Published:Updated:

கொரோனா: உயிரிழந்த 200 பேரின் இறுதிப் பயணம்; உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்! - தொற்றால் உயிரிழந்த சோகம்

மரணம்
மரணம் ( மாதிரிப் படம் )

மார்ச் 21 அன்று தன்னுடைய துணிகளை எடுப்பதற்காக எங்களுடைய தந்தை வீட்டுக்கு வந்திருந்தார். அன்று முதல் நாங்கள் எங்கள் தந்தையை எங்களுடைய வீட்டில் பார்க்கவில்லை.

கடந்த மார்ச் மாதம் முதல் 200-க்கும் அதிகமான கொரோனா நோயாளிகளின் உடல்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர், டெல்லியில் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இவரால் பெறப்பட்ட உடல்கள், முறையாக நல்லடக்கம் செய்வதைத் தொடர்ந்து கண்காணித்துவந்தார். ஆனால், வைரஸால் இறந்த அவரது உடலைச் சொந்தக் குடும்பத்தினரிடம்கூட கொடுக்க முடியவில்லை. சில நிமிடங்களுக்கு தூரத்திலிருந்தே அவரின் உடலைப் பார்த்தார்கள் அவரின் குடும்பத்தினர்.

வடகிழக்கு டெல்லியின் சீலம்பூரில் வசித்துவந்தவர் ஆரிஃப் கான். கொரோனாவில் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு உடல்களை எடுத்து செல்லுதல், பண உதவி செய்தல் போன்ற வேலைகளை தனது முழுநேரப் பணியாக கொண்டு செயல்பட்டார். இவர் கடந்த மார்ச் முதல், ஆறு மாதகாலமாகத் தன் வீட்டிலிருந்து 28 கி.மீ தொலைவில், அவருடைய ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்துமிடத்திலேயே இரவு பகலாக படுத்துறங்கினார். 24 × 7 என உழைக்கத் தொடங்கிய ஆரிஃப் கான், தொலைபேசியில் மட்டுமே அவரின் மனைவி, குழந்தைகளுடனான தொடர்பைக் கொண்டிருந்தார்.

இப்படி ஆறு மாத காலத்தில் கிட்டத்தட்ட 200 நோயாளிகளின் உடல்களை இவரின் ஆம்புலன்ஸ் வாகனம் சுமந்திருக்கிறது. இந்தநிலையில் 48 வயதானஆரிஃப் கான், திடீர் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டார். பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், டெல்லியிலுள்ள இந்து ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் ஆரிஃப் கான் கடந்த சனிக்கிழமை அன்று உயிரிழந்தார்.

108 ஆம்புலன்ஸ்
108 ஆம்புலன்ஸ்
மாதிரிப் படம்

இது குறித்து அவருடன் பணியாற்றிய சக பணியாளர்கள் கூறுகையில், `என்.சி.ஆரில் இலவச அவசர சேவைகளை வழங்கும் ஷாஹித் பகத்சிங் சேவா தளத்துடன் இணைந்து பணிபுரிந்த கான், கொரோனா பாதித்த குடும்பத்துக்குத் தேவைப்பட்டால், இறந்த உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு பணமும் அல்லது இறந்தவரின் அருகில் உறவினர்கள் யாரும் இல்லாவிட்டால் இறுதிச் சடங்குகளும் செய்வார்’ என்று கூறுகிறார்கள்.

ஷாஹித் பகத்சிங் சேவாவின் நிறுவனர் ஜிதேந்தர் சிங் கூறுகையில், ``மார்ச் மாதம் முதல் 200 கோவிட் நோயாளிகளின் உடல்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் ஆரிஃப் கான் கொரனோ வைரஸால் இறந்தார்.

இவரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மரணமடைந்த ஒவ்வொரு நோயாளியின் உடலும் முறையாகச் செல்வதைத் தொடர்ந்து கண்காணித்துவந்தார். அவர் தன் மதம் சார்ந்து இயங்காமல், அனைத்து மத நோயாளிகளின் உடலுக்கும் இறுதிச் சடங்குகள் செய்தார். ஆனால், கொரோனா வைரஸால் இறந்த அவரது உடலைச் சொந்தக் குடும்பத்தினரிடம்கூடக் கொடுக்க முடியவில்லை. சில நிமிடங்களுக்கு தூரத்திலிருந்தே அவரது உடலைப் பார்த்தார்கள். அவர் ஓர் ஓட்டுநராக இருந்தபோதிலும், பெரும்பாலும் இறுதிச் சடங்குகளுக்கு உதவினார். கான் ஒரு நாளைக்கு 12 - 14 மணி நேரம் வேலை செய்தார். அதிகாலை 3 மணி வரைகூட அழைப்புகளுக்கு பதிலளித்தார்” என உணர்ச்சிவசப்படக் கூறினார்.

கானின் மகன் ஆதில் தனது தந்தை குறித்து கூறுகையில், ``மார்ச் 21 அன்று தன்னுடைய துணிகளை எடுப்பதற்காக அப்பா வீட்டுக்கு வந்திருந்தார். அன்று முதல் நாங்கள் எங்கள் அப்பாவை எங்களுடைய வீட்டில் பார்க்கவில்லை. அவர்மீது எங்களுக்கு மிகப் பெரிய அளவில் அக்கறை இருந்தது. அதனால் எப்போதாவது நாங்கள், அவர் இருக்கும் இடத்துக்குத் தேடிச் சென்று அவரைப் பார்ப்போம். அப்பாவுக்கு கொரோனா மீதும் அச்சம் இல்லை. இயலாதவர்களுக்காவே உழைத்தார். கடைசியாக நாங்கள் அவரைப் பார்க்கும்போதே அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது” என்றார்.

இறுதிச் சடங்கு
இறுதிச் சடங்கு
மாதிரிப் படம்

அவரின் மற்றொரு மகன் ஆசிப், `எங்களால் அவர் இறந்துவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிறகு எப்படி நான் அவரிடம் பிரியாவிடை பெற முடியும்? அவர் இல்லாமல் எங்களால் வாழ முடியாது’ என்று துயரத்துடன் கூறினார்.

மேலும் ஆரிஃப் கான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அடுத்த நாளே இறந்தது குடும்பத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கான் மட்டுமே அவருடைய குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபர். அவருடைய மாத வருமானம் 16,000 ரூபாய். வீட்டு வாடகை 9,000 ரூபாய் எனக் கூறிய அவர் மகன்கள் தங்களால் இயன்ற வேலைக்குச் செல்வதாகவும், ஆனால் நிரந்தர வேலை எதும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.

கொரோனா தனது வீட்டுக்கும் பரவும் என்ற அச்சத்தில், தன் வீட்டுக்கே செல்லாமல் இருந்த கானின் சக பணியாளர் ஆனந்தகுமார் கூறுகையில், ``ஆரிஃப் கான் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார், என்னைச் சகோதரர்போல் நடத்தினார்” என்றார். மேலும் ``ஆரிஃபுக்கு வேறு எந்த உடல்நலக் குறைபாடும் இல்லை. ஆனால், கடந்த சில நாள்களாக அவருக்கு மூச்சுவிடுவதில் சிக்கல் இருந்தது" என்று அவர் கூறினார்.

கொரோனா: உயிரிழந்த 200 பேரின் இறுதிப் பயணம்; உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்! - தொற்றால் உயிரிழந்த சோகம்

1995-ம் ஆண்டில் நிறுவப்பட்ட, ஷாஹித் பகத்சிங் சேவா தளம் டெல்லி மற்றும் அதைச் சுற்றியிருக்கும் ஏழைகளுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் ரத்த தானம் உட்பட இலவச மற்றும் விரைவாக அணுகக்கூடிய அவசர சேவைகளை வழங்குகிறது. ஆரிஃப் கான் அவர்களுடன் ஆரம்பத்திலிருந்தே பணியாற்றிவந்தார்.

மருத்துவமனைகள் மட்டுமல்ல, காவல் நிலையங்களுக்கும் இந்த அமைப்பு உதவி புரிகிறது. அவர்களின் 12 ஊழியர்களில் கான் ஒருவராக இருந்தார். கடந்த மாதம், குரு தேக் பகதூர் கோவிட் மருத்துவமனையிலிருந்து 300-க்கும் மேற்பட்ட சடலங்களைக் கொண்டு சென்றதற்காகவும், குடும்ப உறுப்பினர்கள் இல்லாத சூழ்நிலையில் அவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு உதவியதற்காகவும் சேவா அமைப்பு, ஆரிஃப் கானுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தது.

டெல்லியின் கிழக்கு மாவட்ட நீதிபதி அருண்குமார் மிஸ்ரா, தொற்றுநோய்களின்போது கானின் பங்களிப்பைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தார். கானின் அர்ப்பணிப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாக சாண்டி என்பவர், ``செப்டம்பர் 30 அன்று, ஒரு மருத்துவமனையில் கொரோனோ பாதித்த நபரின் உடலைப் பணம் கட்ட முடியாத காரணத்தால் அவரின் குடும்பதினரிடம் கொடுக்க மறுத்துவிட்டது. இதில் உதவிபுரிந்த கான், உடலை மீட்டுக் கொடுத்தார்” எனக் கூறியவர், ``கான் மாபெரும் மனிதர். அவர் மற்றவர்களிடம் எந்த வித்தியாசமுமின்றி அக்கறை செலுத்தினார்’’ என்றார். அப்படிப்பட்டவர்களைத்தான் இயற்கை சீக்கிரத்தில் அழைத்துக்கொள்கிறது!

அடுத்த கட்டுரைக்கு