அலசல்
சமூகம்
Published:Updated:

கொரோனாவை உணராத பொல்சானரோ! - தொடரும் அமேஸான் காடழிப்பு

அமேஸான் காடுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அமேஸான் காடுகள்

மொத்த ஊடகங்களின் கவனமும் கொள்ளை நோய்மீது குவிந்துகிடக்கிறது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, அமேஸான் காடுகள் மீதுள்ள கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்திக் கொள்ளலாம்

கடந்த ஆண்டு ஜனவரியில் பிரேசில் அதிபராக பொல்சானரோ (Jair Bolsonaro) பதவிக்கு வந்தபோதே அமேஸான் காடுகளின் அழிவு தொடங்கிவிட்டது.

கடந்த ஓராண்டில் மட்டும் அந்த நாடு 12,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வனப்பகுதியை இழந்திருக்கிறது. தற்போது உலகமே கொள்ளைநோய்த் தாக்குதலில் தவிக்கும் சூழலிலும் காடழிப்பை நிறுத்தவில்லை பிரேசில். கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் அங்கு 529 சதுர கிலோமீட்டர் அளவுக்குக் காடழிப்பு நிகழ்ந்திருக்கிறது. சென்னை மாவட்டத்தைவிட 103 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அதிகம் கொண்டது இது!

அமேஸான் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியல்துறை இயக்குநரான ஆன் அலெக்ன்கார், “காடுகளைப் பெரு விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் 2019-ம் ஆண்டு அமேஸானில் தீ விபத்து ஏற்படுத்தப் பட்டது. இது 2020-ம் ஆண்டும் நடக்கும்” என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருக்கிறார். மற்றொரு பக்கம் மேப்பயோமாஸ் (MapBiomas) என்ற ஆய்வு நிறுவனம், ‘காட்டின் பல பகுதிகள் போலியாகச் சிலரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்திருக்கிறது.

கடந்த மே 22-ம் தேதி பிரேசில் உச்ச நீதிமன்றம், ‘மரம் வெட்டுதல், தீ வைத்தல் போன்ற சம்பவங்கள் நிகழும் பகுதிகளில் சூழலியல் ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியது. ஆனால், பிரேசில் அரசு அதைச் செய்யத் தயாராக இல்லை. கொரோனாமீது அனைவரின் கவனமும் திரும்பியிருக்கும் நேரத்தில், பிரேசிலின் சுற்றுச்சூழல் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் ஒலிவால்டி ஆஸ்வெடோ பணியிலிருந்து நீக்கப்பட்டார். `பாரா என்ற பகுதியில் சுரங்கத் திட்டத்தை எதிர்க்கும் பூர்வகுடிகளை அவர் கட்டுப்படுத்தாததே பணி நீக்கத்துக்குக் காரணம்’ என்கிறார்கள். அந்த அமைப்புக்கான நிதியும் 25 சதவிகிதம் குறைக்கப் பட்டுவிட்டது. தற்போது அந்த அமைப்புக்கு தலைவராக மெண்டஸ் மகல்ஹேஸ் என்ற ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மர ஏற்றுமதி உரிமம் இல்லாதவர்களுக்கு மர ஏற்றுமதியை அனுமதித்ததாக ஏற்கெனவே இவர்மீது குற்றம்சாட்டு உள்ளது.

பொல்சானரோ - ரிகார்டோ சால்லெஸ்
பொல்சானரோ - ரிகார்டோ சால்லெஸ்

இதற்கிடையே பிரேசில் அரசு சுற்றுச்சூழல் கொள்கைகளில் மோசமாக நடந்துகொள்வதை நிரூபிக்கும் வகையில் காணொளி ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாதம் அமைச்சர் களுடன் அதிபர் பொல்சானரோ நடத்திய ஒரு கூட்டத்தில் சுற்றுச்சூழல் அமைச்சரான ரிகார்டோ சால்லெஸ், ‘மொத்த ஊடகங்களின் கவனமும் கொள்ளை நோய்மீது குவிந்துகிடக்கிறது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, அமேஸான் காடுகள் மீதுள்ள கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்திக் கொள்ளலாம்” என்று அதிபருக்குப் பரிந்துரைத்திருக் கிறார். மே 22-ம் தேதி சூழலியல் ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த நீதிமன்றம் அப்போதே, இந்தக் காணொளியை நாடு முழுவதும் ஒளிபரப்பவும் உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும், காடழிப்பு நடவடிக்கைகளை நிறுத்தவில்லை பிரேசில். பழங்குடியினத்தவரின் நிலங்களுக்கான கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்தவகையில் `அமேஸான் காடுகளில் 97,979 சதுர கிலோமீட்டர் பரப்பளவு காடுகள் பழங்குடியினப் பயன்பாடுகளற்ற இதர பொருளாதார நடவடிக்கைகளுக்குத் திருப்பி விடப்படும்’ என்று அறிவித்துள்ளது பிரேசில் அரசு. ஆயிரக்கணக்கான பூர்வகுடிக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கும் திட்டம் இது.

அமேஸான் காடுகள்
அமேஸான் காடுகள்

ஏற்கெனவே, பழங்குடியின நிலங்களில் எல்லை வகுத்தல், பழங்குடியின உரிமைதாரர்கள் குறித்த தகவல்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட வேலைகளே இன்னும் முடிவடையவில்லை. தற்போது மாற்றப் பட்டுள்ள இந்தக் கொள்கைகளால் பழங்குடியினரின் நிலங்களை ஆக்கிரமிப்பது ஆக்கிரமிப்பாளர்களுக்கு மேலும் எளிதாகிவிடும். சொல்லப்போனால் இனி அவர்கள் சட்டப் பூர்வமாகவே அந்த நிலங்களைக் கையகப்படுத்த முடியும்.

காடழிப்பு உள்ளிட்ட இயற்கையைச் சிதைக்கும் காரணிகளே கொரோனா உள்ளிட்ட நோய்த்தொற்றுப் பேரிடர்களுக்கு அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. ஆனால், அதையும் உணராமல் பிரேசில் நடத்திவரும் காடழிப்புக்கு, மொத்த உலகமும் நாளை பதில் சொல்ல வேண்டி வரும்!