Published:Updated:

சொந்த ஊருக்கு சென்னையில் அடையாளம் கொடுத்த இளைஞர்கள்!

ஆலடிப்பட்டியான் அல்வா கடை இளைஞர்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஆலடிப்பட்டியான் அல்வா கடை இளைஞர்கள்

அறுசுவை

சொந்த ஊருக்கு சென்னையில் அடையாளம் கொடுத்த இளைஞர்கள்!

அறுசுவை

Published:Updated:
ஆலடிப்பட்டியான் அல்வா கடை இளைஞர்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஆலடிப்பட்டியான் அல்வா கடை இளைஞர்கள்

2011-ம் ஆண்டில் ஒருநாள்... திருநெல்வேலி மாவட்டத்தின் கிராமம் ஒன்றிலிருந்து, ஏழு இளைஞர்கள் கல்லூரி மேற்படிப்புக்காக சென்னைக்கு வருகின்றனர். அவர்களில் ஆறு பேருக்கு, `படித்து, நல்ல சம்பளத்துக்கு வேலைக்குச் சென்றுவிட வேண்டும்’ என்பதுதான் லட்சியம். ஓர் இளைஞருக்கு மட்டும் சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற குறிக்கோள். ஆனால், என்ன தொழில் செய்வது என்று தெரியவில்லை. `நீ திருநெல்வேலிதானே, ஊருக்குப் போனா அல்வா வாங்கிட்டு வா...’ என்று சென்னை நண்பர்கள் பலரும் தொடர்ச்சியாகக் கேட்க, `அல்வாவுக்கு இவ்வளவு டிமாண்டா... ஏன் அதையே பிசினஸாக மாற்றக் கூடாது?’ என்று அந்த இளைஞருக்குப் பொறி தட்டியிருக்கிறது. அந்த ஐடியாதான் இன்று `ஆலடிப்பட்டியான் அல்வா கடை, ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி கடை' என்ற பெயரில் வேரூன்றி, சென்னையில் 25 கிளைகளுடன் மாதம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

`ஆறேழு நண்பர்கள் ஒன்று சேர்ந்தால், தேற மாட்டார்கள்’ என்ற பொதுப்புத்தியைப் பொய்யாக்கியிருக்கின்றனர், மோசஸும் அவரின் நண்பர்களும். சென்னை கூடுவாஞ்சேரியிலுள்ள ஆலடிப்பட்டியான் அல்வா கடை மெயின் பிராஞ்சில் அவர்களைச் சந்தித்தோம். மோசஸ்தான் முதலில் பேசினார். இவர்தான் இந்த பிசினஸுக்கான ஐடியாவை உருவாக்கிய இளைஞர்.

சொந்த ஊருக்கு சென்னையில் அடையாளம் கொடுத்த இளைஞர்கள்!

``நான், மாரிராஜா, வினோத், சார்லஸ், ஸ்டாலின், தினேஷ், ராஜேந்திரன் - எங்க ஏழு பேருக்கும் திருநெல்வேலிக்குப் பக்கத்துல இருக்கிற சுரண்டைதான் சொந்த ஊர். ஒரே கிராமம், பக்கத்துப் பக்கத்து வீடுங்கிறதால சின்ன வயசுலருந்தே நாங்க ஏழு பேரும் ஒண்ணாவேதான் வளர்ந்தோம். எங்கே போனாலும் ஒண்ணாவேதான் சுத்துவோம். `இவனுங்க கூட்டுச் சேர்ந்து குட்டிச்சுவரா போகப்போறானுங்க’ன்னு எங்க எல்லாருடைய வீட்லயும் ரொம்ப பயப்படுவாங்க. ஏன்னா, நாங்க கொடுக்குற சேட்டை அந்த மாதிரி. 2012-ல் மேற்படிப்புக்காகச் சென்னைக்கும் ஏழு பேரும் ஒண்ணா புறப்பட்டப்போதான் வீட்ல ரொம்ப மிரண்டுட்டாங்க. `சென்னைக்குப் போயும் இப்படியே இருக்காதீங்கடா… படிச்சு நல்ல வேலைக்குப் போகப் பாருங்க’ன்னு ஒருவித பயத்தோடதான் அனுப்பிவெச்சாங்க.

எஸ்.ஆர்.எம் காலேஜ்ல ஆளுக்கொரு படிப்பு. நான் எம்.பி.ஏ படிச்சேன். கிராமத்துலருந்து சென்னைக்கு வர்ற எல்லாரையும்போலவே எங்களுக்கும் சென்னை ஆச்சர்யமாவே இருந்துச்சு. பெரிய பெரிய கட்டடங்களையெல்லாம் பார்க்கிறப்போ மிரட்சியா இருந்துச்சு. வாரா வாரம் பைக் எடுத்துக்கிட்டு சென்னை முழுக்க சுத்துவோம். இங்குள்ள மக்கள்கிட்ட பேசிப் பழகினப்போதான், `இங்கே இட்லிக் கடை போட்டுக்கூட பொழச்சுக்கலாம்'கிற நம்பிக்கை வந்துச்சு. என் அப்பா, ஊர்ல பலசரக்கு கடை வெச்சுருக்காரு. அதனால, எனக்கு சின்ன வயசுலேயிருந்து பிசினஸ் ஆர்வம் ஜாஸ்தி. ஏதாவது சொந்தமா பிசினஸ் ஆரம்பிக்கணுங்கிறதுதான் என் கனவு. எந்த ஏரியாவுக்குப் போனாலும் அங்கே எந்தக் கடையில கூட்டமா இருக்கு, எந்தத் தொழில் நல்லா நடக்குதுன்னு என் மனசு தேட ஆரம்பிச்சுரும்'' என்று சொல்லும் மோசஸ் தர்மபாலனின் குரலில் அவ்வளவு பரவசம்.

``படிச்சு முடிச்சுட்டு ஏதாவதொரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணணும்னு முடிவெடுத்திருந்தாலும், என்ன பிசினஸ் பண்றதுன்னு தெரியாமத்தான் இருந்தது. நாங்க திருநெல்வேலிங்கிறதால லீவுக்குப் ஊருக்குப் போகும்போதெல்லாம் `வரும்போது அல்வா வாங்கிட்டு வாங்கடா’ன்னு காலேஜ் ஃப்ரெண்ட்ஸ், புரொஃபசர்ஸ்னு எல்லாரும் கேட்பாங்க. நாங்க கருப்பட்டி அல்வா வாங்கிட்டு வந்து கொடுப்போம். அதைச் சாப்பிட்டுட்டு அவ்வளவு சந்தோஷப்படுவாங்க. அது எங்களுக்கு ஆச்சர்யமா இருக்கும். ஏன்னா, எங்க ஊர்ல கருப்பட்டிப் பலகாரங்கள் ரொம்ப சாதாரண விஷயம். கருப்பட்டியிலதான் எல்லா இனிப்புகளும் செய்வோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சொந்த ஊருக்கு சென்னையில் அடையாளம் கொடுத்த இளைஞர்கள்!

சில மாதங்களுக்கு அப்புறம், எங்க காலேஜ்ல ஒரு புராஜெக்ட் ஸ்டார்ட் பண்ணாங்க. எம்.பி.ஏ ஸ்டூடன்ட்ஸ் ஒரு டீம் உருவாக்கணும். ஒவ்வொரு டீமும் காலேஜுக்குள்ளயே ஸ்டால் போட்டு ஏதாவது பிசினஸ் பண்ணணும். அதுல யார் சக்சஸ்ஃபுல்லா பண்றாங்கன்றதுதான் டாஸ்க். ஆளாளுக்கு என்னென்னவோ வித்தியாச வித்தியாசமா பண்ணாங்க. எங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. மூளையைப் போட்டு கசக்கிட்டு இருந்தோம். `நாம ஏன் அவ்வளவு யோசிக்கணும்? காலேஜ்ல பலருக்கும் கருப்பட்டி அல்வான்னா அவ்வளவு பிடிக்குது. நாம ஏன் அதையே ஸ்டால் போடக் கூடாது'ன்னு தோணுச்சு. திருநெல்வேலியில இருந்து அல்வா வரவெச்சு, அழகா பேக்கிங் செஞ்சு ஸ்டால் போட்டோம். அதுக்கு ஏகபோக வரவேற்பு. நாங்க கொஞ்சம்கூட எதிர்பார்க்கவே இல்லை. அந்த புராஜக்ட்லயே அதிக சேல்ஸ் பண்ணது நாங்கதான். காலேஜ்ல எல்லாரும் பாராட்டினாங்க. அந்த காலேஜ் புராஜெக்ட்தான் நாங்க இன்னைக்கு இந்த இடத்துல இருக்குறதுக்கு முக்கியமான காரணம்.” நிறுவனம் உருவான கதையை மோசஸ் விவரிக்கும்போது, நம்பிக்கை ஊற்றெடுக்கிறது.

மோசஸைத் தொடர்ந்து பேசிய மாரிராஜா, “நாங்க சென்னைக்குத் தனியா வந்திருந்தோம்னா, நிச்சயம் நான் இப்படி இருந்திருக்க மாட்டேன். ஏதாவதொரு கம்பெனியில மாசம் 10,000, 15,000 ரூபா சம்பளத்துல, யாருக்காகவோ வேலை பார்த்துக்கிட்டிருந்திருப்பேன். நான் மட்டுமில்லை, எங்க மத்த ஃப்ரெண்ட்ஸும் அப்படித்தான் இருந்திருப்பாங்க. எங்க எல்லாருடைய வாழ்க்கையையும் மாத்தினது மோசஸ்தான். நாம வேலைக்குப் போகக் கூடாது, சொந்தமா தொழில் பண்ணணும்னு ஆரம்பத்துலருந்து சொன்னதும் அதற்காக முதல்ல களமிறங்கிச் செயல்பட்டதும் அவர்தான். ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப வித்தியாசமா நம்பிக்கையோட அணுகுவார். நாங்க அவருக்கு பக்கபலமா இருந்தோம், அவ்வளவுதான். கூட்டுச் சேர்ந்து கெட்டுப் போயிருவோம்னு பயந்துக்கிட்டிருந்த எங்க பேரன்ட்ஸெல்லாம், `சென்னைக்குப் போய் இந்த அளவுக்குப் பண்றீங்களே’ன்னு எங்களை இப்போ பிரமிப்பா பாக்குறாங்க” என்று சொல்ல, மற்ற நண்பர்களும் அதை ஆமோதிக்கின்றனர்.

சொந்த ஊருக்கு சென்னையில் அடையாளம் கொடுத்த இளைஞர்கள்!

``ஐடியா என்னோடதா இருந்தாலும் அவங்க சப்போர்ட் இல்லாம இது சாத்தியமில்லை” - நண்பர்களை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்தார் மோசஸ். ``நாங்க எடுத்ததும் கடையை ஆரம்பிச்சுடலை. காலேஜ் ஸ்டால்ஸ் சக்சஸ் ஆனதால, வீக் எண்ட்லயெல்லாம் மால்கள்ல ஸ்டால் போட ஆரம்பிச்சோம். எங்களுக்கான ரூம் வாடகை, சாப்பாட்டுச் செலவுன்னு எங்களுடைய அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்கிற அளவுக்கு அதுல வருமானம் கிடைச்சுது. அடுத்து `அல்வாகடை.காம்’ என்ற பேர்ல வெப்சைட் ஆரம்பிச்சு, ஆன்லைன்ல சேல்ஸைத் தொடங்குனோம். எங்க டீம்ல எம்.சி.ஏ படிச்சவங்களும் இருக்காங்க. அவங்க வெப்சைட் டிசைனிங்கை பார்த்துக்கிட்டாங்க… நான் மார்க்கெட்டிங்கை பார்த்துக்கிட்டேன்… திருநெல்வேலியில அல்வா கடை வெச்சுருக்கவங்கள்லாம் எங்களுக்குத் தெரிஞ்சவங்கன்றதால, அவங்ககிட்ட கடனுக்கு அல்வா வாங்கிக்கிட்டோம். உண்மையைச் சொல்லணும்னா, எந்த முதலீடும் இல்லாமத்தான் இந்த பிசினஸைத் தொடங்கினோம்.

2014-ல ஆன்லைன் சேல்ஸ் இந்த அளவுக்குப் பிரபலமாகலை. அதுவும் ஆன்லைன்ல அல்வாங்கிறதெல்லாம் யாருமே ட்ரை பண்ணாத விஷயமா இருந்துச்சு. அதனால ஆரம்பத்துல பலரும், `எம்.பி.ஏ படிச்சுட்டு ஏதாவதொரு கம்பெனிக்கு வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாத்துவேன்னு பார்த்தா, ஆன்லைன்ல அல்வா விக்கப் போறியா?'ன்னு நக்கலடிச்சாங்க. ஆனா, அதையெல்லாம் நாங்க கண்டுக்கலை. நம்பிக்கையா இருந்தோம். எதிர்பார்த்த மாதிரி நல்ல வரவேற்பு இருந்துச்சு. ஒரே மாசத்துல எங்களுக்கு ஃபேஸ்புக்ல ஆயிரக்கணக்கான ஃபாலோயர்ஸ் வந்தாங்க. அந்தச் சமயத்துல தீபாவளியும் வந்துச்சு. அப்போ இந்தியா முழுக்க இருந்து நிறைய ஆர்டர்கள் வந்துச்சு. அந்த தீபாவளி டைம்ல மட்டும் எங்களுக்கு மூணு லட்சம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சுது. அந்தப் பணத்தை முதலீடா வெச்சுத்தான் கூடுவாஞ்சேரியில எங்களோட முதல் கடையை ஆரம்பிச்சோம்.

அந்தக் கடை வழக்கமான ஸ்வீட் கடையா இருக்கக் கூடாதுங்கிறதுல திட்டவட்டமா இருந்தோம். வெறுமனே அல்வா கடை மட்டும் வெச்சா பெருசா போகாது. அடிக்கடி ஸ்வீட் கடைக்கு யாரும் வர மாட்டாங்கன்னு யோசிக்கும்போதுதான் `கருப்பட்டி காபி கடை’ங்கிற கான்செப்ட் உருவாச்சு. ஸ்வீட் கடைக்கு வெளியில பனை ஓலைக் கூரை, மர பெஞ்ச்னு கிராமத்து செட்டப்பை நியூ லுக்ல கொண்டுவந்தோம்… அந்த அட்மாஸ்பியர் மக்களுக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. காபி சாப்பிட வர்றவங்களுக்கு சின்ன தொன்னையில அல்வா கொடுத்தோம். அல்வாவை டேஸ்ட் பண்ணவங்க நிச்சயமா வீட்டுக்கும் வாங்கிட்டுப் போவாங்க. ஒருகட்டத்துக்குமேல எங்க ஏழு பேருக்கும் ஒரே ஒரு பிராஞ்ச் போதுமானதா இல்லை. ஓரளவுக்கு நாங்க வளர்ந்ததும் வீட்லயும் நம்ப ஆரம்பிச்சுட்டாங்க. நண்பர்கள்கிட்ட இன்னும் கொஞ்சம் முதலீடு வாங்கி எல்லாருக்கும் தனித்தனியா பிராஞ்ச் உருவாக்கினோம். இன்னிக்கு சென்னையில 25 கிளைகள் இருக்கு. மாசம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல டேர்ன்ஓவர் ஆகுது.” என்று சொல்லும்போது, எல்லோரது முகத்திலும் பெருமிதம் மிளிர்கிறது.

“அதற்காகத் தோல்வியும் சவாலும் எங்களுக்கு இல்லாம இல்லை. ஒரு சில கடைகள் நஷ்டமடைஞ்சும் இருக்கு. அதிலிருந்து மீண்டு வந்திருக்கோம். ஒருத்தவங்க ஒரு விஷயத்துல ஜெயிச்சுட்டா அதே மாதிரி செய்யப் பலபேர் வருவாங்க. கருப்பட்டி காபிங்கிற கான்செப்ட்டை சென்னைக்கு நாங்கதான் முதல்ல கொண்டுவந்தோம். எங்க கடைக்குக் கிடைச்ச வரவேற்பைப் பார்த்து, எங்க கடை மாதிரியான டிசைன்லயே கருப்பட்டி காபி கடைன்னு சென்னையில பல கடைகள் உருவாச்சு. சட்டரீதியா தடை வாங்கலாமான்னு ஆரம்பத்துல யோசிச்சோம். ஆனா, அவங்க பின்னாடி போனா, நம்ம கவனம் சிதறிடும். நம்ம கடை மாதிரியான லுக்கை இன்னொருத்தவங்க காப்பி அடிக்கலாம். ஆனா, எங்க கடையில உள்ள தரத்தையும் சுவையையும் காப்பி அடிக்க முடியாது. ஆனா, அதேசமயம் வேற ஒரு கடையில சுவையில்லாததை சாப்பிட்டுட்டு எங்க கடைன்னு மக்கள் தப்பா நினைக்கக் கூடாதுங்கிறதுலயும் தெளிவா இருந்தோம்.

சொந்த ஊருக்கு சென்னையில் அடையாளம் கொடுத்த இளைஞர்கள்!

`ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி’ என்பதுதான் எங்க கடையோட பேர். முன்பு எங்க ஊர் பெயரான ஆலடிப்பட்டியான் சின்னதாவும், கருப்பட்டி காபிங்கிறது பெருசாவும் நேம் போர்டுல இருக்கும். அதை மாத்தி ஆலடிப்பட்டியான்கிறதை பெருசாக்கி பெயர்ப் பலகை வெச்சோம். மக்களுக்கு உண்மை புரிஞ்சுருச்சு. முன்பு `கருப்பட்டி காபி கடையில இருக்கோம்’னு சொன்னவங்க இப்போ, `ஆலடிப்பட்டியான்ல இருக்கோம்’னு சொல்றாங்க. எல்லாமே நன்மைக்குத்தான்னு சொல்லுவாங்க. எங்களை காப்பி அடிக்கிறதா நினைச்சு சிலர் பண்ண வேலை, எங்க ஊர் பெயரை நிலைநிறுத்த உதவியிருக்கு. ஆமாம்! `சென்னையில போய் அல்வா விக்கப் போறியா'ன்னு சிரிச்ச எங்க ஊர்க்காரங்கள்லாம், `இன்னைக்கு நம்ம ஊர் பேரு சென்னை முழுக்க பிரபலமாகியிருக்குன்னா, அதுக்கு நீங்கதான் காரணம்’னு பெருமையா சொல்றாங்க. இந்தியா முழுக்க எங்களுடைய கடைகளை நிறுவணும்கிறதுதான் எங்களுடைய கனவு. நிச்சயமாக அதை நனவாக்குவோம்” என்று மோசஸும் அவரின் நண்பர்களும் முடிக்கும்போது அத்தனை நம்பிக்கை.

அதுதானே எல்லாம்!