Published:Updated:

“எங்களால் விஷம் குடிக்க முடியாது!”

ஹன்னன் மொல்லா ஆவேசம்

பிரீமியம் ஸ்டோரி

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் 50 நாள்களைக் கடந்தும் விவசாயிகள் போராடிவருகிறார்கள். மத்திய அரசுடன் அவர்கள் நடத்திய எட்டாம்கட்டப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்தநிலையில்தான், பேச்சுவார்த்தைக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களில் ஒருவரான அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹன்னன் மொல்லாவிடம் பேசினோம்.

“எங்களால் விஷம் குடிக்க முடியாது!”

“இந்தியாவில் இதுவரை நடைபெற்ற விவசாயிகள் போராட்டங்களிலிருந்து இந்தப் போராட்டம் எந்த வகையில் வேறுபடுகிறது?”

“சுதந்திரத்துக்குப் பிறகு தேசிய அளவில் நடைபெறும் மிகப்பெரிய விவசாயிகள் போராட்டம் இதுதான். எந்தக் கருத்து வேறுபாடும் இல்லாமல் அனைத்துச் சங்கங்களும் ஒற்றுமையுடன், அமைதியான முறையில் போராட்டத்தை நடத்திவருகிறோம். கடுமையான தட்பவெப்பநிலையைத் தாங்கிக்கொண்டு சாதி, மதம், இனம் என எந்த வேற்றுமையும் இல்லாமல் ஒன்றாக உணவருந்தி, ஒன்றாக கோஷமிட்டு, விவசாயி என்பது மட்டுமே எங்களின் ஒற்றை அடையாளம் என்பதைப் பறைசாற்றிவருகிறோம்.”

“மத்திய அரசு, ‘வேளாண் சட்டங்களில் திருத்தங்களைச் செய்யத் தயார்’ என்று சொல்கிறதே... பிறகு ஏன் போராட்டம்?”

“இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட்களுக்கு ஆதரவாகவும் இருக்கின்றன. எத்தனை திருத்தங்கள் செய்தாலும், விவசாயிகளுக்கு ஆதரவான சட்டங்களாக இவற்றை மாற்ற முடியாது. இந்தச் சட்டங்களால் விவசாயிகள் முற்றிலும் அழித்தொழிக்கப் படுவார்கள். ‘திருத்தங்கள் செய்யத் தயார்’ என்று சொல்லி தாம்பூலத்தில் விஷத்தைக் கொடுக்கிறார்கள். எங்களால் விஷத்தைக் குடிக்க முடியாது.”

“எங்களால் விஷம் குடிக்க முடியாது!”

“மத்திய அமைச்சர்களும், பா.ஜ.க தலைவர்களும், ‘விவசாயிகளின் போராட்டத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகளும், மாவோயிஸ்ட்களும் ஊடுருவி விட்டார்கள்’ என்று குற்றம்சாட்டுகிறார்களே?”

“விவசாயிகளின் போராட்டத்துக்கு எதிரான பொய்ப் பிரசாரத்தை ஆர்.எஸ்.எஸ்-ஸும் பா.ஜ.க-வும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அவையெல்லாம் பொய் என்று நிரூபித்தோம். எங்கள் போராட்டத்தை இடதுசாரிகள் கைப்பற்றிவிட்டதாகச் சொன்னார்கள். அதுவும் தவறு. இந்தப் போராட்டத்தை 500 விவசாய சங்கங்கள் தலைமை தாங்கி நடத்துகின்றன. இவற்றில் வெறும் பத்து சங்கங்கள்தான் இடதுசாரி சங்கங்கள். இடதுசாரிகள் என்ன சொன்னாலும், மீதமுள்ள 490 விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்களா? இதுவும் ஓர் அபத்தமான குற்றச்சாட்டு.

எல்லையிலிருக்கும் ராணுவ வீரர்களுக்கு உணவுப் பொருள்களை எடுத்துச் செல்ல நாங்கள் தடையாக இருப்பதாக ஒரு பொய்யைக் கிளப்பி விட்டார்கள். ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்பதுதான் எங்கள் முழக்கம். எங்கள் மாநிலத்தில் பெரும்பாலான விவசாயிகள், தங்கள் மகனை ராணுவத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். எங்கள் பிள்ளைகளுக்குச் செல்லக் கூடிய உணவுப் பொருள்களை நாங்கள் எப்படித் தடுப்போம்? கோயபல்ஸின் பேரன்களான இவர்கள், பொய்ப் பிரசாரத்தில் கோயபல்ஸையும் மிஞ்சி விட்டார்கள்.”

“இந்தியாவில் ஒட்டுமொத்த விவசாயிகளையும் இந்த வேளாண் சட்டங்கள் பாதிக்கும் என்று சொல்கிறீர்கள். ஆனால் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநில விவசாயிகள் மட்டும்தானே போராடுகிறார்கள்?”

“அது உண்மையல்ல. டிசம்பர் மாதம் நடைபெற்ற பாரத் பந்த் போராட்டத்தில் 30 கோடி விவசாயிகள் பங்கெடுத்தார்கள். இந்தியாவில் 700 மாவட்டங்களிலுள்ள கலெக்டர் அலுவலகங்களை விவசாயிகள் முற்றுகை யிட்டார்கள். கொல்கத்தாவில் 50,000 விவசாயிகள் பேரணி சென்றார்கள். பாட்னாவில் பேரணி நடத்திய 50,000 விவசாயிகள்மீது தடியடி நடத்தப்பட்டது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடினார்கள். மகாராஷ்டிராவில் அதானி, அம்பானி அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டன. இப்படி, எல்லா மாநிலங்களிலும் விவசாயிகள் போராடு கிறார்கள்.”

“அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களுடன் நீங்கள் நடத்திய பேச்சுவார்த்தை எப்படியிருந்தது?”

“பேச்சுவார்த்தை மிக மோசமான அனுபவமாக அமைந்தது. பேச்சு வார்த்தைக்கான அஜெண்டாவே வைக்கமாட்டார்கள். ‘மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும்’ என்பது எங்களது ஒரே கோரிக்கை. அது பற்றிப் பேசாமல், ‘நாங்கள் திருத்தங்கள் செய்கிறோம்’ என்று பொத்தாம் பொதுவாகப் பேசுவார்கள். எட்டுமுறையும் இதே கதைதான். சொன்னதையே திரும்பத் திரும்பத் சொன்னார்கள். அமித் ஷா உடனான பேச்சுவார்த்தை அனுபவம் இன்னும் மோசம். அவர் ஒரு சீனியர் அமைச்சர். ஆனால், ஜூனியர் அமைச்சர்கள் சொல்வதையே அவரும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் சோர்வடைந்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்தகைய யுக்தியைக் கையாள்கிறார்கள்.”

“எங்களால் விஷம் குடிக்க முடியாது!”

“குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதியன்று டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணியை நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறீர்கள். டெல்லி நகருக்குள் நுழையப்போகிறீர்களா?”

“அன்றைய தினம் அரசு அணிவகுப்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு, லட்சக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களில் டெல்லியை நோக்கி அமைதியான முறையில் பேரணியாகச் செல்வோம். டெல்லி எல்லையில் போலீஸார் நிறுத்தினால், பேரணியை அங்கேயே முடித்துக்கொள்வோம். நகருக்குள் செல்ல அனுமதித்தால், பேரணியாகச் சென்று ஆட்சியாளர்களிடம் எங்கள் கோரிக்கை மனுவை அளிப்போம்.”

“வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது. எனவே, போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு வாய்ப்பிருக்கிறதா?”

“மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும்வரை போராட்டத்தை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு