ல வெளுவை வாங்கப்போறாய்” என்றான்.

நான் உடுக்கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்ததுதான் தாமதம். அம்மா என்னைப் பூவரசம் கம்பால் அடிக்கத் தொடங்கினாள். அவளின் சினம் சொல்லில் அடங்காதது. பிள்ளையை அடிக்கிறேன் என்கிற வேதனையை அவள் எப்போதும் வெளிக்காட்டியதில்லை. பேய்க்குணத்தின் உயிர்த்துடிப்போடு என்னை தண்டித்தாள். பூவரசம் கம்பு தும்பு தும்பாய்ப் பறக்குமட்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிலர், “சரி விடு, அவனை அடியாத” என்று கொடுக்கும் குரல்கள் அப்போதைய நொடியில் முக்கியமானவை. ஆனால் அம்மா வலுவற்று ஓயுமட்டும் அடி நிகழ்ந்து கொண்டேயிருக்கும். உடம்பு முழுக்க தழும்புகள் சிவந்தபடியிருக்க, “எங்கையடா போனீ, இவ்வளவு நேரமும்” என்று முதலில் கேட்டது ‘நாகப்பர்’தான். அவரின் கூனல் முதுகும், வெற்றிலை வாயும், கரிக்கறுப்பும், வியர்வை வாசமும் எனக்குப் பிடிக்கும். ஆனால், இந்தச் சூழலில் இவர் கேட்ட கேள்வியை நான் அறவே வெறுத்தேன். மணி என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். நான் யாருக்கும் எங்கே போனேன் என்று சொல்லப்போவதில்லை. ஆனால், அவர்கள் அதையே எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

“நான் பண்டி வேட்டைக்குப் போனான்.”

அம்மாவுக்கு நான் சொன்னது பொய்யெனத் தெரிந்தது. அவள் இன்னொரு பூவரசம் தடியை முறிக்கும் ஆவேசத்தோடு என் முன்னே நின்றாள். மணி சிரித்துக்கொண்டு சொன்னான்.

“பண்டி வேட்டைக்கு உடுக்கோட போறதை இண்டைக்குத்தான் மச்சான் கேள்விப்பட்டிருக்கிறன்.”

நாகப்பர் என்னைப் பார்த்துச் செருமியபடி கேட்டார்.

“பண்டி வேட்டைக்குத் துவக்கில்லாம போய், என்னடா செய்வாய்?”

‘நான் இண்டைக்குப் பண்டியை வேவு பார்க்கப் போனான். அதோட பாதை எதெண்டு கண்டுபிடிக்கப் போனான்.”

நாகப்பர், கண்களில் சினம் தாழ நிற்கும் அம்மாவைப் பார்த்துச் சொன்னார்.

“இவன் எங்கையோ போய்க் கிடந்திட்டு வந்து பொய் சொல்லுறான். நீ இவன்ர தோலையுரிச்சால்தான் உண்மை தெரியும்.”

இறுதியாக அதிரும் தொனியில் அம்மா கேட்டாள்.

“எங்கையடா போனீ?”

“அம்மா, உண்மையா நான் வேட்டைக்குத்தான் போனான், என்னை நம்புங்கோ.”

அம்மா அமைதியானாள். ஆனால் நாகப்பர் மறு கேள்வி கேட்டார்.

“பண்டியை நீ பார்த்தனியோ?”

“ஓம். அது எங்கட நடுத்துரவில வந்து தண்ணி குடிச்சிட்டு, அங்கால் பக்கமாய் போனது.”

“எங்கால் பக்கமாய்?”

“அதுதான் முனுசு தோட்டம் பக்கம்.”

குழுமியிருந்த அனைவரும் மெல்ல மெல்லக் கலைந்து சென்றனர். மணி, “இவன் பொய் சொல்லுறான்” என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான். நாகப்பர் மட்டும் வீட்டில் இருந்தார். நான் குளித்துவிட்டுச் சாப்பிடுவதற்கு ஆயத்தமானேன். அம்மா என்னுடைய உடம்புக்குத் தேங்காய் எண்ணெய் தடவிவிட்டு, “இனிமேலும் இப்பிடிக் குழப்படி செய்யக் கூடாது. அச்சாப் பிள்ளையாய் இருக்கவேணும்” என்றாள். நாகப்பர் என்னோடு சேர்ந்து சாப்பிட்டார். அம்மாவின் சமையல் அவருக்குப் பிடித்தமானது. “நீ சமைக்கிறது அகப்பையால இல்லையடி, மந்திரக்கோலால. அதுதான் இவ்வளவு உருசை” என்பார். என்னுடைய மேனியில் தழும்புகள் எரியத் தொடங்கியிருந்தன. நாகப்பர் கேட்டார்.

“இவ்வளவு அடி வாங்கியும் அழாமல் எப்பிடி இருக்கிறாய்?”

ஒரு சுடர்அசையும் புன்னகையை அவருக்காக நிகழ்த்தி “பெத்ததாய் அடிச்சாலும் பன்னிச்சைத்தாய் என்னை நோகவிட மாட்டா” என்றேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 8

நாகப்பர் பதிலுக்கு எதுவும் கேட்காமல் சாப்பிட்டு முடித்தார். பிறகு வெற்றிலை போட்டுக்கொண்டார். அம்மா அவருக்குப் பாயெடுத்துக் கொடுத்து, ``கொஞ்ச நேரம் சாயுங்கோ’’ என்றாள். நாகப்பர் கூனல் முதுகைச் சரிப்படுத்துபவரைப்போலப் பாயில் மல்லாந்து படுத்தார். நாகப்பர் எனக்குப் பெரியப்பா. ஆனால் அவரை முறைசொல்லிக் கூப்பிடுவதேயில்லை. பெரியம்மா சொந்தத்துக்குள் யாரோ செய்வினை செய்து இளம்வயதிலேயே இறந்துபோனாள். இரண்டு ஆண்கள், மூன்று பெண் பிள்ளைகள் என ஐந்து பிள்ளைகள். இரண்டு ஆண் பிள்ளைகளும் இயக்கத்துக்குச் சென்று களமாடி வீரச்சாவு அடைந்திருந்தார்கள். ஏனைய மூன்று பிள்ளைகளும் வெவ்வேறு இடங்களில் திருமணம் செய்து வாழ்ந்துவருகின்றனர். நாகப்பர் பன்னிச்சையடி கிராமத்தின் ஓர் அடையாளம். நெடுவல் ராசனின் உருக்கமான நண்பன். நிறைந்த கள்வெறியில் கூத்துப்பாடல் களைப் பாடத் தொடங்கினால், அங்கேயெம் குருதி மரபின் நரம்புகள் கிளர்ச்சியடைந்து விடும். அவரின் குரலில் ‘காத்தான் கூத்து’ பாடல்களைக் கேட்பதற்கு ஊரில் ஒரு கூட்டமே கூடி நிற்கும்.

அன்றைக்கு மாலையில் நித்திரையிலிருந்து எழும்பிய நாகப்பர், என்னைத் தேடி கிளித்தட்டு மைதானத்துக்கு வந்தார். என்னைத் தனியாக அழைத்து “நேற்றைக்கு இரவு நீ எங்க போனனீ என்று எனக்குத் தெரியும்!” என்றார்.

“அதுதான் நானே சொல்லிட்டேனே, பண்டி வேட்டைக்கெண்டு... இதில தெரிய என்ன இருக்கு?”

“இல்ல, நீ போனது அங்கையில்ல.”

“பின்ன எங்க?”

நாகப்பர் எதுவும் கதையாமல், கூத்துப்பாடலை முணுமுணுத்தபடி அங்கிருந்து நடந்தவர், என்னை நோக்கித் திரும்பிச் சொன்னார்.

“ஆதீரா, உன்னைப் பெத்ததே பன்னிச்சைத்தாய்தாண்டா.”

அந்திக் கருக்கலில் பெய்யத் தொடங்கிய மழையில் மர்மம் குளிர்ந்தது.

(நீளும்...)