Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 44

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

அம்மாவிடம் இதைப் பற்றி மேலதிகமாகக் கேட்க முடியாது. கேட்டால் என்மீது கோபம் கொள்ளக்கூட வாய்ப்பிருக்கிறது. வீட்டுக்குப் போனபோது ‘தொப்பி குயிலன்’ வந்திருந்தார்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 44

அம்மாவிடம் இதைப் பற்றி மேலதிகமாகக் கேட்க முடியாது. கேட்டால் என்மீது கோபம் கொள்ளக்கூட வாய்ப்பிருக்கிறது. வீட்டுக்குப் போனபோது ‘தொப்பி குயிலன்’ வந்திருந்தார்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

செவ்வாய்க்கிழமை காலையிலேயே அம்மாவும் நானும் கோயிலுக்குச் சென்றோம். பூட்டம்மா வீட்டிலேயே பூசித்துக்கொண்டாள். வெளியே நடமாடுவதை அவள் விரும்பவில்லை. அக்காவும் அப்படித்தான் இருந்தாள். மருதனின் பிரிவுழல்வில் நினைவின் விழுது அவளில் கிளைத்திருந்தது. வோக்மெனில் இடைவிடாது யேசுதாஸ் பாடிக்கொண்டிருந்தார். காதலின் நரம்புகளில் யேசுதாஸின் குரலும் தவிப்பும் ரத்தமென ஓடிக்கொண்டிருந்தன. கோயிலடியில் நின்றவர்கள், “பாதையை மூடிப்போடுவாங்கள் போலக் கிடக்கு” என கதைத்துக்கொண்டிருந்தனர். ஆயுதங்களைத் தாங்கியபடி வீதியால் போகும் போராளிகளுக்காகவும் வேண்டிக்கொண்டேன். அம்மா அபிஷேகம் முடிந்து, பூசைக்காகவும் சந்நிதியிலேயே அமர்ந்திருந்தாள்.

கோயிலுக்கு வெளியே எழுந்து சென்றேன். ஏ-9 வீதியில் வாகனங்கள் எதிரும் புதிருமாக விரைந்தன. சரித்திரமிக்கதும், சர்ச்சை மிகுந்ததுமான இந்த வீதியில் எத்தனை சமர்கள், எத்தனை தோல்விகள், எத்தனை வெற்றிகள். உலகின் அரசியல்பூர்வமான வீதியாக ஏ-9 வீதியை நினைத்துக்கொண்டேன். ஒருநாள், இந்தப் பாதையை அரசாங்கம் மூடினால் எங்களுக்கு என்ன பிரச்னையென அண்ணாவிடம் கேட்டபோது “பாதையை மூடினால் அத்தியாவசியப் பொருள்கள் வரத்து இருக்காது” என்றார். இன்றைக்கு அப்படி நிகழ்ந்து விடுமோவென சனங்கள் அச்சப்படுகின்றனர். பாதையின் நீளமும் அகலமும் படுகுழியாகத் தோன்றியது. கோயில் கிணற்றில் நீரள்ளி வயிறுமுட்டக் குடித்தேன். எதனால் உருவான தாகமென்று தெரியவில்லை. ஆனால், மனத்துள் பதகளிப்பின் பேரலை ஓயாமல் வலுத்தது. திசையில் தனித்திருக்கும் ஒரு செம்போத்துப் பறவையைப்போல அசைவற்று நின்று கொண்டேன். அழுகையின் நொடியில் என்னைத் தையலிட்ட இந்தக் காலம் தகர்ந்து போகட்டும் எம்பிரானே!

கடவுள்... பிசாசு... நிலம்! - 44

`நீரில் மூழ்கிய தந்தையைக் காணவில்லையென அழுத பாலகனுக்கு அமுதூட்டிய உன் எழுந்தருளல், குருதியில் மூழ்கிடும் இந்நிலத்தில் எழாதோ...’வென கோபமாகப் பாடினேன். `அமுதூட்டும் உன் பாதியின் முலைகள் எம்மைத் தீண்டாது போயின. காடுடைய சுடலைப்பொடி பூசிடும் உனக்காக எங்கள் நிலமெங்கும் சுடுகாடாய் ஆகட்டுமென காத்திருக்கிறாயோ!’ எனச் சிவனைச் சீண்டினேன். தூணிலும் துரும்பிலும் வியாபித்திருக்கும் சிவனை அங்கே எங்கும் காணவில்லை. மீண்டும் ஒரு வாளி நீரைப் பருகினேன். பூசை தொடங்கியிருந்தது. அம்மாவிடம் நிறைய வேண்டுதல்கள் இருந்தன. அவள் இரண்டு கைகளையும் உள்முகமாகச் சேர்த்து மீண்டும் அகல விரித்து தலைக்கு மேலே உயர்த்திக்கொண்டு வேண்டினாள். அம்மாவின் வேண்டுதல்கள் ரகசியமானவை. ஆனால், ஒன்றுமே அவளுக்கானதில்லை. எல்லாவற்றையும் தியாகிக்கும் அம்மாவின் அருகில் நின்றுகொள்வதே அத்தனை தெய்விகமாக இருந்தது. கோயிலைவிட்டு அம்மாவும் நானும் நடக்கலானோம். அம்மாவிடம் கேட்டேன்.

“நாங்கள் இஞ்ச இருந்து இடம்பெயர்ந்தால் எங்க போயிருப்பம்?”

“கிளிநொச்சி பக்கமாகப் போகவேணும்... இப்ப ஏன் அதைக் கேக்கிறாய்?”

“சண்டை தொடங்கிடும்போலக் கிடக்கு, போராளிகள் சாரை சாரையாய் நடந்து போயினம்.”

“பயிற்சி முடிச்ச பிள்ளையளாய் இருப்பினம், சண்டை இப்ப நடக்காது.”

“உறுதியாய் எப்பிடிச் சொல்லுறியள்?”

“எனக்கு அப்பிடித்தான் தெரியுது.”

அம்மாவிடம் இதைப் பற்றி மேலதிகமாகக் கேட்க முடியாது. கேட்டால் என்மீது கோபம் கொள்ளக்கூட வாய்ப்பிருக்கிறது. வீட்டுக்குப் போனபோது ‘தொப்பி குயிலன்’ வந்திருந்தார். அவரைக் கண்டு நீண்ட நாள்கள் ஆகியிருந்தன. எங்களைப் பார்த்ததும் “எங்க தாயும் மோனுமாய் விடியவே உலாத்திப்போட்டு வாறியள்?” என்று கேட்டார். நான் கோயிலுக்கென்று சொன்னதும் “கடவுள் இருக்கிறாரோ” என்று நக்கலாகக் கேட்டார்.

“ஓம், உங்களைச் சுகம் விசாரிக்கச் சொன்னவர்” என்றேன்.

கையைப் பிடித்து இழுத்து “வங்காள வாயடா உனக்கு” என்றபடி எனது தலையைத் தடவினார்.

அன்றிரவு கூதல் அதிகமாயிருந்தது. வீதிகளில் நடமாடித் திரியும் நாய்க் கூட்டம் அணிவகுத்து உலவித் திரிந்தன. இரவுக்கும் பகலுக்குமிடையே எத்தனை ஜாலங்கள்... எத்தனைக் கசடுகள்... எத்தனை நம்பிக்கைகள். இன்னும் எத்தனை எத்தனையோ? இந்தக் கூதல் இரவில் என் காதுகள் குத்தி வலிக்கின்றன. நுணல் கத்தும் சத்தம், இந்த இரவின் நிசப்தத்தைக் கொலை செய்கிறது. யுத்தம் தயாராகும் இந்நிலத்தில் நுணலுக்கும் வாழ்விருக்கிறதே; இக்கணம் நிம்மதி பெருகுகிறது. இப்பெரு நிலப்பரப்பின் நள்ளிரவு வேளையில், சின்னஞ்சிறு கண்களைத் திறந்து நிற்கும் இந்தச் சிந்தனைக்கும் குழப்பத்துக்கும் முன் நானொரு நடுக்கம் பீடித்த நோயாளியாக நசுங்கித் துடிக்கிறேன். அமைதி தீர்ந்துபோய்விட்டது. யுத்த பேரிகையின் முதன்மை ஒலிகள் கேட்கத் தொடங்குகின்றன. இரவிலும் பெருத்த யானை எழுந்து காட்டினுள்ளே மரங்களை அழித்து மூர்க்கமாக முன்னேறுகிறது. யானை வேஷத்தில் யுத்தம் எழுகிறது. யுத்த தாகம் காலத்துக்குத் தீர்வதாயில்லை. அந்தரத்தில் குண்டுகள் மலர்கின்றன. பூமியில் உடல்கள் முறிகின்றன. அரிவுவெட்டின் பின்பு சிதறிக்கிடக்கும் நெற்கதிர்களைப்போல உயிர்கள் கால்களில் நசியுண்டுபோகின்றன. அசுர விசையோடு வானிலிருந்து கீழ் நோக்கிப் போர் விமானங்கள் தாக்குதல் செய்கின்றன. நானோர் நிராயுதபாணி. வாழ்வின் துடையிடுக்கில் குற்றுயிராகக் கிடக்கிறேன். நிலம் கொதிக்கிறது. எஞ்சுவதற்கு வாய்ப்பற்று மூச்சுவிடும் நிலத்தில், அலறியடித்தபடி கண்களைத் திறந்தேன். கனவு எதிரொலித்தது. அம்மாவும் பூட்டம்மாவும் கதைத்துக்கொண்டிருந்தனர். நேரம் அதிகாலை நான்கு மணியாகியிருந்தது. மெல்ல எழுந்து வெளியே வந்தேன்.

“என்னடா வெள்ளென எழும்பிட்டாய்?”

“ஓம், நித்திரை வரேல்ல.”

பூட்டம்மா சொன்னாள். “இவன் கனவேதோ கண்டிட்டான்போல.”

“நீங்கள்தான் என்னை பயப்பிடுத்தினியள். சண்டை வரப்போகுது, இடம் பெயரப்போகுதெண்டு.”

“மோனே, அதில என்ன பொய்ய கண்டனி?”

நான் எதுவும் கதையாமல் அப்படியே நின்றேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 44

அம்மா அடுப்படிக்குள் நுழைந்தாள். வானொலியில் டி.எம்.செளந்தர்ராஜன் பாடிக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் பொதுக் கிணற்றடிக்கு நடந்துபோனேன். குடத்தில் நீர் நிரப்பிக்கொண்டிருந்த அம்பிகாவை விடிகாலையில் பார்ப்பதே நிறைவாக இருந்தது. குடத்தில் நீர் நிரம்பும் ஒலியில் கண்கள் கலங்கின. ஏன் இவ்வளவு பலவீனமானதொரு ஆளாகிவிட்டேன் என்று நொந்தேன். அம்பிகா இன்றைக்கு வெட்கமுற்ற மலரைப்போலிருந்தாள். முகம் சிவந்தாள். அவளை முத்தமிட்டால், இக்கணம் உறைந்துபோகுமென்று தெரிகிறது. தனது அகன்ற கண்களால் உறைந்து நின்று என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் கால்கள் அசையத் தொடங்கின. மழையில் துள்ளிக் குதிக்கும் மானைப்போலக் கண்களை விழித்து, எனது கைகளைப் பற்றிக்கொள்ளத் துடிக்கிறாள் என்று எண்ணிக்கொண்டேன். சுவர்களற்ற கற்பனையின் இடுப்பில், செல்லக் குழந்தைகள்போல அவளும் நானும் நின்றுகொண்டிருந்தோம். அவள் என்னை நெருங்கினாள். அவளிட்ட முத்தத்தில் ஆத்மார்த்தம் மிதந்தது. பின்னர் விதையாக விழுந்து செடியாகத் துளிர்த்தது. அவளது முத்தத்தின் சுவை, மரபின் நெடுங்காலச் சுளையோடு கனிந்திருந்தது. இதுவும் கனவா... கண்களைத் திறந்திருந்து கனவு காணும் இக்காதலை நான் எப்படி நித்திரையாக்குவேன். பொதுக்கிணற்றடியிலிருந்து வீட்டுக்கு வந்தேன். நானும் அம்பிகாவும் அன்றைக்கு மாலையில் உப்புக்காட்டுக்குள் சந்தித்தோம். நிழல் பாவிக் கிடக்கும் மணல் மேட்டில் இருவரும் சாய்ந்திருந்தோம். இந்தச் சுகம் எத்தனை மேன்மையானது தெரியுமா? எந்தக் கட்டளைக்கும் உத்தரவுக்கும் அடங்க மாட்டேன் என்றபடியான அம்பிகாவின் உடலைக் கண்டேன். ரட்சிக்குமளவு அவளிடம் ஒரு சுகவுணர்வைக் கண்டேன். கருங்குளவி மரத்தைத் துளைப்பதைப்போல உடலுள் ஒரு சத்தம். இப்படியொரு பொழுதை எதிர்பார்க்கவில்லை, ``ஆசுவாசமாக இருக்கிறது’’ என்றேன்.

என்ன சொல்லவேண்டுமென்றுதெரிய வில்லை. அவளைப் பார்த்து புன்னகை செய்தேன். ``சரி போகலாமா?’’ என்று கேட்டதும் போகலாம் என்று எழுந்துகொண்டாள்.

அந்தி சாய்ந்தது. அவள் அணிந்திருந்த அதே மஞ்சள் சட்டையின் நிறத்தில் அடிவானம் தெரிந்தது. அப்போது அவளின் பிருஷ்டத்தில் எந்தவோர் ஆவர்த்தனமும் இல்லாமலிருந்தது. அவளைப் பிரதான வீதியில் கொண்டே வழியனுப்பிவைத்தேன். அவள் என்னை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே நடக்கத் தொடங்கினாள். அவளுக்குக் கையசைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன். எல்லாவற்றிலும் நினைவும் படிமமும் ஒழுகிக்கொண்டே இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக ஆழ்ந்த நித்திரை தேவைப்பட்டது. நித்திரைக்குப் போகுமுன் நானும் அம்பிகாவும் சந்தித்துக்கொண்டதை யாராவது பார்த்திருப்பார்களா என்று சந்தேகம் தோன்றியது. நாகப்பர் பார்த்திருந்தால் ஏதாவது நினைத்திருப்பார். என்னவானாலும் பரவாயில்லை என்று போர்த்திக்கொண்டு பாயில் சரிந்தேன்.

சண்டை தொடங்கிவிட்டது. அண்ணா போர்க்களத்தில் சமராடுகிறான். போராளிகள் யாழ்ப்பாணத்தை நோக்கிப் படையெடுக்கின்றனர். ராணுவத்தினர் கிளிநொச்சியைக் கைப்பற்ற போர் தொடுக்கின்றனர். எதிரும் புதிருமாக ஆயுதங்களின் மோதல். சனங்கள் இடம்பெயரும் கால்களோடு சுமைகளாகத் தங்களைச் சுமந்தனர். போரின் மிலேச்சத்தனம் ஆரம்பித்தது. போரிடம் மண்டியிடும் போர். சாவிடம் மண்டியிடும் சாவு. `மண்டியிடு’ எனும் ஆக்கிரமிப்பாளரின் பீரங்கிகளும், `மண்டியிடோம்’ எனும் புரட்சியாளர்களின் துப்பாக்கிகளும் தீப்பிழம்பாக எரிகின்றன. பூச்சிகளுக்கும் தெரியாத மெதுவான நகர்வுகள் சடைத்து வளர்ந்தன. உள்ளீடற்ற இருட்டு எரிந்தவண்ணம் அலைந்தது. ஊடுருவ முடியாத திசைகளில் போராளிகள் காலடி பதித்தனர். துயரப்பட்ட சனங்களின் தவித்துக்கொண்டிருக்கும் குரலை உற்றுக் கேட்க செவிகளைக் கடவுள் படைத்ததில்லை. யுத்தம் அமைதியைவிட நேர்மையானது. அமைதி கடவுளைவிட மோசமானது. அமைதியை வெறுக்கிறேன். யுத்தத்தைக் காண்கிறேன். மீண்டும் அலறிக்கொண்டு எழுந்தேன். நாகப்பர் எனக்கு எதிரே அமர்ந்திருந்தார்.

“என்ன ஆதீரா, கடுமையான கனவுபோல” என்றார்.

“எல்லாம் கனவாய் நீளுது” என்றேன்

நாகப்பர் மெதுவாகக் கேட்டார். “எது... அம்பிகாவும் நீயும் உப்புக்காட்டுக்குள்ள போயிருந்ததும் கனவா?”

நான் நாகப்பரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

(நீளும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism