Published:Updated:

புதுப்பாதை காட்டும் புதுக்கோட்டை மனிதர்!

சிவக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
சிவக்குமார்

என்னோட கடைக்கு வர்றவங்க எல்லாரும் விவசாயிங்க. பிள்ளையா வளர்த்த தென்னை மரங்க, நடவுப்பயிர்ங்க எல்லாத்தையும் இழந்துட்டாங்க.

புதுப்பாதை காட்டும் புதுக்கோட்டை மனிதர்!

என்னோட கடைக்கு வர்றவங்க எல்லாரும் விவசாயிங்க. பிள்ளையா வளர்த்த தென்னை மரங்க, நடவுப்பயிர்ங்க எல்லாத்தையும் இழந்துட்டாங்க.

Published:Updated:
சிவக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
சிவக்குமார்

மொய் விருந்து என்பது பேராவூரணி முதல் புதுக்கோட்டை வரை உள்ள பகுதிகளின் பண்பாடு. கஷ்டத்தில் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு உறவுகள் உதவுவதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு இது. இதைச் சற்றே மாற்றி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ‘டீ மொய் விருந்து’ நடத்தி, 23,000 ரூபாய் திரட்டி அரசு நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறார் சிவக்குமார். இவர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வம்பன் நான்கு ரோட்டில் டீக்கடை வைத்திருக்கிறார்.

மதம் பிடித்த யானையாக கஜா புயல், 2018 நவம்பர் மாதத்தில் டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துப் போட்டது. அந்த நேரத்தில் சிவக்குமார், தன் டீக்கடையில் விவசாயிகள் வைத்திருந்த கடன் பாக்கி 25,000 ரூபாயையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதோடு நிற்காமல், விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார்.

டெங்குவைக் கட்டுப்படுத்த நிலவேம்புக் கஷாயம் வழங்குவது, முதியவர்களுக்குப் பாலும் பிரெட்டும் இலவசமாகக் கொடுப்பது, குழந்தைகளுக்குப் பால் இலவசமாக வழங்குவது என இவரது நேசக்கரம் நீண்டுகொண்டே போகிறது. இத்தனை உதவிகளையும் செய்யும் சிவக்குமாரின் டீக்கடை வாடகைக் கட்டடத்தில்தான் இயங்குகிறது. தான் சம்பாதிக்கும் சொற்ப வருமானத்தில் ஒரு பகுதியை இப்படி உதவிகள் செய்வதற்காகவே ஒதுக்குகிறார்.

‘`எனக்குச் சொந்த ஊரு பக்கத்துல இருக்குற மாங்கனாம்பட்டி. அண்ணன் தம்பி தங்கச்சின்னு என்னோட சேர்த்து மொத்தம் நாலு பேரு. எனக்கு பத்து வயசு இருக்கும்போதே அம்மா தவறிட்டாங்க. அன்னாடம் சம்பாதிக்கிற காசை அப்பா குடிச்சி அழிச்சுட்டு வந்துடுவாரு. அம்மா இறந்த பிறகு சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம். அந்த நேரத்தில்தான், அறந்தாங்கி பக்கத்துல நாகுடியில இருக்கிற தூரத்துச் சொந்தமான தங்கராஜ் சித்தப்பா உதவி பண்ண வந்தாரு. தங்கச்சியையும் தம்பியையும் கொடைக்கானல்ல ஒரு ஆசிரமத்துல சேர்த்துவிட்டுட்டு, அண்ணன் அங்க மரம் வெட்டுற வேலை பார்த்தாரு.

சாப்பாடு போட்டா போதுங்கிற நிலையிலதான் நான் நாகுடியில இருக்குற சித்தப்பா டீக்கடைக்கு வேலைக்குப் போனேன். அவர் டீ மாஸ்டர். கிளாஸ் கழுவுறது என் வேலை. கொஞ்சம் கொஞ்சமா டீ போடக் கத்துக்கிட்டு கொஞ்ச நாள்ல மாஸ்டர் ஆயிட்டேன். எனக்குத் தினசரி சம்பளம் கொடுக்க ஆரம்பிச்சாரு, சம்பளத்தை அவர்கிட்டயே கொடுத்து வெச்சேன்.

புதுப்பாதை காட்டும் புதுக்கோட்டை மனிதர்!

அப்போல்லாம் ‘பசிக்குதுய்யா, காசு இல்லை’ன்னு வந்து கடை முன்னாடி வயசானவங்க வந்து நிப்பாங்க. நாங்க சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்ட ஞாபகம் வந்துரும். டீ குடிக்கிறீங்களான்னு கேட்டு டீயோடு பன்னையும் கொடுப்பேன். சாப்பிட்டுட்டு வாழ்த்திட்டுப் போவாங்க. அவங்களுக்குச் செலவாகுற காச என் சம்பளக் கணக்குல சேர்த்துடுவேன்.

14 வருஷம் டீக்கடையில வேலை பார்த்தேன். பிறகு மனைவி நகைகளை அடகு வச்சு வாடகைக்கு இந்தக் கடையைப் புடிச்சேன். பெருசா இல்லாட்டியும் பொழச்சிக்கிற அளவுக்கு வருமானம் கிடைக்குது. எனக்கும் சரி, வாடிக்கையாளர்களுக்கும் சரி, கஜா புயல் சமயம் ரொம்பவே கஷ்ட காலம். என்னோட கடைக்கு வர்றவங்க எல்லாரும் விவசாயிங்க. பிள்ளையா வளர்த்த தென்னை மரங்க, நடவுப்பயிர்ங்க எல்லாத்தையும் இழந்துட்டாங்க. குழந்தை மாதிரி கடையில் நின்று கண்ணீர் விட்டு அழுததை இன்னும் என்னால மறக்க முடியலை. அந்த நேரத்துல எனக்கும் சுத்தமா வியாபாரம் இல்லை. ஒரு பெரியவர் தெனமும் ரெண்டு, மூணு டீ குடிப்பாரு. கடைக்கு வராம இருக்க மாட்டாரு. கொஞ்ச நாளா கடைப் பக்கம் வர்றதில்லை. ஏற்கெனவே கடையில அவர் வெச்சிருந்த கடனுக்காக வரலைங்கிறது தெரிஞ்சது.

இதுவரைக்கும் வெச்சிருந்த டீ கடன் எல்லாம் தள்ளுபடின்னு எழுதி போர்டு வெச்சிட்டேன். எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். அன்னைக்கே அந்தப் பெரியவர் வீட்டுக்குப் போய், ‘நீங்க கடன் பாக்கியைத் தர வேணாம். காசே இல்லாட்டியும் பரவாயில்லை, கடைக்கு வராம இருக்காதீங்க’ன்னு சொன்னதும் அவர் கண்ணு கலங்கிருச்சு. வெளியூர்ல இருந்து வந்த ஒருத்தரு திடீர்னு எனக்கு ஒரு துண்டைப் போர்த்தி விட்டுட்டாரு.

ஜனங்களுக்கு ஒரு பிரச்னைன்னு வரும்போதேல்லாம் நம்மால முடிஞ்ச உதவி செய்யணும்ங்கிறதுக்காக, என் வருமானத்துல ஒரு சின்னத் தொகையை ஒதுக்க ஆரம்பிச்சேன். அதை வெச்சு என்னால முடிஞ்சத கஸ்டமர்களுக்குச் செஞ்சிக்கிட்டிருக்கேன். பச்சக்குழந்தைகளுக்கு வருஷம் முழுசும் இலவசமா பால் கொடுக்கணும்ங்கிறது என்னோட வாழ்நாள் ஆசை. அந்தத் திட்டத்தைப் போன வருஷத்துல இருந்து செயல்படுத்திட்டேன். இன்னும் பல திட்டங்களை வெச்சிருக்கேன். வாய்ப்பு கிடைச்சா ஒவ்வொண்ணா செய்ய வேண்டியதுதான்’’ என்று விடை கொடுத்தார் சிவக்குமார்.

நமக்குத் தேவை நிறைய சிவக்குமார்கள்!