Published:Updated:

`அவ்ளோ காசுக்கு எங்க போவீங்க?’ - வருந்திய ஆசிரியர்கள்; நடத்திக்காட்டிய முன்னாள் மாணவர்கள்

மணிமாறன்.இரா
Vengadesh R

புதுக்கோட்டை மாவட்டம், குளமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், தங்கள் சொந்தச் செலவில், அரசுப் பள்ளிக்கு கலைநிகழ்ச்சிக் கூடம் அமைத்துக் கொடுத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை நெகிழ்ச்சியடைச் செய்துள்ளனர்.

புதிய கலை நிகழ்ச்சிக் கூடம்
புதிய கலை நிகழ்ச்சிக் கூடம் ( வெங்கடேஷ்.ஆர் )

தமிழகத்தில், போதிய மாணவர்கள் இல்லை என்று கூறி சில அரசு தொடக்கப்பள்ளிகள், அரசால் தற்போது மூடப்பட்டுள்ளன. உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்துவருவதால், மேலும் பல அரசுப்பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன என்று கூறப்படுகிறது.

பள்ளி
பள்ளி
வெங்கடேஷ்.ஆர்

இந்த நிலையில் சில கிராமங்களில், அரசுப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களின் பங்களிப்புகளால் தொடர்ந்து மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிக்கும் சூழல் இருந்துவருகிறது. அப்படிப்பட்ட, பணியைத்தான் புதுக்கோட்டை அருகே உள்ள குளமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து செய்துவருகின்றனர்.

கல்வி உபகரணங்கள் வழங்குதல், தேர்வு நேரங்களில் வழிகாட்டுதல் என மாணவர்களுக்காக இவர்கள் செய்யும் பணிகள் நீள்கின்றன. இந்த நிலையில்தான், பள்ளிக்கு ஆண்டுவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த கலைநிகழ்ச்சிக் கூடம் தேவைப்படுவதாக, பள்ளி ஆசிரியர்கள் எதார்த்தமாகக் கூற, இன்று தங்கள் சொந்த செலவில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான கலை நிகழ்ச்சிக் கூடத்தைக் கட்டி முடித்து, ஆண்டுவிழாவை நடத்தி அசத்தியுள்ளனர்.

 ஆண்டுவிழா
ஆண்டுவிழா
வெங்கடேஷ்.ஆர்

இதுபற்றி முன்னாள் மாணவர் ஆனந்தனிடம் பேசினோம், ``ஒரு வருஷத்துக்கு முன்னாடி, நாங்க பள்ளியில் சின்னதா ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு, எங்ககிட்ட பேசிய ஆசிரியர்கள், "பள்ளிக்கு கலையரங்கம் அமைத்தால் நிறைய நிகழ்ச்சிகள் நடத்தலாம். இதுபற்றி பள்ளிக்கு வர்ற உள்ளூர் அரசியல் பிரமுகர்கிட்ட சில வருஷங்களா கேட்கிறோம். ஆனால், அவங்க அதுக்கு எந்தப் பதிலும் சொல்ல மாட்றாங்க.

இதை உங்ககிட்ட சொல்லி என்ன பண்றது, பாவம் பெரிய முதலீடு போட நீங்க எங்க போவிங்க" என்றும் சொன்னாங்க. உடனே முன்னாள் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து, அதைக் கட்டிக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணோம். முக நூல், வாட்ஸ்அப்பில் முன்னாள் மாணவர்கள் குழு அமைத்தோம். எல்லாரும் இதுபற்றிப் பேசி விவாதிச்சோம். ஒரு நாள் நடத்தப்போகிற ஆண்டுவிழாவுக்காக மட்டும் நாம ஏன் லட்சக்கணக்கில் செலவு செஞ்சு கட்டணும் என்ற கேள்வி எல்லார்கிட்டயும் இருந்துச்சு.

கட்டிடம் கட்டும் பணியில் முன்னாள் மாணவர்கள்
கட்டிடம் கட்டும் பணியில் முன்னாள் மாணவர்கள்
வெங்கடேஷ்.ஆர்

கட்டடத்தை நாங்கள் கட்டித்தர்றோம். மாணவர்களுக்கு எந்தெந்த வகையில் அது பயன்படும்னு சொல்லுங்க என்று ஆசிரியர்கள்கிட்ட கேட்டோம். "ஆண்டுவிழா நடத்துவதோடு மட்டுமில்லாமல், உரையரங்கம், சிந்தனைச் சொற்பொழிவு, பட்டிமன்றம் எனப் பல நிகழ்ச்சிகளை நடத்தலாம். அவ்வப்போது, மாணவர்களை மேடையில் ஏற்றிப் பேசவைத்தால், மாணவனுக்கு பேச்சாற்றல் அதிகரிக்கும். பல பேச்சாளர்களை உருவாக்க முடியும்" என்று சொன்னவுடன், அனைவரிடமும் பேசி ஒரு மனதாகக் கட்டடம் கட்ட முடிவுசெஞ்சோம்.

பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 64 பேர் கைகோத்தார்கள். நிதி திரட்டி, கடந்த வருஷம் பணியைத் தொடங்கினோம். கட்டடம் கட்டும் வேலையில் நேரடியா நாங்களே இறங்கினோம். ஆரம்பிச்சு கொஞ்ச நாள் வேலையெல்லாம் நல்லாத்தான் போயிக்கிட்டு இருந்துச்சு. அந்தச் சமயத்துலதான் கஜா புயல் அடிச்சிருச்சு. பணப் பற்றாக்குறையால் மாசக்கணக்குல போட்டு வச்சிட்டோம். அதற்கப்புறம் வெளிநாடு வாழ் முன்னாள் மாணவர்கள் ரொம்பவே உதவுனாங்க.

முன்னாள் மாணவர்கள்
முன்னாள் மாணவர்கள்
வெங்கடேஷ்.ஆர்

இதுக்காக, அரசியல்வாதிங்க யார் கிட்டியும் போய் நிதி கேட்கலை. எதிர்பார்க்கலை. எங்களால் இதை சாத்தியப்படுத்த முடியும்னு தன்னம்பிக்கை வச்சோம். ஒரு வழியாக ஓராண்டுப் போராட்டத்திற்குப் பிறகு கலையரங்கத்தைக் கட்டிட்டோம். மாவட்ட கல்வி அதிகாரியை வைத்து இப்போ கலையரங்கத்தைத் திறந்து ஆண்டு விழா நடத்திவிட்டோம். இன்னும், நிறைய இந்த பள்ளிக்குச் செய்யணும். மாணவர்களுக்கு எப்போதும் இந்தக் கலையரங்கம் பயன்பட வேண்டும். பல பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள் பள்ளியில் இருந்து வெளிவர வேண்டும். அதுதான் எங்களுக்குக் கிடைக்கும் வெற்றி" என்றனர்.